நம் உடலின் மிக முக்கிய உறுப்பு கண்ணாகும். தாயின் வயிற்றில் கரு உண்டானவுடன் தோன்றும் முதல் உறுப்பு கண். நம் உடல் பெரும் ஆற்றலில் பெரும் பகுதி கண்ணுக்கும் மூளைக்கும் செலவாகிறது. நீண்ட யோசனை செய்து மூளைக்கு வேலை கொடுக்கும்பொழுது மூளை சோர்வடைகிறது. தூங்கி எழுந்தவுடன் அந்த சோர்வு நீங்குகிறது. அனால் சில மணி நேரம் சினிமா, டி.வி, கேளிக்கைகள் என்று கண்ணுக்கு வேலை கொடுப்பதினால் அது மிகவும் சோர்ந்து விடுவதுடன் உடனடியாக புத்துணர்வு பெற தூக்கம் கூட போதுமானதாக இருப்பதில்லை. ஆகவே கண் பாதுகாப்பு மிக அவசியம். இத்தகைய ஓய்வு இல்லாமல் கண் உழைப்பதினால்தான் அதன் வலிமையை நாம் சுமார் நாற்பது ஆண்டுகளுக்குள் இழக்க நேரிடுகிறது. ஒரு நாளில் சராசரியாக கண்களின் தசைகளுக்கு நாம் செலவிடும் ஆற்றலை கால் தசைகளுக்கு செலவிட்டால் நாம் சுமார் 80௦ கி.மீ. தூரம் நடக்க முடியுமெனில் கணங்களின் ஆற்றல் எத்தகையது என்பதை புரிந்துக்கொள்ளலாம்.
கண்களின் சிறப்பு அதன் மூலம் பாய்ச்சப்படுகிற ஒளி மிக நீண்ட தூரத்திற்கு சென்று அடுத்தவரை தூண்டும் ஆற்றல் கொண்டது. உடலில் வேறு எந்த அசைவையும் தராமல் ஒரு வினோத பார்வை செலுத்தினாலும் கூட அருகில் உள்ள காக்கை சட்டென விலகி செல்வதை காண முடியும். ஒருவர் பேசும்போது அவர் கண்கள் அவருடைய பேச்சு உண்மையா பொய்யா என்பதை காட்டிக்கொடுக்கும் கருவியாக செயல் படும். ஆகவே அவர் கண்களை தொடர்ந்து பாருங்கள். அவர் பொய்யை பேசிகொன்டிருந்தால் உங்கள் பார்வையின் உக்கிரம் அவருடைய பேச்சை நிலைகுலைய செய்துவிடும். உண்மை பேசும்போது அத்தகைய நிலைமை இராது.
சாதாரண மக்களின் கண்களுக்கே இத்தகைய வலிமை எனும்பொழுது, தங்கள் புலன்களை அடக்கி அனைத்து சக்திகளையும் தன்னகத்தே கட்டுக்குலையாமல் யோகா தியானம் என்று இருக்கும் ஞானிகளின் பார்வையின் சிறப்பை எப்படி கூறமுடியும். ஸ்ரீராமகிருஷ்ணர், ஸ்ரீரமணர், போன்ற எண்ணற்ற மகான்களின் பார்வை இத்தகைய வலிமையை பெற்றவைதான். அவர்களின் பார்வை பட்ட கொடிய விலங்குகள் கூட நெடுநாள் பழகிய நண்பர்களைப்போல அவர்களுடன் உறவடியதாக நாம் படிக்கிறோம். இது எப்படி சாத்தியம். அவர்களின் வலிமை கண்கள் மூலம் வெளிப்படுவதுதான் இதற்கு காரணம். அவர்கள் தங்கள் சீடர்களுக்கு கண்களாலேயே அருளாசி வழங்கினார்கள். விவேகானந்தர் போன்ற சிறந்த சீடர்களை இப்படித்தான் உருவாக்கினார்கள். அகில உலகிற்கும் தலைசிறந்த குருவாகிய ஸ்ரீதக்ஷினாமூர்த்தி கூட ஒரு கல்லால மரத்தினடியில் அமர்ந்து மெளனமாக தன் சீடர்களான சனகாதி முனிவர்களுக்கு தம் கண்களின் கனிவான பார்வையாலேயே தீக்ஷை அளித்தார். அக்கண்கள் நமக்கும் அருள் பாலிக்கின்றன.
நம் வாழ்க்கையில் பல கண்களை கண்டிருப்போம். சில நம்மை வசீகரித்திருக்கும். சில நம்மை வருத்தியிருக்கும். வருத்தும் கண்களிலிருந்து விடுபடவே விரும்பியிருப்போம். வசீகர கண்கள் சில நாட்களில் மறந்து போயிருக்கும். இங்கே நான் கண்டு அதிசயித்த, காண விழைந்த, இனி என்றும் காண விழையும் அருட்கண் பற்றிய ஒரு சிறுகுறிப்பு.
கவிச்சக்கரவர்த்தி கம்பர் ராமகாதையில் ஸ்ரீராமானின் அழகைப்பற்றி வருணிக்கும்போது "தோள் கண்டார் தோளே கண்டார்" என்று வியந்து போற்றுவார். அவனுடைய ஒவ்வொரு அங்கமும் பேரழகு. ஒன்றை கண்டால் மற்றதை காண இயலாமல்போய்விடும். அவன் தோளழகை பார்க்கும்போது அதிலேயே மூழ்கி அடுத்த அழகை காண முடியாமல் போகும். அடுத்த அழகு என்று வரும் நேரத்தில் அவன் அங்கிருந்து சென்று விடுவான். அவன் கண்ணும் அத்தகையதே. அவற்றை கண்டு நெக்குருகி போனவர்கள் கோடானுகோடி. அவர்களை நினைப்பதே பேரின்பம். பெரும் பாக்கியம். "உறங்காவில்லி" என்று ஒரு பெரியார் இருந்தார். இந்த தமிழ் மண்ணிலேயே நீண்ட காலம் வாழ்ந்து அரங்கன் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட பெருமை பெற்றவர். அவர் ஒரு பெரும் மல்யுத்த வீரர். தன் மனைவியிடமும் பேரன்பும் காதலும் கொண்டவர். அவளை தன் கண்ணின் மணியாக வைத்து போற்றி வந்தார். அவளுக்கு சேவை செய்வதையே தன் பேறாக எண்ணி மகிழ்ந்தார். பெண்ணின் கண்களுக்கு உள்ள வலிமை என்ன என்று எல்லோருக்கும் தெரியும். அதுவும் தான் விரும்பும் மனைவியின் கண்கள் அவை எனும் பொழுது அவற்றை பற்றி சொல்ல வேண்டுவதில்லை.
இவர் தன் மனைவியின் கண்ணழகில் மயங்கியவராக வீதியில் அவளுடன் வந்துக்கொண்டிருந்தார். அவளுக்கு குடை பிடித்தபடி அவள் கண்களையே வைத்த கண் வாங்காமல் வந்துகொண்டிருந்தார்.. சாலையில் வருவோர் போவோர் பற்றி எந்த கவனமுமில்லாமல் அவள் அழகில் மெய்மறந்து வந்துகொண்டிருந்தார். அவரை ஒதுங்கி செல்லுங்கள் என்று சொல்லும் தைரியம் அங்கு எவருக்கும் இருக்கவில்லை. அவர் முரட்டு தோரணையுடன் காணப்பட்ட ஒரு மல்யுத்த வீரர் என்பதும் ஒரு காரணம். அதுசமயம் வைணவப்பெரியார் ஸ்ரீராமானுஜர் எதிரில் தன் சீடர் குழாமுடன் வந்துக்கொண்டிருந்தார்.
இங்கு ரமானுஜரைப்பற்றி சிறு விளக்கம். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ஸ்ரீபெரும்புதூர் என்ற திருமண்ணிலே அவதாரம் செய்த அவர், ஆதிசேடனின் அவதாரம் என்று போற்றப்படுகிறார். "விசிஷ்டாத்வைதம்" என்ற உயரிய கோட்பாட்டை பாரேண்டும் பறைசாற்றிய உத்தமர். சாதி, மதம் என்ற வேறுபாடெல்லாம் இறைவன் திருமுன் இல்லை. யாவரும் சமம். அவனால் உருவாக்கப்பட்ட அவன் புதல்வர்களே. அந்தணனும், ஐந்தாம் வருணத்தவனும் ஒன்றே என்ற சிறந்த கோட்பாட்டை பாரெல்லாம் பரப்பியவர். அரங்கன் புகழை பரப்பவேண்டி நித்திய கட்டளைகளை தோற்றுவித்தவர் அம்மகான். இவர் பொன்னுடலை விட்டு புகழுடம்பு எய்தினாலும் இன்றும் அவரது பூத உடலை திருவரங்கம் திருக்கோயிலில் உள்ள "ஸ்ரீ உடையவர்" சந்நிதியில் காணலாம். ஆயிரம் ஆண்டுகளாக அத்திருமேனியை பாதுகாத்து வருகிறார்கள். சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில் புனுகு, குங்குமப்பூ சாற்றுப்படி நடத்தி போன்னேப்போல் போற்றி பாதுகாத்து வருகிறார்கள்.
ஸ்ரீராமானுஜர் எதிரில் வரும் உறங்கவில்லியை பார்த்து சற்றே விலகி செல்லும் என்று கேட்டுக்கொண்டார். உறங்காவில்லி அதை கவனிக்கவில்லை. அப்படி எதைப்பார்த்து நீங்கள் மயங்கி கிடக்கிறீர்கள். நான் சொல்லுவதைக்கூட கேட்கவில்லையே என்று கேட்டபொழுது, உறங்காவில்லி தன் மனைவியின் அழகிய கண்ணழகில் மயங்கி வந்ததாக கூறினார். இந்த சாதாரண கண்களுக்கே இப்படி கிடக்கின்றீரே இதை விட பேரழகு படைத்த அதிசய கண்களை உங்களுக்கு காட்டினால் என்ன அவீரோ? என்று வினவினார். அதற்கு உறங்காவில்லி அப்படிப்பட்ட கண்களை அவரால் காட்ட முடியாது என்றும் அவ்விதம் கட்டினால் அவர் ராமானுஜருக்கு தலைமுறைக்கும் அடிமை பட்டுக்கிடப்பதாக சத்தியம் செய்தார்.
உடனே ராமானுஜர் அவரை நேரே திருவரங்கன் பள்ளிக்கொண்டிருக்கும் சந்நிதிக்கு அழைத்துசென்று அவருடைய அழகிய தாமரைக்கங்களை காட்டினார். அவ்வளவுதான், உறங்காவில்லி மயங்கி நின்றுவிட்டார். அவர் உலக பற்றுக்களை துறந்து ராமானுஜருக்கே பணி செய்து அவருடைய மிகச்சிறந்த சீடராக மாறிவிட்டார்.
அந்த பேரழகுக்கன்களை கண்டபோது எனக்கு உடல் என்னவோ செய்கிறதே என்று ஏங்குகிறார் விப்ர நாராயணர் என்று அழைக்கப்பட்ட "தொண்டரடிப்பொடி ஆழ்வார்" நமக்கு மிகவும் வேண்டியவர்கள், நெருக்கமானவர்கள், அன்புக்கு பாத்திரமானவர்கள் நீண்ட நாள் பிரிவிற்கு பிறகு திடீரென சந்திக்கும்பொழுது நம்மால் உடனே பேசமுடியாது. கண்களில் நீர் மட்டுமே வரு. உடலெல்லாம் என்னவோ செய்யும். என்னெவென்று கூற முடியாது. அத்தகைய ஒரு நிலையை அரங்கனை கண்டபோது உணர்ந்ததாக ஆழ்வார் கூறுகிறார்.
இந்த இனிய பேரழகுப்படைத்த திருக்கண்களை நீங்களும் ஒரு முறை சென்று பாருங்கள். அப்பொழுதுதான் இறைவன் உங்களுக்கு கண்ணைப்படைத்ததன் பெருமையை உணர்வீர்கள். அந்தக்கண்களில் பெருமையை கூறும் புலமையோ அறிவோ நான் பெற்றிருக்கவில்லை. இருப்பினும், பேச்சுவராத குழந்தைக்கூட தன்னாவில் வைக்கப்பட்ட தேனை உண்ணும்பொழுது நன்றாக இருக்கிறது என்று "சப்புக்கொட்டி" கூறுவதில்லைய அதுபோலே கூறுகிறேன். அவனுடைய தாமரைக்கண்கள் மிகப்பெரியவை, அழகானவை, இனிமையானவை, கணிவானவை, விரிந்து நம்மைபார்கின்றன. அதைக்கான்பதில் என்ன ஒரு சுகம். அங்கேயே நின்றுவிடுகின்றன கால்கள். சுற்றி இருப்பனவற்றை பற்றி ஒரு சிந்தனை அங்கே இல்லை. அனால் நம்மை கோயில் சிப்பந்திகள் நகரத்திவிடுகிறார்கள். அப்புறம்தான் தெரிகிறது, ஐயோ! அரங்கனை முழுவதும் காணவில்லையே என்று. கைகளை கண்டோமா? கால்களை கண்டோமா? காலில் என்ன ஆபரணம் பூண்டிருந்தார்? மார்பில் என்ன ஆபாரம்? இடையில் என்ன உடை? தலையில் எத்தகைய கிரீடம்? வாயில் காணப்பட்ட புன்னகை எத்தகையது. இன்னும் எத்தனையோ பல கேள்விகள். இவற்றையெல்லாம் கண்டோமா? என்று நம்மை மயக்குவதுபோல அவருடைய திருக்கண்கள் நம்மை செய்துவிட்டன. மீண்டும் மீண்டும் செல்லும்போது இதேபோலத்தான் நடந்துவிடுகிறது. அவனை முழுமையாக பார்ப்பதற்கே பல நூறு ஜன்மங்களை எடுக்கவேண்டும்.
அரைகுறை மனத்துடன் அங்கிருந்து வெளியே வந்தபின்பு நமக்கு ஏற்படும் உணர்வு இன்னும் மோசமனாது. அதைப்பற்றி விவரிக்க என்னால் இயலாது. இதயம் கணத்து விடுகிறது. நெருங்கிய உறவினர் வீட்டிற்கு செல்கிறோம். அங்கே ஒரு சிறு குழந்தை நம்முடன் நெருங்கி விளையாடி பழகுகிறது. இரண்டு மூன்று நாட்களில் நாம் திரும்பி வருகிறோம். புறப்படும் முன் அந்த குழந்தைக்கு விடை கொடுக்கிறோம். அனால் அது நம்முடன் வர அடம் பிடிக்கிறது. அதன் தாயார் அதனை தடுக்கிறாள். இருப்பினும் அது உரத்தக்குரலில் அழுது ஊரை கூட்டுகிறது. நம்முடைய நிலையோ மிகவும் பரிதாபம். அந்த குழந்தையுடனும் இருக்க முடியாது. அதனை தூக்கி வரவும் முடியாது. இருதலை கொள்ளி எறும்பு போல தவிக்கிறோம். ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தாலும் நம்முடைய மனம் மிகவும் பரிதவிக்கிறது. இதயம் கனத்துபோகிறது. மீண்டும் அந்த குழந்தையை கண்டால்தான் நமக்கு நிம்மதி வருகிறது. இத்தகைய நிலைதான் எனக்கும ஏற்பட்டது. நம்மனைவருக்கும் வரும். நீங்களும்தான் அனுபவித்துப்பாருங்களேன்.
தேவர்களும் மூவர்களும் தேடி அடையவொன்னா திருவடியை பற்றுவோம். கான்பதர்கினிய பேறு பெறுவோம். அவன் இனிய திருக்கட்சியில் நம்மை நனைவிப்போம்.
"அரங்கன் திருவடிகளே சரணம்"