"வைகுண்ட ஏகாதசியன்று, ஒருவர் இறந்து விட்டால், எவ்வளவு பாவியானாலும் சொர்க்கத்துக்குள் நுழைந்து விடுவார்; பச்சைத் தண்ணீர் கூட பல்லில் படாமல், விழித்திருந்து, ஏகாதசி விரதமிருந்தால், பகவான் சொர்க்கத்தின் கதவுகளைத் திறந்து விடுவார்...' என்றெல்லாம் பேசுகிறோம். இதெப்படி சாத்தியமாகும் என்கிறான் ஒரு வேடன். நாமெல்லாம் சொர்க்கத்துக்கு போனால் தான், பகவானைப் பார்க்க முடியுமென நினைக்கிறோம். ஆனால், இந்த வேடன் பகவானின் தரிசனத்தைப் பூமியிலேயே பெற்று, சொர்க்கத்தை அடைந்து விட்டான்.
ஆதிசங்கரரின் சீடர் பத்மபாதர். இவருக்கு ஒரு பெரியவர், நரசிம்ம மந்திர உபதேசம் செய்தார். அதை ஜெபித்து, நரசிம்மரை நேரில் தரிசித்து விட வேண்டுமென்பது அவரது ஆசை. அதற்காக, தவமிருக்க காட்டுக்குப் போனார். ஒரு வேடன் அவரைப் பார்த்தான்...
"சுவாமி... தங்களுக்கு இந்தக் காட்டில் என்ன வேலை?' என்றான்.
அவனிடம் நரசிம்ம மந்திரம், நரசிம்மரைத் தரிசிக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னால் புரியுமா? எனவே, அங்கிருந்து அவனை அனுப்புவதற்காக அவனது பாணியில், "வேறொன்றுமில்லையப்பா... இங்கே சிங்க முகமும், மனித உடலும் கொண்ட ஒரு மிருகம் இருக்கிறது; அதை பிடித்து போக வந்தேன்...' என்றார்.
வேடனுக்கு ஆச்சரியம்...
"சுவாமி... நான் இந்தக் காட்டிலேயே பிறந்து, வளர்ந்தவன். நீங்கள் சொல்வது போன்ற மிருகம், இங்கே கிடையவே கிடையாது; இது சத்தியம்...' என்றான்.
"நான் அந்தணன், பொய் சொல்வேனா...' என்றார்.
அந்தணர்கள் பொய் சொல்வதில்லை என்பது அவனுக்கும் தெரியும்.
"அடடா... அப்படி ஒரு மிருகம் இருக்கிறது போலும். பெரியவர் <உண்மையைத் தான் சொல்கிறார்...' என நினைத்தவன், "சுவாமி... அப்படி ஒரு மிருகம் மட்டும் இருக்குமானால், நாளை மாலைக்குள் அதைப்பிடித்து உங்களிடம் தருவேன். அப்படி தராவிட்டால், என் உயிரை விட்டு விடுவேன்...' என்று சபதம் செய்து, அதை பிடித்தே தீருவதென கிளம்பி விட்டான்.
மனசு நிறைய சிங்க முகமும், மனித உடலும் கொண்ட அந்த உருவம் தான் நின்றது. அதை, அவன் தேடாத இடமே இல்லை. சாப்பாடு இல்லை, தூக்கமில்லை, வீட்டைப் பற்றிய எண்ணமில்லை, நரசிம்மத்தின் வடிவத்தைத் தவிர, அவன் எதையும் சிந்திக்கவில்லை.
மறுநாள் மாலையும் நெருங்கி விட்டது; அது, அகப்படவில்லை.
"பெரியவர், நிச்சயம் பொய் சொல்லியிருக்க மாட்டார். நான் தான் கையாலாகாத வேடனாகி விட்டேன். சொன்ன வாக்கை காப்பாற்றாத நான், இனியும் உயிரோடு இருக்கக் கூடாது...' என்று காட்டுக்கொடி ஒன்றைப் பறித்து, அதைக் கழுத்தில் இறுக்கி, தற்கொலைக்கு முயன்றான். அப்போது, அவன் நினைத்த மிருகம் அங்கே வந்து, அவன் கையைப் பிடித்தது. ஆம்... நரசிம்மர் வந்து விட்டார்.
"அடடா... வசமாக சிக்கினாயா?' என்றவன், தன் கழுத்தில் இருந்த கொடியால், பகவானைக் கட்டினான். அவனது பக்திக்கு, பகவான் கட்டுப்பட்டு நின்றார். அவரை இழுத்துக் கொண்டு, பத்மபாதரிடம் சென்றான்.
"பிடியும்... நீர் கேட்ட மிருகத்தை! ஓட்டிக் கொண்டு ஊர் போய் சேரும்!' பத்மபாதரின் காதில், கர்ஜனை சப்தம் கேட்டது; ஆனால், உருவம் கண்ணில் படவில்லை. அப்போது, அசரீரி ஒலித்தது...
"பத்மபாதரே... கோடி வருடம் செய்யும் தவத்தை விட, இவன் என்னை யாரென்றே தெரியாமல் நினைத்த ஒவ்வொரு விநாடியும் புனிதமானது. அது மட்டுமல்ல, என்னைப் பார்க்க முடியாமல் போனதற்காக, உயிரையும் விடத் துணிந்தானே... அது தான் நிஜமான பக்தி. இவனது தொடர்பு ஏற்பட்டதால் தான், உனக்கு என் கர்ஜனையாவது கேட்டது. நீயும் இவனைப் போல் விடாமல் பக்தி செலுத்து. நேரம் வரும் போது, காட்சியளிப்பேன்...' என்றார்.
பார்த்தீர்களா... ஏகாதசி விரதம் என்ற பெயரில் விழித்திருந்து சினிமா பார்ப்பதும், பசித்திருப்பதும் மட்டும் பக்தியல்ல! இறைவனோடு மனம் ஒன்ற வேண்டும். அவரைப் பார்த்தே தீர வேண்டும் எனும் அளவுக்கு,
நம் மனம், அவரோடு இணைய வேண்டும். அப்படியானால், இந்த பூலோகமே நமக்கு சொர்க்கவாசல் தான்!
மாத நரஸிம்ஹ! பிதா நரஸிம்ஹ!!
ப்ராதா நரஸிம்ஹ! சகா நரஸிம்ஹ!!
வித்யா நரஸிம்ஹ! த்ரவிணம் நரஸிம்ஹ!!
சுவாமி நரஸிம்ஹ! சகலம் நரஸிம்ஹ!!
இதோ நரஸிம்ஹ! ததோ நரஸிம்ஹ!!
யதோ யதோ யாஹி ததோ நரஸிம்ஹ!!
நரஸிம்ஹ தேவாத் பரதோ ந கச்சித்!!
தஸ்மின் நரஸிம்ஹ சரணம் ப்ரபத்யே!!