வருகின்ற பாராளுமன்ற தேர்தல் 2014, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள வித்தியாசமான தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் மட்டுமே எந்த ஒரு (அனுதாபம், இறப்பு, போர், போன்ற) வெளி காரணிகளின் பாதிப்பும் இல்லாமல், கொள்கைகளை மட்டுமே விளக்கி வாக்கு சேகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய அளவில் காங்கிரசு அணி, பா.ஜ.க. அணி, மற்றும் எந்த ஒரு அணியும் ஏற்படாமல் சிதறுண்டு கிடக்கும் மாநிலக் கட்சிகளும் பிற கட்சிகளும் தேர்தலை சந்திக்கின்றன. இந்த மூன்றாவது தரப்பில் ஒற்றுமையை விட வேற்றுமையும், வெறுப்பும் ஒருங்கே கொண்ட மாநிலக் கட்சிகளே அதிகம். அவை தேர்தலுக்கு பிறகு எந்த ஒரு பிரதான அணிக்கும் சென்று விடும் என்று நம்பக்கூடிய சூழல்தான் நிலவுகிறது. அதற்காக காங்கிரசு மற்றும் பா.ஜ.க. அணியில் உள்ள கட்சிகள் அங்கேயே ஒட்டிக்கொண்டிருக்கும் என்று கூற முடியாது. அவையும் பசுமை நிறைந்த அக்கரையை தேடி ஓடிவிடும் நிலையிலேயே உள்ளன. ஆகவே வரும் தேர்தல் தங்களுக்கு எவ்விதத்தில் ஆதாயம் தரும் என்று எதிர்பார்த்து அனைத்து கட்சிகளும் போட்டி போடுகின்றன. பிற கட்சிகளை அவை வெகுவாக குறை கூறி பேசினாலும் அக்குறைகள் தங்களிடம் மிகுந்தே காணப்படுகின்றன் என்பது ஊரறிந்த ரகசியம். ஊழல், திறமையின்மை, மத மற்றும் சாதி சார்பு என்று பல விஷயங்கள் இவை அனைத்திலும் ஊடுருவி செல்கின்றது. யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர். இத்தகைய இழிகுணங்கள் சதவிகிதத்தில் வேண்டுமானால் மாறு பட்டிருக்குமே தவிர அனைத்துக் கட்சிகளும் அக்குணங்களில் ஒன்றுக்கொன்று போட்டி போடும் சூழலே நிலவுகிறது. ஆகவே இங்கு இவர்களை விட்டால் நமக்கு விதி இல்லை என்ற நடுநிலை மனப்பான்மையோடு இக்கட்டுரை எழுதப்படுகிறது. இதில் யாரையும் புண்படுத்தும் என்னமோ அல்லது யாரையும் புகழும் என்னமோ எமக்கில்லை. இந்த தேர்தலில் நமக்கு இருப்பவற்றில் சுமாரானதை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு மட்டுமே இதை எழுதுகிறேன். மாற்றுக்கருத்துக்களுக்கு இங்கு இடம் உண்டு. ஆயினும் "மிகை நாடி மிக்கக் கொளல்" என்கிற அடிப்படையில் என்னுடைய கருத்துக்களை வலியுறுத்துகிறேன். இவற்றின் மூலமாக யாரேனும் மன வருத்தமுற்றால் அல்லது பாதிப்படைந்தால் அதற்கு என்னுடைய பகிரங்க மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக அரசியல் நிலவரம்:
பாராளுமன்ற தேர்தல் 2014 ஐ பொருத்தவரையில் தமிழகத்தில் தனித்து போட்டியிடும் அ .இ.அ .தி.மு.க.வும், தி.மு.க. தலைமையில் ஐந்து கட்சிகள் கொண்ட ஒரு அணியும், தனித்து போட்டியிடும் காங்கிரசும், தே.மு.தி.க. தலைமையில் ஆறு கட்சிகள் கொண்ட ஒரு அணியும் மற்றும் இரண்டு கம்யுனிஸ்டு கட்சிகளை கொண்ட அணியும் போட்டியிடுகின்றன. இவற்றில் அ .தி.மு.க.வைத்தவிர மற்றைய கட்சிகள் கூட்டு சேர பல முயற்சிகளை மேற்கொண்டு கடைசியில் இந்த நிலைக்கு தங்களை தயார் படுத்திக் கொண்டுவிட்டன. இந்த தேர்தலில் தமிழகத்தில் மேற்கண்ட கட்சிகள்/அணிகளுக்கு வாக்களிப்பவர்கள் நடப்பது பாராளுமன்ற தேர்தல் ஆயினும் தமிழக நலனை உத்தேசித்தே வாக்களிப்பார்கள். அவர்கள் மன ஓட்டங்களுக்கு தெளிவினை வழங்கும் பொருட்டு கீழ்கண்ட அலசல் கை கொடுக்கும் என்று நம்புகிறோம்.
யாருக்கு வாக்களிக்க வேண்டும்?
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதில்தான் நாம் மன உறுதியோடு இருக்க வேண்டும். நாம் யாரை வர கூடாது என்று எண்ணுகிறோமோ அவர்கள் வராத படிக்கு நம்முடைய வாக்கை சிதறாமல் அத்தகைய கட்சியை தோற்கடிக்கும் நிலையில் உள்ள பிரதான கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமே தவிர கண்ட கண்ட கட்சிகளுக்கெல்லாம் வாக்களித்து நாம் விரும்பாதவர் மீண்டும் வெற்றி பெற வழி வகை செய்து விட கூடாது! அந்த வரிசையில் நாம் இந்த தேர்தலில் ஒதுக்கித் தள்ள வேண்டியவர் யார் என்று பார்க்கலாம்.
யாரை ஒதுக்க வேண்டும்?
1. காவிரி பிரச்சனையில் காங்கிரசு அரசு கர்நாடகாவிற்கு மட்டுமே சாதகமாக நடந்து கொண்டது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கித்தான் அவ்வப்போது நீரை பெற்று வந்தோம். கூட்டணி கட்சியான தி.மு.க.இதை தட்டிக்கேட்க கூட திராணியில்லாமல் பயந்து கிடந்தது. காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் காலம் தாழ்த்தியே வந்தது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையிலேயே அதுவும் வெளியிடப்பட்டது.
2. கச்சத்தீவு பிரச்சனை இன்று வரை ஓயாத தொல்லையாக இருக்க காங்கிரசு மற்றும் அதன் கூட்டணி கட்சியான தி.மு.க. மட்டுமே காரணம். மீனவருக்கு வலைகளை உலர்த்த பயன் படும் இடமாக ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டாலும் அதை தமது சொத்தாக உரிமை கொண்டாடும் இலங்கையை கேட்க நாதியற்று போனது தமிழகம்.
3. அவ்வப்போது மீனவர் கொல்லப்படுவதும், கடத்தப்படுவதும், தொடர்கதையாகிவிட்டதற்கு மத்திய அரசு மட்டுமே காரணம்.
4. முல்லைப்பெரியாறு மற்றும் பாலாறு பிரச்சனைகளில் தமிழக நலன்களுக்கு எதிராகவே நடந்து கொண்டது காங்கிரசு திமுக அரசு.
5. இலங்கை தமிழன் கொன்று நசுக்கப்பட்டு பல மனித உரிமை மீறல்கள் நடைபெறவும் காரணமாக இருந்ததோடு மட்டுமல்லாமல் அவற்றை கண்டுக்கொள்ளாமல் தமிழர்களை அனாதை ஆகியவை இந்த காங்கிரசு திமுக அரசு.
6. தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் உணவு பொருள் வழங்கல் போன்ற மததிய உதவிகள் பல வற்றிலும் மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடந்துக் கொண்டது மத்திய காங்கிரசு திமுக அரசு.
கடந்த பத்தாண்டுகளில் இது போன்று பல இன்னல்களை விளைவித்தவை இந்த அரசுகள்.
7. செம்மொழி அந்தஸ்தை தமிழுக்கு வழங்கியதாக கூறி மோசடி செய்தவை இந்த மத்திய அரசு. கல் தோன்றா காலத்து முன்தோன்றிய தொன்மையான தமிழ் மொழியை நேற்று மற்றும் அதற்கு முன் தினம் தோன்றிய மொழிகளுக்கெல்லாம் செம்மொழி அந்தஸ்தை அளித்து அந்த மொழிகளின் வரிசையில் தமிழையும் சமமாக அமர்த்தி கேவலப்படுத்திவிட்டது இந்த அரசு. தமிழின் பெருமையையும் தொன்மைய்ம் உதாசீனப்படுத்தப்பட்ட காங்கிரசு திமுக அரசுகள்.
8. தமிழ்நாட்டு அடிப்படை சேவைகளான ரயில்சேவை மின்தேவை மற்றும் விவசாய வளர்ச்சி போன்றவற்றில் சரிவை ஏற்படுத்தி அத்துறைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன இந்த கட்சிகள்.
மேற் கூறிய காரணங்களுக்காக நாம் காங்கிரசு மற்றும் தி,மு.க.வை எக்காரணம் கொண்டும் தேர்ந்தெடுத்துவிட கூடாது. அக்கட்சிகள் ஆட்சி அமைப்பதும் ஒன்று தான் தமிழ், தமிழர் மற்றும் தமிழகத்தை குழி தோண்டி புதைப்பதும் ஒன்றுதான். தன்மானம் மிக்க, சுய அறிவுள்ள, எதிர்கால சந்ததியினரின் நலனில் அக்கறை உள்ள எந்த ஒரு தமிழனும் காங்கிரசு மற்றும் தி.மு.க. கட்சிகளுக்கு வாக்களிக்க கூடாது. ஆதிலும் தி.மு.க மத்தியில் யார் ஆண்டாலும் அந்த ஆட்சியில் அங்கம் வகிப்பது ஒன்றே கொள்கையாக கொண்டு இயங்கும் குடும்ப நலக் கட்சி. 1996 தொடங்கி அக்கட்சி தேவகௌட, குஜரால், வாஜ்பாய், மன்மோகன் சிங் என்று அனைத்து பிரதமர்கள் தலைமையின் கீழும் கொழுத்த இலாகாக்களை பெற்று தம் குடும்பத்தை செழுமைப் படுத்திக்கொண்டுவிட்டது. தமிழனை அடகு வைத்து தம் வாழ்க்கையை ஒளிர செய்யும் ஒரே கட்சி தி.மு.க மட்டுமே அதை நாம் எக்காரணம் கொண்டும் வளர விடக்கூடாது. இவர்கள் வெற்றிபெற்றால் மத்தியில் அமையும் எத்தகைய அரசிலும் இடம் பிடித்து விடுவார்கள். சுயமரியாதை எள்ளளவும் இல்லாதவர்கள்.
தி.மு.க., காங்கிரசு, மற்றும் சிறிய கட்சிகளை தள்ளிவிட்டு பார்த்தால் மீதம் இருப்பவை அ.தி.மு.க. வும் தே .மு.தி.க. அணியும் தான்.
தே.மு.தி.க. அணி:
அ.இ.அ.தி.மு.க. கட்சி:
மேற்கூறிய கட்சிகளுக்கு இல்லாத ஒரு பலம் அ.இ.அ.தி.மு.க. இந்த தேர்தலில் உள்ளது. அது அந்த கட்சி ஒரு பெண்மணியால் வழி நடத்தப்படுவதும், அவர் தேர்தலுக்குப் பின் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளதும் அந்த கட்சிக்கு மிகப்பெரிய பலங்கள். அவ்வாறு தேர்ந்தேடுக்கப்படுவாரேயானால் அப்பதவியை அலங்கரிக்கும் முதல் தமிழர் என்ற பெயரும் பெருமையும் தமிழகத்திற்கு கிடைக்கும். உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக ஒரு தமிழர் அமைவார் என்ற சிறப்பு உலக தமிழர்கள் அனைவருக்கும் இனிமையான செய்தி அல்லவா?
மேலும் மின்தட்டுப்பாடு போன்ற காரணங்களுக்காக நாம் அ.இ.அ.தி.மு.க. விற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து விடக்கூடாது. அவற்றிற்கு நிரந்தர தீர்வு காண இவ்வரசு முயன்று வருகிறது என்பது நாம் நேரிடையாகவே காண்கிறோம். மேலும் ஜெயலலிதாவிற்கு எதிராக மத்திய அரசு செயல் பட்டதாலேயே தமிழகம் எதிர் பார்த்த வளர்ச்சி அடைய முடியவில்லை. ஆகவே மாநில அரசுக்கு அனுசரணையான அரசு அமைய வேண்டும். அதற்கு நாம் தி.மு.க. அல்லது தே.மு.தி.க.வை தவிர்த்து அ.இ.அ.தி.மு.க. விற்கு வாக்களிப்பதே நன்மைதரக் கூடியதாக இருக்கும்.
ஜெயலலிதாவின் தலைமையில் அமைந்த அ.இ.அ.தி.மு.க. விற்கு வாக்களிப்பதால் மட்டுமே தமிழ், தமிழர், தமிழக நலன் பாதுகாக்கப்படும். இதற்கு நிரூபணமாக கடந்த மூன்றாண்டுகளில் அவர் தமிழ், தமிழர், தமிழக நலன்களுக்கு ஆதரவாக பல நிலைகளில், பாராளுமன்றம், சட்ட மன்றம் உச்ச நீதி மன்றம் என்று தமது போராட்டங்களை தொடர்ந்து வருவதை கூறலாம். மற்றையோருக்கு வாக்களிப்பதன் மூலம் நாம் நமது எதிர் காலத்தை சூனியம் ஆக்கி கொள்கிறோம் என்பதே உண்மை. மாறாக அ.இ.அ.தி.மு.க. விற்கு வாக்களிப்பதால் நமது குரல் பாராளுமன்றத்தில் மட்டுமல்லாமல் உலக அரங்கிலும் ஓங்கி ஒலித்து தமிழ், தமிழர் மற்றும் தமிழக நலன்களுக்கு அரணாக அமையும் என்பது உறுதி.