திங்கள், 28 ஏப்ரல், 2014

அடிமைகள் நாம்!!

நாம் அனைவரும் அடிமைகள்தாம்! ஆச்சரியமாக இருந்தாலும் இதுவே உண்மை. ஒவ்வொருவரும்  சுதந்திரம் இன்றி கட்டுண்டு கிடக்கிறோம். ஆயினும் அனைவரும் தனி மனிதர்களாக யாருக்கும் அடிமையில்லாத சுய சார்புள்ளவர்களாக எண்ணிக்கொண்டிருக்கிறோம். இதை விட தலைகுனிவோ அறியாமையோ இருக்க  வாய்ப்பில்லை.இதில் மேலும் வியக்கத்தக்க விஷயம் என்னவெனில் மற்றவர்களை பார்த்து நாம் பரிதாபப் படுவதும் அவர்கள் முன்னேறவேண்டும், விடுதலை பெறவேண்டும் என்று அங்கலாய்ப்பதும்தான். நம்முடைய நிலைமையே பரிதாபமாக கிடக்க நாம் அடுத்தவரை எண்ணி பரிதாபப் படுவதை என்னென்று சொல்வது?

சுதந்திரம் பற்றி நாம் ஒவ்வொருவரும் பலவிதமாக எண்ணம் கொண்டிருந்தாலும், நாம் நினைத்ததை செய்ய வேண்டும், நம் விருப்பம் போல நடக்கவேணும், அடுத்தவர் குறுக்கீடு எதுவும் இருக்ககூடாது - இதுவே நம் அனைவர் மனத்திலும் சுதந்திரம் என்றவுடன் தோன்றும் பொதுவான சிந்தனை. இவற்றில் ஒரு துளி குறை ஏற்பட்டாலும் நம் சுதந்திரம் பறிபோய் விட்டதாக பதறுகிறோம். ஊரை கூட்டி ஒப்பாரி வைக்கிறோம். தனி மனித சுதந்திரம் பறிபோனதாக மேடைதோறும் முழங்குகிறோம். ஆயினும் நமக்கு சுதந்திரம் பற்றிய தெளிவான சிந்தனை உள்ளதா என்று எண்ணிப் பார்க்க முடிவதில்லை. 

அலுவலகம், பள்ளி, வீடு, கல்லூரி, சாலைகள், கூட்டங்கள், பொதுவிடுதிகள், என்று மனிதர்கள் புழங்கும் இடங்கள் அனைத்திலும் நமக்கு ஒரு வரையறை உள்ளது. இவ்வாறு நடக்கவேண்டும், உறங்கவேண்டும், செயல்பட வேண்டும், அடுத்தவருடன் இவ்வாறு தொடர்புகொள்ளவேண்டும், இத்தனை மணிக்கு இவ்விதம் நடக்கவேண்டும், என்று பல கட்டுத் திட்டங்கள் வரையறுக்கப் பட்டுள்ளன. இதை மீறுவது அவ்வமைப்புகளுக்கு பங்கம் உண்டு பண்ணும். ஆயினும் நாம் அவ்வாறு மீறுவதையே வாடிக்கையாக கொள்கிறோம். உதாரணமாக சாலை விதிகளை மீறுகிறோம், கூட்ட ஒழுங்கை மீறுகிறோம், நம் விருப்பம் போல செலவு செய்வதை வீட்டில் உள்ளோர் கேள்வி கேட்க கூடாது என்று நினைக்கிறோம், இவ்வாறு நடப்பதையே நம் சுதந்திரம் என்று நினைக்கிறோம். இதில் பாதகம் நேருமானால் நாம் எதிர்க்க தயாராகிறோம். இப்படி ஒரு கட்டுதிட்டங்களுடன் செயல் படும் அமைப்புகளை சீர்குலைக்கும் விதமாக நடப்பதையே நம் சுதந்திரம் என்று தான் பலர் எண்ணுகிறோம். 

மேலும் சில சிந்தனையாளர்கள் ஒரு படி மேலேபோய் சுதந்திரம் என்று சொல்லும்போதே ஒரு கடமையும் நமக்கு வந்துவிடுவதாகவும், நாம் கடமையை மறந்து சுதந்திரத்தை பற்றி மட்டுமே சிந்திப்பதாகவும் குற்றம் சுமத்துகிறார்கள். சாலையில் செல்வது நம் சுதந்திரம் என்றாலும் இடப்புறம் மட்டுமே செல்லவேண்டும் என்பது நம் கடமை அல்லவா? என்று அவர்கள் கேட்கிறார்கள். உண்மைதான்! ஆயினும் இது எப்படி சுதந்திரமாக இருக்க முடியும். நம்முடைய கவனத்தை கடமை என்னும் கட்டுதிட்டம் உறுத்திக் கொண்டே இருக்கிறது அல்லவா?

பிறகு என்னதான் சுதந்திரம் என்று நீங்கள் கேட்பது எனக்கு விளங்காமல் இல்லை. சுதந்திரம் என்ற சம்ஸ்கிருத மொழி சொல்லுக்கு நேரடியான சொல் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ இருப்பதாக தெரியவில்லை. விடுதலை, என்று தமிழில் கூறுகிறோம். ஏதோ இதுவரை எதிலோ கட்டுண்டது போலவும் இப்போதுதான் அதிலிருந்து விடுவிக்கப்பட்டது போன்றும் பொருள் தரும் சொல் இது. Freedom என்ற சொல் வழங்கப்பட்டாலும் சற்றேறக் குறைய தமிழில் கண்ட பொருளையே இது அடிப்படையாக கொண்டுள்ளது. ஒன்றிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலை எனப்பொருள் தருகிறது. Independence என்று ஆங்கிலத்தில் சொன்னாலும்  இதுவும் சுதந்திரம் என்பதை சரியாக வரையறுக்கவில்லை. ஒன்றை சார்ந்திராமை என்ற பொருள் தரும் சொல் இது. இயற்கையில் எந்த ஒரு பொருளும் ஒன்றையொன்று சார்ந்துதான் இருக்க வேண்டும் என்பது நியதி. அத்தகைய நிலையை அடையாத ஒரு பொருளுக்குத் தான் இந்த சொல் பரிபூரணமாக பொருந்தும். அப்படி ஒரு பொருள் இருக்குமா என்பதே சந்தேகம்தான். வேண்டுமானால் Economically Independent, Administratively Independent, என்று ஒரு சில வரையறைகளுக்கு மட்டுமே சார்ந்திராமல் இருக்கிறோம் என்று அறிவித்து கொள்ளலாம். அவ்வளவே. இது சுதந்திரம் என்று சொல்ல முடியாது. 

சுதந்திரம் என்ற ஒரு சொல் இரு மூல சொற்களின் கூட்டு சொல்லாகும். ஸ்வ+தந்த்ர என்ற இரண்டு சொற்களின் இணைப்பே சுதந்திரம் என்றாகியது. சுய+சிந்தனை என்று தமிழில் கொள்ளலாம். நம் ஒவ்வொருவருக்கும் இயற்கையிலேயே சுய சிந்தனை உள்ளது. ஆயினும் நாம் அதை அடைத்து வைத்துவிட்டு அடுத்தவர்களின் சிந்தனைகளை மட்டுமே சுமக்கும் ஓடமாக  செயல்படுகிறோம். நாம் யாருக்கும் சொல்லாலோ, செயலாலோ கட்டுண்டவர்கள் இல்லை என்று நாம் நினைத்தாலும், மனத்தால் பல சிந்தனை மற்றும் குழப்பங்களுக்குள் கட்டுண்டுதான் கிடக்கிறோம். வீடுகளில் ஆரம்பித்து வீதி வாயிலாக நாடுகள் தோறும் நாம் இப்படி சிக்கல் சூழலில் திணறிக் கொண்டிருக்கிறோம். என் தந்தை சொன்னார், என் தலைவர் சொன்னார், என் ஆசான் சொன்னார், என் குருநாதர் சொன்னார், என் நலம் விரும்பி சொன்னார் என்று பலர் இன்னொருவரின் சிந்தனையை அப்படியே தம் மூளைக்குள் திணித்துக்கொண்டு தமக்குள்ள சுய சிந்தனையை முற்றிலும் அழித்து விட்டிருக்கிறார்கள். ஆகவே தான் பல குழப்பங்களும் போர் முதலிய சர்ச்சைகளும் எழுகின்றன. மதத்தின் பெயராலும் மற்ற சுய நல கோட்பாடுகளின் பெயராலும் எண்ணற்ற உயிர்கள் பலியானதற்கு இத்தகைய சுய சிந்தனை இல்லாது போனதும் அடுத்தவர் சிந்தனையை அப்படியே சுமப்பதும்தான். என் குருநாதர் கூறிவிட்டார், நம் மதத்திற்கு இத்தகைய கெடுதல் ஏற்படுத்தியவனை நாம் அழித்திட வேண்டும் என்று அறைகூவல் விட்டுக் கொண்டிருக்கும் மனிதர்கள் ஏராளம். இத்தகைய அறைகூவலே இல்லாவிடில் நாடும் நகரமும் எவ்வளவு அமைதியாக இருக்கும். நம் சுய சிந்தனையை அழித்ததன் விளைவுதான் இது. 

சுய சிந்தனை என்பது எல்லோருக்கும் இயற்கையாக விதிக்கப் பட்டுள்ளது என்று கூறினேன். ஆயினும் அதை நாம் அறிவதில்லை, உணர்வதில்லை. நாம் அடுத்தவர் கண்கள் மூலமாக பார்க்கிறோம், அடுத்தவர் காதுகள் வாயிலாக கேட்கிறோம் அடுத்தவர் வயிறு மூலமாகவே உண்கிறோம். இதன் தாக்கமாவே அடுத்தவர் சிந்தனை வாயிலாகவே இந்த உலகையும் அதை சார்ந்த எண்ணற்ற பிரபஞ்சத்தையும் காண்கிறோம். நமக்கென்று உள்ள சுய சிந்தனையை அறவே பயன்படுத்துவதில்லை. தொலைகாட்சி, தொலைபேசி போன்று நாமும் அடுத்தவர் சிந்தனையை சுமக்கும் தொலைசுமை என்று வேண்டுமானால் கூறலாம். நமக்கும் அத்தகைய ஜடப் பொருட்களுக்கும் எந்த வேறுபாடும் இருப்பதாக எமக்கு விளங்கவில்லை. "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்று வள்ளுவப் பெருந்தகை அறிவிற்கு விளக்கம் தந்தார். "அறிவு அற்றம் காக்கும் கருவி" என்றார். அந்த அறிவு திறம்பட செயல்பட வேண்டுமானால் நாம் சுய சிந்தனை உள்ளவர்களாக விளங்க வேண்டும் அத்தகைய சுதந்திரம் இன்றி நாம் செயல் படாதபோது அடிமைகள் என்றே நம்மை நாம் சொல்லிக் கொள்ளவேண்டும்.

நாம் அடிமைகள் இல்லை. நம் ஒவ்வொருவரும் சுதந்திரர்கள். நமக்கென்று சுய சிந்தனை உள்ளது. அதை கூர்ந்து நோக்க வேண்டும். எத்தகைய மனிதர்கள் என்ன கூறி இருந்தாலும் அதை நம் சிந்தனையில் உரசி பார்க்க வேண்டும். அவர்கள் கூறி இருப்பதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற கட்டாயம் நமக்கில்லை. அது அவர்கள் சிந்தனை அதை நான் என் சிந்தனையில் உரசி ஆராய்ந்துதான் ஏற்க வேண்டும் அல்லது தள்ள வேண்டும். இவ்விதம் நாம் செயல் படாத வரை நமக்கு மிகப் பெரும் நெருக்கடிதான் நிலவும்.

நமக்குள்ளே நம்மை வாட்டி எடுத்து நம் சுய சிந்தனையை வெளிப்படாமல் செய்யும் எதிரிகள் இருக்கிறார்கள். நம் மனம் என்னும் பறவை அதன் திறந்த வெளி ஆகாயத்தில் சிறகடித்து பறக்கவிடாமல் அதன் கால்களை கட்டிப் போட்டு வைத்துள்ள தளைகளாக இருக்கிறார்கள் இந்த எதிரிகள். நாம் ஒரு செயல் செய்ய தீர்மானித்துள்ளோம், அதை செயல் படுத்தவிடாமல் செய்வதில் இந்த எதிரிகள் தீவிர ஆர்வம் காட்டுகிறார்கள். இவர்களை நாம் முறியடிக்க முடியாமல் திணறுகிறோம். இந்த எதிரிகளின் கட்டுப்பாட்டிலேயே நம்முடைய வாழ்வை அற்பனித்துவிட்டு, அவர்கள் சொல்லும் இழிசெயலை ஏற்று நாம் தீர்மானித்துள்ள செயலை செய்யாமல் புறம் தள்ளுகிறோம். இந்நிலை சுதந்திர மனிதன் செய்ய துணியாத நிலை.

நம் விருப்பம் போல தொழில் செய்ய முடியாது - அடுத்தவரை சார்ந்து இருக்க வேண்டும்! நம் விருப்பம் போல உண்ண முடியாது - அடுத்தவரை சார்ந்து இருக்க வேண்டும்! நம் விருப்பம் போல தூங்க முடியாது - அடுத்தவரை சார்ந்து இருக்க வேண்டும்! இதை போல நம்முடைய வாழ்வில் எந்த ஒரு செயலாக இருந்தாலும் அல்லது செயலற்றநிலையாக இருந்தாலும் அடுத்தவரை சார்ந்தேதான் இருந்தாக வேண்டியநிலை! நாம் அனைவரும் சூழ்நிலை கைதிகள்! வாழ்க்கைக்குள் சிறைபட்டிருக்கிறோம்! இதில் நம் மனமும், பொறிகளும் கூட நம்மை கட்டிப்போட்டுள்ளதை நினைக்கும்போது நமக்கு உண்மையில் சுதந்திரம் இல்லை என்றே சொல்ல வேண்டும்! ஆம், நாம் அனைவரும் அடிமைகள்தாம்!! சுய சிந்தனை தெளிவு வந்து நாமாக தளையை  உடைக்கும் வரை முட்டைக்குள் இருக்கும் கருவை போல நாம் இருக்க வேண்டியது தான்!!

சனி, 5 ஏப்ரல், 2014

சிந்திக்க நேரமிருக்காது! குறைந்த பட்சம் சிரித்து வைப்போம்!!

ஸ்டாலின்: நாங்கள் சொன்னதை செய்தோம், சொல்லாததையும் செய்தோம்.

அப்பாவி தொண்டன்: ஆமாம் தலைவா! மத்திய அரசில் அங்கம் வகிப்போம் என்று சொன்னதை செய்தோம். இலங்கை தமிழனுக்கும் தமிழக மீனவனுக்கும் துரோகம் செய்வோம் என்று சொல்லாததையும் செய்தோம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஸ்டாலின் அக்டோபரில்: தமிழகத்தில் மின்வெட்டு குறைந்திருப்பதற்கு காரணம் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களே ஆகும்.

ஸ்டாலின் மார்ச்சில்: அம்மையார் ஆட்சியில் தமிழகத்திற்கு மின்வெட்டு தலைவிரித்து ஆடுகிறது.

அப்பாவி தொண்டன்: ஒன்னும் புரியலையே தலைவா! மின்வெட்டு தலைவிரித்து ஆடும் அளவிற்கா நாம் திட்டங்களை கொண்டுவந்தோம்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஸ்டாலின்: ஜெயலலிதா பா.ஜ.க.வை ஏன் விமரிசிப்பதில்லை? அவருக்கும் பா,ஜ.கவிற்கும் மறைமுக ஒப்பந்தம் உள்ளது!

அப்பாவி தொண்டன்: அதானே! ஒன்னும் புரியலையே தலைவா! தலைவர் கலைஞர், "மோடி எனது நண்பர்" என்று சொல்லியும் கூட ஜெயலலிதா மோடியை திட்டவில்லை என்றால் இதில் ஏதோ சூது இருக்கிறது!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஸ்டாலின்: ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழர்களை பற்றி சிந்திக்கும் ஒரே கட்சி தி.மு.க. தான்!

அப்பாவி தொண்டன்: ஆமாம் ஆமாம்! திஹார் பக்கம் போயிருந்தப்ப கூட நாம கனிமொழி, ராஜா என்று தமிழர்களை பற்றி மட்டுமே சிந்தித்திருந்தோம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மார்க்சிஸ்ட் ராமகிருஷ்ணன்; ஜெயலலிதா பா,ஜ.க.வை ஏன் விமரிசிப்பதில்லை? கோவை கூட்டத்திற்கு கூட்டத்தை கூட்ட தனியார் பேருந்துகள் பயன் படுத்தியது தொடர்பாக அ.தி.மு.க மீது தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவோம்.

அப்பாவி தொண்டன்: ஹையா! இந்த ஜெயலலிதாவிற்கு தோழர் என்னமா சவால் விடுறார் பாரு! அந்தம்மாவுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்! நாம கேட்ட ரெண்டு இடத்த கொடுத்திருந்த இந்த மாதிரியெல்லாம் கேள்வி கேட்டு தர்ம சங்கடத்துல ஆழ்த்துவாரா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மார்க்சிஸ்ட் ராமகிருஷ்ணன்: தேர்தலுக்கு பிறகு மத்தியில் மத சார்பற்ற, ஊழலற்ற அரசு அமைப்போம்.

அப்பாவி தொண்டன்: காங்கிரஸ், சமாஜ்வாதி, தி.மு.க. வை ஆதரித்து மத சார்பற்ற அரசை கடந்த காலங்களில் அமைத்தோம். வரும் தேர்தலில் எப்படி பா,ஜ.க.வை ஆதரித்து ஊழலற்ற அரசை அமைப்பது? அது நாம் இது வரை செய்யாத தியாகம் ஆயிற்றே!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விஜயகாந்த்: மோடிக்கு வாக்களியுங்கள். அவர் தமிழகத்தில் தொழில் புரட்சியையும் மின் வெட்டையும் போக்க உதவுவார். 

அப்பாவி தொண்டர்: தேர்தலுக்கு பிறகு அந்தம்மா மோடிகூட சேர்ந்துடுச்சின்னா, கூட்டணியிலேருந்து மோடி நம்மள போக்கிடுவரே!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஸ்டாலின்: ஒரு ருபாய் சம்பளம் வாங்கிய ஜெயலலிதா கோடி கோடியாக சொத்து சேர்த்தது எப்படி?

அப்பாவி தொண்டன்: என்ன தலைவா, இது ஒரு பெரிய விஷயமா? அவங்களும் நம்மை மாதிரி திராவிட பாரம்பரியத்தில் வந்தவங்கதானே! ரயில் டிக்கெட்டுக்கு கூட வழியில்லாம் சென்னை வந்த நம்ம தலைவர் இன்னைக்கு பல வாரிசுகளுக்கு கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைக்கலையா? அதே டெக்னிக்தான்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஸ்டாலின்: தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கித்தன்தது தி.மு.க.

அப்பாவித் தொண்டன்: எனக்கென்னமோ அந்த அந்தஸ்த அவசரப்பட்டு வாங்கிட்டோமொன்னு தோணுது. நேற்று மழையில முளைச்ச காளான் மாதிரி இருக்கிற மொழிகளுக்கெல்லாமும் கூட செம்மொழி அந்தஸ்து வழங்கி நம் தமிழை இழிவு படுத்தி விட்டது நாம பத்து வருஷமா தாங்கி புடிச்சிருந்த மத்திய காங்கிரஸ் அரசு!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்திய கம்யுனிஸ்ட்: மதவாத சக்திகளை வீழ்த்த மத சார்பற்ற சக்திகள் ஒன்று சேர வேண்டும்.

அப்பாவித் தொண்டன்: அப்போ நம்ம அணிக்கு தலைவரு ஜெயலலிதாவா மமதா பானர்ஜியா? அவங்களும் பா.ஜ.க. மற்றும் காங்கிரசை வன்மையா எதிர்க்கிறாங்களே!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தொண்டர்-1: கருணைக் கொலைன்னா என்ன?

தொண்டர்-2: ஒரு இடத்துல கூட ஜெயிக்க முடியாதுன்னு தெரிஞ்சும் 8 இடத்துல பா.ஜ.க நிக்குதே அதுதான்!

தொண்டர்-2: அப்படி இருக்காது. கூடவே நின்னு தோற்கட்டுமே என்று தலைவர் கூட்டணி கட்சிகளுக்கு 5 இடம் கொடுக்கலையா அதுதான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உண்மை விசுவாசி-1: இதென்ன புது ட்ரெண்டா இருக்கு? ரிடையர் ஆனா போலிஸ்காரங்கல்லாம் நம்ம கட்சியில சேர்ந்துகிட்டு இருக்காங்க?

உண்மை விசுவாசி-2: சர்வீஸ்ல இருக்கிற போலீஸ்காரங்க ஏற்கெனவே நம்ம கட்சிக்காரங்க மாதிரிதான் இருக்காங்க! நாமளும் ஜோதியில ஐக்கியம் ஆயிடுவோம்னு முடிவு பண்ணி இருப்பாங்க!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கண்மணி: ஐயா! தேர்தல் அறிக்கைய வெளியிட்டதுக்கு பதிலா நாமே ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டிருக்கலாமே!

தலைவர்: ஏன் அப்படி சொல்ற?

கண்மணி: தேர்தல் அறிக்கைய எவன் படிக்கிறான்? கருத்துக் கணிப்பை வெளியிட்டிருந்தா அதுலயாவது நம்ம கட்சி வெற்றிப் பெற்றிருக்கும்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உடன் பிறப்பு: நம்ம கட்சி ஒரு குடும்ப ஆட்சி நடத்துறதா எதிர் கட்சிகள் குற்றம் சுமத்துவது மிகவும் தவறானது. 

தலைவர்: சபாஷ்! இப்படித்தான் எதிர்கட்சி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கணும்.

உடன் பிறப்பு: ஒரு குடும்ப ஆட்சி என்று சொல்வது தவறு. பல குடும்ப ஆட்சி என்பதே சரி - இல்லையா தலைவா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உடன் பிறப்பு-1:  நம்ம கட்சி தோற்கப் போவது உறுதியாயிடுச்சா? 

உடன் பிறப்பு-2: என்ன அபசகுனமா பேசற? 
உடன் பிறப்பு-1: தலைவர் நேற்று கோவையில பேசிய பேச்ச கவனிச்சியா? 

உடன் பிறப்பு-1: கவனிச்சேன். ஆனா அதுல தோல்விவெற்றி பற்றி எதுவும் பேசலியே! 

உடன் பிறப்பு-2: மோடிகளுக்கு இடம் இல்லை என்று பேசினாரே கவனிச்சியா?

உடன் பிறப்பு-1: அவர் மத சார்பற்ற தன்மைய வலியுறுத்த இப்படி விமர்சிக்கிராறு. அதுல என்ன தப்பு. 

உடன் பிறப்பு-2: நாம ஜெயிக்கிற நிலையில இருந்தா இப்படி பேசி இருக்க மாட்டரு! ஜெயிச்ச பிறகு ஒரு வேளை பா.ஜ.க. அரசு அமைக்கிறதா இருந்தா ஆட்சியில நம்ம கட்சிக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் முக்கியமான துறைகளை வாங்கிடுவாரே. இப்ப இப்படி பேசறத பார்த்தா நமக்கு வெற்றி வாய்ப்பு இல்லைன்னுதான் தலைவரே முடிவு பண்ணிட்டதா நினைக்கிறேன்!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தலைவர்: தி.மு.க. அரசு கொண்டுவந்த பல நல்ல திட்டங்களை அ.தி.மு.க. அரசு புறக்கணித்து விட்டது.

தொண்டர்: ஆமாம் தலைவா! என்னென்ன நல்ல திட்டங்கள் தெரியுமா? சேது சமுத்திரம் திட்டம் ஒண்ணு போதும். கடல்ல மண் அள்ளியே காலா காலத்துக்கும் பிழைச்சிருக்கலாம். அது வாயில மண்ணை போட்டுட்டாங்க!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தலைவர்: அனேகமா நான் சந்திக்கும் கடைசி தேர்தல் இதுவாகத்தான் இருக்கும்! 

கேப்டன்: 1998 லேருந்து இதுதான் சொல்லிக்கிட்டு வரீங்க!

நெஞ்சன்: கடைசி தேர்தல் தலைவருக்குத்தானே தவிர கட்சிக்கு அல்ல!

அப்பாவி: என்ன சொல்றாங்க இவங்க? சீக்கிரம் கிளம்ப சொல்றாங்களா?