ஞாயிறு, 20 மே, 2012

இவனுங்க போடுற ஆட்டம் தாங்கலடா சாமி!


இன்னைக்கி இந்தியாவில ரொம்ப சோகமா இருக்கிற வர்க்கம் ரெண்டுதான். ஒன்னு அரசியல்வாதி, இன்னொன்னு சாமியார் ஜாதி! இவனுங்களுக்கு மக்கள்தான் மூலாதாரம். அதுவும் ஒன்னும் தெரியாதவங்க, அறிவு குறைஞ்சவங்க, தடுமாறுகிற மனம் உள்ளவங்கதான் இவங்களுக்கு தேவை. அதை எப்படியோ பொறுக்கி எடுத்துடுவானுங்க. அதுவும் இந்த அரசியல் வாதியாவது ரோட்ல இறங்கி பிச்சை எடுக்காத குறையா ஒருமுறையாவது மக்களை சந்திக்க வருவான். ஆனால் இந்த சாமியாருன்னு சொல்லிக்கிறவன்  ஒருத்தன் கூட மக்களை தேடி வருவது கிடையாது. இந்த முட்டா ஜனகதான் அவனை தேடி அலைஞ்சி கண்டு பிடிச்சி அவன் கால்ல விழுந்து பணத்தை கொட்டோ கொட்டுன்னு கொட்டிவிட்டு வருவானுங்க. அந்த வகையில மிக மிக சொகுசு வாழ்க்கை அமையறது என்னவோ இந்த சாமியாருங்களுக்குதான். உழைப்பு இல்லை, வீண் அலைச்சல் இல்லை, குடும்ப பாரம் இல்லை, வாழ்க்கையின் மற்ற இன்னல்கள் இல்லை. இருந்த போதும் வாழ்க்கையின் அனைத்து சொகுசுகளும், சந்தோஷங்களும் இவங்களுக்கு கிடைச்சிடும். அதை கேள்வி கேட்க முடியாது. அரசும் சரி, மற்றைய அறிவு சார் கூட்டமும் சரி, கேள்வி கேட்டுவிட்டால் மத உணர்வுகளை தூண்டி விட்டுவிட்டு அதிலே நிம்மதியாக குளிர் காய்வாங்க இந்த கயமைவாதிகங்க. 


எந்த பொருளும் அதன் மீது வைக்கும் பற்றின் காரணமாக இன்பமோ அல்லது துன்பமோ தரும். வைராக்கிய மனம் கொண்டோருக்கு இத்தகைய இன்பமும் துன்பமும் ஒருபோதும் நெருங்குவது அரிதாகும். ஒரு பொருளினால் உண்டாகும் துன்பம் அந்த பொருளை நினையாதோருக்கு இல்லை என்கிறார் தெய்வ திருவள்ளுவர். ஆகவே துன்பத்தை அறவே நீக்க விரும்புவோர் துன்பம் தரும் பொருட்களை விரும்பாதிருப்பது மட்டுமே வழி. ஆனால் அத்தகைய வைராக்கியமும் துறவு நெறியும் அனைவருக்கும் எளிதில் வாய்ப்பதில்லை. அரிதினும் அரிதாக, வள்ளலார், ரமணர், ராமகிருஷ்ணர் போன்ற பெரியோர் மட்டுமே கருவிலிருந்து இத்தகைய அரும் பண்பை பெற்றிருக்கின்றார். மற்றையோர் உணர்வுகளுக்கு இரையாகின்றனர். அத்தகையோர் கூட துறவு நிலையை அடைய எளிய உபாயங்களை நமது சமய பெரியோர்கள் வகுத்திருக்கிறார்கள். அதில் நாள்தோறும் ஈடுபட முயல வேண்டும். துறவு என்றால் காவி கட்டிக்கொண்டு வேடம் போடுவது என்று பொருள் அல்ல. தினமும் காபி குடிப்பதால் உடல் நிலை கெடுவதோடு, பணமும் விரையமாகிறது ஆகவே அதை விட்டுவிடுங்கள் என்பார் காஞ்சி மஹா பெரியவர். காபி குடிப்பதில் மிகவும் ஆர்வம் உள்ள ஒருவர் அதை விட்டு விட துணிவதே துறவு. அதன் பின்பு அவருக்கு காபியால் ஏற்படும் துன்பங்கள் ஒருபோதும் நெருங்க மாட்டா. இதுவே துறவு. இப்படி துறவு பூணுவது மிக மிக கடினமான செயலாகும். ஏனெனில் நம்முள்ளே குடி கொண்டிருக்கும் உணர்வுகள் நம்மை அனேக பொருட்களுடன் கட்டிப்போட்டு அடிமை படுத்தி உள்ளன. அதிலிருந்து மீள்வது மிக மிக அரிதான செயலாகும். இதனாலேயே நாம் பல வேளைகளில் அவமான பட நேருகிறது. குடிகாரர்கள் குடித்துவிட்டு வீதியில் புரள்வதும், காமுகர்களாக கணிகையரிடம் சிக்கி தவிப்பதும், அடுத்தவர் பணம் பொருள் என்று பலவற்றை களவாடி மரியாதையை இழப்பதும் இப்படித்தான்.


ஒன்றின்பால் ஈர்க்கப்படுவது இயற்கை. விட்டில் பூச்சி விளக்கிடமும், வண்டு தேனிடமும், எறும்பு சர்க்கரையிடமும் கவரப்படுவது இந்த ஈர்ப்பினால்தான். அவை அந்த ஈர்க்கப்பட்ட பொருட்களினாலேயே அழிவையும் சந்திக்கின்றன. அவை உணர்வினால் மட்டுமே உந்தப்படும் நிலையில் உள்ளதால் இத்தகைய அழிவு உண்டாகிறது. ஆனால் ஆறறிவு பெற்ற மனிதனும் உணர்வினால் உந்தப்பட்டு இப்படி பரிதாப நிலையை அடைகிறான் எனும்பொழுது இரக்கமே உண்டாகிறது. ஆயினும் மற்றைய ஜீவராசிகளுக்கு இல்லாத ஒரு எளிய வழி யாக துறவு நிலை மனிதனுக்கு வாய்த்திருக்கிறது. அதை கடை பிடிப்பது கடினம் ஆயினும் எளிய பயிற்சி மற்றும் முயற்சியினால் அதை நம் வசம் கொண்டு வந்து விடலாம். மனிதனாக பிறந்த அனைவருக்கும் இது சாத்தியமே. விச்வாமித்திர முனிவர் இத்தகைய தொடர்ந்த முயற்சியினாலேயே மிக உயர்ந்த நிலையை அடைந்தார். ஒவ்வொரு முறையும் சறுக்கி சறுக்கி எழுந்தவர்தான் அவர். கடைசியில் வெற்றி கண்டார். 


தொடர்ந்த முயற்சியினாலும் வைராக்கியத்தினாலும் மட்டுமே அடைய கூடிய துறவு நிலையை இன்றைய மனிதர்கள் மிக சாதரணமாக எட்டிவிடலாம் என்று எண்ணுகிறார்கள். அவற்றின் வெளிப்பாடே இத்தகைய போலிகளின் படையெடுப்பு. வெறும் காவித்துணியும்,கொட்டைகளும்,பட்டைகளும் அணிந்து இவர்கள் அப்பாவி மனிதர்களை குறி வைத்து தாக்குகிறார்கள். சில கண் கட்டு வித்தைகளும் ஒரு சில அரசியல் பிரபலங்களின் அணிவகுப்பையும் தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்கிறார்கள். அறிவை மழுங்க செய்து, தாங்கள்தான் இந்த ஈனப்பிறப்பை கடைத்தேற்ற வந்தவர்களை போல காட்டிக் கொள்கிறார்கள். எத்தனையோ இளம் பெண்கள், பையன்கள் இந்த கூட்டங்களின் பிடியில் சிக்கி தாய் தகப்பன்மார்களை விட்டுவிட்டு சீரழிந்து நிற்கிறார்கள். காவியை போர்வையாக்கி அதன் பின்புலத்தில் இவர்கள் சமூக மற்றும் சட்ட விரோத காரியங்களில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கி எடுக்க பெரும்பான்மையான அரசுகள் தயக்கம் காட்டுகின்றன. துணிந்து நடவடிக்கை எடுப்பவர்கள் தங்களது வாக்குகளை இழக்கும் நிலை உள்ளது. மனதை கட்டுப்படுத்தி,அறியாமையில் உள்ள மக்களை நல்வழிபடுத்த தோன்றிய துறவு நிலையை, மீனை பிடித்து தின்ன குறுக்கு வழி தேடி சந்நியாசம் மேற்கொண்ட உருத்திராக்க பூனையை போல் ஆக்கிவிட்ட இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவே அரசுகள் தயங்குகின்றன. இவர்கள் ஒழுக்க கேட்டிற்கும் சமுதாய சீரழிவிற்கும் காரணமாக விளங்குகிறார்கள். 



மதுரை ஆதீனத்தின் வாரிசாக நியமிக்கப்பட்டுள்ளவர் மிகவும் கேவலமாக சாந்தி சிரிக்க நடந்து கொண்டவர். தம் மீது சட்ட பூர்வ நடவடிக்கை வரட்டும், சந்திக்க தயார் என்று கொக்கரிக்கிறார். இது ஒரு யோக்கியனின் வாக்கு போல தோன்றவில்லை. சட்டத்தை இன்றைய நிலையில் பணம் உள்ளவர்கள் எவ்வாறு சந்திக்கிறார்கள் என்பது ஊருக்கே தெரியும். அந்த பாணியை மேற்கொள்ள தயங்காத இந்த மனிதர்கள் தங்களை ஆன்மீக குரு என்று சிறிதும் கூச்சமில்லாமல் கூறிக்கொள்ள தயங்குவதில்லை. தங்கள் வயிற்ருப் பிழைப்பிற்கு காவியை பயன்படுத்தும் இவர்களிடம் ஒரு கூட்டம் மண்டியிட்டு கிடப்பதை கண்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே. இவர்கள் சொல்வதே வேதம் என்று தலைமேல் வைத்து கொண்டாடுகிறார்கள். துறவிக்கு கூடாதன என்னென்ன உண்டோ அத்தனையும் இவர்களிடம் மண்டியிருக்கிறது. பெண்,பொன், மண் என்று அத்தனையும் அங்கே குவிந்து கிடக்கிறது.   மடத்தில் இளம் பெண்ணுக்கு என்ன வேலை? முதற்கண் துறவிக்கு நாட்டில் என்ன வேலை? காடுகளில் குகைகளில் அடைந்து தவம் செய்ய வேண்டியதுதானே? இங்கே இல்லற மனிதனுக்கு உரிய அத்தனை சுகங்களையும் இவர்கள் ஏன் அனுபவிக்கிறார்கள்? இப்படி சிந்தித்தாலே துறவிகளில் பவிசு தெரிந்து போகும். கட்டாந்தரையில் எந்த துறவி படுக்கிறான்? 



ஆதி சங்கரர் துறவு நிலையின் மேன்மை பற்றி பஜ கோவிந்தம் என்ற அறிய கீதத்தில் குறிப்பிடுகிறார்: "துறவி ஒரு கோவிலின் அருகில் உள்ள மர  நிழலில் படுத்துக்கொள்கிறான், தன் கையையே தலைக்கு வைத்துக்கொள்கிறான், தன்னது என்று எதுவும் இல்லாமல் அனைத்து இன்பங்களையும் தியாகம் செய்து விடுகிறான், அப்படிப்பட்ட வைராக்கியம் வாய்க்கப்பெருகிறான், இத்தகைய இது யாருக்குத்தான் வாய்க்கும்?" இப்படியா இருக்கிறார்கள் இந்த சாமியார்களும், மடாதிபதிகளும்? கொழுப்பு நிறைந்த உணவும், பஞ்சனை மெத்தையும், குளிரூட்டி அறைகளும், எடுப்பு பணி பெண்களும், இவர்களுக்கு இருக்கும் பொழுது எப்படி துறவு கை கூடும்? அடுத்தவன் சொத்தில் ஆட்டையை போடும் இவர்களும் ஒரு சமூக விரோத கும்பல்தான். இவர்களை அடித்து விரட்டும் நாள்தான் நம் சமூக விழிக்கும் நாள். அது என்றோ? 

ஞாயிறு, 6 மே, 2012

பெருமாள் என்ன சர்டிபிகேட்டா கேட்டார்?

திருப்பதியில் கோவில் கொண்டுள்ள இறைவனை நாள்தோறும் லக்ஷக்கணக்கான பக்தர்கள் தரிசித்த வண்ணம் உள்ளனர். அவரை தரிசிக்க விரதமோ வேறு எந்த வித கட்டுப்பாடுகளோ தேவை இல்லை. தூய மனமும் தரிசிக்க வேண்டும் என்ற அவாவும் மட்டுமே போதும். ஆயினும் ஆலயத்தார் இந்துக்கள் அல்லாதோரை ஆலயத்தில் அனுமதிப்பதில்லை. இதற்கு காரணம் ஒவ்வொரு மத சம்பிரதாயத்தையும் மதிக்க வேண்டும் என்பதுதான். யார் வேண்டுமென்றாலும் வந்து போக ஆலயங்கள் ஒன்றும் அருங்காட்சி சாலைகள் அல்ல. இது அனைத்து இந்து கோவில்களிலும் பின்பற்றப்படும் முறைதான் என்றாலும் திருப்பதியில் மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கின்றார்கள். இறைவன் மீது அசையாத நம்பிக்கையை வெளிப்படுத்தி ஒரு உறுதி மொழி பத்திரத்தில் கையோப்பமிட்டாலே போதும். அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.  

இப்படி ஒரு உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பமிடாமல் சென்றார் என்று திரு. ஜகன் மோகன் ரெட்டி என்கிற ஆந்திர அரசியல் வாதிமீது சமீபத்தில் (26/04/2012) குற்றச்சாட்டு எழுந்தது. அவர் கிறித்தவ மதத்தை பின்பற்றுபவர் என்றும் இவ்வாறு உறுதி மொழி அளிக்காமல் சேர்ந்து கோவில் சட்ட திட்டங்களை மீறிய செயல் என்றும் கூறுகிறார்கள். ஆனால் ஜகன் மோகனோ தான் ஏற்கெனவே 2009 இல் முதன் முறையாக சென்ற பொது அவ்வாறு உறுதி அளித்திருப்பதாகவும் மறுபடி மறுபடி அளிக்க வேண்டியதில்லை என்றும், தனது தந்தையார் திரு. ராஜசேகர ரெட்டி ஆந்திரத்தின் முதல்வராக  இருந்த போது பலமுறை திருப்பதி சென்று இறைவனை தரிசித்ததாகவும் அப்பொழுதெல்லாம் இது போன்று சான்றிதழ் கேட்டதில்லை என்றும் கூறுகிறார்.  

அவர் கூறுவது நியாயமே. ஜகன் மோகன் ஒரு பிரபல மனிதர் என்றும் அவருடைய மதம் கிறித்தவம் என்பது எல்லாருக்கும் தெரிந்திருப்பதால் இப்படி கேட்கிறார்கள். ஆனால் லக்ஷக்கணக்கில் வரும் பக்தர்களில் யார் இந்து கிறித்தவன் முஸ்லிம் என்று யார் கண்டுபிடிப்பது. கூட்டத்தோடு கூட்டமாக வருகிறார்கள் போகிறார்கள். இவர்கள் எல்லாம் வழிய சென்று எந்த உறுதி மொழி பத்திரத்திலும் கையொப்பம் இடுவதில்லை. இப்படிப்பட்ட நிலையில் பிரபல மனிதர்களை மட்டும் குறி வைத்து பேசுவது நியாயம் இல்லை. இது போன்றுதான் குருவாயூர் கோவிலிலும் பிற மதத்தவர் வந்தால் சுத்தி கரிப்பு செய்கிறார்கள். அதாவது கோவிலையே கழுவி விடுகிறார்கள். வயலார் ரவியின் மகனின் திருமணம் அந்த கோவிலில் நடை பெற்றது. திருமணம் முடிந்தவுடன் கோவிலை கழுவி தள்ளினார்கள். அதற்கு காரணம் வயலாரின் மனைவி கிறித்தவ மதத்தை சார்ந்தவர் என்று கூறப்பட்டது. வயலாரை போல பிரபலம் ஆகாத சாதாரண மனிதர்கள் வந்திருந்தால் இவ்வாறு செய்திருப்பார்களா  என்பது ஐயமே. இப்படி செய்வது ஒருவகையில் பிரபல மனிதர்களுக்கு இழைக்கும் அநீதியாகவே ஆகிறது. இத்தகைய நிலையை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தார் சிறிது மாற்றி அமைத்து விடலாம். கீழ்கண்ட படி செய்வதால் இத்தகைய பிரச்சனைகள் எழாமல் தடுக்கலாம். 

தீர்வுகள்:

திருப்பதிக்கு வருபவர்கள் அனைவருமே வேங்கடரமண பெருமாளை தரிசித்து தங்கள் குறைகளை கூறவே வருகிறார்கள். அவ்விறைவன் மீது நம்பிக்கை அற்றவர்கள் அங்கே வருவதில்லை. வேடிக்கை பார்க்க வருபவர்கள் கூட பய பக்தியோடுதான் வருகிறார்கள். ஆகவே அவர்கள் பிரத்தியேகமாக ஒரு உறுதி மொழி பத்திரத்தில் கையெழுத்து போடவேண்டும் என்பதில்லை. இறைவன் மீது அவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையும் பற்றும் இருக்கிறது. ஆயினும் கோவில் நிர்வாகத்தார் தூய இந்துக்களை யும் மற்றும் பெருமாள் மீது பக்தி கொண்டோரையும் மட்டுமே அனுமதிக்க முடியும் என்கிற ஒரு வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். இதற்கு தீர்வாக நாம் அனுமதிப்போரை ஒரு சிறிய நடைமுறைக்குள் கொண்டுவந்து விட்டாலே போதும். 

இந்துக்களை பொருத்தமட்டில் கங்கை நீரும், நெற்றியில் அணியும் திலகமும் புனிதம் ஆனவை. எத்தகைய பாவம் செய்திருந்தாலும், தீட்டுக்கள் கலந்திருந்தாலும் கங்கை நீர் அதனை தூய்மை படுத்துகிறது என்கிற நம்பிக்கை உடையவர்கள் அவர்கள். ஆகவே திருப்பதி கோவிலுக்குள் நுழையும் அனைத்து பக்தர்கள் மீதும் தூய கங்கை நீரை தெளிக்க செய்வதன் மூலம் அவர்கள் அடைந்த அனைத்து தீட்டுக்களும் பாவங்களும் அவர்களை விட்டு நீங்கி அவர்கள் புனித தன்மை அடைகிறார்கள். பிற மத தீட்டு என்கிற வினையும் அவர்களை விட்டு நீங்கி விடுகிறது. 

அடுத்ததாக அவர்கள் அனைவரின் நெற்றியிலும் திலகமிட்டு அனுப்பலாம். கோவிலுக்குள் இவ்வாறு செல்கிறவர்கள் இந்துக்கள் என்ற அந்தஸ்தை பெறுகிறார்கள். அவர்கள் வேற்று மதத்தினராயினும் அந்நிய நாட்டவராயினும் இறைவனை தரிசிக்கும் பொழுது இந்துக்களாகவே இருக்கிறார்கள். இதனால் ஒரு குறையும் நேராது. கண்ணுக்கு தெரியாமல் கோவிலுக்குள் செல்லும் வேற்றுமதத்தினரையும் இவ்வாறு செய்யும் சிறு முயற்சியால் இந்துக்களாகவே மாற்றி அனுப்ப முடியும். வேற்று மதத்தினர் என்றில்லாமல் நம் மதத்தினரும் அசுத்தமாக கோவிலுக்குள் செல்வதை தடுக்க இந்த முயற்சி பயன் படும். Om Namo Naaraayanaaya: