ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

காவிரித்தாயே கைவிரித்தாயே!

ஆண்டுதோறும் தென்னாட்டில் மக்களுக்கிடையே கொதிப்பையும் அமைதியின்மையையும் தோற்றுவிக்கும் ஒரு நிரந்தர பிரச்சனையாக ஆகிவிட்டது காவிரி. ஏழு புண்ணிய நதிகளில் ஒன்றாகிய காவிரி இன்று மக்களை பாவம் செய்ய தூண்டும் காரணியாகிவிட்டதை எண்ணும் பொழுது மிகவும் வேதனையாக இருக்கிறது. பரஸ்பரம் மக்களுக்கிடையே நம்பிக்கையின்மையும், விட்டுக்கொடுக்காத நிலையும், அறியாமையுள் உழலும் சமூகமும், அவற்றை தங்கள் குறுகிய கால அறுவடைக்கு  அரசியல் மடமையும் சேர்ந்து காவிரி என்றில்லை அனைத்து இந்திய பிரச்சனைகளுக்கும் அடித்தளமாக அமைகின்றன. 

மன்னராட்சி, கொடுங்கோல் முறை, தடியெடுத்தவன் தண்டல்காரன், கட்ட பஞ்சாயத்து என்று அனைத்துவிதமான ஆதிக்க நிலைகளை கடந்து மனிதன் கண்டெடுத்த வைரம் ஜனநாயகம். இந்த அமைப்பில் யாரும் யாரையும் அடக்கி ஆளவோ அட்டூழியம் செய்யவோ முடியாது. வலிமையற்றவனை வலிமையானவன் ஏய்க்க முடியாது. ஒருவாறு மற்றொருவரை மதிப்பது, சமமாக பாவிப்பது, சகோதரத்துவத்தை உணர்வது, சமூக பாதுகாப்பை உறுதி செய்வது என்று பல படிகளை கொண்டது ஜனநாயகம். ஆயினும் இன்றைய கால கட்டத்தில் இதுவா நிகழ்கிறது? பழைய மன்னர் முறையே மேல் என்பது போல் அல்லவா ஒவ்வொருவரும் நடந்து கொள்கிறார்கள். காவிரி பிரச்னைக்கு அடித்தளமே நாம் ஜனநாயகத்திற்கு லாயக்கற்றவர்கள் என்பதை அல்லவா உறுதி செய்கிறது. 

காவிரி குடகு மலையில் தோன்றியது முதல் வங்கக் கடலில் சங்கமிக்கும் வரை தான் பாயும் நிலப்பகுதி அனைத்திற்கும் வளம் கொழித்து மக்களை இன்பக்கடலில் மூழ்கடித்து செல்கிறது. ஆண்டுமுழுவதும் வற்றாத ஜீவநதி என்ற பெயர் எடுத்திருந்தாலும் மழை பொய்த்தால் தானும் பொய்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டாள் காவிரி. இயற்கையை மனிதன் சுரண்டி பிழைக்கும் நிலையே இதற்கு காரணம் எனலாம். இப்படி முறை கடந்து நாம் செய்த அட்டூழியங்களே இன்று காவிரி வற்றி நமக்கு சொல்லொணா துயரத்தையும் அண்டை அயலாரிடம் வெறுப்பையும் சம்பாதித்திருக்கிறது. காவிரி நீரை பகிர்ந்து கொள்வதில் சம்பந்தப்பட்ட அனைவருமே நேர்மை இன்றி செயல் பட்டிருக்கிறார்கள். கர்நாடகம், தமிழகம், மத்திய அரசு இவர்களோடு நீதிமன்றமும் தங்கள் தங்கள் பணிகளை செவ்வனே செய்யாமல் மக்கள் நலனில் சிறிது அக்கறை இன்றி பிரச்னையை பூதாகரமாக்கி இருக்கிறார்கள். 

இன்றைய நிலையில் காவிரி பிரச்சனை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். ஒவ்வொரு ஆண்டும் காவிரி பிரச்சனை தலை தூக்குவது ஜூன் ஜூலை மாதங்களில் மட்டுமே. தென்மேற்கு பருவ மழை கர்நாடகத்தில் சரிவர பெய்தால் இந்த மாதங்களில் கூட இது தென்படாது. கடந்த சில ஆண்டுகளில் நல்ல மழை பெய்த காரணத்தினால் அமுங்கி கிடந்த பிரச்சனை இந்தாண்டு பருவ மழை பொய்த்ததினால் தலை தூக்கி இருக்கிறது. இரு தரப்பும் ஏதோ பிரச்சனை மற்றவரால் மட்டுமே நிகழ்கிறது, தாங்கள் மிகவும் யோக்கியர்கள் என்பது போல நடந்து கொள்கிறார்கள். ஆள்பவர்கள் எந்த கட்சியினராக இருந்தாலும் பிரச்னையை அணுகும் முறை ஒன்றாகத்தான் இருக்கிறது. 

கர்நாடகம்:

காவிரி ஏதோ தங்களது ஏகபோக உரிமை என்றும் கடைமடை மாநிலங்கள் தங்கள் தயவில் தான் வாழவேண்டும்  என்று நினைக்கும் ஒரு கும்பல் மட்டுமே அங்கு ஆட்சிக்கு வர முடிகிறது. அவர்கள் தங்கள் மாநிலத்திற்கு போகத்தான் மற்றவருக்கு என்ற கண்ணோட்டத்தில் பயணிக்கிறார்கள் தேசிய கட்சியானாலும் சரி, மாநில கட்சிக்லாயினும் சரி  கொள்கை கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு வான் பொய்த்தும் மைசூர் மாண்டிய பகுதிகளில் நல்ல அறுவடை நிகழ்த்தி இருக்கிறார்கள். இங்கே தமிழகத்தில் ஒரு போகம் கானமலேயே போய் விட்டது. தமிழகத்திற்கு உச்ச நீதி மன்றம் தர சொல்லிய அளவையும் சேர்த்து  அனுபவித்து விட்டார்கள். தமிழகத்திற்கு  ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது. மத்திய அரசு சொன்னாலும் சரி, உச்ச நீதி மன்றம் சொன்னாலும் சரி, எதையும் ஏற்க மாட்டேன், நான் வைத்ததுதான் சட்டம்,   என்று செயல்படும் அரசுகள், ஜனநாயகத்தின் மாண்பை குழி தோண்டி புதைக்கின்றன. இதில் வெறுமனே தேசிய ஒற்றுமை என்று பேசி என்ன பயன்? 

தமிழகம்:

கர்நாடகத்தை மட்டுமே இதில் குறை சொல்லி புண்ணியம் இல்லை. தமிழகமும்தான் பொறுப்பேற்க வேண்டும். காவிரியில் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அந்த மிகுதியான நீரை கடலுக்கு அனுப்பி விட்டு, பின்பு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்போது கர்நாடகத்தை குறைகூறுவானேன். தண்ணியை தேக்க ஏரிக்குளங்களையோ ஏற்படுத்தி அல்லது இருப்பனவற்றை ஆழப்படுத்தி அதில் நீரை தேக்கிக்கொள்ளலாம். ராமநாதபுரம், சிவகங்கை, சென்னை என்று புதிய பகுதிகளுக்கு காவிரி நீரை எடுத்துச் சென்று தேக்கலாம். புதிய பாசனப்பகுதிகளுக்கு உட்பட்ட ஏரிகளுக்கு நீரை கொண்டு சென்று தேக்கலாம். இப்படி பலவழிகளை மேற்கொண்டு பின்னர் ஏற்படும் வறட்சி நிலையை சமாளிக்கலாம் அதையெல்லாம் எந்த அரசியல் கட்சிகளும் செய்வதில்லை. வெறுமனே வாய்ப்பந்தல் போட்டு உணர்ச்சியை தூண்டி பேச மட்டுமே கற்றுக்கொண்டு இருக்கிறார்கள். கர்நாடகத்தில் இவ்வாண்டு மழை பொய்த்து விட்டது. அவனை தண்ணீர் விட சொன்னாள் எப்படி விடுவான். வறட்சி காலங்களில் நீரை சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது நியாயமான கோரிக்கைத் தான் என்றாலும் எவன் அதை செய்ய முன் வருவான். கர்நாடக அரசு நம்மைப்போல் அல்லாமல் பாசன பகுதிகளை இரட்டிப்பாக்கியுள்ளது. நாமோ இருக்கும் பாசன பகுதிகளை குறைத்து கொண்டு டெல்டா பகுதிகளை பாலை வனமாக்கி விட்டோம். பாசன பகுதி பாதிக்கும் கீழே சென்று விட்டது. கர்நாடக அரசு பல நகரங்களுக்கு காவிரி நீரை குடிநீராக பயன் படுத்துகிறது. அந்த மக்களை தவிக்க விட்டுவிட்டு நமக்கு தண்ணீரை அவர்களால் எப்படி தரமுடியும். நமக்கு இருக்கிற வறுமைக்கு கொடுத்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆயினும் அது முடிகிற காரியமா? இதில் எந்த அரசும் அரசியல் கட்சிகளும் ஒன்றும் செய்ய முடியாது.      

மத்திய அரசு:

மத்திய அரசு தமது வலிமையை இழந்து விட்டது. தனது சொல்லையோ அல்லது உச்ச நீதிமன்ற தீர்ப்பையோ ஏற்காத அரசுகளை வழிக்கு கொண்டுவரும் சாமர்த்தியமும் பலமும் மத்திய அரசிடம் இப்போது இல்லை. முன்பு வாக்கு வங்கிக்காக மெளனமாக இருந்த மத்திய அரசுகள் இப்போது வாக்குகளை பெற இயலாத நிலையால்  தமத்து வலிமையை இழந்து விட்டன.மாநில கட்சிகள் என்றில்லை தேசிய கட்சிகளாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலை உருவாகி விட்டது. மேடையில் மட்டுமே முழங்க இவர்களால் முடியும்.

உச்ச நீதிமன்றம்: 

தீர்ப்பை சொல்லவேண்டிய மன்றங்கள் சமாதானம் பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. தமது தீர்ப்பை நடைமுறை படுத்தும் வலிமை அற்று நிற்கின்றன. எங்கே தமது தலையில் வம்பு வந்து விழுமோ என்று மத்திய அரசிடம் அவ்வப்போது பொறுப்பை தள்ளிவிட்டு தப்பிக்கபார்கின்றன தமது தீர்ப்பை நடைமுறை படுத்தாத மாநில அரசை கலைக்க சொல்லும் வலிமை கூட இல்லாமல் வேடிக்கை பார்ப்பது பரிதாபம். இந்த கூத்தில் நமது அடிப்படை உரிமையின் காவலன் என்ற பட்டப்பெயர்களை வேறு இவை சுமந்து கொண்டுள்ளன. நம் அடிப்படையே தரும்போது இவை வாய்மூடி வேடிக்கை மட்டுமே பார்க்கின்றன.


இப்படி பொறுப்பாக இருக்க வேண்டிய அனைவரும் பொறுப்பில்லாமலோ அல்லது வலிமை இல்லாமலோ இருக்குபோது காவிரி நீருக்கு என்னதான் தீர்வு. நமக்கு தெரிந்து கீழ்கண்டவை மட்டுமே தீர்வாக அமைய முடியும்!

உடனடி தீர்வுகள்!

1. கர்நாடக அரசை கலைத்துவிட்டு ராணுவ உதவியுடன் மத்திய அரசு உச்ச நீதி மன்ற தீர்ப்பை நடைமுறை படுத்தவேண்டும். இவ்வாறு செய்தால் நீர் கிடைக்கும். ஆனால் கர்நாடகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டு அங்கே வாழும் லட்ச்சக்கணக்கான தமிழர்களுக்கு பெரும் பாதிப்பு உண்டாகும். இது விவேகமான முடிவு அல்ல.

2. இயற்கை அன்னை கண்ணைத்திறந்து பார்க்கவேண்டும். அடைமழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டால் இந்த கவலை உடனே மறக்கப்பட்டுவிடும், அல்லது அடுத்த வறட்சி வரை தள்ளிவைக்கப்படும்.

நீண்டக் கால தீர்வுகள்!

1. காவிரி நீர் பாசனப்பகுதிகளை பெரிதாக்க வேண்டும். இதுவரை காவிரி நீரை பார்த்திராத பகுதிகளுக்கும் நீரை கொண்டு செல்லவேண்டும். பொதுவாக ஆண்டிற்கு இரண்டுமுறை ஏற்படும் வெள்ளப்பெருக்கை இந்த பகுதிகளுக்கு கொண்டு செல்வதன் மூலம் ஆண்டுமுழுவதும் நிலத்தடி நீரை சேமிக்க முடியும்.

2. பாலாறு முதல் வைகை வரை உள்ள அனைத்து பெரிய மற்றும் சிறிய நதிகளை இணைத்து காவிரி வெள்ளத்தை தமிழகம் முழுவதும் பரவலாக்கலாம்.

3. புதிய நகர்புற பகுதிகளுக்கு காவிரி வெள்ள நீரை குடிநீராக பயன் படுத்தலாம். இதற்கென அந்த நகரங்களுக்கு அருகில் உள்ள ஏரி, குளம் மற்றும் நீர் நிலைகளை தூர்வாரி ஆழப்படுத்தி காவிரி நீரை கொண்டு நிரப்ப வேண்டும்.

4. காவிரியின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகளை ஏற்படுத்தி மிகை நீரை சேமிக்கலாம்.

இந்த தீர்வுகள் அனைத்து பிரிவினருக்கும் ஏற்புடையதாக இருக்கும். அருகில் இருக்கும் மாநிலங்களுடன் சுமூக உறவை நிலை நாடும்.

தடாலடி தீர்வு:

இவையல்லாமல் வேறு ஒரு சிறந்த தீர்வும் உள்ளது. காவிரி பாயும் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஒரு தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும். குடகு முதல் திருவாரூர் வரை உள்ள அனைத்து காவிரி பாசன பகுதிகளும் இந்த மாநிலத்தில் இடம் பெற வேண்டும். இந்த மாநிலத்து மக்கள் தங்களுக்குள் ஒரு சுமூக வழியை பின்பற்றிட ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த பிரச்சனை குறைந்த பட்சம் மக்களை தமிழன் கன்னடன் ஏறாவது பிரிக்காமல் இருக்கும். 1991 இல் கர்நாடகாவில் காவிரிக்காக பதற்றம் நேர்ந்தபொழுது பெங்களூருவில் பெரும் பாதிப்பை சந்தித்த தமிழர்களுள் பெரும்பாலோர் காட்பாடி மற்றும் வேலூர் பகுதிகளை சார்ந்தவர்கள். இந்த பகுதிகள் காவிரி நீரை குடிக்கவோ அல்லது விவசாய பாசனத்திற்கோ பயன்படுத்துவதில்லை. யாரோ பயன்பெறும் காவிரி நீருக்காக சம்பந்தம் இல்லாத இவர்கள் தமிழன் என்ற ஒரே காரணத்திர்க்காக பாதிப்படைந்தார்கள். காவிரி மாநிலம் உருவானால் குறைந்தது வேலூர் தமிழனாவது பாதிப்பில்லாமல் இருப்பான்!


 

   

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

அரசு ஊழியம்!

அரசு ஊழியம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். இருந்தும் அது கிடைத்தால் உதாசீன படுத்துவார்கள். கிடைக்காவிட்டால் கேவலப்படுத்துவார்கள். அத்தகைய தனிச் சிறப்பு வாய்ந்தது இந்த ஊழியம். வேறு எந்த பணிகளுக்கும் இல்லாத சிறப்பும் இழிமையும் நிறைந்தது அரசு ஊழியம். சராசரி இந்திய குடும்பங்களின் ஏக்கம் அரசு ஊழியம் கிட்டாதா என்பதுதான். தங்கள் பிள்ளைகளை இதற்கெனவே குறி வைத்து படிக்க வைப்பார்கள். வேலை வாய்ப்பு அலுவலகம், செய்தித்தாள், விளம்பரங்கள் என்று எங்குமே அவர்கள் அரசு ஊழியத்தை தேடி தவம் கிடப்பார்கள். அரசு ஊழியத்தை பெற்று விட்டால் அதன் பிறகு அவர்கள் கவனமே வேறு பக்கம் திரும்பி விடும். இவர்கள் அரசு ஊழியத்தை ஏன் குறிவைக்கிறார்கள்?

அரசு ஊழியத்தினால் வேலை நிரந்தரம். திடீர் என்று வீட்டிற்கு துரத்தி விட மாட்டார்கள். மற்றவர்கள் தங்களை சார்ந்திருக்கும் நிலை ஏற்படும். வேலை குறைவு அல்லது அவசரமின்றி செய்யலாம். ஊதியம் அதிகம். போனசு, அகவிலைப்படி, நினைத்தபோது விடுப்பு, பொது இடங்களில் மரியாதை என்று சில பல சலுகைகளை அனுபவிக்கலாம். இந்த நோக்கம் தான் பொதுவாக காணப்படுகிறது. அரசு ஊழியத்தை நம்பி இவர்கள் தேர்ந்தெடுக்க இவை மட்டும் காரணாம் அன்று. இன்று நாட்டையே அரித்துக்கொண்டிருக்கும் ஊழலும் ஒரு காரணம். கையூட்டு பெறலாம். அதற்கு தக்க தண்டனை கிடைப்பது அரிது. அப்படியே தண்டனை கிடைத்தாலும் சில சிபாரிசுகளை பெற்று வெளியே வந்து விடலாம். இப்படி பலரின் நினைப்பு ஒடுவதால்தான் அரசு ஊழியத்திற்கு பலத்த போட்டியே நடைபெறுகிறது. ஆயினும் அரசு ஊழியத்தை பெறதவறியவர்கள், அல்லது பெற விரும்பாதவர்கள் என்று ஒரு இனம் உள்ளது. அது அரசு ஊழியத்தை மிகவும் குறைத்தே எடை போட்டு வருகிறது. அவர்கள் அரசு ஊழியத்தை ஒரு ஊழியமாக கருதுவதே இல்லை. 

"அரசு ஊழியர்கள் சோம்பேறிகள், உயர்ந்த சிந்தனை அற்றவர்கள், உயர வேண்டும் என்ற உத்வேகம் இல்லாதவர்கள், கையூட்டு பெற்று ஜீவனம் நடத்தும் ஈனப்பிறவிகள், சாதாரண படிப்பும், சாதாரண அறிவும் கொண்டவர்கள், திறமை அற்றவர்கள்," என்று பலவகையிலும் இந்த வகையினர் அரசு ஊழியர்களை பற்றி கருத்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தனியார் துறையில் செய்யும் ஊழியமே சிறந்தது எனவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்கள் செய்யும் பணியே மிகச்சிறந்தது என்றும் கூறித் திரிகிறார்கள். அரசு ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியம் தண்டம் என்றும் கருதுகிறார்கள். இருதரப்பு வாதங்களும் நியாயமானவை என்றாலும் உண்மையில் அரசு ஊழியம் என்பது வேறு பல சிந்தனைய்களையும் பொறுப்புக்களையும் உள்ளடக்கியது என்றே கூறலாம். 

ஒரு அரசாங்கத்தை வழி நடத்துவது என்பது சவாலான காரியம். அதற்கு தகுந்த திறமையுள்ள ஆட்கள் தேவை படுகிறார்கள். முதல் குடிமகனான குடியரசு தலைவர் முதல் கடைநிலை துப்புரவு ஊழியர் வரை பலரை உள்ளடக்கியது தான் அரசு ஊழியம் என்பது. மன்னராட்சி காலத்தில் அனைத்து ஊழியங்களும் மன்னர் என்ற தனி நபரின் சேவையாக தான் இருந்தது. மன்னர் விருப்பப் பட்டால் பணியில் தொடரலாம். இன்றைய குடியாட்சி முறையில் ஒவ்வொரு அரசு ஊழியரும் எந்த ஒரு தனி நபரிடமும் கை கட்டி சேவகம் செய்ய வில்லை. எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்ற கோட்பாட்டின் படி அரசு ஊழியர் தனக்கே முதாலாளியாகவும் தொழிலாளியாகவும் திகழ்கிறார். இத்தகைய சிறப்பு மற்ற பணிகளில் கிடையாது. அரசு ஊழியர் செய்யும் தவறு ஒட்டு மொத்த சமுதாயத்திற்கு செய்யும் தீங்காக அமைவதால் அவரின் பொறுப்புணர்வு கூடுகிறது. தனி நபரின் ஊழியத்தில் தவறு நேர்ந்தால் அந்த தனிப்பட்ட முதலாளிக்கு மட்டுமே இழப்பு. ஆனால் அரசு ஊழியரின் தவறால் அந்த மனித சமூகமே இழப்பை சந்திக்க நேரிடும்.

அரசு ஊழியரின் பொறுப்பு என்பது தனி நபரின் பொறுப்பு மட்டுமே அல்ல. அவர் ஒட்டு மொத்த சமூகத்தின் எதிர்பார்ப்பு கலை சுமக்கிறார். இன்றைய ஜனநாயக நாட்டில் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு மனிதரும் தம் வாழ்வில் சந்திக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் அரசு ஊழியரின் கடமை மற்றும் செயல் பாடுகளே காரணமாக இருக்கின்றன. பிறப்பு-இறப்பு, சாதி, கல்வி சான்றிதழ், மருத்துவம், கல்வி, பத்திரப்பதிவு, சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து, வங்கி சேவை, பாதுகாப்பு, இறையாண்மை என்று  அனைத்து பிரிவுகளிலும் நம்முடைய செயல்பாடுகள் அரசு ஊழியரை சார்ந்தே அமைகின்றன. ஏதோ ஒரு அரசு ஊழியர் பொறுப்புடன் தம்முடைய பணியை செவ்வனே செய்வதால்தான் நமக்கு பாதுகாப்பான குடிநீர்-மின் விநியோகம், மருத்துவம், கல்வி, சாலை-ரயில் போக்குவரத்து, ராணுவ-போலிசு பாதுகாப்பு, நில உரிமை, சட்ட உரிமை, என்று பலவும் உறுதி செய்யப்படுகிறது. இடையிடையே இலவசங்களை வழங்குதல், மக்கள் தொகை கணக்கெடுப்பு, கலவரத்தை அடக்குதல் என்று பலவற்றையும் சந்திக்க வேண்டியுள்ளது. அரசு ஊழியகர்கள் தங்கள் பணிகளை செவ்வனே செய்யவில்லை என்றால் எந்த ஒரு குடிமகனும் தமது சராசரி வாழ்கையை நடத்த முடியாது என்பதே நிதர்சனம். இருப்பினும் அரசு ஊழியர்கள் பொது மக்கள் மற்றும் பிற வகையினரின் கண்டனத்திற்கு ஆளாக நேரிடுகிறது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. 

ஒரு சராசரி பொது சனம் ஒரு அரசு அலுகலகத்திற்கு சென்று தமக்கு வேண்டிய காரியத்தை எளிதில் சாதித்து விட முடியாது. முதியோர் ஓய்வூதியம் பெற ஒரு பெரியவர் பல முறை நடையாய் நடக்க வேண்டியிருக்கிறது. அவர் சந்திக்க சென்ற நபர் இருக்கையில் இருப்பதில்லை. தேநீர் பருக சென்றிருக்கிறார், விடுப்பில் சென்றிருக்கிறார் என்று ஏதோ ஒரு பதிலைதான் அந்த பெரியவர் கேட்க நேரிடுகிறது. ஒருவாறு அந்த பணியை சாதிக்கும் நிலை வந்தாலும் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு கையூட்டு தர வேண்டியிருக்கிறது. முடியாது என்று கூறும் பட்சத்தில் அந்த சான்றிதழ் இந்த சான்றிதழ் என்று கூறி அலைகழிக்கிறார்கள்-என்று பொது மக்கள் புகார் கூறுகிறார்கள். இதுதான் இன்று நாம் காணும் உண்மை. இந்த நிலை பொதுவாக இந்தியா எங்கணும் காணப்படுகிறது. இந்த நிலைக்கு யார் காரணம். பொதுமக்கள் அரசு ஊழியர் என்ற ஒரு இனத்தை எளிதில் குறை கூறிவிடுகிறார்கள். ஆனால் இந்த நிலை தோன்ற பொதுமக்கள் மட்டுமே காரணம். 

அரசு ஊழியர்கள் வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை. அவர்கள் இந்த சமூகத்திலிருந்து தான் உருவாகிறார்கள். அரசு ஊழியத்தின் முதலாளிகள் இந்நாட்டு மக்கள்தான். தங்கள் சேவகர் சரிவர பணியை செய்யவில்லை என்றால் முதலாளி அவரை தண்டிப்பார் அல்லது பணியிலிருந்து நீக்கி விடுவார். முதலாளி கடுமையாக இருக்கும் பட்சத்தில் ஊழியர் தமது பணியை சரிவர செய்வார். முதலாளி மெத்தனமாக இருக்கிறார் என்றால் ஊழியர் சம்பளம் மட்டுமே குறியாக இருப்பார். நம் நாட்டில் அரசு ஊழியர் கையூட்டு பெறுகிறார், தமது கடமையை தட்டிக்கழிக்கிறார், இருக்கையில் இருப்பதில்லை, பொது மக்களின் குறைகளை பொறுப்புடன் நிவர்த்தி செய்வதில்லை என்று பல புகார்களை பொதுமக்கள் உரிய அதிகாரிகளிடம் கொண்டு சென்று நிவர்த்தி செய்து கொள்ளலாம். அந்த அதிகாரியும் அப்படியே இருக்கிறார் என்கிற நிலை இன்று உருவாகி விட்டது. அதிகாரிகளை நிர்வகிக்கும் அமைச்சர்கள் முதலானோரும் இப்படியே இருக்கிறார்கள். ஆகவே அரசு ஊழியர்கள் அனைவரும் மெத்தன போக்கையே கையாளுகிறார்கள். இந்த நிலை மக்களால் மட்டுமே போக்க முடியும். அவர்கள் மட்டுமே முதலாளிகள். முதலாளிகள் நடவடிக்கை எடுக்கும் நேரம் வந்து விட்டது.

கையூட்டு பெரும் ஊழியர்களை இனம் கண்டு ஒதுக்க வேண்டும். அவர்களுடன் வர்த்தக, சமூக உறவு கொள்வதை தவிர்க்க வேண்டும். அவர்களை பற்றிய செய்தியே உலகெங்கும் பரப்ப வேண்டும். அதே சமயம் நன்மை செய்யும் ஊழியர்களை பாராட்ட வேண்டும். அவர்களை பற்றி பிறர் முன்னிலையில் புகழ வேண்டும். தங்கள் மகன் அல்லது மகளை பொறுப்புள்ள, நேர்மையான அரசு ஊழியராக உருவாக்க முயற்ச்சிக்க வேண்டும். இந்த நாடு நமது. இந்த பொதுப்பணிகள் நம்முடைய பணிகள். இவற்றில் தொய்வு ஏற்பட்டால் அது நம் நாட்டையே சீர்குலைக்கும் என்கிற எண்ணம் பொது மக்கள் மத்தியில் வளர வேண்டும். நாம் யாருக்காக ஊழல் செய்து சொத்து சேர்க்கிறோமோ அவர்கள் நமக்காக ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்த தயாராக இல்லை. அவர்கள் நம் மீது அன்பை செலுத்த போவதில்லை. அவர்களின் குறிக்கோள் நாம் ஊழல் செய்து சேர்த்து வைக்கும் சொத்து மட்டுமே. நம்மை அவர்கள் நிராதரவாக விட்டு வெளியேறி விடுவர். நாம் பிறரின் ஏச்சுக்கும் தூற்றலுக்கும் ஆளாக வேண்டி வரும் பொழுது நமக்கு ஆதரவு சொல்ல கூட நம்மால் வளம் பெற்றவர்கள் அருகில் இருக்க மாட்டார்கள். இதுதான் யுகம் யுகமாக நாம் கண்டு வரும் நிதர்சன உண்மை. எந்த சமுதாயத்தை சுரண்டி நாம் சொத்து செர்த்தொமோ அந்த சமுதாயம் நமக்கு கடைசி காலத்தில் கொள்ளிவைக்கவும், வாய்க்கரிசி போடவும் தயாராக உள்ளது என்பதை ஊழல் செய்யும் ஒவ்வொருவரும் நினைவில் கொண்டால் நாம் ஊழலற்ற சமூகத்தை படைப்பதோடு, அரசு ஊழியம் என்பதே பெருமைக்குரிய பணி என்றும் உணரலாம்.    Central Government Employees