வியாழன், 2 அக்டோபர், 2014

கனம் கோர்ட்டார் அவர்களே!

ஜனநாயக நாட்டில் மக்களின் கடைசி புகலிடம் நீதிமன்றங்கள். அவை நீதியை மட்டும் காக்கவில்லை. மக்களின் நம்பிக்கையையும் சேர்த்தே காக்கின்றன. ஆனால் சமீப காலமாக நிகழும் மாற்றங்களை காணும்போது வழக்கம்போல மக்கள் ஏமார்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்றே நம்ப இடம் இருக்கிறது. நீதி மன்றங்கள் நியாயம் வழங்குபவை மட்டுமல்ல, நியாயம் வழங்குவதாக தோன்றக்கூடியதாகவும் இருக்க வேண்டும் (Justice not only be done, but also seem to be done). நீதி மன்றங்களின் பேரில் அவ நம்பிக்கை ஏற்படும்போது அவற்றிற்கு முடிவு ஏது? 

அ.இ.அ.தி.மு.க. வின் பொது செயலாளர் செல்வி.ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் சென்னையில் ஏற்படுத்தப்பட்டது. இது நடந்தது 1996-97 ஆண்டுகளில். நீதிமன்ற விசாரணை சூடு பிடிக்க தொடங்கியது 2002 க்கு பிறகுதான். வழக்கு விசாரணை சரியான பாதையில் செல்லவில்லை, விசாரணை செல்லும் திசையை பார்த்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை ஆவது உறுதி என்று வழக்கு தொடர செய்தவர்களுக்கு தோன்றியது. அவர்கள் உச்ச நீதி மன்றத்தை அணுகி வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றும் படி கோரினார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்று வழக்கு கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. அங்கு விசாரணை முடிந்து தீர்ப்பு 2014 இல் வெளி வந்தது. குற்றம் உறுதி செய்யப்பட்டு சம்பந்தப்பட்டர்வகள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதுதான் நிகழ்ந்தது. ஆயினும் இந்த வழக்கு ஏற்படுத்தி இருக்கும் ஐயம் என்றும் விலகப் போவதில்லை. 

1. சென்னை நீதிமன்றம் வழக்கை நியாயமாக விசாரிக்கவில்லை என்று குற்றம் சுமத்தியவர்கள், விசாரணை நீதிமன்றத்தின் மீதே ஐயத்தை கிளப்பினார்கள். ஆட்சியில் உள்ளவர்கள் அதன் மீது ஆதிக்கம் (Influence) செலுத்தகூடும் என்று கூறினார்கள். சாட்சிகள் ஆட்சியாளர்களின் மிரட்டலுக்கு ஆளாக நேரிடும் என்று ஆழமாக கருதினார்கள். நடுநிலையுடன் செயல்படும் சென்னை நீதி மன்ற நீதிபதிகள் நடுநிலை தவறுவார்கள் என்பது இவர்களது ஐயம். ஆகவே வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றும்படி கோரினார்கள். இது ஒட்டுமொத்த தமிழக நீதிபதிகளின் நடுவுநிலைமை மீதே களங்கம் கற்பிக்கும் செயல். இந்த கோரிக்கையை ஒதுக்கி இருக்க வேண்டும். மாறாக இதனை ஒப்புக்கொண்டு வழக்கு வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டது. சென்னை நீதி பதிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல் படுவார்கள் என்ற தவறான ஐயம் பரப்பப்பட்டது. 

2. பெங்களூரு நீதிமன்றம் வழக்கை விசாரிக்க தொடங்கிய காலத்திலிருந்து குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகளாகவே பார்க்கும் மனப்பான்மை தோன்றியது. இடையில் காவிரி பிரச்சனை பூதாகரமாக பேசப்பட்டது. நதிநீர் ஆணைய தீர்ப்பு வெளிவந்தது. அதனை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று ஜெயலலிதா விடாபிடியாக போராடி வந்தார். அவர் 2011 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் வெளியிட்டு சாதித்து காட்டினார். ஜெயலலிதா எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் பிரச்சனைகள் பெரிதாகின்றன என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளிப்படையாகவே பேட்டி கொடுத்தார். ஒட்டுமொத்த கர்நாடக மக்களும் ஏதோ ஜெயலலிதா கர்நாடக நலன்களுக்கு எதிரானவர் என்ற பிரமிப்பு ஏற்படுத்தப்பட்டது. சென்னை நீதிமன்றத்தின் மீது சென்னையில் உள்ள அரசு ஆதிக்கம் செலுத்தும் என்று கருதும் அதே நேரத்தில் பெங்களூரு நீதிமன்றத்தின் மீது பெங்களூருவில் உள்ள அரசு ஆதிக்கம் செலுத்தாது என்று கருத இடம் இருக்கிறதா? பெங்களூருவுக்கு மற்ற வேண்டும் என்று தவம் கிடந்தவர்களும் மாற்றியவர்களும் இதனை கவனிக்க தவறியது ஏன்? அதுவும் தமிழக முதல்வர், சம்பந்தப்பட்ட கர்நாடக அரசுக்கு எதிராக காவிரி விஷயத்தில் தீவிரமாக போராடி வருகிறார் என்று ஊரறிய தெரியும்போது, அத்தகைய அரசால் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நிலையில் உள்ள பெங்களூரு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்படும் என்றும் அரசியல் மற்றும் நீதிமன்ற அரிச்சுவடி தெரியாதவர்களும் கூட நம்பக்கூடிய வாய்ப்பு உள்ளது. பெங்களூருவுக்கு பதிலாக தமிழகத்துடன் எந்த ஒரு தகராறும் இல்லாத அஸ்ஸாம் அல்லது பஞ்சாப் போன்ற மாநிலங்களில் உள்ள நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றி இருக்க வேண்டும். சென்னை நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்படும் என்றால், பெங்களூரு நீதிமன்றம் எதிராகத்தான் செயல்படும் என்பது LOGIC தானே!    

3. ஜெயலலிதா வெற்றி மேல் வெற்றி பெற்று எதிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தார். அவர் மத்திய அரசுக்கே சவாலாக திகழ்ந்து வருகிறார். 2014 நாடாளுமன்ற தேர்தலில் மம்தா, ஜெயலலிதா, நவீன் பட்னாயக் தவிர வேறு யாரும் பெருவெற்றிகளை பெறவில்லை. தோழமை உணர்வுடன் நவீன் செயல்படுகிறார். எதிர்த்து வரும் மம்தா சாரதா சிட் பண்ட் மோசடியுடன் தொடர்பு படுத்தப்படுகிறார். மீதமுள்ள ஜெயலலிதாவை அடக்கி வைக்க வழி தெரியவில்லை. இவரோ எந்த ஒரு விஷயமானாலும் மத்திய அரசை நிம்மதி இழக்க செய்கிறார். அண்டை மாநில தாவாக்கள், இலங்கை விவகாரம், மத்திய மாநில உறவுகள் என்று பல விவாதங்களில் மத்திய அரசு கையறு நிலையை சந்திக்க காரணமாக திகழ்கிறார். மக்களின் ஆதரவோ அமோகமாக உள்ள ஒரு தலைவரை எப்படி எதிர் கொள்வது என்றே தெரியவில்லை. அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது இந்த தீர்ப்பு. பொதுவாக விசாரணைகளுக்குப் பிறகுதான் தீர்ப்புக்கள் எழுதப்படும். ஆனால் இங்கே தீர்ப்பு எழுதிய பிறகுதான் விசாரணை நிகழ்ந்தது போன்று தோன்றுகிறது. நீதிமன்றம் காட்டிய காட்டமான அணுகுமுறையும், தீர்ப்பில் இடம்பெற்றிருக்கும் வாசகங்களும் இதைதான் உணர்த்துகின்றன. 

மக்கள் பெரிதும் வேதனை அடைந்ததோடு கொதித்தும் போயுள்ளார்கள். சுமார் 20 பேர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதும், சமுதாயத்தின் பல தரப்பு மக்களும் தங்களால் இயன்ற வகையில் கண்டனம், ஆர்பாட்டம், உண்ணாவிரதம் என்று எதிர்ப்பை பதிவு செய்து வருவதும் இதைத்தான் காட்டுகிறது. ஜெயலலிதாவுக்கு எதிராக எது நிகழ்ந்தாலும் அதை உடனடியாக வரவேற்கும் கருணாநிதி, தீர்ப்பு வெளிவந்து 6 நாட்கள் ஆகியும் எந்த ஒரு அறிக்கையும் வெளியிடாததிலிருந்தே ஜெயலலிதா மீது ஏற்பட்டுள்ள அனுதாபமும், தீர்ப்பின் மீது ஏற்பட்டுள்ள எதிர்ப்பும், ஐயமும் நமக்கு தெளிவாக விளங்கும். தீர்ப்பை தீர்ப்பாகத்தான் பார்க்க வேண்டும். அதில் எந்த ஒரு களங்கமும் கற்பிக்க கூடாது என்று அறிக்கை விடுவோர் பரிதாபத்திற்குரியவர்கள். நிதர்சனத்தை பார்க்க தவறியவர்கள் அவர்கள். இந்த வழக்கை தமிழகம் சம்பந்தப்படாத வேறு மாநிலத்தில் உள்ள நீதி மன்றத்திற்கு மாற்றி முதலிலிருந்து விசாரிப்பதே மிகவும் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. 

2 கருத்துகள்: