இப்போதெல்லாம் மிகவும் பிரபலமாகி வரும் கருத்தரிப்பு முறை "வாடகைத் தாய்" இது ஒரு தொழிலாகவும் ஆகி வருகிறது. இயற்கை முறையில் கருத்தரிக்க இயலாத பெற்றோர் குழந்தையை பெற்றுக்கொள்ளும் முறையாகும் இது. ஆண் பெண் உயிரணுக்களை கருத்தரிக்க செய்து அதை வேறொரு பெண்ணின் கருப்பையிலிட்டு வளர்க்கிறார்கள். நன்கு வளர்ந்து பிறந்த குழந்தையை அந்த பெண் சம்பந்தப்பட்ட பெற்றோரிடம் கொடுத்து விட்டு தனக்குரிய வாடகையை பெற்றுக்கொள்கிறாள். இது லக்ஷம் பல லக்ஷம் என்று வேறுபடுகிறது. (நாட்டில் ஏற்கெனவே மக்கள் தொகை அதிகமாக உள்ள நிலையில் இது எதற்கு. ஏதாவது ஒரு அனாதை குழந்தையை தத்தெடுத்து வளர்க்க கூடாதா? என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. இருந்தாலும் தன்னுடைய ரத்தத்திற்கு மக்கள் அளிக்கும் மரியாதையே வேறுதான்)
இது ஏதோ மிகப்பெரிய புரட்சி என்றோ, வெள்ளைக்காரன்தான் இதை கண்டுபிடித்தான் என்றோ எண்ணி ஏமார்ந்து விட வேண்டாம். இந்த தொழில் நுட்பம் நம் மண்ணில் பல நூறாண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறது என்பதற்கு ஸ்ரீமத் பாகவதம் மற்றும் மகாபாரதம் போன்ற நூல்களில் குறிப்புகள் உள்ளன. அவற்றை இங்கே சுருக்கமாக குறிப்பிடுகிறோம்.
ஸ்ரீமத் பாகவதம் விஷ்ணுவின் பல அவதார சிறப்புகளை, குறிப்பாக ஸ்ரீகிருஷ்ணனின் அவதாரத்தை விரிவாக விளக்கும் நூல். பகவான் கண்ணன் வசுதேவர்-தேவகி தம்பதிக்கு எட்டாவது மகனாக பிறந்தார். அவருடைய தாய் மாமன், கம்சன், தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தமக்கு மரணம் சம்பவிக்கும் என்ற அசரீரி வாக்கை கேட்டதனால் வசுதேவர்-தேவகி தம்பதியினரை சிறையில் அடிக்கிறான். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை ஒருவர் பின் ஒருவராக கொள்கிறான். இப்படி ஆறு குழந்தைகளை கொன்றுவிட்டான். (இப்படி ஒரு தாய் மாமன்-இவனுங்களைதான் காது குத்தல், கல்யாணம்னு எல்லாத்துக்கும் சீர் செய்ய சொல்லுது இந்த சமூகம்) ஏழாவது முறையாக தேவகி கருவுற்றாள். இந்த நேரத்தில்தான் கம்சனை ஏமாற்ற இறைவன் திருவிளையாடல் புரிந்தார். வசுதேவருக்கு, ரோஹிணி என்ற மனைவியும் இருந்தால். அவளுடைய கருவில் தேவகி வயிற்றில் வளரும் கருவை அதிசயத்தக்க வகையில் இட மாற்றம் செய்து அருள் புரிந்தார். இப்படி இடமாற்றம் (சமஸ்கிருதத்தில் கர்பாசயம்) செய்யப்பட கருவே பலராமனாக பிறந்தது. இவர் கிருஷ்ணனுக்கு அண்ணன். கண்ணனை போலவே இவருக்கும் இரண்டு அன்னையர். அவருக்கு வளர்ப்பினால் இருவர், இவருக்கு கருவிலேயே இருவர். பலராமனுக்கு சங்கர்ஷணன் என்ற பெயரும் உண்டு. சங்கர்ஷணன் என்ற சொல்லுக்கு கருவிலேயே இடம் மாறியவன் என்று பொருள்.
இதே போல மகாபாரதத்தில் கருவை இடம் மாற்றி வளர்த்த குறிப்பு வருகிறது. ஹஸ்தினாபுர மன்னன் திருதராஷ்டிரனின் மனைவி காந்தாரி. (இன்றைய ஆப்கானிஸ்தான் நாட்டு காந்தார பகுதியை சார்ந்தவள்). இவளுடைய தம்பிதான் சூதும், வாதும் குடிகொண்ட சகுனி ஆவார். இத்தம்பதியினரின் வயிற்றில்தான் கௌரவர்கள் நூறுபேரும் பிறந்தார்கள். திருதராஷ்டிரனின் தம்பி பாண்டு, அவர் மனைவிமார் குந்தியும், மாதரியும். குந்தியின் வயிற்றில் யுதிஷ்டிரன் (தருமன்), பீமன், அர்ஜுனன் ஆகியோர் பிறந்தனர். மாத்ரியின் வயிற்றில் நகுலனும், சகாதேவனும் பிறந்தார்கள். சகோதரர்கள் ஐவரையும் பாண்டவர்கள் என்று குறிப்பிடுவார்கள்.
குந்தி வயிற்றில் தருமன் கருவுற்றிருந்த அதே நேரத்தில் காந்தாரியும் கருவுற்றிருந்தாள். ஆனால் தருமன் முதலில் பிறந்து கௌரவ-பாண்டவர் அனைவருக்கும் மூத்தவனாக திகழ்ந்தான். இந்த செய்தி கேட்ட காந்தாரி பொறாமையினால் உந்தப்பட்டவளாக பெருத்த ஆவேசம் கொண்டு உலக்கையால் தன் வயிற்றில் இடித்துக்கொண்டாள். இந்த செய்கையினால் அவள் கரு கலைந்து அனைத்தும் தரையில் கொட்டிவிட்டது. (இன்றுகூட பொறாமைபடுபவர்களை பார்த்து 'உலக்கையால் வயிற்றில் இடித்துக்கொள்' என்று கூறும் வழக்கம் நம் நாட்டுப்புறங்களில் காணப்படுகிறது) என்ன செய்வதென்று அறியாமல் அனைவரும் விழி பிதுங்கி பார்த்துக்கொண்டிருந்த பொழுது, விதுரரின் அறிவுரைக்கேற்ப வியாச முனிவரை அழைத்து வந்தார்கள். (மகாபாரத இதிகாச காவியத்தை இயற்றிய இவர் திருதராட்டிரனுக்கு தந்தை முறை. பராசர முனிவரின் மூலமாக சத்தியவதி என்ற மீனவ பெண்மணிக்கு பிறந்தவர். இந்த சத்தியவதியை சந்தனு என்கிற தமது தந்தைக்கு திருமணம் செயவிக்கவே தேவவிரதன் என்ற இளவரசன் பெரும் சபதம் செய்து, பீஷ்மர் என்னும் பெயர் பெற்றான்). வியாசமுனிவர் தரையில் சிந்திப்போன கருவை உரிய முறையில் திரட்டி பக்குவம் செய்து நூறு சட்டிகளில் சேமித்து வைக்கிறார். அங்கே அவை தகுந்த காலங்களில் வளர்ந்து குழந்தையாகின்றன. துரியோதனன் தொடங்கி அந்த நூறுகுழந்தைகளும் கௌரவர்கள் என்றழைக்கப்பட்டன.
இப்படி கரு இடமாற்றம், செயற்கை முறை கருத்தரிப்பு போன்ற விஷயங்களை அனாவசியமாக கையாண்டுள்ள நம்முடைய பழம் பெரும் மருத்துவ முறையை நாம் உதாசீனபடுத்திவிட்டு, பக்க விளைவுகள் பல கொண்ட மேல் நாட்டு மருத்துவ முறைக்கு அடிமைப்பட்டு கிடப்பதோடு அதை தலையில் வைத்து கொண்டாடுவதை பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக இருக்கிறது.