நேர்முக வர்ணனை என்பதை நம்மில் பலர் மறந்தே போயிருப்போம். தொலைக்காட்சிகள் பெரிதாக மக்களிடையே வளர்ந்து விட்ட பிறகு நேர்முக வர்ணனைக்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது. கிரிக்கெட்டில் நேர்முக வர்ணனையை கேட்டபடி வானொலி பெட்டியை காதுக்கருகே வைத்து கேட்ட கோடானுகோடி ரசிகர்களில் நானும் ஒருவன். கவாஸ்கர், கபில்தேவ், விஸ்வநாத் போன்றோர் சிவப்பா, கருப்பா, உயரமா, குட்டையா என்பதெல்லாம் தெரியாது. ஆனால் யாருடைய போலிங்கை விளாசினார்கள், எந்த திசையில் நான்கு, ஆறு அடித்தார்கள், நூறை எப்படி எட்டி பிடித்தார்கள் போன்ற பல விஷயங்கள் அத்துப்படி. அவர்களின் உருவங்களையும், சிறப்பான ஸ்ட்ரோக்குகளையும் மறுநாள் பேப்பரை பார்த்து ரசிப்போம். அவ்வளவு சிறப்பு நேர்முக வர்ணனைக்கு உண்டு. வர்ணனையாளர் களத்தில் என்ன நடக்கிறது என்பதை உடனுக்குடன் நயமாக சொல்ல வேண்டும். அது ரசிப்பிற்குரியதாகவும் இருக்க வேண்டும். ஒரு சில வர்ணனையாளர்களுக்கென்றே ரசிகர் கூட்டம் கூட இருந்தது. அத்தகைய உயர்ந்த பெருமையெல்லாம் தொலைகாட்சி வர்ணனையாளர்களுக்கில்லை. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை யாரும் காது கொடுத்து கேட்பது கூட இல்லை.
சரி இந்த நேர்முக வர்ணனையை (First Running Commentator) முதன் முதலில் செய்தது யார் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. சிலர் இது ஏதோ வெள்ளைக்காரன் புகுத்திய நடை முறை என்று நினைத்திருப்பார்கள். ஆனால் இது நம் இந்தியர்கள் கையாண்ட வழிமுறைதான் என்பதை கேட்டால் அசந்து போவீர்கள். ஆம்! மகாபாரதத்தில் வரும் திருதராட்டிர மாமன்னனின் செயலாளராக இருந்த சஞ்சயன் தான் முதல் நேர்முக வர்ணனையாளர் என்ற அந்த சிறப்பிற்குரிய மாமனிதன் என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாக இல்லையா? இந்த சிறப்பு வாய்த்தது ஒரு சுவாரசியமான நிகழ்வு.
வனவாசத்தையும், மறைந்து வாழும் நிலையையும் வெற்றிகரமாக முடித்த பாண்டவர்கள், தங்களுடைய உரிமைக்குரிய நிலத்தை கேட்டு ஸ்ரீகிருஷ்ணனை கௌரவர்களிடம் தூது அனுப்புகின்றார்கள். அவர்களுக்கு உரிய நிலத்தை திரும்ப கொடுக்க கூடாது என்பதில் துரியோதனன் மிகவும் உறுதியாக இருக்கிறான். அதனால் தூது வரும் கண்ணனையும் அவமானப்படுத்த நினைக்கிறான். சபையில் வைத்தே கண்ணனை கொன்று விட வேண்டும் என்றும் சூது செய்கிறான். மாநிலத்தின் பேரரசன் திருதராட்டிரன் என்றாலும், துரியோதனன் வெறும் இளவரசன்தான் என்றாலும் அவனுடைய புத்திர பாசத்தால் தன் மகன் செய்யும் அத்தனை அட்டூழியங்களையும் கண்டும் காணமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் (இந்த காலத்திலும் அரசியலிலும், ஆட்சியிலும் இப்படிப்பட்ட திருதராட்டிரர்கள் இருக்கலாம், அவர்கள் யாராவது உங்கள் சிந்தையில் வந்தால் அதற்கு நாம் பொறுப்பில்லை). சபையில் ஒரு பள்ளம் அமைத்து அதில் மல்லர்களை நிரப்பி அதை மூடி அதன் மீது சிறப்பான ஆசனத்தை கண்ணனுக்கு என்று அமைக்கிறான் துரியோதனன். கண்ணன் அமர்ந்தவுடன் எடை தாளாமல் ஆசனம் நொறுங்கி பள்ளத்தில் விழும். அங்கே உள்ள மல்லர்கள் கண்ணனை கொன்று விட வேண்டும், என்பதுதான் அவன் திட்டம்.
அவ்வாறே சபைக்கு வந்த கண்ணன் ஆசனத்தில் அமர்கிறான். ஆசனம் நொறுங்கி பள்ளத்தில் விழுகிறது. ஆனால் கண்ணன் விழவில்லை. மாயன் அல்லவா? மாறாக பேருருவம் (விஸ்வரூபம்) எடுக்கிறான். அதை கண்டு அவையோர் அனைவரும் பணிகிறார்கள், துரியோதனனை தவிர. தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்கிறார்கள். கண்ணன் காலடியில் சிக்கி மல்லர்கள் மாண்டு போவார்கள். திருதராட்டிரன் தன் மகனை மன்னிக்கும்படி மன்றாடுகிறான். கண்ணன் அப்போது அவையோருக்கு அருள் பாலிக்கிறான். தன்னுடைய தூது வந்த நோக்கத்தை தெரிவிக்கிறான். ஒரு பிடி மண்ணைக்கூட தர மாட்டேன் என்று துரியோதனன் மறுத்து விடுகிறான். பின்பு போர்தான் முடிவு என்று அதற்கு நாளை நிச்சயம் செய்து விட்டு பாண்டவர் இருப்பிட செல்ல தயாராகிறான். அப்போது திருதராட்டிரன் கண்ணனை பணிந்து தன் மகன் மீது கருணை காட்டும்படி வேண்டுகிறான்.அது தன் கையில் இல்லை என்றும் தருமா தேவதைதான் அதை செய்யக்கூடியவள் என்றும் பதிலுரைக்கிறான். இருந்த போதும், போர்க்களத்தில் என்ன நடக்கிறது என்பதை திருதராட்டிரன் தமது அரண்மனையிலிருந்தவாறே காணக்கூடிய வகையில் அவனுக்கு ஞானக்கண்ணை அளிப்பதாக கண்ணன் கூறுகிறான்.
இதை கேட்ட திருதராட்டிரன், "கண்ணா! நான் பிறவியிலிருந்தே பார்வையில்லாமல் இருந்து வந்துள்ளேன். இப்போது நீ தரும் பார்வையை வைத்து என்மகன் யார் பிறர் மக்கள் யார் என்று பார்த்து அறிய என்னால் முடியாது. ஒரே குழப்பம் மட்டுமே மிஞ்சும். ஆகவே அந்த ஞானக்கண்ணை என்னுடைய செயலாளராகவும், தேரோட்டியாகவும் செயல்படும் அன்புமிக்க சஞ்சயனுக்கு அளிப்பாய். அவன் அதை பார்த்து என்ன நடக்கிறது என்று எனக்கு சொல்லட்டும். அதை வைத்து உண்மை நிலையை நான் அறிந்து கொள்கிறேன்" என்று கூறினான். அதன்படி கண்ணபரமாத்மா சஞ்சயனுக்கு ஞானவொளியை அளிக்கிறார். அவரே மகாபாரத யுத்தம் முழுவதையும் நமக்கு நேரடி வர்ணனை செய்து அளிக்கிறார்.
ஸ்ரீமத் பகவத்கீதையின் முதல் ஸ்லோகமே இவ்வாறுதான் தொடங்குகிறது:
धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता युयुत्सव I
मामका: पान्दवाश्चैवा किमकुर्वत संजय II
த்ருதராஷ்ட்ர உவாச்ச
தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே சமவேதா யுயுத்சவ I
மாமகா: பாண்டவாஸ்சைவ கிமகுர்வத சஞ்சய II
"தர்ம பூமியான குருக்ஷேத்ரித்தில் யுத்தம் புரியும் நோக்கத்தோடு களம் இறங்கியுள்ள என்னுடைய மக்களும் பாண்டுவின் புதல்வர்களும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று திருதராட்டிரன் கேட்டான்" என்பது இதன் பொருள். அதாவது என்ன நடக்கிறது என்பதை உன் ஞானக்கண் கொண்டு அறிந்து எனக்கு சொல் சஞ்சயா என்று திருதராட்டிரன் கேட்கிறான். அதன் பின்னர் ஸ்ரீமத் பகவத்கீதையும் அதை தொடர்ந்து பதினெட்டு நாள் போரின் வர்ணனையும் சஞ்சயனால் நேரடியாக செய்யப்படுகின்றன. சஞ்சயனின் நேர்முக வர்ணனையின் லாபம் நமக்கு கீதை கிடைத்தது. அதன் மூலம் இன்றும் பெருமானின் உபதேசங்களை நாம் தினமும் வாசித்து மனக்கண்ணால் காண முடிகிறது. கீதையை படிக்க, உங்கள் மொழியில் கேட்க, பொருளை புரிந்துக்கொள்ள இந்த தளத்திற்கு செல்லவும்: Bhagavad Gita
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக