வியாழன், 4 ஆகஸ்ட், 2011

ஸ்ரீவத்ஸ கோத்ரம்

கோத்ரம் என்பது ஒரு குடும்பத்தை குறிக்கும். ஒரே மூதாதையர் வழி வந்தோர் என்பது பொருள். ஒரு தந்தையார் வழியில் வந்தவர்களை கோத்திரத்தின் மூலம் அடையாளம் காணலாம். ஒரே கோத்திரத்தை சார்ந்தவர்கள் சகோதர சகோதரி உறவு கொண்டவர்கள் ஆவர். ஆகவே ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்து கொள்வதை தடை செய்திருக்கிறது இந்து சமுதாயம். 

கோத்திரங்கள் பல உண்டு என்றாலும் இன்று பிரபலமாக உள்ளவை வெறும் 42 மாத்திரமே. அவற்றுள் ஒன்றுதான் நாம் இங்கு விவரிக்க இருக்கும் ஸ்ரீவத்ஸ கோத்ரம். இது தென்னிந்திய பிராமணர்களில் பிரபலமான கோத்ரம். "சீவச்ச கோத்ரம் சீமையில் பாதி" என்பது சொலவடை.

ஞானிகள், முனிசிரேஷ்டர்கள் வழி வந்தவர்கள் என்று தங்களை பிரபல படுத்திக்கொள்ளவே அன்றைய மக்கள் விரும்பினார்கள். தங்கள் வமிசத்திற்கு அவை பெருமை சேர்ப்பதாக எண்ணினார்கள். அத்தகையதாகவே பாரத்வாஜ கோத்ரம் - பாரத்வாஜ முனி வழி வந்தவர்கள், ஆத்ரேய கோத்ரம் - அத்ரி முனி வழி வந்தவர்கள், கெளசிக கோத்ரம் - கௌசிக முனி வழி வந்தவர்கள் என்று பெருமை பட்டுக்கொண்டார்கள். அத்தகைய வரிசையில் ப்ருகு முனி வழி வந்தவர்கள் "பார்கவ கோத்ரம்" என்று தங்களை வெளிப்படுத்திக் கொண்டார்கள். இந்த பார்கவ கோத்ரமே ஸ்ரீவத்ஸ கோத்ரம் என்று பிரபலமடைந்தது.  அதற்கு ஒரு சிறந்த காரணம் இருந்தது. 

ஒரு சிறந்த முனி வழி வந்தவர்கள் அந்த முனிவரின் பெயரை வைத்து தங்களை வெளிப்படுத்திக்கொண்டார்கள் என்று பார்த்தோம். அவ்வாறே பார்கவ கோத்ரம் ப்ருகு முனிவர் வழி வந்ததாக இருந்தது. அவரே இந்த கோத்ரத்தை தொடங்கி வைத்தவர். அவர் ஒரு சமயம் மக்களிடம் மிகவும் நேசம் கொண்ட மற்றும் தாய் மனம் கொண்ட இறைவனை அடையாளம் காண எண்ணி பிரம்ம லோகம் மற்றும் கயிலாய கிரிக்கு சென்றார். இவர் வந்திருப்பதை கண்டும் அசட்டையாக இருந்தார்கள் பிரம்ம தேவனும் சிவபெருமானும். ஆகவே மிகவும் சினம் கொண்ட ப்ருகு முனிவர் அவர்களை சபித்து விட்டு நேரே வைகுண்ட லோகம் சென்றார். அங்கே பாற்கடலில் பாம்பனைமீது அனந்த சயன திருக்கோலத்தில் சங்கு, சக்கர, கதாதரனாக, தாயாருடன் வீற்றிருந்தார் பரந்தாமனார். நேரே விருட்டென்று உள்ளே சென்ற ப்ருகு முனிவர் பெருமானின் திருமார்பில் ஓங்கி உதைத்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத கார்த்தடங்கண்ணனார் அரவணையிலிருந்து துயிலெழுந்து ப்ருகு முனிவரின் பாதங்களை தமது தாமரைக்கரங்களால் ஏந்தி "பாதம் வலிக்கின்றதா?" என்று வினவினார். இறைவனின் பொறுமையையும், பக்தர்கள் மீது அவர் கொண்டிருந்த மாறாத அன்பையும் உணர்ந்தவராய் முனிவர் அவர் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினார். தாம் உண்மையை அறியும் பொருட்டே அவ்வாறு செய்ததாகவும் எந்த ஒரு தீய எண்ணமும் தமக்கில்லை என்றும் கூறி தமது செய்கைக்கு மன்னிப்புக்கோரினார். இறைவன் கருணையே உருவான தயாபரன் அல்லவா? அவன் மன்னிக்கவில்லை அந்நிகழ்ச்சியை மறந்தேபோனான். ஆயினும் அவன் திருமார்பில் வீற்றிருந்து தாயாருக்கு இது மிகவும் வருத்தத்தை தந்தது. அவள் இறைவனை நோக்கி கேட்டாள், "உங்களுக்கு உங்கள் பக்தன் உயர்ந்தவனாக இருக்கலாம். அனால் அதற்காக அவன் நான் உறையும் இடைத்தை அசுத்தம் செய்து அவமரியாதை செய்ததை நான் மன்னிக்க மாட்டேன்" என்று சினந்து கூறினாள். அவர் ஞான செருக்கினால்தான் அவ்வாறு செய்ததாக கருதி "இனி, பிரம்மத்தை அறியும் பெருமுயற்சியில் ஈடுபட்டுள்ள பிராம்மணர்கள் தங்களை அறிவில் சிறந்தோர் என்று எண்ணிக்கொள்ளட்டும். ஆனால் அவர்களுக்கு என்னுடைய கனிவு கிட்டாமல் போகும். அவர்கள் வாழ்வில் வறுமையே தாண்டவம் ஆடும்" என்று கூறினாள். அதனால்தான் அறிவில் சிறந்த ஞானிகள் இன்றும் வறுமையில் வாடுவதை நாம் இயல்பாக காண்கிறோம். மகாலக்ஷ்மியின் வார்த்தைகளை கேட்ட முனிப்பெருந்தகை மிகவும் வருந்தி தம்மீது தயை காட்டும்படி வேண்டிக்கொண்டார். அன்னையின் கருணைக்காக சிபாரிசு செய்யும்படிக்கு இறைவனையும் நெஞ்சுருக வேண்டினார். இதில் தாமேதும் செய்ய இயலாது என்றும், இதில் கருணை காட்டக்கூடிய நெஞ்சம் அன்னையிடம் மட்டுமே உள்ளது என்றும் அவளையே சரணடைவாய் என்றும் தேற்றுதல் கூறுனார். அன்னையில் பொற்பாதங்களை இறுகப்பற்றிய முனிவர், "அன்னையே நீ அமரும் சிம்மாசனத்தை, இதய தாமரையை அவமானம் செய்தது என் அறியாமைதான். ஆகவே நீ என் மகளாக பிறந்து உன் மனம் ஆறுதல் பெறும்மட்டும் என் மார்பில் உதைத்து கருணை காட்டுவாய்" என்று வேண்டினார். அதை கனிவுடன் ஏற்ற அன்னை ப்ருகு முனிவரின் மகளாக அவதாரம் செய்தாள். ப்ருகு முனிவரின் மகளாக பார்கவ குலத்தில் பிறந்ததால் அவளை பார்கவி என்றும் அழைக்கிறோம். அன்னைக்கு தந்தையான பேறு மட்டுமல்லாமல் அவளை இறைவனுக்கு மனம் செய்வித்து அவருக்கு மாமனாராகவும் ஆன பெருமை ப்ருகு முனிவருக்கு மட்டுமே உடையது. மகாலட்சுமி குழந்தையாக பிறந்த கோத்ரம் என்ற பெருமையுடன் பார்கவ கோத்ரம் ஸ்ரீவத்ஸ கோத்ரம் என்றே அன்று முதல் வழங்கலாயிற்று. (ஸ்ரீ - திருமகள்; வத்ஸ - குழந்தை) திருமகள் குழந்தையாக இருந்த கோத்ரம் என்னும் பொருள் பட இந்த கோத்ரம் இந்த பெயருடன் விளங்குகிறது. இந்த கோத்ரத்தார் அனைவருக்கும் அவள் அத்தையாகவோ, சகோதரியாகவோ, மகளாகவோ உறவு கொண்டு விளங்குகிறாள். இத்தகைய உறவு பெற ஸ்ரீவத்ஸ கோத்ரத்தார் என்ன பேறு பெற்றார்களோ? இந்த கோத்ரத்து பெண்கள் மகாலக்ஷ்மியின் ரூபங்கள். அவர்களை இல்லற துணையாக வாய்க்கப்பெற்றவர்கள் பெரும்பேறு கொண்டவர்கள். அவர்கள் இல்லத்து வறுமை இருந்த இடம் காணாமல் ஓடிவிடும் என்பது இயல்பு. மகாலட்சுமிக்குத்தான் எத்தனை கருணை. தம் கணவரை அவமானப்படுத்தியவருக்கும் அவரது வாரிசுகளுக்கும் என்றென்றும் பெருமையை அல்லவா வாரி வழங்கியிருக்கிறாள்?    

இந்த கோதரத்தில் ஐந்து முனிசிரேஷ்டர்கள் பெருமையுடன் த்யானிக்கப்படுகிறார்கள்.  அவர்கள், ப்ருகு, ஷ்யாவன, ஆப்னவான, அவுரவ மற்றும் ஜமதக்னி முனிவர்களாவர். இவர்களில் ஜமதக்னி முனிவர் ரேணுகா பரமேஸ்வரியை மனிவியாக பெற்றதுடன் அவள் மூலமாக பரசுராமனையும் மகனாக பெற்றார். பரசுராமர் மகாவிஷ்ணுவின் அவதாரம். அவர் ஸ்ரீ வத்ஸ கோதரத்தில் உதித்ததால் மகாலக்ஷ்மிக்கு சகோதரன் முறையாகிவிட்டார். பகவானுக்கு மகாலக்ஷ்மியை விட சிறந்த இணை இருக்க முடியாது. அவளே சகோதரியாக பிறந்து விட்டபடியால் பரசுராம அவதாரத்தில் பகவான் பிரம்மச்சாரியாகவே இருந்துவிட்டார். குட்டை பிரம்மச்சாரியாக வாமன ரூபத்தில் வந்தகாலத்திலும் பகவானின் மார்பை விட்டு நீங்காத மகாலட்சுமி பரசுராம அவதாரத்தில் மட்டும் அவனை விட்டு தனித்திருந்து விட்டால். லக்ஷ்மி இல்லாத இடத்தில் கோபம் குடிகொள்ளதொடங்கி விடும் அல்லவா? அதன் காரணமாகவே பரசுராமர் பெரும்கோபக்காரராக  விளங்கினார். 

ஸ்ரீவத்ஸ கோத்ரத்தில் எண்ணற்ற பெரியோர் பிறந்திருந்தாலும் மூதறிஞர் இராஜாஜி, பிரதிவாதி பயங்கரம் அண்ணா(புகழ்பெற்ற ஸ்ரீ வேங்கடேஸ்வர சுப்ரபாதம் வழங்கியவர்) அழகிய மணவாளன் (சிறந்த வைணவ பெரியார்)  போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக