ஞாயிறு, 30 அக்டோபர், 2011

இறை நம்பிக்கை!

இறை நம்பிக்கை என்பது ஏதோ கோவிலுக்கோ, மசூதிக்கோ அல்லது தேவாலயத்துக்கோ சென்று நமது நீண்ட விருப்பங்களை பிரார்த்தனை என்ற பெயரில் பட்டியலிடுவது என்றாகிவிட்டது. சொல்லப்போனால் இறை மறுப்பு கொள்கையாளர்களுக்கும் இறை வழிபாடு செய்பவர்களுக்கும் பெருத்த வேறுபாடு இல்லை. அவர்கள் சாலையில் சிலையாக நிற்கும் தங்கள் அபிமானத்திற்குரிய தலைவனுக்கு மாலையிடுகிறார்கள் என்றால் இவர்கள் ஆலயத்திற்குள் சிலையாக இவர்கள் விரும்பும் வண்ணம் இருக்கும் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்கள். மற்றபடி நம்பிக்கை பக்தி என்பதெல்லாம் சிறிதும் இருப்பதாக தோன்றவில்லை. தங்கள் கோரிக்கைகள் நிறைவேறினால் மொட்டை அடிப்பது, அபிஷேகம் செய்வது போன்றவற்றை செய்கிறார்கள் உடனே அடுத்த கோரிக்கையையும் அங்கே வைக்கிறார்கள். நிறைவேறாத நிலையில் அந்த தெய்வத்தையே பழிக்கிறார்கள். இதுவா பக்தி. இதுவா இறை நம்பிக்கை. உச்சகட்டமாக வர்த்தக வியாபாரம் செய்கிறார்கள். நான் இது தருகிறேன் நீ அதை தா என்கிறார்கள். நம்முள்பட, ஆண்ட சராசரத்தையே தனதுடமையாக கொண்டுள்ள இறைவன், நாம் கொடுக்கும் பூவுக்கும், தலை முடிக்குமா என்கி நிற்கப்போகிறான். அவன் ஆழ்ந்த நம்பிக்கையையும், தீவிர தூய பக்தியையுமே எதிர்பார்க்கிறான். அது இன்றைய நிலையில் தேடித்தான் பார்க்கவேண்டும். 

பிள்ளையே இல்லாத ஒருவருக்கு தமது தொண்ணூற்றேழாவது வயதில் ஆண் மகவு வைத்தால் அதை எப்படி கொண்டாடுவார்கள். அப்படித்தான் ஆபிரகாமுக்கும் இறைவன் ஆண்மகவை அளித்தான். ஆனால் அதையே தமக்கு பலியிட வேண்டுமென்றும் கட்டளையிட்டான். இறை வேண்டுகோளை அப்படியே ஏற்று சிறிதும் மனம் கோணாமல் அந்த மகனை பலியிட முற்பட்ட வேளையில் இறைவனே தடுத்தாட்கொண்டார். இது போன்றே சிறுதொண்ட நாயனாரும் தமது மகனை சமைத்து வந்திருக்கும் இறை அன்பருக்கு அமுது படைத்தார். இறைவன் அவரை வாழ்த்தி மகனையும் உயிர்ப்பித்து தந்தார். இது போன்றதொரு ஆழ்ந்த நம்பிக்கை வைப்பது அரிதாகும். 

இறை அருளாளர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இசுலாமிய மதத்தை போதித்து குரான் நெறியை பரப்பி வரும் காலத்தில் அவர்களை கொன்றுவிட சிலர் முயன்றனர். அவர்கள் தங்களது தற்குறி வியாபாரம் படுத்துவிடும் என்று பயந்தே அவ்வாறு செய்தார்கள். இவர்களிடமிருந்து மதீனா நகர் எல்லையை ஒட்டிய சிறு குன்றிளிருக்கும் ஒரு குகையில் நபிகளாரும் அவரது நெருங்கிய உறவினர் ஒருவரும் ஒளிந்திருந்தார்கள். அந்த குகை இரண்டு மலைகளுக்கு இடையில் இருந்தது. மலையடிவாரத்தில் ஆடு மேய்க்கும் சிறுவர்கள் இருந்தார்கள். இவர்கள் இருந்த குகை அமைதியாக இருந்தது. எதிராளிகள் சிறிது சிறிதாக மலையேறி குகையை நெருங்கி கொண்டிருந்தார்கள். அப்பொழுது நபிகளாரை நோக்கி அவரது உறவினர், "இங்கே நம் இருவரை தவிர யாருமில்லையே" என்று கூறினார். அதற்கு நபிகளார், "இங்கே நாம் மூவர் இருக்கிறோம். இறைவனும் நம்முடன்தான் உள்ளார்" என்று பகர்ந்தார். அவரது நம்பிக்கை எப்போதும் இறைவன் நம்முடனேயே இருக்கிறார், நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் கண்காணித்துக்கொண்டு இருக்கிறார். அவற்றிற்கு சாட்சியாக இருந்து நீதிநாளில் தீர்ப்பு வழங்குகிறார் என்கிற தீவிர பற்றான்மை கொண்டிருந்தார். இவரது தீர்க்கமான பற்று எதிரிகளை வேறு பாதையில் செல்ல விட்டது. அவர்கள் குகையை அடையவே இல்லை. இது இறையருளாளர்களுக்கே சாத்தியம், சாமானிய மனிதர்களாகிய நம்மால் முடியாது என்று எண்ணக்கூடாது. அப்படி இராமல், புனிதர்கள் காட்டிய வழி ஒழுக வேண்டும் என்றே அவர்கள் அவ்வாறு வாழ்ந்து காட்டினார்கள். 

தமக்கென்று எதையும் கேளாமல், இறைவனுக்கு தொண்டு செய்வதே, அவனுக்கு அருகில் இருப்பதே, அவன் தேவைகளை பூர்த்தி செய்வதே தமது பணி என்று செயல்பட்ட திண்ணனார் மூன்றே நாட்களில் இறையருள் பெற்று "கண்ணப்ப நாயனாராக" திருவவதாரம் எடுத்தார். இறைவன் பொற்கழல்களில் நீங்கா இடம் பெற்றார். இதுதான் இறை பக்தி, இதுதான் நம்பிக்கை என்று வரையறுக்க முடியாத வண்ணம், இறை நம்பிக்கை அதீதமானது. ஒரு தாயிடம் அன்பு செலுத்தும் குழந்தையின் செய்கையை விட நுட்பமானது. ஒரு குழந்தை அம்மாவை கட்டிபிடித்து தன் அன்பை வெளிப்படுத்தும். ஒன்று தலை மீது ஏறும், ஒன்று மூக்கை கடிக்கும், ஒன்று சடையை பிடித்து இழுக்கும், ஒன்று முந்தானையை பிடித்துக்கொண்டே இருக்கும், ஒன்று அம்மாவின் விரலை வாயில் வைத்தபடி இருக்கும், ஒன்று தன் மூக்கை அம்மாவின் புடவையில் துடைக்கும். ஆனால் இந்த அனைத்துமே அம்மாவிடம் தாங்கள் வைத்துள்ள அன்பைத்தான் இப்படி வெளிப்படுத்துகின்றனவே தவிர வேறொன்றுமில்லை. 

கற்களால் அருச்சித்து இறைவனை வழிபட்டார் ஒருவர், தனது வாய் உமிழ் நீரால் இறைவனை குளிப்பாட்டினார் மற்றொருவர்.தமது காதலுக்கு இறைவனை தூது விடுத்தார் ஒருவர் என்றால் அவ்விதம் தூது சென்றவனை கொல்ல ஆயுதத்தோடு தயாராக இருந்தார் மற்றொருவர். இப்படி இறை நம்பிக்கையும் பக்தியும் நம்மால் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு மிகவும் மேம்பட்டவை. சாதாரண வியாபாரிகளாகிய நமக்கு அவற்றை புரிந்து கொள்ள ஏழாம் அறிவு மிகவும் அவசியம்.              

வெள்ளி, 28 அக்டோபர், 2011

தீண்டாமையொழிப்புப் போராளி ஸ்ரீராமானுஜர்

தமிழகத்தில் எது சிறப்பாக இருந்தாலும் அதன் அருமை இங்குள்ளவர்களுக்கு தெரியாது. அன்னியர் யாரேனும் வந்து அவற்றை வானளாவ புகழும்பொழுதுதான் இங்குள்ளோருக்கு வாயடைத்துப்போகும். அதுவரை அவற்றை சீண்டமாட்டார்கள். சொல்லப்போனால் எள்ளிநகையாடிக் கொண்டிருப்பார்கள். அது போன்ற ஒரு செயலை வேறு நாட்டினரோ அல்லது வேறு மொழியாளர்களோ செய்வதில்லை. அவர்கள் ஒரு படி மேலே போய் இல்லாத உரிமையை போராடி பெறுவதில் குறியாக இருக்கிறார்கள். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்து விட்டது (அப்படி ஒரு அந்தஸ்து தேவையில்லை. தமிழ் செம்மொழி என்பது உலகம் என்றோ ஏற்றுக்கொண்டுவிட்ட உண்மை) என்று வீம்பாக, தமிழுடன் என்றுமே ஒப்பாக இயலாத கன்னடத்திற்கும், அந்த அந்தஸ்தை பெற்று விட்டார்கள். அப்படிப்பட்ட வரிசையில் நாம் உதாசீன படுத்தியது மகான் ஸ்ரீ ராமானுஜர் ஆற்றிய தீண்டாமையொழிப்பு   பிரச்சாரத்தைதான். இன்று தீண்டாமை ஒழிப்பு என்றாலே நமக்கு மார்டின் லூதர் கிங், ஆபிரகாம் லிங்கன், அம்பேத்கார், காந்தியடிகள் என்று எண்ணற்ற பெரியோர்கள் மட்டுமே நினைவுக்கு வருகிறார்கள். தவறி கூட யாருக்கும் ஸ்ரீராமானுஜர் நினைவிற்கு வருவதில்லை. காரணம் அவர் ஆத்திக வாதத்தை போதித்தார் என்பது மட்டுமில்லை பிராமணர் என்பதும் ஒரு காரணமாய் அமைந்து விட்டது. திராவிட கட்சிகளுக்கு இவ்விரண்டுமே எட்டிக்காய் கசப்பாயிற்றே பெருமை படுத்துவார்களா? மேலும் நம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அறியாமையும் ஒரு காரணம். இறைவனின் பெருமைகளை வாயார போற்றி புகழ்ந்து பாடிய திருப்பாணாழ்வார் பன்னிரு ஆழ்வார்களில் வைத்து போற்றப்படுகிறார். அவர் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர் என்பது நம்மில் எத்தனைபேருக்கு தெரியும். 

மகான் ஸ்ரீராமானுஜர் கி.பி. 1017 இல் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூரில் சோமையா -காந்திமதி தம்பதியினருக்கு மகனாக அவதரித்தார். (ஸ்ரீபெரும்புதூர் என்றால் நமக்கு உடனே நினைவிற்கு வருவது ராஜீவ் காந்தி சமாதியும், எண்ணற்ற கம்பனிகளும்தான் என்பது வருந்தத்தக்க விஷயம்) மகாவிஷ்ணுவின் மீது மக்களுக்கு பக்தியை பரப்பவேண்டும் என்று அரும்பாடுபட்டார். அதோடு கூட அத்தகைய பக்திக்கு இனம், மொழி, மதம் எதுவும் தடையாக இராது என்று வாதிட்டு அனைத்து மக்களையும் ஒன்று திரட்டினார். அந்தணன், வேற்று பிறப்பினன் என்ற வேறுபாடின்றி அனைத்து மக்களையும் ஹரியின் சொரூபமே என்று நேசித்தார். பிறப்பின் ஏற்றத்தாழ்வு காட்டுவது பேதைமை என்று போதித்தார். (இன்று எத்தனைப்பேர் அவர் போதனையை மதிக்கிறார்கள் என்பது வேறு விஷயம்). இறை நாமத்தை உரைக்கும் யாவரும் நம் உடன் பிறப்புக்கள், என்ற சீரிய கொள்கையை தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்த உத்தமர் ஸ்ரீராமானுஜர். பெரும்பாலானோர் அவர் போதித்த விசிஷ்டாத்வைத கொள்கையை மட்டும் மேலோட்டமாக சொல்லிவிட்டு அதன் விளக்கத்தை ஆராய்வதிலேயே காலத்தை கடத்துவர். ஏதோ ராமானுஜர் பிற மத பிரசாரகர்கள் போல ஒருவர் என்ற கண்ணோட்டத்திலேயே அவருக்கு சிறப்பு செய்யாமல் விட்டு விடுவர். ஆனால் மகான் ராமானுஜரை பற்றி சொல்ல வேண்டுமென்றால் சொல்பவரின் நா புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவரை ஆதிசேடனின் திரு அவதாரமாகவும், இலக்குவனின் அவதாரமாகவும் காண்கிறது வைணவ உலகம். மாதந்தோறும் அவர் உதித்த திருநட்சத்திரமாகிய திருவாதிரை தினத்தன்று அவர் பிறந்த மண்ணில் அவர் திருமேனிக்கு திருநந்நீராட்டு   நடை பெறுகிறது. அவர் திருமேனியில் இருந்து விழும் பால் நீல நிறமாக மாறுகிறது. இன்றும் இவ்வற்புதத்தை காண மக்கள் கூட்டம் கோவிலில் குவிகிறது. இப்படி அவர் பெருமைகளை பேசுவோர் அவர் செய்த தீண்டாமை எதிர்ப்பு பிரச்சாரத்தை பெரிதாக வெளிச்சம் போட்டு காட்டுவதில்லை.

ஸ்ரீராமானுஜர் காஞ்சிபுரத்தில் யாதவ பிரகாசர் என்ற பெரியாரிடம் சீடராக விளங்கிய காலத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு திருக்கச்சி நம்பிகள் என்பார் பணிவிடைகள் செய்துவந்தார். இவர் பூவிருந்தவல்லியில் (சென்னைக்கு அருகில் உள்ள தலம், இன்று பூந்தமல்லி என்றே அழைக்கப்படுகிறது) பிறந்தவர். அந்தணர் அல்லாத குலத்தை சார்ந்தவர். அனுதினமும் பூவிருந்தவல்லியிலிருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தூரமுள்ள காஞ்சிபுரத்திற்கு பூக்களை சுமந்து சென்று வரதனுக்கு சாற்றி அவருக்கு ஆலவட்ட பணிகளை (விசிறி வீசுவது) செய்வார். அவ்வாறு வீசிக்கொண்டே வரதராஜனுண்டன் பேசிக்கொண்டிருப்பார். இது அவருக்கு மட்டுமே அத்தி வரதன் செய்த சிறப்பு. இதனால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஸ்ரீராமானுஜர் திருக்கச்சி நம்பிகளை அணுகி தமக்காக வரதன் ஏதாவது திருவார்த்தை பகருகிறாரா என்று கேட்டிருக்கிறார். அவரும் வரதன் அருளிய ஆறு மகா வாக்கியங்களை ராமாநுஜரிடம் சேர்ப்பித்தார். அவை ஸ்ரீவைணவத்தில் தலையாய இடம் பெற்றுள்ளன. அதில் முதல் வாக்கியம் "மாம் ஏகம் பரம் தத்வம்" - நானே உயர்ந்த தத்துவம் என்பது. திருக்கச்சி நம்பிகளை தம் குருவாக ஏற்க முயன்றார் ராமானுஜர். ஆனால் அவரோ தாம் அதற்கு தகுதி அற்றவர் என்றும் ஸ்ரீரங்கத்தில் உறையும் ஆளவந்தாரை குருவாக ஏற்குமாறும் பணித்தார். அவர் சொல்லை தட்ட மனம் அற்றவர் ஆயினும் அவரை தம் இல்லத்திற்கு வரவழைத்து அமுது படைக்க எண்ணி அவரை அணுகினார். முதலில் தயக்கம் காட்டினாலும், பிறகு வருவதாக ஒப்புக்கொண்டார் திருக்கச்சி நம்பிகள். 

குறிப்பிட்ட தினத்தில் திருக்கச்சி நம்பிகளை அழைக்க சென்றார் ராமானுஜர். ஆனால் அவர் வேறு வழியல் ராமானுஜர் இல்லத்தை அடைந்தார். இராமானுஜரின் மனைவி தஞ்சமாம்பாள் ஆசார அனுஷ்டான சூழ்நிலையில் வளர்ந்தவர். அவருக்கு பிராமணர், மற்றையோர் என்ற பாகுபாடு மனதில் வேரூன்றி இருந்தது. ஆகவே அவர் திருக்கச்சி நம்பிகளுக்கு அமுது படைத்து விட்டு அவர் சென்றது அவருடைய இலையை ஒரு குச்சியால் புறம் தள்ளி, அவர் அமர்ந்து சாப்பிட்ட இடத்தை சாணம் கொண்டு மெழுகிவிட்டு பிறகு குளிக்க சென்றார். சிறிது நேரத்திற்கெல்லாம் ராமானுஜர் இல்லம் திரும்பினார். மனைவி குளித்துவிட்டு இருப்பதை பார்த்து என்ன விஷயம் என்று வினவினார். அவரும் நடந்தவற்றை கூறினார். உடனே ராமானுஜர் பெரும் கோபம் கொண்டார். என்ன தவறு செய்து விட்டாய். அவருக்கு என் கையால் அமுது படைத்து அவர் எச்சிலையை என் கையாலேயே எடுத்து அவருக்கு பணிவிடை செய்ய எண்ணினேனே! அதை வீனடித்ததோடு, அவருக்கு அவமரியாதை செய்துவிட்டாயே. விஷ்ணுவின் பக்தர்களுள் ஜாதி வேற்றுமை பார்க்கலாமா? நம் அனைவருக்கும் அவர் தகப்பன் எனும்பொழுது இவ்வுலக மக்கள் எல்லோரும் நம் உடன் பிறந்தவர்கள் அல்லவோ? இப்படி இருக்க நீ தணியாத பாவம் செய்து விட்டாய். என் முகத்தில் விழிக்காதே என்று அவரை தம் இல்லத்தை விட்டு விரட்டினார். பிறகு திருக்கச்சி நம்பிகளிடத்தே சென்று மன்னிப்பு கோரினார். அவர் தாம் இதை பெரிது படுத்தவில்லை என்றும், தஞ்சமாம்பாள் சிறு பெண்தானே என்று பதிலுரைத்தார். ஆயினும் ராமானுஜருக்கு மனம் உறுத்திக்கொண்டே இருந்தது. அவர் பல பிராயச்சித்தங்களை செய்ததோடு, தம்மை மன்னிக்கும் படி இறைவனிடம் இறைஞ்சினார். திருக்கச்சி நம்பிகளே நேரடியாக தலையிட்டு தஞ்சமாம்பாளை உடன் சேர்த்துக்கொள்ள ராமானுஜருக்கு உத்தரவிட்டார். அதன் பிறகு இருவரும் இணைந்தனர். ராமானுஜரின் இந்த செய்கையை கண்ட தஞ்சமாம்பாள் தம் வாழ்நாளில் எந்த ஒரு விஷ்ணு பக்தரையும் சாதி வித்தியாசம் பாராமல் நடத்தினார். 

திருக்கோட்டியூர் நம்பிகளை தம் குருவாக ஏற்க ராமானுஜர் பதினேழு முறை ஸ்ரீரங்கத்திலிருந்து திருக்கோட்டியூருக்கு நடந்தே சென்றார். பதினேழு முறையும் அவர் பக்குவப்படவில்லை என்று குரு திருப்பி அனுப்பினார். பதினெட்டாவது முறை அவரின் பிடிவாதத்தையும், பணிவையும் கண்ட குரு அவரை சீடராக ஏற்றுக்கொண்டார். அவருக்கு பல அருளுரைகளை செய்த அவர், "ஓம் நமோ நாராயணாய" என்ற மூல மந்திரத்தை ஓதி அருள் புரிந்தார். அவர் ராமானுஜரிடத்தில் இந்த மூல மந்திரத்தை யாருக்கும் ஏனோ தானோ என்று வெளிப்படுத்தக்கூடாது, முறைப்படி சீடனாக வருபவர்களுக்கு மட்டுமே ஓத வேண்டும் என்றும் கட்டளையிட்டார். அவ்வாறில்லாமல் ஓதினால் நீ நரகத்திற்கு செல்ல வேண்டியிருக்கும் என்றும் கூறினார். அரும்பாடுபட்டு அவரை குருவாக ஏற்று தாரக மந்திரத்தை பெற்ற மகான் ராமானுஜர், உடனே திருக்கோட்டியூர் திருக்கோவிலின் கோபுரத்தின் மீதேறி மக்கள் அனைவரையும் அழைத்தார். "உங்களுக்கு சொர்கத்திற்கு செல்லும் வழியை சொல்கிறேன் கேளுங்கள். 'ஓம் நமோ நாரயாணய' என்று சொல்லுங்கள்" என்றவாறு உரக்க கூவினார். பெருங்கூட்டம் கூடி நாராயண மந்திரத்தை ஏற்றார்கள். இதை கேள்விப்பட்ட குருநாதர் ராமானுஜரை கடிந்து கொண்டார். அவர் நரகத்திற்குத்தான் செல்வார் என்றும் கூறினார். இதை கேட்ட ராமானுஜர் சுவாமி, நான் ஒருவன் நரகத்திற்கு செல்வதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் சொர்கத்திற்கு செல்வார்கள் என்றால் அதை நான் பெருமையாக ஏற்கிறேன் என்றார். சாதி பாரபட்சமில்லாமல் அம்மக்கள் அனைவரையும் ஸ்ரீவைணவத்தில்   இணைத்துக்கொண்டார்.

ஸ்ரீராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் காலமானார். அவருடைய திருவுரு இன்றும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.ஸ்ரீரங்கத்திருக்கோவிலின் சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு எதிரே ஸ்ரீராமானுஜர் சந்நிதி இருக்கிறது. அங்கேதான் அவருடைய திருமேனி பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவருடைய திருமேனியைத்தான் இங்கே காண்கிறீர்கள். ஆண்டிற்கு இரண்டுமுறை, சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில் புணுகு, பச்சைக்கற்பூரம் மற்றும் குங்குமப்பூ சாற்றப்பட்டு அழியாமல் பாதுகாத்து வருகிறார்கள். இதுவும் ஒரு விந்தைதான். உலகில் இவ்வளவு காலம் ஒரு பூதவுடல் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்றால் அது ஸ்ரீ ராமானுஜர் உருவம் மட்டுமே. கோவாவில் உள்ள புனித பிரான்சிசு உடல் சுமார் நானூறு ஆண்டுகள் மட்டுமே பழமை வாய்ந்தது. தொன் பாஸ்கோ வின் வலது கரம் சுமார் இருநூறு ஆண்டுகள் மட்டுமே பழமையானது. ஆனால் ஒரு முழு திருமேனி ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருப்பது ஸ்ரீரங்கத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீராமானுஜரின் அழகிய திருமேனி மட்டுமே. இறை நம்பிக்கை அற்றோர் உள்பட, தீண்டாமையை புறக்கணிக்கும் அனைவரும் தம் வாழ்நாளில் ஒரு முறையேனும் ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீராமானுஜரை வணங்கி வருவது இன்றியமையாதது. மேடையில் மட்டுமே முழங்கிவிட்டு, தம் இல்லத்தில் தீண்டாமை தலைவிரித்தாட வேடிக்கை பார்க்கும் அரைகுறை மனிதர்களை தலைவர்களாக கொண்ட நாம், உள்ளும் புறமும் அத்தகைய தீண்டாமையை எதிர்த்து இறை நம்பிக்கையை பரப்பிய உத்தமர் ராமானுஜர் திருவடியை சேவிப்பது பிறந்த பயனை அடைவிப்பது ஆகும். 

ராமானுஜரின் ஆயிரமாவது வருட பிறப்பு தினம் 2017 இல் வருகிறது. எத்தனையோ பேருக்கு சிறப்புக்களை செய்யும் நம் இந்திய அரசும், தமிழக அரசும் அவருடைய பிறந்த தினத்தை தீண்டாமையொழிப்பு   தினமாக கொண்டாடினால் பொருத்தமாக இருக்கும். 

ஸ்ரீராமானுஜரை பற்றி மேலும் விரிவாக தெரிந்து கொள்ள விக்கிபீடியா வை காணுங்கள். 

சனி, 8 அக்டோபர், 2011

கவி(ழு)தைகள்




அப்பா! 

நான் வாழ 
உயிரோடிருந்தவர்  
மறைந்தும் வாழ 
உயிரோடு மட்டுமே நான்!










புழக்கடை தோட்டம்!

மாலையில் நட்ட செடி 
காலையில் நிமிர்ந்தபோது
துள்ளல் மிகுந்ததோடு
திமிரும் தலைக்கேறியதே!






பஜனைக் கோயில்!


அரசியல் முதல் 
அம்மணம் வரை 
அனைத்தும் அறிந்தும்
சமாதி நிலை கண்ட 
சமத்துவ கூடம்!



கழனிகள்!

கட்டாந்தரையில்
பொன்மணிகளை
ஈன்றவள் புதையுண்டு
கிடக்கிறாள்
கட்டிட சமாதிக்குள்!







குருமார்கள்!


கண்டறியா
வைகுந்தத்திற்கு
வழிகாட்டும்
பிழைப்பளிகள்!







படிப்பு!

அப்பனும் செஞ்சதில்ல,
அப்பன் சொல்லி
தானும் செஞ்சதில்ல.
தன் பிள்ளையை மட்டும்
செய்யச் சொல்லுவது!







காக்கை!



நிறவெறியில்
கருகினாலும்,
சனியன் பிடித்து
ஆட்டுவித்தாலும்,
மறப்பதில்லை
அமாவாசை.





போனஸ்!


உழைப்புக்கும் 
மிகுதியான 
ஊதியத்துடன் 
வரும் கொசுறு!