மதுரை மீனாக்ஷி அம்மன் திருக்கோயில் உலக பிரசித்தமானது. ஆன்மிகம், கலை, இலக்கியம், கலாசாரம், பண்பாடு என்று எந்த துறையை எடுத்தாலும் அதில் மீனாக்ஷி அன்னைத் திருக்கோவிலின் அம்சத்தைக் காணலாம். அந்த அளவிற்கு அதன் பிரதிபலிப்பு இருக்கும். இதில் என்ன வியப்பு இருக்க முடியும். பாண்டிய ராஜ குமாரி அரசாட்சி செய்யும் தென்பாண்டி நாடல்லவா அது? ஐம்பத்தொரு சக்தி பீடங்களில் ஒன்றான மதுரை, இறைவன் நடத்திய அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் அரங்கேறிய திருத்தலம். வடநாட்டவர் தென்னாட்டில் சுற்றுலா மேற்கொள்ள விரும்பும் சில தளங்களில் மதுரையும் ஒன்று. அந்த மதுரையை பற்றியும் அங்கு கொலு வீற்றிருக்கும் அன்னையை பற்றியும் எழுத நம்மால் முடியாது. ஆயினும் அங்கே கண்டு லயித்த சில காட்சிகளை இங்கே பகிர்ந்து கொள்வதன் மூலம் வாசகர்களையும் மதுரை செல்ல தூண்ட முடியும் என்று எண்ணுகிறேன்.
மதுரையில் சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு எதிரில் நந்தி மண்டபம் உள்ளது. அந்த மண்டபத்தில் தூண்தோறும் கலை அம்சங்கள் கொண்ட பல சிற்பங்கள் உள்ளன. அவற்றை நாம் ஏதோ தெய்வ சிற்பங்கள் என்று பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டு சென்று விடுவோம். மற்றும் சிலர் அதை போட்டோ பிடித்து தங்கள் ஆல்பத்தில் புதைத்து விடுவார்கள். இன்னும் சிலர் அவற்றை வெறும் கருங்கல் தூண்கள் என்றே எண்ணி சென்று விடுவார்கள். நீங்கள் எப்படியோ? நான் கண்டு வியந்தவை இவைதான்:
மீனாக்ஷி திருக்கல்யாணம்:
நந்தி மண்டப தூண்களில் முதலில் இடது ஓரத்தில் இருப்பது மீனாக்ஷி திருக்கல்யாணம் சிற்பம். இடது புறத்தில் அண்ணன் மகாவிஷ்ணு தாரை வார்த்துக்கொடுக்க வலதுபுறத்தில் மாப்பிள்ளை சுந்தரேஸ்வரரை நடுவில் நிற்கும் அன்னை மீனாக்ஷி மணம் முடிப்பதாக இருக்கும் அந்த சிற்பம். இதில் ஒவ்வொருவரின் முக பாவனையும் அங்க அமைப்பும் (Body language) அதிசயத்தக்க வகையில் பிரித்து காட்டப்பட்டிருக்கும். தாரை வார்க்கும் மகாவிஷ்ணு (மீனாட்சியின் அண்ணன்) மிகுந்த பொறுப்புடன் மாப்பிள்ளையின் கையை பார்த்து கொடுப்பார். முகத்தில் பெண்வீட்டாருக்கு இருக்கும் அனைத்து பொறுப்பும் கவலையும் தென்படும். ஏனோதானோ என்று செய்வதாக இருக்காது. மாப்பிள்ளை சுந்தரேஸ்வரர் தனக்கே உரிய மாப்பிள்ளை மிடுக்குடன் எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பார். தாரை வார்க்கும் கிண்ணத்தையோ, கையையோ அல்லது மணப்பெண்ணையோ கூட பார்க்க மாட்டார். விரைத்துக்கொண்டு நிற்பார். மணப்பெண் மீனாக்ஷியோ பெண்களுக்கே இயல்பான பணிவுடன் தலையை சிறிது குனித்து கண்கள் அண்ணன் வார்க்கும் தாரையின் மீதே படிந்தபடி காட்சி தருவார். அவர் நிற்கும் நிலையம் மாப்பிள்ளையிட மிருந்து சற்றே விலகி அண்ணனுடன் ஒட்டிய படி சாய்ந்து காணப்படுவார். கல்யாணத்தில் மணப்பெண் இப்படிதான் நிற்பாள். இத்தகைய ஒரு இயற்கையான சுபாவத்தை கல்லிலே காட்சியாக அல்ல காவியமாகவே வடித்து வைத்திருக்கிறார்கள் ராக்ஷசர்கள்.
அர்த நாரீஸ்வரர்:
ஆணும் பெண்ணுமாக சரி நிகர் சமானமாக இறைவன் இறைவியுடன் காட்சி தரும் சிற்பம் மீனக்ஷி திருக்கல்யாணத்திற்கு நேர் எதிர் மூலையில் உள்ள தூணில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இறைவனின் மூக்கு பாகம் விறைப்பாக ஆண்களுக்கே உரிய மிடுக்குடன் இருக்கும். அதற்கு நேர் மாறாக இறைவியின் மூக்கு பகுதி மென்மையுடன் இருக்கும்.
பிக்ஷாடனர்:
இறைவன் துணி கூட தமதுடமையாக கொள்ளாமல் பிச்சை எடுக்கும் திருக்கோலத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறார். யாசிப்பவருக்கு முதலில் தேவை பணிவு மற்றும் எளிமை. நாம் கூட மிடுக்குடன் வருபவருக்கோ அல்லது திமிராக வருபவருக்கோ பிச்சை போட மாட்டோம். பரிதாபத்துக்குரிய தோற்றத்தில் வருபவரை பார்த்துதான் போடுவோம். அத்தகைய தோற்றத்தை பிச்சாடனர் உருவாக்குகிறார். அவர் அருகில் திருவோடு தாங்கியபடி நிற்கும் குள்ளவடிவான ஆள் நகைக்கும் படி இருப்பது மேலும் சிறப்பு.
சங்கரநாராயணர்:
ஹரியும் சிவனும் ஒன்று என்று உலகிற்கு உணர்த்த இறைவன் சங்கர நாராயணனாக திருக்காட்சி அளித்த அமைப்பை அர்த நாரீஸ்வரருக்கு மிக அருகிலேயே அமைத்திருக்கிறார்கள். ஏற்ற தாழ்வோ சிறிதும் இல்லாமல் ஹரிக்கு சமமாக ஹரனையும் வடிவமைத்து அதிசயத்திருக்கிறார்கள்.
கால சம்ஹார மூர்த்தி:
மார்க்கண்டேயனின் உயிரை கவர வந்த இயமனை வாதம் செய்த திருவுருவை மற்றொரு தூணில் காணலாம். தன் பக்தனின் மீது கை வைக்கும் அளவிற்கு துணிவை பெற்ற காலனை சூலத்தால் குத்தும் இறைவனின் திருக்கண்கள் கோபத்தால் கொப்பளிக்க நின்றிருக்கும். நமக்கு பார்க்க பயமாக இருக்கும்.
ஆயிரங்கால் மண்டபம்:
இங்கே பல நூறு சிற்பங்கள் இருக்கின்றன. அவற்றை பற்றி விவரிக்க தனி புத்தகமே போடவேண்டும். ஆயினும் உதாரணத்திற்கு ஒன்று. மண்டப நுழைவு பகுதியில் கையில் வீணையுடன் கலைவாணி நின்றிருக்கிறாள். அவள் முகத்தில் இசையில் லயித்து வாசிக்கும் பாவமும் தலையை ஆட்டி மயங்கும் அழகும் காணப்படும். திருமேனியில் கட்டியிருக்கும் புடவையை சிறப்பாக வரித்து காட்டியிருக்கிறார்கள். வீணையை சுமக்கும் திருக்கையின் முழங்கை பகுதியில் புடைத்து நிற்கும் நரம்புகள் வெகு அருமை.
இப்படி எத்தனையோ அதிசயங்களை கல்லிலே கவிதையாக பொழிந்து தள்ளியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அவற்றை கண்டு கழிப்பதை விட பாது காப்பது மிகவும் முக்கியம். ஆனால் நாம்தான் கோயில்களைக்கூட ISO 9001 முத்திரை பெரும் வணிக கூடாரங்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறோமே! நம் அறியாமையை புகழ உலகில் நம்மை விட சிறந்த மேதாவிகள் இருக்க முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக