ஒரு பெண்ணிற்கு திருமணமாகி விட்டால் அவள் கணவன் வீட்டிற்கு சென்று வாழ வேண்டும் என்பது பொதுவாக இந்தியாவில் நிலவும் மரபு. ஆணுக்கு பெண் சமம். இருவரும் இணைந்து நடத்தும் இல்லறத்தில், இன்ப துன்பங்களில் சம அளவில் பங்கெடுக்க வேண்டி வாழ்வின் ஆரம்ப காலத்தில் காலெடுத்து வைக்கும் பொழுது பொதுவான இடத்தில் குடும்பம் நடத்துவதுதானே நியாயமாக இருக்கும்? அதை விடுத்து கணவன் வீட்டிற்கு பெண் சென்று வாழ்வை தொடங்க வேண்டும் என்ன வகையில் சரி? அதுவும் தன் வீட்டின் அனைத்து பற்றுக்களையும் துறந்து கணவனே கதி என்று செல்ல சொல்லுகிறது இந்த சமூகம். அதையே ஆண்கள் பெண் வீட்டிற்கு சென்று வாழ பணிக்கவில்லை. (அப்படி ஒரு சமூகம் கேரள மாநிலத்தில் உள்ளது. அதற்கு மருமக்கத்தாயம் என்று பெயர். இது விதிவிலக்கு). புகுந்த வீடு என்ற ஒன்றை பெண்களுக்கென்றே உருவாக்கி வைத்திருக்கிறது இந்த சமுதாயம்.
கணவன் வீட்டிற்கு செல்லும் அந்த பெண்ணிற்கு கணவனும் அவன் வீட்டருமே உறவு. அவர்களே உலகம். இனி அந்த குடும்பத்தின் அனைத்து காரியங்களிலும் அவளே பிரதான அங்கம் வகிக்க வேண்டும். சொல்லப்போனால் அந்த குடும்பத்தலைவி என்ற பட்டத்தை சுவீகரிக்க தயாராக வேண்டும். தமது பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் இடையில் ஏற்படும் மனத்தாபங்களை (இப்படி ஏற்படாத குடும்பமே இருக்க முடியாது-பரமசிவன் குடும்பம் முதல் பாமரன் குடும்பம் வரை பிறந்த வீட்டிற்கும்-புகுந்த வீட்டிற்கும் இடையில் அகப்பட்டு பந்தாடப்படுவது பெண்கள்தான்) சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது அந்த பெண் தனது பிறந்த வீட்டை எதிர்த்து புகுந்த வீட்டிற்கு அணுசரணையாக நடந்துக்கொள்ளவும் வேண்டும். தனது கணவன் மட்டும் அவன் குடும்பத்தினருக்காக இத்தனைநாள் தனக்காக பல சந்தோஷங்களை விட்டுக்கொடுத்த அப்பா, அண்ணன் போன்ற உறுவுகளை உதற தயாராகவும் வேண்டும். இன்னும் சொல்லப்போனால் அவர்களை எதிர்த்து நீதிமன்ற படிகளேறி வழக்காடவும் தயாராக வேண்டும். இப்படி பல 'வேண்டும்'களை அவள் மேற்கொள்ள இந்த சமுதாயம் பணித்திருக்கிறது.
இது பெண் சுதந்திரத்திற்கு எதிரானதல்லவா?சமவுரிமை சமூக நீதிக்கெதிரானதல்லவா? நவநாகரீக உலகில் 'ஆணுக்கு பெண் சரிநிகர் சமானம்', 'நான் இன்றைய மங்கை' போன்ற எழுச்சிக்குரல்கள் ஒலிக்கும் வேளையில் இப்படி புகுந்த வீட்டு முறையை பின்பற்றுவது பிற்போக்குத்தனம் என்றுதான் நமக்கு தோன்றும். ஆனால் இதில் நம் முன்னோர்கள் கண்ணை மூடிக்கொண்டு, பித்துக்குளித்தனமாக எதையோ ஒன்றை திணித்து விட்டு போகவில்லை. தீர யோசித்து, அறிவியல், இயற்கை உண்மை, பகுத்தறிவு ஆகியவற்றிற்கு போதிய இடமளித்தே இத்தகைய சமூக கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.
ஆணும் பெண்ணும் சமம் என்று சட்டம் சொன்னாலும் ஆண்கள் எந்த நாளும் பெண்களுக்கு சமமாக இருந்ததில்லை. தனக்கு இணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை இயற்கை பெண்களுக்கே வழங்கியிருக்கிறது. (எப்படி ஆண்கள் அதை முடக்கினார்கள் என்பதுதான் வியப்பு) உணவு தேடுதல்/தயாரித்தல், பாதுகாப்பு, வேட்டையாடுதல் போன்ற பல குணங்களை ஆண்களை விட பெண்களிடமே இயற்கை அளித்திருக்கிறது. இப்படி பல குணங்களை பெற்ற பெண்கள் ஒரு இடத்திலிருந்து வேறோரிடத்திற்கு புலம் பெயரவும், புதிய இடம் மற்றும் சூழ்நிலைகளுக்கேற்ப தங்களை விரைவில் மாற்றி அமைத்துக் கொள்ளவும் ஏற்ற சிறப்பு பண்புகளை பெற்றிருக்கின்றனர். புதிய இடத்திற்கு செல்லும் ஆண்கள் பல காலங்கள் ஆனாலும் தங்கள் பிறந்த, சிறுவயதில் வளர்ந்த ஊரை பற்றிய பெருமையையே பேசிக்கொண்டிருப்பதை நாம் சரவ சாதாரணமாக பார்க்க முடியும். ஆனால் அப்படி பேசும் பெண்களை காண்பதரிது. பெண்கள் தங்கள் சிறுவயது இடங்களை, உறவு, நட்புகளை எளிதில் உதறிவிடும் தன்மை கொண்டவர்கள். புதிய சூழலை தமதாக்கி கொண்டு அங்கே தங்கள் மேலாண்மையை நிலை நாட்டும் வண்ணம் செயல் படக்கூடியவர்கள். அவர்களை அந்நியர்கள் என்று அந்த இடத்தில் தங்களை அவர்கள் கருத மாட்டார்கள், மற்றவர்கள் கருதும்படியும் நடக்க மாட்டார்கள்.
புதிய ஊருக்கு சென்ற ஆண்,பல்லாண்டுகள் கடந்த பின்பும் 'அயலூரான்' என்று பிறர் அடைமொழி இட்டு அடியாளம் காட்டும் வண்ணம்தான் நடந்து கொள்வான். ஆனால் பெண்கள் அவ்வாறில்லாமல், தங்கள் இயற்பெயரிலோ அல்லது தாம் சார்ந்த குடும்ப பெயரிலோதான் அழைக்கப்படுவார்கள். தங்களுள் ஒருவராகவே அந்த புகுந்த ஊராரும் அவளை ஏற்றுக்கொள்வார்கள்.
ஆண்கள் அப்படிப்பட்ட குணநலனை பெற்றிருக்கவில்லை. அவர்களுக்கு தங்கள் வீடு அல்லது ஊரை விட்டு வெளியே செல்லவே மனம் வராது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் தங்கள் ஊர் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருப்பார்கள். அப்படி செல்ல வேண்டிய கட்டாயம் வரும்போது கூட தங்கள் பிறந்த வீடு/ஊரை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசுவார்கள். அல்லது சென்று வருவார்கள். புதிய ஊரில் தங்களை எந்த காரியங்களிலும் இணைத்து கொள்ள மாட்டார்கள். சமீபத்தில் திருமணமான இளம் தம்பதியினரை பார்த்து குழந்தை பிறந்திருக்கிறதா என்று கேட்க விருபுபவர்கள் 'புழு-பூச்சி' ஏதாவது உண்டா என்று மறைமுகமாக கேட்பார்கள். இதற்கு திருமுருக. கிருபானந்த வாரியார் சுவாமிகள் விளக்கம் சொல்லும் பொழுது புழு என்பது ஆணையும், பூச்சி என்பது பெண்ணையும் குறிக்கும் என்று விளக்கம் கொடுப்பார். அதற்கு காரணம் புழு கூட்டிலேயே அடை பட்டு கிடக்கும். கூட்டை விட்டு வெளியே செல்லாது. ஆனால் இறக்கை முளைத்தவுடன் பூச்சி கூட்டை விட்டு வெளியேறிவிடும். அந்த கூட்டை திரும்பி பார்க்காது. அது போல ஆண்மகன் தன் பிறந்த வீட்டை விட்டு வெளியேற மாட்டான். ஆனால் பெண்கள் பூச்சியை போல அவற்றை உதறிவிட்டு புதிய இடங்களுக்கு குடியேறி விடுவார்கள்.
மேலும் பெண்கள் பயிருக்கு நாற்று போன்றவர்கள். பயிரை அப்படியே நாற்றங்காலில் விட்டு வளர்த்தால் போதிய பலனை தராது. சொல்லப்போனால் மாய்ந்து போகும். மாற்றாக பெரிய பத்திகள் அமைத்து வேறு இடங்களில் பறித்து நட்டால் செழித்து வளர்வதோடு மிகுந்த பலனை கொடுக்கும். ஒரு படி நெல்லிலிருந்து உற்பத்தியாகும் நாற்றுகள் ஒரு ஊருக்கே சோறிடும் அளவிற்கு பலனை தரும். இத்தகைய குணம் கொண்டவர்கள் பெண்கள். அவர்களின் சிறப்பை கருதியே நமது முன்னோர்கள் தீர்க்க தரிசனமாக அவர்கள் கணவன் வீட்டில் வாழ வேண்டும் என்று கட்டாய ஏற்பாட்டை செய்திருக்கிறார்கள். இத்தகைய அமைப்பு இன்று சிதறி வருவது நமது பண்பாட்டிற்கு மட்டுமல்ல வருங்கால சந்ததிகளுக்கும் பெரும் கேட்டை விளைவிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக