பொதுவாக உலகில் மற்றைய நாடுகளில் விபத்துக்கள் நிகழும்போதோ அல்லது பிறருக்கு இன்னல் ஏற்படும்போதோ அவர்களை கவனிப்பது அரசின் பொறுப்பு நமக்கு அதில் ஒன்றும் பங்கில்லை என்று சக குடிமக்கள் நடந்து கொள்வார்கள். அவ்விதம் இல்லாமல் அரசாங்கத்தை எதிர்பார்த்து எந்த செயலுக்கும் காத்திராமல் செயல்படும் ஒரு சமூகம் உலகில் உண்டென்றால் அது நம் பாரத சமுதாயம் மட்டுமே. அத்தகைய பண்பை நிலை நிறுத்தும் விதமாக இந்த கொடிய ரெயில் விபத்திலும் நம் சமூக மக்கள் செயல் பட்டிருக்கின்றார்கள்.பெரும் சப்தம் கேட்ட உடனே அருகிலுள்ள கிராமத்து மக்கள் விபத்து நிகழ்ந்த இடத்தில் கூடி விட்டனர். பொதுவாக கிராமங்கள் ஏழு-எட்டு மணிக்குள் உறங்கிவிடுபவை. அந்த ஒன்பது மணிக்கு பின்னரும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வெளிச்சமில்லாத, புதர்கள் மண்டிக்கிடந்த பகுதிக்கருகே அவர்கள் ரயிலின் சிதைவுகளில் சிக்கி கிடந்த மனிதர்களை மீட்டிருக்கின்றார்கள். ஆண்கள்-பெண்கள் என்று ஒன்று திரண்டு, ஆட்டோ, டிராக்டர்கள் என்று தங்களிடமிருந்த அத்தனை போக்கு வரத்து வண்டிகளையும் பயன் படுத்தி அரக்கோணம் அரசு மருத்துவ மனை வரை கொண்டு சேர்த்திருக்கின்றார்கள். அதன் பின்னர் அருகிலிருந்த L&T சிமிட்டி நிறுவனத்திலிருந்தும், INS ராஜாளி கடற்படை விமான தளத்திலிருந்தும் உதவிக்காக ஆட்களும், மருத்துவர்களும், 108 ஆம்புலன்சு சேவையும் வந்து சேர்ந்திருக்கின்றன. பெரும்பாலானவர்கள் காப்பற்றப்பட்ட பிறகே ரெயில்வே மற்றும் அரசு அதிகாரிகள் விபத்து பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள்.
இத்தகைய செய்திகளையெல்லாம் படிக்கும்போது நம் நினைவிற்கு வருவது சாதி, மதம், இனம், மொழி என்று பல தடைகளை தாண்டியும் நம் மண்ணில் பொதுவான ஒரு பண்பு நிலவுகிறது. அது இம்மண்ணுக்கே உரித்தான பண்பு. இவர்களுக்கு யார் தலைமை தாங்குகிறார்கள்? இவர்களை ஒன்று சேர்ப்பது யார்? இவர்களிடம் கட்டளை பிறப்பித்து வேலை வாங்குவது யார்? இவர்கள் பிரதி பலனாக எதை எதிர்பார்க்கிறார்கள்? (இதெல்லாம் இன்றைய கார்பரேட் வணிக உலகின் (Management Skills) தாரக மந்திரங்கள்) இந்த எதுவுமே இல்லாமல் விபத்து நிகழ்ந்த பகுதியில் அடிபட்ட மக்களை மீட்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் மக்கள் மத்தியில் நாம் பிறந்ததற்கு பெருமை கொள்ள வேண்டும். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சில திருட்டுகள் நிகழ்ந்திருக்கலாம். அது எங்கேயும் நடை பெற கூடியதுதான். சுமார் ஆயிரம் பேர் கூடியிருக்கும் கூட்டத்தில் ஓரிருவர் களவையே கொள்கையாக கொண்டிருப்பர். ஆனால் அதைமட்டும் பெரிது படுத்தி நம் ஒட்டு மொத்த சமுதாயத்தையே கொச்சை படுத்த ஒரு கூட்டம் தொடர்ந்து செயல் பட்டு கொண்டிருக்கிறது. அவர்கள் கண்ணுக்கு பிரதி பலனில்லாமல் செயல்படும் எண்ணற்ற பாரத மக்களின் பண்பாடு புலப்படுவதில்லை.
இத்தகைய சீரும் சிறப்பும் மிக்க நம் பாரத பண்பாடு இன்று மெல்ல தன்னுடைய பெருமையை இழந்து வருகின்றதோ என்று கவலை கொள்ளும் வேலையில் அவாறேல்லாம் இல்லை, இன்னும் எத்தனை அந்நிய படையெடுப்புகள் பண்பாட்டு தாக்குதல்கள் நடை பெற்றாலும் எங்கள் ரத்தத்தோடு கலந்துவிட்ட உணர்வை மட்டும் அழிக்க முடியாது என்று அவ்வப்போது உலகிற்கு தெரிவிக்கும் இத்தகைய துயர சம்பவங்கள், கொடியவை என்றாலும் மறக்க முடியாதவை. இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் வந்திருக்கும் கட்டுரையை படித்து பாருங்கள் - The New Indian Express - Chennai Edition
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக