வெள்ளி, 16 செப்டம்பர், 2011

இடது புறமாக செல்க!

இடது புறமாக செல்க! அதாவது 'Keep Left' என்ற சைகை பலகைகளை சாலைகளில் நாம் பார்க்க முடியும். நம் நாட்டில் மட்டும் நாம் இடது புறமாக செல்கிறோம். பெரும்பாலான அந்நிய நாடுகளில் குறிப்பாக மேலை நாடுகளில் அவர்கள் வலப்புறமாகத்தான் செல்கிறார்கள். இது ஏன் இப்படி என்பதை நாம் என்றாவது சிந்தித்திருக்கிறோமா? இந்த பழக்கங்கள் எப்படி ஏற்பட்டன. ஒரு சுவாரசியமான தகவலை இங்கே பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி. 

அந்நிய நாடுகளில் கார்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பு மக்கள் குதிரை வண்டிகளில் பயணித்தார்கள். குதிரைகளை பூட்டிவிட்டு வண்டி ஓட்டுபவர் வண்டியின் இடது புறத்திலிருந்து எம்பி வண்டியில் அமருவார். அவர் இறங்க ஏற வசதியாக வண்டியின் இடது புறத்தில் அமர்ந்திருப்பார். கார்கள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் இதே கருத்தை மனதில் வைத்தே ஓட்டுனர் இருக்கை காரின் இடது பக்கத்தில் அமைக்கப்பட்டது. இடது புறமாக அமர்ந்து காரை ஓட்டும் ஓட்டுனர் முன்புறத்தில் சென்று கொண்டிருக்கும் வண்டியை முந்த வேண்டுமென்றால் அந்த வண்டியின் இடது புறமாகத்தான் செல்ல வேண்டியிருக்கும். ஏனென்றால் அப்போதுதான் முந்தும் முன்பு, எதிரில் வண்டி ஏதேனும் வருகிறதா என்று பார்க்க ஓட்டுனருக்கு எளிதாக இருக்கும். ஆகவேதான் அவர்கள் வலது புறமாக செல்லும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் மாறாக இங்கே நம் நாட்டில் வண்டியின் ஓட்டுனரின் இருக்கை இடது பக்கத்திற்கு பதிலாக வலது புறம் அமைந்திருக்கிறது. அதற்கு காரணம் நம் நாட்டில் சாலைகளில் இடது புறமாகத்தான் செல்ல வேண்டும் என்பதால். சரி! நம் நாட்டில் மட்டும் இடது புறமாக செல்வது ஏன்? அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. பொதுவாக நம் நாடு ஆன்மீக, சமய பற்றுள்ள நாடு. இங்கே எதிரில் வருவோரை வலம் வருவது என்பது ரத்தத்தில் ஊறி போன ஒன்று. அவர்களை இடம் வருவது என்பது அமங்கல காரியம் என்று நம் மக்கள் அவ்வாறு செய்வதில்லை. (வலம் வருவது-பிரதட்சிணம் செய்வது-அதாவது எதிரில் வருவோர் நமது வலப்பக்கம் இருக்கும்படி நாம் செல்வது) கோயில், குளங்கள், பசுமாடு, பெரியவர்கள், படித்த மற்றும் அறிவில் சான்றோர், சுமங்கலி பெண்கள், ஆசிரியர், பெற்றோர், தெய்வ திருவுருவங்கள், நன்மைதரும் மரங்கள், என்று எண்ணற்றவை புனிதமாக கருதி அவற்றை வலம் வருவது என்பது நம் நாட்டு மக்கள் பல்லாண்டு காலமாக கடை பிடித்து வரும் பழக்கம். (இப்படித்தான் அயோத்தியின் மன்னன் ஸ்ரீராமனின் பாட்டனார் திலீபன் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது காமதேனு என்ற பசுவை வலம் வராமல் இடமாக சென்று அந்த பசுவின் சாபத்திற்கு ஆளானான்) அப்படி எதிரில் வருவோர் புனிதர்களா, அல்லவர்களா என்ற சர்ச்சைக்குள் இறங்காமல் யாரையும் வலம் வருவது என்ற பொதுவான செயலை நம் முன்னோர் ஆண்டாண்டுகாலமாக கடை பிடித்து வந்தார்கள். இன்று கூட அது சாலையோ அல்லது வேறு இடமோ நாம் எதிரில் வருவோருக்கு ஒதுங்கி நின்று வழி விட வேண்டி வந்தால் நமது இடப்புறமாக ஒதுங்குவோம், அவர்களும் யாரும் கூறாமலேயே அவர்களுடைய இடப்புறமாக ஒதுங்குவார்கள். இப்படி நம் மக்களிடையே இயற்கையாகவே கலந்து விட்ட இந்த பழக்கத்தை மாற்ற வேண்டாம் என்று எண்ணியே நாம் சாலைகளில் இடப்புறமாக செல்லும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறோம். வெள்ளையர்கள் தங்கள் நாடுகளில் வலப்புறமாக சென்றாலும், இருநூறு ஆண்டுகள் நம்மை ஆண்டாலும் இங்கே அந்த வலப்புற பழக்கத்தை திணிக்க முற்படவில்லை. அவர்களுக்கு அத்தகைய எண்ணத்தை உருவாக்காமல் நம்முடைய பழக்கங்கள் அமைந்திருந்ததற்கு இந்த இடதுபுற சாலை விதி ஒரு உதாரணம்! சாலைகளில் நீங்கள் சரிவர வண்டியை ஓட்டி விபத்தில்லா சவாரிக்கு நம் சென்னை போக்குவரத்து காவல் துறை சில விதிகளை நினைவு படுத்தி இங்கே கொடுத்திருக்கிறார்கள் - Chennai Traffic Rules

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக