வியாழன், 1 செப்டம்பர், 2011

கூட்டத்திலே எதுக்கு கோயிலுக்கு போகணும்?

தமிழகத்தைப் பொறுத்தவரை கோயில்கள் வெறும் பிரார்த்தனைக் கூடங்களாக மட்டும் இருக்கவில்லை. கலை, கலாசார, ஆன்மீக, பண்பாட்டு, பொருளாதார, அரசியல் மற்றும் சமுதாய மையங்களாக திகழ்ந்தன. எந்த ஒரு ஊரிலும் கோயிலை மையப்படுத்தியே பல செயல்பாடுகள் நடைபெற்றன. அத்தகைய கோயில்களுக்கு இன்று மக்கள் வெறும் பிரார்த்தனைக்காக மட்டும் செல்கிறார்கள். அதுவும் பயத்தினால் மட்டுமே நிகழ்கிறதேயன்றி பக்திவயப்பட்டதாக இல்லை. தங்கள் மனத்திலுள்ள குறைகளை மனமாற தொகுத்தளிக்கும் ஒரு மையமாக மட்டுமே பயன்படுத்துவதால் கூட்டத்தை தவிர்கிறார்கள். "நிம்மதியா சாமிய பார்க்க முடியல்ல, அப்படிதள்ளுறாங்க" என்று பலர் அங்கலாய்த்துக் கொள்வதை நாம் இயல்பாக பார்க்கலாம். இந்த கூட்டத்திலே போய் முண்டியடித்து, அடிபட்டு, உதைபட்டு, வரிசையிலே மணிகணக்கா நின்னு பார்க்கறதா விட, சாதாரண நாட்களில் நிதானமா வந்து நம்ம இஷ்டமா பகவான பர்த்துக்கல்லாம். இதுலே போய் அவஸ்தைப் பட வேண்டாம்னுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் கோயில்களுக்கோ, புண்ணிய தலங்களுக்கோ, புண்ணிய தீர்த்தங்களுக்கோ நாம் கூட்டத்தில்தான் செல்லவேண்டும். தனியாக சென்று இறைவனை பார்க்கவேண்டும் என்று நினைப்பவர்கள் தங்கள் வீட்டு பூஜையறையிலே இறைவனை காணலாம் அதற்காக கோயில்களுக்குத்தான் செல்லவேண்டும் என்பதில்லை. ஆகவே கோயில்களுக்கு செல்வது என்பதே கூட்டத்தில் செல்வது என்பதுதான் பொருள்.

சரி! கூட்டத்தில் ஏன் செல்ல வேண்டும். கூட்டத்தில் செல்லும்போது சந்திக்கும் பல இன்னல்களும் சிக்கல்களும் தனியாக செல்லும்போது ஏற்படுவதில்லையே. தனியாக செல்லும்போதுதானே சுகமும் நிம்மதியும் இருக்கிறது என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் கூட்டத்தில் கோயில்களுக்கு செல்லும் பொழுது ஏற்படும் பயன்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம். இதில் தங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்குமேயானால் அவற்றை பதிவு செய்யுங்கள்.

கோயில்களுக்கோ அல்லது தனியிடங்களுக்கோ சென்று இறைவனை வணங்குவது ஏன்? நம் மனநிலை உயர வேண்டும் என்பதற்குத்தானே? சாதாரண சுயநல நோக்கோடு வாழ்க்கை நடத்திவரும் நாம் மேம்பட்டு இந்த உலகம் முழுமையும் என்னுடையது என்ற பரந்த மனப்பான்மை பெற்று கல்லில் மட்டும் கண்டு வந்திருக்கும் இறைவனை நம்முடைய இதயத்திலும் காண வேண்டுமெனில் கூட்டத்தில்தான் செல்ல வேண்டும். இறைவன் எங்கும் நிறைந்தவன். தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று வெறும் வார்த்தை அலங்காரங்களுக்கு மட்டும் பேசும் நாம் நடைமுறையில் அத்தகைய தன்மையை எட்டுவதில்லை. காரணம், நாம் இறைவனை நெருங்குவதுமில்லை, அவன் தன்மையை உணர முற்படுவதுமில்லை. அத்தகைய ஒரு நிலையை கூட்டத்தில் செல்லுவதால் நாம் அறிய முடியும். பல மணிநேரம் வரிசையில் காத்திருந்து கால் கடுக்க நின்று திருமலையில் வீற்றிருக்கும் இறைவனை சில நொடிகள் மாத்திரமே காண முடிகிறது. அப்பொழுது ஏற்படும் பரவச நிலையை ஒருசிலர் மாத்திரமே உணர்ந்திருப்பார். ஏனையோர் தங்கள் மனத்தில் உள்ள வேண்டல்களை அங்கே ஒரு நீண்ட பட்டியலுடன் வாசிப்பார்கள், சிலர் 'ஜருகு, ஜருகு' என்று தள்ளுவோருடனோ அல்லது கூட மோதிக்கொண்டு வருவோருடனோ சண்டையிட்டு, தகராறு செய்து, சத்தம் போட்டுக்கொண்டு வெளியே வந்து விடுவார்கள். இவர்கள் இறைநிலையை எப்படி உணர முடியும். "மந்த புத்தி உடையோருக்கு கடவுள் கல்லில்" என்பது சாணக்கியன் வாக்கு.கூடவே நடமாடும் மனிதர்களில் இறைவனை காண முடியாத இவர்கள் கல்லிலும், மரத்திலுமா இறைவனை காணப்போகிறார்கள்? அங்கே தங்கம், வெள்ளி, வைரம், பட்டு என்று திருமேனி அலங்காரத்தை கண்டுதான் வியந்து போவார்களே தவிர இறைவனை எக்காலமும் உணர மாட்டார்கள். அவர்கள் மந்தபுத்திக்காரர்களைவிடவும் பின்தங்கி விடுகிறார்கள். அத்தகைய மனிதர்களும் இறைவனை உணர வேண்டும் என்பதற்காகவும், சமுதாயப்பணிகள் ஒன்றாக இணைந்து செய்யப்பட வேண்டும் என்பதற்காகவும் நம் முன்னோர்கள் தேர், திருவிழாக்கள் என்று வகைப்படுத்தி மக்களை கூட்டமாக அவற்றிற்கு செல்லும்படி பணித்தார்கள்.

கூட்டமாக திருவண்ணாமலை கிரிவலம் செல்லும்போழுதோ, திருப்பதி மலைமீது ஏறும்போழுதோ நம்மோடு வரும் எண்ணற்ற பக்தர்களை சந்திக்கலாம். அவர்கள் சமுதாயத்தில் பல நிலைகளிலிருந்து வருகிறார்கள். பல சிந்தனை நோக்கு கொண்டவர்கள் வருகிறார்கள். இவர்களில் எல்லாம் அந்த இறைவனே உறைந்திருக்கிறான் என்பதை கண் கூடாக கூட்டங்களில் மட்டுமே காண முடியும். அடக்கமாக இறைவன் நாமங்களை உச்சரித்தபடி செல்லும் சிறு குழந்தைகள், கால் ஊனமாயினும், கைகள் முடமாயினும் நடந்து சென்று காணவேண்டும் என்று வைராக்கியத்துடன் வரும் மனிதர்கள், மிகுந்த தள்ளாமை இருந்தும், கண்கள், காது, கை, கால்கள், செயலிழந்துக் கொண்டிருக்கும் வயதிலும், இறைவன் மீதுகொண்ட பற்றின் காரணமாக நடந்தோ, தவழ்ந்தோ, ஊர்ந்தோ வரும் தத்தா-பாட்டிகள் கனத்த உருவத்துடன் வியர்க்க விறுவிறுக்க படியேறி வரும் மனிதர்கள், தங்கள் தன்மானத்தையும் அடகு வைத்து பொருளாதாரத்தின் அடித்தட்டில் நின்று கையேந்தி நிற்கும் மனிதர்கள் என்று எண்ணற்ற பேரை நாம் இந்த கூட்டங்களில் தரிசிக்க முடியும். இவர்கள் இதயங்களில் இறைவன் மட்டுமே உறைகிறான். இத்தகைய மனிதர்களின் பாதம் தம் மீது படவேண்டும் என்று எதிர்பார்த்தே குலசேகராழ்வார் திருமலை படியாகவோ, புல்லாகவோ, செடி-கொடியாகவோ அல்லது வேறு எதுவாகவோ இருக்க விழைகிறார். இம்மனிதர்களை தரிசிப்பது பாக்கியம் என்றால் இவர்களுக்கு சேவை செய்வது பெரும்பாக்கியம். நம்மால் இயன்றது படியிலோ, வழியிலோ குப்பை-கூளங்கள்,எச்சில்-துப்பு போன்றவற்றை போடாமலிருப்பது, அங்கே இருக்கும் கல், முள் போன்றவற்றை அப்புறப்படுத்துவது, அவர்கள் மனமோ, உடலோ நோகாவண்ணம் செல்லுவது என்று நாம் உதவிகள் செய்யலாம். அம்மனிதர்களில் பரந்தாமனைக் காணலாம். 

பெரும்கூட்டத்தில் வருவோரில் வாழ்வில் பெரும் சவால்களை திறம்பட சந்தித்தவர்கள், நேர்மை தருமம் போன்ற சீரிய சிந்தனை உடையவர்கள், சதா சர்வ காலமும் இறைவனை அருச்சித்து, பக்தி செலுத்தியவர்கள், மற்றவர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள் என்று பலதரப்பட்ட மனிதர்கள் வருவார்கள். அவர்களிடம் இருந்து நேர் அலை (Positive Waves) வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். அவற்றில் நாம் நனைவதால் நம் சிந்தனையும் சீர்மைப்படும். நாமும் என்ன ஓட்டத்திலும், சிந்தனை செயல்பாட்டிலும், பக்தி-ஈடுபாட்டிலும் மேன்மையுற முடியும். அது மட்டுமின்றி இறைவனை மிக அருகில் இருந்து உணரக்கூடிய வாய்ப்பும் அந்த கூட்டங்களில் நமக்கு கிடைக்கும்.

கூட்டங்களில் வரும் மனிதரோடு மனிதராக இறைவன் வந்து நம்மை சோதிப்பான். தங்கத்தை புடம்போட்டு உரசி சோதனை செய்வது போல நம்மை பரிசோதிப்பான். கூட்டத்தில் வருபவர் யாரோ வேண்டுமென்றே அல்லது அறியாமலோ நம்மை இடிப்பார், நெருக்குவார், திட்டுவார், மிதிப்பார் இன்ன பிற விரும்பாத செயல்களை செய்வார். அவர்களை நாம் நொந்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில் இறைவனே அத்தகைய உருவில் வந்திருக்கலாம். நமக்கெதற்கு வம்பு என்று அவரை இறைவனாக எண்ணி பொருத்துக்கொள்வதே நலம். அவரோடு சண்டை போடவோ, திட்டி அடிப்பதோ செய்தால் இறைவன் நம்மிடமிருந்து விலகிச்செல்லவும் வாய்ப்பு உள்ளது. ஷீரடி சாயிபாபா வும் தம் பக்தர் ஒருவரை இவ்வாறே சோதித்து காட்சி தந்தருளினார். குருவாயூரப்பன் திருவிளையாடல்களிலும் இவ்வாறான செய்திகள் இடம் பெற்றுள்ளன. கல்லில் மட்டுமே நாம் கண்டுக்கொண்டிருக்கும் இறைவனை நம் உள்ளங்களிலும் காண விழைவதற்கு முதல் படியே அடுத்த மனிதரின் உள்ளங்களிலும், உருவங்களிலும் இறைவனை காண்பதுதான். அவரை விட நான் முந்தி என்று போட்டிப்போட்டு ஓடும்பொழுது இறைவன் நம்மிடமிருந்து விலகி ஓடுகிறான்.

ஆகவே கூட்ட நாட்களில் கோயில் குளங்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு நம்முடைய சந்ததியினருக்கு, மக்கள் பண்பையும், சகோதரத்துவத்தையும் ஊட்டும் வழிகாட்டியினராக நாம் திகழ்ந்தால் இறை தரிசனம் எளிதாக கைகூடும் என்பது திண்ணம். புரி ஜகன்னாத யாத்திரையில் கூடும் கூட்டத்தைக்கான இந்த வீடியோவை பாருங்கள்: Jagannath Yatra - 1Jagannath Yatra - 2Jagannath Yatra - 3Jagannath Yatra - 4Jagannath Yatra - 5 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக