இறை நம்பிக்கை என்பது ஏதோ கோவிலுக்கோ, மசூதிக்கோ அல்லது தேவாலயத்துக்கோ சென்று நமது நீண்ட விருப்பங்களை பிரார்த்தனை என்ற பெயரில் பட்டியலிடுவது என்றாகிவிட்டது. சொல்லப்போனால் இறை மறுப்பு கொள்கையாளர்களுக்கும் இறை வழிபாடு செய்பவர்களுக்கும் பெருத்த வேறுபாடு இல்லை. அவர்கள் சாலையில் சிலையாக நிற்கும் தங்கள் அபிமானத்திற்குரிய தலைவனுக்கு மாலையிடுகிறார்கள் என்றால் இவர்கள் ஆலயத்திற்குள் சிலையாக இவர்கள் விரும்பும் வண்ணம் இருக்கும் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்கள். மற்றபடி நம்பிக்கை பக்தி என்பதெல்லாம் சிறிதும் இருப்பதாக தோன்றவில்லை. தங்கள் கோரிக்கைகள் நிறைவேறினால் மொட்டை அடிப்பது, அபிஷேகம் செய்வது போன்றவற்றை செய்கிறார்கள் உடனே அடுத்த கோரிக்கையையும் அங்கே வைக்கிறார்கள். நிறைவேறாத நிலையில் அந்த தெய்வத்தையே பழிக்கிறார்கள். இதுவா பக்தி. இதுவா இறை நம்பிக்கை. உச்சகட்டமாக வர்த்தக வியாபாரம் செய்கிறார்கள். நான் இது தருகிறேன் நீ அதை தா என்கிறார்கள். நம்முள்பட, ஆண்ட சராசரத்தையே தனதுடமையாக கொண்டுள்ள இறைவன், நாம் கொடுக்கும் பூவுக்கும், தலை முடிக்குமா என்கி நிற்கப்போகிறான். அவன் ஆழ்ந்த நம்பிக்கையையும், தீவிர தூய பக்தியையுமே எதிர்பார்க்கிறான். அது இன்றைய நிலையில் தேடித்தான் பார்க்கவேண்டும்.
பிள்ளையே இல்லாத ஒருவருக்கு தமது தொண்ணூற்றேழாவது வயதில் ஆண் மகவு வைத்தால் அதை எப்படி கொண்டாடுவார்கள். அப்படித்தான் ஆபிரகாமுக்கும் இறைவன் ஆண்மகவை அளித்தான். ஆனால் அதையே தமக்கு பலியிட வேண்டுமென்றும் கட்டளையிட்டான். இறை வேண்டுகோளை அப்படியே ஏற்று சிறிதும் மனம் கோணாமல் அந்த மகனை பலியிட முற்பட்ட வேளையில் இறைவனே தடுத்தாட்கொண்டார். இது போன்றே சிறுதொண்ட நாயனாரும் தமது மகனை சமைத்து வந்திருக்கும் இறை அன்பருக்கு அமுது படைத்தார். இறைவன் அவரை வாழ்த்தி மகனையும் உயிர்ப்பித்து தந்தார். இது போன்றதொரு ஆழ்ந்த நம்பிக்கை வைப்பது அரிதாகும்.
இறை அருளாளர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இசுலாமிய மதத்தை போதித்து குரான் நெறியை பரப்பி வரும் காலத்தில் அவர்களை கொன்றுவிட சிலர் முயன்றனர். அவர்கள் தங்களது தற்குறி வியாபாரம் படுத்துவிடும் என்று பயந்தே அவ்வாறு செய்தார்கள். இவர்களிடமிருந்து மதீனா நகர் எல்லையை ஒட்டிய சிறு குன்றிளிருக்கும் ஒரு குகையில் நபிகளாரும் அவரது நெருங்கிய உறவினர் ஒருவரும் ஒளிந்திருந்தார்கள். அந்த குகை இரண்டு மலைகளுக்கு இடையில் இருந்தது. மலையடிவாரத்தில் ஆடு மேய்க்கும் சிறுவர்கள் இருந்தார்கள். இவர்கள் இருந்த குகை அமைதியாக இருந்தது. எதிராளிகள் சிறிது சிறிதாக மலையேறி குகையை நெருங்கி கொண்டிருந்தார்கள். அப்பொழுது நபிகளாரை நோக்கி அவரது உறவினர், "இங்கே நம் இருவரை தவிர யாருமில்லையே" என்று கூறினார். அதற்கு நபிகளார், "இங்கே நாம் மூவர் இருக்கிறோம். இறைவனும் நம்முடன்தான் உள்ளார்" என்று பகர்ந்தார். அவரது நம்பிக்கை எப்போதும் இறைவன் நம்முடனேயே இருக்கிறார், நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் கண்காணித்துக்கொண்டு இருக்கிறார். அவற்றிற்கு சாட்சியாக இருந்து நீதிநாளில் தீர்ப்பு வழங்குகிறார் என்கிற தீவிர பற்றான்மை கொண்டிருந்தார். இவரது தீர்க்கமான பற்று எதிரிகளை வேறு பாதையில் செல்ல விட்டது. அவர்கள் குகையை அடையவே இல்லை. இது இறையருளாளர்களுக்கே சாத்தியம், சாமானிய மனிதர்களாகிய நம்மால் முடியாது என்று எண்ணக்கூடாது. அப்படி இராமல், புனிதர்கள் காட்டிய வழி ஒழுக வேண்டும் என்றே அவர்கள் அவ்வாறு வாழ்ந்து காட்டினார்கள்.
தமக்கென்று எதையும் கேளாமல், இறைவனுக்கு தொண்டு செய்வதே, அவனுக்கு அருகில் இருப்பதே, அவன் தேவைகளை பூர்த்தி செய்வதே தமது பணி என்று செயல்பட்ட திண்ணனார் மூன்றே நாட்களில் இறையருள் பெற்று "கண்ணப்ப நாயனாராக" திருவவதாரம் எடுத்தார். இறைவன் பொற்கழல்களில் நீங்கா இடம் பெற்றார். இதுதான் இறை பக்தி, இதுதான் நம்பிக்கை என்று வரையறுக்க முடியாத வண்ணம், இறை நம்பிக்கை அதீதமானது. ஒரு தாயிடம் அன்பு செலுத்தும் குழந்தையின் செய்கையை விட நுட்பமானது. ஒரு குழந்தை அம்மாவை கட்டிபிடித்து தன் அன்பை வெளிப்படுத்தும். ஒன்று தலை மீது ஏறும், ஒன்று மூக்கை கடிக்கும், ஒன்று சடையை பிடித்து இழுக்கும், ஒன்று முந்தானையை பிடித்துக்கொண்டே இருக்கும், ஒன்று அம்மாவின் விரலை வாயில் வைத்தபடி இருக்கும், ஒன்று தன் மூக்கை அம்மாவின் புடவையில் துடைக்கும். ஆனால் இந்த அனைத்துமே அம்மாவிடம் தாங்கள் வைத்துள்ள அன்பைத்தான் இப்படி வெளிப்படுத்துகின்றனவே தவிர வேறொன்றுமில்லை.
கற்களால் அருச்சித்து இறைவனை வழிபட்டார் ஒருவர், தனது வாய் உமிழ் நீரால் இறைவனை குளிப்பாட்டினார் மற்றொருவர்.தமது காதலுக்கு இறைவனை தூது விடுத்தார் ஒருவர் என்றால் அவ்விதம் தூது சென்றவனை கொல்ல ஆயுதத்தோடு தயாராக இருந்தார் மற்றொருவர். இப்படி இறை நம்பிக்கையும் பக்தியும் நம்மால் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு மிகவும் மேம்பட்டவை. சாதாரண வியாபாரிகளாகிய நமக்கு அவற்றை புரிந்து கொள்ள ஏழாம் அறிவு மிகவும் அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக