வியாழன், 17 நவம்பர், 2011

கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டா!

நம் தமிழகத்தின் அடையாளம் கோயில்கள். நம் திராவிட கட்டிட கலைகளின் சான்று கோயில்கள். நம் கலை, இலக்கியம், ஆன்மிகம், விஞ்ஞானம், கருவூலம் ஆகியவற்றின் மொத்த ஊற்றாக திகழ்பவை கோயில்கள். நம் வரலாற்றை நாம் கோயில்களை மையமாக வைத்தே இதுவரை அறிந்து வந்திருக்கிறோம். இப்படி நம் வாழ்வுடன் இரண்டற கலந்துவிட்ட கோயில்களை நாம் பெருமை படுத்த தவறி வருகிறோம். பக்தியோடு கோயில்களுக்கு செல்வோர் ஏதோ தங்கள் சுயநலனை முன்னிறுத்தி தங்கள் வாழ்வு சிறக்க வேண்டும் என்று நீண்ட பட்டியளுடனே செல்கின்றனர். பக்தி அல்லாதோரை பற்றி கேட்கவே வேண்டாம். அவர்கள் இவற்றை இடித்து தள்ள வேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் எல்லைக்கே சென்று விட்டனர். ரஷிய மக்கள் நாத்திகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தாலும், கம்யுனிச கொள்கையுடையோர் ஆட்சியில் இருந்த சமயத்திலும் தங்கள் நாட்டில் உள்ள கோவில்களை இடிக்க வில்லை. மாறாக அவை தம் பாரம்பரியத்தை பறை சாற்றுவதாக பெருமையுடன் கூறினார். அத்தகைய பெருமையை கூட தமிழர்கள் மதிக்க தவறி விடுகிறார்கள். 

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று மூதுரை சொன்னவர் நம் குளத்தின் முதல் மகள் ஔவை பாட்டி. அந்த மூதாட்டியின் சொல்லை நாம் மறந்து போகும் நிலையில் உள்ளோம் என்பது வேதனைக்குரிய விஷயம். அந்த பாட்டி ஏதோ வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டு செல்லவில்லை. நம் நலனுக்காகவே இப்படி சொன்னால் என்பது நம்மில் பலருக்கு புரிவதில்லை. அப்படி என்னதான் சிறப்பு இந்த ஆலயங்களுக்கு? இவை பகுத்தறிவிற்கு விரோதமாக, மூடத்தனமாக கல்லை வணங்கும் மையங்களாகத்தானே இருக்கின்றன என்று சிலர் எண்ணலாம். ஆனால் அவ்வாறு நாம் நினைக்க ஆலயங்கள் வடிவமைக்கப்படவில்லை. ஆலயங்களின் சிரிப்பை நாம் விவரிக்க முடியாது. ஏதோ நம்மால் இயன்ற சிலவற்றை இங்கே கூறியிருக்கிறோம் அவ்வளவே. 

ஆலயங்கள் நம் நாட்டின் கலை பொக்கிஷமாக திகழ்பவை. ஆலய சிற்பங்களில் காணப்படாத தகவல்களே இல்லை எனலாம். ஒரு குடும்பம் அமைதியாக, சந்தோஷமாக வாழ என்னென்னே வழிமுறைகள், நீதி நெறிகள் வேண்டுமோ அவை அத்தனையும் ஆலயங்களில் சிற்ப வடிவில் போதிக்கப்பட்டுள்ளன. ஆலயங்கள் பெரும்பாலும் கற்களும் மரங்களும் மட்டுமே வைத்து கட்டப்பட்டவை. ஒன்றன் மீது ஒன்றாக, புவி ஈர்ப்பு சக்தியை மட்டும் ஆதாரமாக வைத்து அடுக்கபபட்ட வேலை பாடு கொண்ட கற்கள் காலத்தை கடந்து நிற்கின்றன. ஒரு கல்லையும் மற்றொரு கல்லையும் இணைக்க கம்பிகளோ வேறு உபகரணங்களோ கிடையாது. அவையும் கற்களை கொண்டே இணைக்கப்பட்டுள்ளன. பூச்சுகளும் கிடையாது. சிறிய துவாரம் கூட இல்லாமல் அடுக்கப்பட்ட கற்கள் நம் கட்டிட நிபுணத்துவத்திற்கு (Engineering Marvel) ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கலை நயம் மிக்க சிற்பங்கள், பலப்பல ஓசை எழுப்பும் தூண்கள், கற்களால் அமைக்கப்பட்ட சங்கிலிகள், வளையல்கள், சாளரங்கள், குடைவரை சிற்பங்கள், சிங்கத்தின் வாய் கற்கள் என்று பல வியப்பூட்டும் வடிவமைப்புகள் கற்களை கொண்டே நம் முன்னோர்கள் அமைத்துள்ளார்கள். அவற்றை புரிந்து கொள்ளவே நம் இந்த வாழ்க்கை முடிந்து விடும். மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய நம் ஆலயங்கள் பல இன்றும் நம் பழம் பெருமையை பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.

ஆலயங்களின் தனி சிறப்பே அதன் கோபுரங்கள் எனலாம். தொலைவிலிருந்து வருபவருக்கு ஆலய கோபுரங்கள் அங்கே ஒரு சிறந்த கிராமம் அமைந்திருப்பதை பறை சாற்றும். பசியோடு வருபவர், வேலை தேடி வருபவர் என்று சகலருக்கும் வரவேற்கும் முகமாக கோபுரங்கள் அமைந்துள்ளன. மிக உயர்ந்த, நீண்ட, நெடிய கோபுரத்தை ஏன் கட்டினார்கள்?  கோயில்கள் சிறிதாக இருந்தாலும் கோபுரங்கள் நெடிதுயர்ந்ததாகவே அமைத்தார்கள் நம் மூதாதையர்கள். இதற்கு காரணாம் இல்லாமல் இல்லை. மழை காலங்களில் இடி மின்னல்கள் ஏற்படுவது இயற்கை. அவை மிக உயர்ந்த கட்டிடங்கள், மரங்கள், மலைகள் என்று தாக்கி பூமியை அடைந்து அமைதி பெரும். அத்தகைய இடிகளின் இறங்குவாயாக கோபுரங்கள் திகழ்கின்றன. கோபுரங்களை தாக்கிய இடி தரையை அடைந்து அமைதியாயுற்று விடுவதால் அருகில் உள்ள வீடுகள் காக்கப்படுகின்றன. மக்களுக்கு ஏற்படும் பேராபத்து நீங்கி விடுகின்றது. ஆகவேதான் ஆலயங்களை சுற்றி மக்கள் தங்கள் வீடுகளை அமைத்து வாழ்கிறார்கள். தனியே தூரத்தில் வீடுகளை அமைப்பதை அவர்கள் தவிர்த்தார்கள்.

தமிழகத்தில் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி போன்ற மாவட்டங்களில் மலைப்பகுதிகள் குறைவு. ஏறத்தாழ இல்லை என்றே சொல்லும் அளவுக்கு சமதள நிலப்பரப்பு கொண்டவை இந்த பகுதிகள். இங்கே மழை காலங்களில் இடி, மின்னல் கொடுமையிலிருந்து மக்களை காக்கும் விதமாக எண்ணற்ற கோவில்களை கட்டி வைத்திருக்கிறார்கள். கோட்டைக்கொப்பான கோவில்களையும், வானுயர்ந்த கோபுரங்களையும் சர்வ சாதாரணமாக காணலாம். இவற்றிற்கு நேர் மாறாக மலைப்பிரதேசங்களை அதிகமாக கொண்ட கோவை, நீலகிரி, தேனீ, சேலம்  போன்ற பகுதிகளில் மிக மிக குறைவான கோவில்களையே காணலாம். இங்கே இடி, மின்னல் கொடுமைகள் மக்களை தாக்காதவண்ணம் அந்த மலை பகுதிகளும் அங்கு வான் நோக்கி நிலைத்து நிற்கும் மரங்களுமே இடிதாங்கி வேலையை செய்கின்றன.

கோவில்கள் இயற்கை அரணாக திகழ்பவை. அந்தந்த பகுதியின் பெருநிதியாக, கலை கூடமாக, பசிப்பிணி போக்கும் மையமாக கோவில்கள் திகழ்ந்தன. இத்தகைய கோவில்களை மக்கள் சார்ந்திருக்கும் பொழுது அவர்கள் வாழ்வில் வறுமையும் பேராபத்துக்களும் தாக்காது என்ற உயரிய நோக்கத்திலேயே 'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கலாகாது' என்று தீர்க்கமாக தீர்மானித் திருக்கிறார்கள், நம் அறிவுசார் முன்னோர்கள். நாம் அவர்கள் வழித்தோன்றல்கள் என்பதில் எத்துனை பெருமைக்குரியது. தமிழகத்தின் தலைசிறந்த சில திருக்கோவில்கள் சிலவற்றை கண்டு பயனடையுங்கள்.  

திங்கள், 7 நவம்பர், 2011

உண்ணா(நோன்பு)விரதம்!

உலகில் அனைத்து மதங்களும் உண்ணாநோன்பிருப்பதை வலியுறுத்துகின்றன. இயற்கையாக நாம் பசி எடுத்தால் சாப்பிடும் வகையில்தான் நம் உடம்பு அமைக்க பட்டிருக்கிறது. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுமே இவ்வாறுதான் செய்கின்றன. ஆனால் விநோதமாக அவ்விதம் சாப்பிடாமல் முழுக்கு போடுமாறு இவை என் போதிக்க வேண்டும். நம்மை கொடுமை படுத்துவதில் அவை மகிழ்ச்சி கொள்கின்றனவா? இல்லை. இந்த ஏற்பாட்டிற்கு பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. 

இயற்கை காரணம்:

உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்திலிருந்தும் மனிதன் மிகவும் வேறுபடுகிறான். அதுவும் நாகரீகம் அடைந்து விட்ட நிலையில் தான் ஒரு விலங்கினமே அல்ல என்கிற நிலையை நோக்கி செல்லுகிறான். பிற ஜீவன்கள் பசி எடுத்தால் மட்டுமே உண்ணும். ஆனால் மனிதன் பசி எடுக்கா விட்டாலும் ருசிக்காகவேனும் உண்ணுபவன். பிற ஜீவன்கள் எதையாவது உள்ளே போட்டு கொண்டிருக்காது. அவை ஓய்வு எடுக்கும் நேரத்தில் கட்டாயம் ஓய்வு எடுக்கும். மனிதனோ ஓய்வு எடுக்கும் நிலையிலும் எதையாவது வாயில் போட்டுக்கொள்ளும் நிலையை எட்டி விட்டான். இப்போதெல்லாம் தின்பதற்கு கூட நேரம்-கடத்துதல் (Time Pass) என்றே கூறுகிறார்கள். அவ்வளவு உணவை நாம் உள்ளே திணிக்கிறோம். கோணிப்பையில் கண்டதை போட்டு கட்டுவது போல நாம் எண்ணற்ற உணவு வகைகளை உள்ளே போடுகிறோம். வாயை திறந்தால் காக்கை வந்து பருக்கைகளை கொத்தி செல்லும் அளவிற்கு நாம் திணிக்கிறோம். முன்னே உண்ட உணவு ஜீரணம் ஆகிவிட்ட பின் தான் உன்ன வேண்டும் என்று வள்ளுவர் சொன்னது வேறு யாருக்கோ என்று அசட்டை செய்து தின்று கொண்டே இருக்கிறோம்.  உழைப்பிற்கு தக்க உணவு உட்கொள்ளுவது அவசியம். நாமோ உண்ணும் உணவிற்கு தக்க உழைப்பை செய்யாமல் நம் உடலை கெடுத்து விடுகிறோம். தொங்கிய தசைகள், பெருத்த வயிறு, என்று நம் உடலை விகார மாக்கி கொள்கிறோம். இந்த இழிநிலை யிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்வது அவசியம்.

நாம் ஏராளமாக உண்பதால் நம்முடைய உடல் உறுப்புக்கள் சோர்வடைகின்றன. சுமார் ஐம்பது ஆண்டுகள் வேலை செய்யக்கூடிய உறுப்புகள் நாற்பது ஆண்டுகளிலேயே தம்முடைய செயல் திறனை இழக்கின்றன. இத்தகைய நிலை ஏற்படும் பொழுது நாம் பரிதாபகர நிலையை அடைகிறோம். பசியின்மை, மயக்கம், உடல் சோர்வு, தள்ளாமை, எதிலும் நாட்டமில்லா தன்மை போன்றவை ஏற்படுகின்றன. இந்த நிலையினை கைக்குள் கொண்டுவர நமக்கு உண்ணாநோன்பு உதவுகிறது. மேலும் உணவுடன் ஒவ்வொரு நாளும் நாம் குறிப்பிட்ட அளவு விஷத்தன்மையுள்ள பொருட்களையும் உட்கொள்கிறோம். அவை நம்முடைய உடலின் சீரான செயல் பாட்டை தடுக்கின்றன. அவை வெளியேற உடல் முழு தகுதி பெற அவ்வப்போது உண்ணாநோன்பு இருப்பது அவசியம். விலங்குகளும் குறிப்பாக, நாய், மாடு போன்றவை தங்கள் உடல் நிலை பாதிக்கப்படும்போது உணவு உண்ணாமல் இருப்பதை காணலாம். நாமும் வாரத்திலோ, மாதத்திலோ ஒரு நாள் உண்ணாமல் இருப்பதால் நம் உடலில் தேங்கியுள்ள விஷப்பொருட்களை வெளியேற்றி நல்ல நிலையை அடைய முடியும்.

பொருளாதார காரணம்:

நம் நாட்டில் சுமார் 35 விழுக்காடு மக்கள் ஒரு வேலை உணவில் தங்கள் வாழ்நாளை கழிக்கிறார்கள். அவர்களிலும் பெரும்பாலானோர் பட்டினியாகவே இரவில் தூங்க செல்கிறார்கள். சுமார் எழுபது சதவீத மக்கள் நாள் ஒன்றிற்கு இருபது ரூபாய் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. ஒரு பக்கம் மக்கள் பட்டினியில் வாடும் பொழுது மறுபக்கம் நாம் ஊதாரித்தனமாக உண்டுண்டு கழிக்கிறோம். பசியோடு சிலர் மயக்கத்தில் இருக்கும் நிலையில் நாம் பண மயக்கத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறோம். இத்தகைய மக்களுக்கு நம்மால் உணவிட முடியும். நேரிடையாக அவர்களுக்கு உணவிடுவது ஒருவகை. அவர்களுக்கு உதவும் விதமாக மறைமுக செயல் பாடுதான் உண்ணாநோன்பு. நன்கு வசதியுள்ள நாற்பது சதா மக்கள் ஒரு வேலை உணவையோ அல்லது ஒரு நாள் உணவையோ தியாகம் செய்வது மறுபக்கம் ஒருவேளை உணவு கூட இல்லாத மக்களுக்கு அவை சென்றடைய வழிவகை செய்யும். முன்னாள் பிரதமர் திரு. லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் திங்கட்கிழமை தோறும் உண்ணாநோன்பு இருக்கும்படி நாட்டு மக்களை கேட்டுக்கொண்டார். அந்த உணவு கட்டுப்பாடு நாட்டின் உணவு தட்டுப்பாட்டை போக்கும் என்று அவர் எண்ணினார். 

சமுதாய காரணம்:

பசியோடு இருப்பவர்களின் கஷ்டம் அவர்களையொத்த மனிதர்களை தவிர வேறு யாருக்கும் தெரியாது. தினமும் காலை எட்டு மணிக்கு உணவை உண்ணும் நாம் ஒரு நாள் ஒரு பத்து நிமிடம் கடந்தால் அந்த கஷ்டத்தை பொறுத்து கொள்ள முடியாமல் பெரும் கோபம் கொள்கிறோம். கூச்சல் இடுகிறோம். ஆனால் எந்த பொழுது நமக்கு என்ன உணவு கிடைக்குமோ அல்லது இன்றும் வெறும் ஈரத்துணியை சுற்றிக்கொண்டு படுக்க வேண்டுமோ என்று கேள்விக்குறியாய் வாழும் கோடானுகோடி மக்களின் கஷ்டத்தை நாமும் அனுபவிக்க வேண்டும். அவர்களும் நம்முடன் பிறந்தோர் என்ற எண்ணம் அப்படியொரு பசிக்கொடுமையை சந்திக்கும்பொழுதுதான் உணர முடியும். நம் வீட்டு விசேஷத்தில் எல்லாரும் உண்டு கழித்தபின்னர் தான் மிகுந்ததை இல்லாதோருக்கு இடுவோம். வீட்டில் உண்ட அனைவரும் 'இருப்போர்'. அவர்கள் ஏதோ சடங்கிற்காக உண்டார்கள். சிலர் ருசி பார்த்து அதன் குறைகளை விமரிசித்தார்கள். சிலர் தங்களுக்கு உடலில் உள்ள ஏராள நோய்களை பட்டியலிட்டு அரைகுறையாக கொறித்து வைத்தார்கள். ஆனால் வெளியில் மிகுந்ததை எதிர்பார்த்து கிடப்பவர்களின் முகங்கள் நாம் உணவை தரும்பொழுது எத்தனை பிரகாசம் அடைகின்றன. உள்ளிருப்பவர்களை விட இவர்கள் வயிறு அல்லவா நம்மை வாழ்த்துகின்றன. நம் உணவில் என்ன குறை இருந்தாலும் அவர்கள் நம்மை வைவதில்லையே. மறுநாளும் மிகுந்த எதிர் பார்ப்புடன் வந்து கை நீட்டுகிரார்களே. அவர்களுக்கு இன்று உணவு நிச்சயம் என்று ஒரு நாளும் இல்லையே. அந்த மக்களின் துயரத்தை நாம் உணர முடியும் என்றால் அதற்கு ஒரே வழி உன்னாநோன்பிருப்பதே.

தனிநபர் காரணம்:

நம் உடம்பில் நமக்கு விரோதிகளாய் பலர் குடியிருக்கிறார்கள். ஆசை, கோபம், பொறாமை, கருமித்தனம் என்று எண்ணற்ற பலர் குடியிருந்து நம்மை இயக்கு கிறார்கள். இவர்கள் நம்மை எவ்வளவு தூரம் இழுத்து செல்கிறார்கள் என்பதை நாம் உண்ணாநோன்பு இருக்கும்பொழுது கண்கூடாக காணமுடியும். நமக்கும் இவர்களுக்கும் இடையில் மிகப்பெரும் போரே நடக்கும். மிகவும் வெற்றிகரமாக உண்ணாநோன்பு இருக்கும்பொழுது இவர்களின் கோட்டம் நாளாக நாளாக அடங்கி விடும். அந்த அளவில் உண்ணாநோன்பு நமக்கு கிடைத்த மிகப்பெரும் ஆயுதம். நம்மை அழிவின் பாதைக்கு இழுத்து செல்லும் இத்தகைய விரோதிகளை கட்டுக்குள் கொண்டுவருவது அவசியம். நம்மை வெளியில் இருக்கும் விரோதிகள் நமக்கு ஒரு தீங்கையும் செய்துவிட முடியாது. அவர்கள் செய்வதை நாம் மிக எளிதாக எதிர்கொண்டுவிட முடியும். ஆனால் உள்ளுக்குள்ளேயே குடியிருந்து நம்மை சின்னாபின்ன படுத்தும் தீயவர்களை ஒழிக்க உண்ணாநோன்பு இருப்பது அவசியமாகிறது.


மற்றபடி மதகாரனங்கள் இருக்கவே இருக்கின்றன. ஒவ்வொரு மதமும் இன்ன நாளில், இன்ன மாதத்தில் உண்ணாமல் இருங்கள் என்று பணிக்கிறது. மத நம்பிக்கை அற்றவர்கள் கூட அரசியல் அல்லது தொழில் காரணங்களை காட்டி உண்ணாநோன்பு இருக்கிறார்கள். ஆகா அனைவரும் உண்ணாநோன்பை வலியுறுத்துவதாகவே எடுத்துக்கொள்ளலாம். காந்திஜி நவகாளி படுகொலைகளை கண்டித்து சுமார் இருபத்தொரு நாட்கள உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரதமும் காந்திஜியும், உண்ணாவிரதம் ஒரு காந்தீய வழி என்று கூறுமளவுக்கு பிண்ணி பிணைந்துவிட்டனர். சமீப காலங்களில் கூட பல போராட்டக்காரர்கள் உண்ணாவிரதத்தை கையில் எடுத்து போராடி வருகிறார்கள். சிலர் இவற்றிற்கு மிகப்பெரும் அளவில் விளம்பரம் தருகிறார்கள்.

இன்னும் ஒரு சிலர் உண்ணாநோன்பு இருக்கிறேன் பேர்வழி என்று காலையில் சிற்றுண்டி முடித்து விட்டு, நண்பகல் உணவுக்குள் உண்ணாவிரதத்தை முடித்து கொள்கிறார்கள். சிலர் தொடர் உண்ணாவிரதம் என்று நாள்தோறும் ஒருவர் என்று முறைவைத்து செய்கிறார்கள். இன்னும் சிலர் மேடைக்கு பின்புறம் அமர்ந்து உண்டுவிட்டு மேடையில் சோகமாக உட்காருகிறார்கள். எது எப்படியோ அனைவரும் உண்ணாவிரதத்தின் சிறப்பை உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் கடைபிடிப்பதில்தான் வைராக்கியம் தேவை படுகிறது. அதையும் போகப்போக உண்ணாவிரதமே தந்துவிடுகிறது.