வியாழன், 17 நவம்பர், 2011

கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டா!

நம் தமிழகத்தின் அடையாளம் கோயில்கள். நம் திராவிட கட்டிட கலைகளின் சான்று கோயில்கள். நம் கலை, இலக்கியம், ஆன்மிகம், விஞ்ஞானம், கருவூலம் ஆகியவற்றின் மொத்த ஊற்றாக திகழ்பவை கோயில்கள். நம் வரலாற்றை நாம் கோயில்களை மையமாக வைத்தே இதுவரை அறிந்து வந்திருக்கிறோம். இப்படி நம் வாழ்வுடன் இரண்டற கலந்துவிட்ட கோயில்களை நாம் பெருமை படுத்த தவறி வருகிறோம். பக்தியோடு கோயில்களுக்கு செல்வோர் ஏதோ தங்கள் சுயநலனை முன்னிறுத்தி தங்கள் வாழ்வு சிறக்க வேண்டும் என்று நீண்ட பட்டியளுடனே செல்கின்றனர். பக்தி அல்லாதோரை பற்றி கேட்கவே வேண்டாம். அவர்கள் இவற்றை இடித்து தள்ள வேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் எல்லைக்கே சென்று விட்டனர். ரஷிய மக்கள் நாத்திகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தாலும், கம்யுனிச கொள்கையுடையோர் ஆட்சியில் இருந்த சமயத்திலும் தங்கள் நாட்டில் உள்ள கோவில்களை இடிக்க வில்லை. மாறாக அவை தம் பாரம்பரியத்தை பறை சாற்றுவதாக பெருமையுடன் கூறினார். அத்தகைய பெருமையை கூட தமிழர்கள் மதிக்க தவறி விடுகிறார்கள். 

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று மூதுரை சொன்னவர் நம் குளத்தின் முதல் மகள் ஔவை பாட்டி. அந்த மூதாட்டியின் சொல்லை நாம் மறந்து போகும் நிலையில் உள்ளோம் என்பது வேதனைக்குரிய விஷயம். அந்த பாட்டி ஏதோ வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டு செல்லவில்லை. நம் நலனுக்காகவே இப்படி சொன்னால் என்பது நம்மில் பலருக்கு புரிவதில்லை. அப்படி என்னதான் சிறப்பு இந்த ஆலயங்களுக்கு? இவை பகுத்தறிவிற்கு விரோதமாக, மூடத்தனமாக கல்லை வணங்கும் மையங்களாகத்தானே இருக்கின்றன என்று சிலர் எண்ணலாம். ஆனால் அவ்வாறு நாம் நினைக்க ஆலயங்கள் வடிவமைக்கப்படவில்லை. ஆலயங்களின் சிரிப்பை நாம் விவரிக்க முடியாது. ஏதோ நம்மால் இயன்ற சிலவற்றை இங்கே கூறியிருக்கிறோம் அவ்வளவே. 

ஆலயங்கள் நம் நாட்டின் கலை பொக்கிஷமாக திகழ்பவை. ஆலய சிற்பங்களில் காணப்படாத தகவல்களே இல்லை எனலாம். ஒரு குடும்பம் அமைதியாக, சந்தோஷமாக வாழ என்னென்னே வழிமுறைகள், நீதி நெறிகள் வேண்டுமோ அவை அத்தனையும் ஆலயங்களில் சிற்ப வடிவில் போதிக்கப்பட்டுள்ளன. ஆலயங்கள் பெரும்பாலும் கற்களும் மரங்களும் மட்டுமே வைத்து கட்டப்பட்டவை. ஒன்றன் மீது ஒன்றாக, புவி ஈர்ப்பு சக்தியை மட்டும் ஆதாரமாக வைத்து அடுக்கபபட்ட வேலை பாடு கொண்ட கற்கள் காலத்தை கடந்து நிற்கின்றன. ஒரு கல்லையும் மற்றொரு கல்லையும் இணைக்க கம்பிகளோ வேறு உபகரணங்களோ கிடையாது. அவையும் கற்களை கொண்டே இணைக்கப்பட்டுள்ளன. பூச்சுகளும் கிடையாது. சிறிய துவாரம் கூட இல்லாமல் அடுக்கப்பட்ட கற்கள் நம் கட்டிட நிபுணத்துவத்திற்கு (Engineering Marvel) ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கலை நயம் மிக்க சிற்பங்கள், பலப்பல ஓசை எழுப்பும் தூண்கள், கற்களால் அமைக்கப்பட்ட சங்கிலிகள், வளையல்கள், சாளரங்கள், குடைவரை சிற்பங்கள், சிங்கத்தின் வாய் கற்கள் என்று பல வியப்பூட்டும் வடிவமைப்புகள் கற்களை கொண்டே நம் முன்னோர்கள் அமைத்துள்ளார்கள். அவற்றை புரிந்து கொள்ளவே நம் இந்த வாழ்க்கை முடிந்து விடும். மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய நம் ஆலயங்கள் பல இன்றும் நம் பழம் பெருமையை பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.

ஆலயங்களின் தனி சிறப்பே அதன் கோபுரங்கள் எனலாம். தொலைவிலிருந்து வருபவருக்கு ஆலய கோபுரங்கள் அங்கே ஒரு சிறந்த கிராமம் அமைந்திருப்பதை பறை சாற்றும். பசியோடு வருபவர், வேலை தேடி வருபவர் என்று சகலருக்கும் வரவேற்கும் முகமாக கோபுரங்கள் அமைந்துள்ளன. மிக உயர்ந்த, நீண்ட, நெடிய கோபுரத்தை ஏன் கட்டினார்கள்?  கோயில்கள் சிறிதாக இருந்தாலும் கோபுரங்கள் நெடிதுயர்ந்ததாகவே அமைத்தார்கள் நம் மூதாதையர்கள். இதற்கு காரணாம் இல்லாமல் இல்லை. மழை காலங்களில் இடி மின்னல்கள் ஏற்படுவது இயற்கை. அவை மிக உயர்ந்த கட்டிடங்கள், மரங்கள், மலைகள் என்று தாக்கி பூமியை அடைந்து அமைதி பெரும். அத்தகைய இடிகளின் இறங்குவாயாக கோபுரங்கள் திகழ்கின்றன. கோபுரங்களை தாக்கிய இடி தரையை அடைந்து அமைதியாயுற்று விடுவதால் அருகில் உள்ள வீடுகள் காக்கப்படுகின்றன. மக்களுக்கு ஏற்படும் பேராபத்து நீங்கி விடுகின்றது. ஆகவேதான் ஆலயங்களை சுற்றி மக்கள் தங்கள் வீடுகளை அமைத்து வாழ்கிறார்கள். தனியே தூரத்தில் வீடுகளை அமைப்பதை அவர்கள் தவிர்த்தார்கள்.

தமிழகத்தில் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி போன்ற மாவட்டங்களில் மலைப்பகுதிகள் குறைவு. ஏறத்தாழ இல்லை என்றே சொல்லும் அளவுக்கு சமதள நிலப்பரப்பு கொண்டவை இந்த பகுதிகள். இங்கே மழை காலங்களில் இடி, மின்னல் கொடுமையிலிருந்து மக்களை காக்கும் விதமாக எண்ணற்ற கோவில்களை கட்டி வைத்திருக்கிறார்கள். கோட்டைக்கொப்பான கோவில்களையும், வானுயர்ந்த கோபுரங்களையும் சர்வ சாதாரணமாக காணலாம். இவற்றிற்கு நேர் மாறாக மலைப்பிரதேசங்களை அதிகமாக கொண்ட கோவை, நீலகிரி, தேனீ, சேலம்  போன்ற பகுதிகளில் மிக மிக குறைவான கோவில்களையே காணலாம். இங்கே இடி, மின்னல் கொடுமைகள் மக்களை தாக்காதவண்ணம் அந்த மலை பகுதிகளும் அங்கு வான் நோக்கி நிலைத்து நிற்கும் மரங்களுமே இடிதாங்கி வேலையை செய்கின்றன.

கோவில்கள் இயற்கை அரணாக திகழ்பவை. அந்தந்த பகுதியின் பெருநிதியாக, கலை கூடமாக, பசிப்பிணி போக்கும் மையமாக கோவில்கள் திகழ்ந்தன. இத்தகைய கோவில்களை மக்கள் சார்ந்திருக்கும் பொழுது அவர்கள் வாழ்வில் வறுமையும் பேராபத்துக்களும் தாக்காது என்ற உயரிய நோக்கத்திலேயே 'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கலாகாது' என்று தீர்க்கமாக தீர்மானித் திருக்கிறார்கள், நம் அறிவுசார் முன்னோர்கள். நாம் அவர்கள் வழித்தோன்றல்கள் என்பதில் எத்துனை பெருமைக்குரியது. தமிழகத்தின் தலைசிறந்த சில திருக்கோவில்கள் சிலவற்றை கண்டு பயனடையுங்கள்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக