ஞாயிறு, 11 மார்ச், 2012

மனித உரிமை - முதலைக்கண்ணீர் வடிக்கும் அமெரிக்கா

கடந்த வாரம் (08/03/2012) அன்று ஐ.நா.சபையில் அமெரிக்கா ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தது. அது இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் சம்பந்தப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் பொது பொதுமக்களும், அப்பாவிகளும், போராளிகளும் எந்த ஒரு ஈவு இரக்கமும் இன்றி கொல்லப்பட்டனர் அல்லது சிதைக்கப்பட்டனர். இத்தகைய மனித உரிமை மீறிய செயலுக்காக இலங்கையை தண்டிக்க வேண்டி அமெரிக்கா இந்த தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மனித உரிமை மீறிய இந்த கொடுபாதாக செயலுக்காக  இலங்கை அரசின் மீது பொருளாதார தடையும் இன்னபிற சர்வதேச ஒதுக்கல்களும் நிகழலாம். இந்த தீர்மானத்தை பற்றிய எமது எண்ணத்தை இங்கே பதிவு செய்ய வேண்டுகிறோம். 

இலங்கை அரசு:

இலங்கை அரசு செய்துள்ளது எந்த சட்டத்தின் படியும் நியாயமான செயல் என்று ஒப்புக்கொள்ளமுடியாது. ஒரு நாடு தன் நாட்டில் நிகழும் பூசல்களை எதிர்கொள்வது என்பது ஒரு சவால்தான். கண்மூடித்தனமாக கொலை கொள்ளை குற்றங்களை செய்யும் ஒரு கும்பலை குறிப்பிட்ட சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எந்த ஒரு ராணுவ மற்றும் போலீஸ் துறை செயல்படுவது மிகவும் கடினமான விஷயம் என்பதில் ஐயமே இல்லை. மக்களை கேடயமாக வைத்துக்கொண்டு ராணுவத்தையும், பொதுமக்களையும் அச்சுறுத்தும் கொடுங்கோலர்களையும், பயங்கரவாதிகளையும் ஒடுக்குவது என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத பெரும் செயல்தான். ஆனால் அத்தகைய செயல்களை செய்யும்போது சாதி, இன வித்தியாசமின்றி பொதுமக்கள் படுகாயம் அடைவதோ கொள்ளப்படுவதோ இயற்கை. இலங்கையில் இந்த போர்வையில் இனத்துடைப்பு நிகழ்ந்தது. தமிழர்களை பூண்டோடு அழித்து விட்டு அங்கே சிங்களவர்களை குடியமர்த்தும் கொடுமை நடந்தது. புலிகளை ஒழிக்கிறோம் என்று கூறி அப்பாவிகளையும் அல்லவா இவர்கள் குறிவைத்து தாக்கினார்கள்? பெண்களை மானபங்க படுத்தி, சிறார்களை கொன்று, ஆண்களை சிதைத்து இன்னும் எழுத்தில் வடிக்க  முடியாத படுபாதக செயல்களையெல்லாம் சிறிதும் கூச்சம் இன்றி செய்தது இந்த இலங்கை அரசு. பொது அரங்கில் மன்னிப்பு என்ற வார்த்தைக்கு சிறிதும் அருகதை அற்ற அரசுதான் ராஜபக்ச தலைமை ஏற்றுள்ள இன்றைய இலங்கை அரசு. அந்த அரசின் மீது எந்த ஒரு சர்வதேச நடவடிக்கை வந்தாலும் தகும். அத்தகைய ஒரு களங்கத்தை தன் மீது சுமந்து வருகிறது அந்த அரசு. காலம் கடந்தாலும் ஒரு ஐ.நா. தீர்மானம் இன்றாவது வந்ததே என்று நாம் ஆறுதல் அடையலாம்.

அமெரிக்கா அரசு:

இன்று இலங்கை மீது மனித உரிமை மீறல் என்று தீர்மானம் வடிக்கும் அமெரிக்க அரசு செய்யாத மனித உரிமை மீறல்களே இல்லை. உலகின் எந்த ஒரு நாட்டின் மீதும் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் இன்று வரை அமேரிக்கா செய்த குற்றங்களை மட்டும் பட்டியலிட்டால் அது இமயம் வரை நிமிர்ந்து நிற்கும். முதன் முதலில் அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர் அங்கே பழங்குடியினரை ஒழித்தது முதல் சமீபத்திய இராக், ஆப்கானிஸ்தான் வரை அவர்கள் கொன்று குவித்த மக்கள் தொகை மட்டும் கிட்டத்தட்ட ஒரு இந்திய மக்கள் தொகைக்கு சமமாக இருந்திருக்கும். அத்தகைய ஒரு பெரும் வரலாற்று பின்னணி கொண்ட அமேரிக்கா இன்று சர்வதேச அரங்கில் மனித உரிமையின் பாதுகாவலனாக காட்டிக்கொள்ள முற்படுகிறது. விலைமகள் பத்தினி வேடமிட்ட கதையாக பாசாங்கு செய்கிறது அந்த நாடு. வியட்நாமில் செய்த அட்டூழியங்கள் நாம் மறக்கவில்லை. ஜப்பானியர்கள் மீது அணுகுண்டு வீசிய புண்ணியவான்கள்தான் இன்றைய மனித நீதி மாந்தர்கள். இராக்கில் ரசாயன ஆயுதங்கள் உள்ளன என்று பொய்க்கூறி உள்ளே நுழைந்து அந்த நாட்டையே நிர்மூலமாக்கிய இவர்களின் ராணுவம் இராக்கிய மக்களை எப்படியெல்லாம் கொன்று குவித்தது என்று வீடியோ காட்சிகள் உலகை வலம் வந்தன. சர்வதேச ரௌடி என்று பெயர்பெற்ற இந்த சத்திய சீலர்கள் திடீர் என்று இலங்கையின் மீது இத்தகைய ஒரு ஆயுதத்தை வீச என்ன காரணம்? அமெரிக்காவின் அளவிற்கு ஒண்டிக்கு ஒண்டி நிற்க பலம் பெற்றதல்ல இலங்கை. அப்படியிருக்க மூட்டைபூச்சியை அடிக்க சம்மட்டி கொண்டு தாக்கியது போல அமெரிக்க முனைந்து நிற்பது ஏன்?

இந்திய அரசு:

இலங்கை மீது அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீது இன்று வரை எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது இந்திய அரசு. உள்நாட்டிலும் சரி அந்நிய நாட்டு விஷயங்களிலும் சரி இவர்கள் எந்த ஒரு தீர்க்கமான முடிவும் எடுக்க திராணியற்றவர்கள் என்பது ஊரறிந்த விஷயம். ஆயினும் தீர்மானத்தை ஆதரிக்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் சித்தம் போக்கு சிவம் போக்கு என்று வழக்கமான பாணியில் செயல்பட்டு கொண்டிருக்கிறது மத்திய அரசு. தீர்மானத்தை எதிர்த்தால் அமெரிக்காவின் கண்டனத்தை சந்திப்பதோடு உள்நாட்டில் மக்களின், குறிப்பாக தமிழர்களின், அதிருப்திக்கு ஆளாக வேண்டியிருக்கும். தமிழகத்தின் ஒட்டு மொத்த அரசியல் கட்சிகளும் ஒருமித்த குரல் கொடுத்த நிகழ்ச்சி சமீபத்தில் இதுவாகத்தான் இருக்கும். மாறாக தீர்மானத்தை ஆதரித்தாலோ இலங்கைக்கு உதவ முன்வரும் சீனாவின் வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். ஏற்கெனவே சீனா எது செய்தாலும், தட்டிகேட்க வேண்டாம்,      குறைந்த பட்சம் உரக்க கூட கேட்க வலிமையற்று கிடக்கிறது இந்திய அரசு. கையாலாகதவர்களின் கையில் அரசு சிக்கினால் இப்படிதான் இருக்கும். இருதலை கொல்லி எறும்பாக தவிக்கிறது மத்திய அரசு. ஏற்கெனவே இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு மத்திய அரசிற்கும் பொறுப்பு உள்ளது. அங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்படும்போது அதை கைகட்டி வேடிக்கை பார்த்த கும்பல்தான் இன்றைய மத்திய அரசின் தலைமை ஏற்றுள்ளது. அவர்களால் எப்படி இந்த தீர்மானத்தை ஆதரிக்க முடியும்? ஆயுதங்களை கொடுத்து நம் மக்களையே கொல்ல காரணமாக இருந்தவர்கள் இவர்களும்தான். அன்று தமிழகத்தை ஆண்ட கருணாநிதியும், மத்திய அரசும் ஏதேதோ சால்ஜாப்பு சொன்னார்கள். இறந்தது என்னவோ தமிழர்கள்தான் என்பதை இவர்கள் அறிந்திருந்தும் மௌனமாக இருந்தார்கள். இலங்கை அரசின் அராஜகத்திற்கு எந்த ஒரு முற்றுபுள்ளியும் வைக்காமல் வெறுமனே வேடிக்கபார்த்தார்கள். இன்று இவர்கள் தீர்மானத்தை ஆதரிக்க முன்வந்தாலும், அதனால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எந்த ஒரு நன்மையையும் விளைய போவதில்லை. தாயை கழுத்தை பிடித்து கொன்றுவிட்டு, அல்லது கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்துவிட்டு, அவளுடைய கருமாதியின்போது கண்ணீர் சிந்துவதாலோ, ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குவதாலோ என்ன ஒரு நன்மை விளைய போகிறது. அப்படித்தான் இருக்கும் இன்று நாம் தீர்மானத்தை ஆதரித்தாலும் ஏற்படும் விளைவு.

என்னதான் செய்யவேண்டும்:

மேற்கூறிய மூன்று அரசுகளுமே நேர்மையாக நடக்க தவறியவை. இவர்கள் யாருக்கும் இந்த தீர்மானத்தை ஆதரிக்கவோ எதிர்க்கவோ அருகதை இல்லை. கறைபடிந்த கைக்கு சொந்தக்காரனான அமெரிக்கா மனித உரிமை பற்றி பேச அருகதை அற்றது. தீர்மானத்தை ஆதரிக்கும் முடிவை இந்த எடுக்கும் பட்சத்தில், காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் நிகழ்ந்த கொடுமைகளை வெளிச்சத்திற்கு அமேரிக்கா கொண்டுவர முற்படும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். நாமோ நமது ராணுவமோ விதி முறை மீறலில் வல்லவர்கள்தான். நாம் செய்யாத மனித உரிமை மீறலா? இதையெல்லாம் நாளை விசாரிக்க வேண்டும் என்று சீனாவோ அல்லது இலங்கையோ ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரும் பட்சத்தில் இதே அமெரிக்கா அதை ஆதரிக்கும் நிலை ஏற்படலாம். நாம் தனிமை பட்டு விடும் அபாயம் உள்ளது. இதையும் கருத்தில் கொள்ளவேண்டும். 

இன்றைய தீர்மானம் என்பது ஏதோ அமேரிக்கா இலங்கை தமிழர்கள் மீது பற்றும் பாசமும் வைத்து கொண்டு வரப்பட்டதல்ல. இலங்கையின் மூலமாக சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்து கொண்டிருக்கிறது அமெரிக்கா. மற்றும் தனக்கு பின்னால் யார் யார் நிற்கிறார்கள் என்பதையும் கணித்துக் கொண்டிருக்கிறது. இவர்களின் அதிகார போட்டியின் பின்னால் சிக்கி சீரழியும் வாய்ப்பு மட்டுமே இன்று நமக்கு கிட்டி இருக்கிறது. இந்த தீர்மானம் யார் ஆதரித்தாலும் எதிர்த்தாலும் நிறைவேறப்போவதில்லை. காரணம் தனது "விட்டோ" அதிகாரத்தை பயன் படுத்தி சீனா தீர்மானத்தை தோற்கடிக்க கூடும். இலங்கை பிழைக்கும். ஆனால் அமெரிக்கா தீர்மானத்தை எதிர்த்த நாடுகளுக்கு சிக்கலை உருவாக்கலாம். ஏற்கெனவே நம்முடைய இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிப்பதில் ஏறத்தாழ வெற்றி பெற்றுவிட்ட அமெரிக்கா அரசு வேறு வழிகளில் நமக்கு தொல்லை தரலாம். ரஷ்யா, சீனா, இந்தியா ஒரு ஒன்றுபட்ட கூட்டமைப்பாக செயல்பட முயற்சித்து கொண்டிருக்கும் வேளையில் அதை சிதைக்க தனாலானதை செய்கிறது அமேரிக்கா. 

நாம் தீர்மானத்தை ஆதரித்தால் நமக்கு நன்மை புரிய தயங்கும் அமெரிக்காவிற்கு அது சாதகமாக போகும். ஆனால் வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமான சீனாவின் எதிர்ப்பை சந்திக்கும் நிலை வரும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆகவே இன்று இந்தியா செய்ய கூடியது இதுதான்:

1 தீர்மானத்தை எதிர்ப்பது மட்டுமே நம்மால் செய்ய கூடியது.

2 எதிர்ப்பதன் மூலம் தமிழர்களுக்கு விரோதமான நிலையை நாம் எடுத்தோம் என்று முத்திரை குத்தப்படுவோம். ஆயினும் அதை வெளியில் விளக்கி சொல்லும் பொறுப்பு மத்திய அரசிற்கு உள்ளது. தீர்மானம் வருவதால் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் இல்லை. மாறாக அதை எதிர்ப்பதால் இந்தியா விற்கு கிடைக்கும் நன்மைகள் பலப்பல என்று பட்டியலிட்டு அதிருப்தி அடைய கூடிய தமிழ்நாட்டு தமிழர்களிடம் விளக்கி சொல்லப்பட வேண்டும்.

3 உணர்ச்சி வசப்பட்டு பிராந்திய கட்சிகள் எழுப்பும் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து ஒட்டு மொத்த தேச நலனில் தீங்கு இழைத்து விடக்கூடாது. கடந்த காலங்களில் காஷ்மீரில் மனித உரிமை மீறல் என்று இதே அமெரிக்கா கோஷம் எழுப்பி இருந்தது. அவற்றை நாம் ரஷியா உதவியுடன் எதிர்கொண்டோம் என்பதை மறக்க கூடாது. 

4 குறைந்த பட்சம் சீனாவோடு நட்புரவாவது நீடிக்கும் நிலை வரும். அல்லது இலங்கை சீனாவின் அடித்தளமாக அமைவது குறையும். இந்த நன்மைகளை நாம் எதிர்பார்க்கலாம். 

5 அமெரிக்காவோ நாம் தத்தளிக்கும் காலங்களில் நம்மை ஏறெடுத்தும் பார்க்க தவறிய பின்னணி கொண்டது. அணுகுண்டு சோதனை செய்த காலங்களில் நம் மீது பொருளாதார தடை விதித்த நாடுதான் அமேரிக்கா. நம் சாலைகளில் விபத்து ஏற்பட்டாலும் கூட மனித உரிமை மீறல் முத்திரை குத்த கண்கொத்தி பாம்பாக காத்து கிடக்கிறது. அப்படிப்பட்ட நாடு கொண்டுவரும் தீர்மானத்தை நாம் ஆதரிப்பதன் மூலம் இழப்பதுதான் நிறைய இருக்கும். இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக