கோகுலாஷ்டமி, ஸ்ரீக்ருஷ்ண ஜெயந்தி, ஜன்மாஷ்டமி என்றெல்லாம் வெகு சிறப்பாக கொண்டாடப்பெறும் கண்ணனின் பிறந்த நாள் அன்று நம் இல்லங்களில் அரிசி மாவினால் கண்ணன் திருவடியினை பதித்து கோலமிடுவதை காணலாம். இது தமிழகத்தில் மட்டுமே காணப்படும் சிறப்பு. கோலம் என்பதே தமிழகத்திற்கே உரியது என்றாலும் காக்கொலத்தில் கண்ணன் அடிச்சுவற்றை பின் பற்றுவது இங்கே மட்டும் காணக் கிடைக்கும் அறிய காட்சி. கண்ணன் பிறந்த மதுரா, வளர்ந்த கோகுலம், அரசு வீற்றிருந்து துவாரகை மற்றும் பாரத போர் நிகழ்த்திய குருக்ஷேத்ரம் என்று அனைத்து இடங்களிலும் திருவிழா கோலாகலம் என்றாலும் மாக்கோல காட்சி காண முடியாது. அத்தகைய சிறப்பு இங்கு மட்டும் ஏன்?
காரணம் இல்லாமல் நம் மக்கள் எந்த ஒரு செயலையும் செய்வது கிடையாது. அதுவும் பகுத்தறிவில் பல காத தூரம் வளர்ந்து விட்ட நம் நாகரீகம் எதையும் கண் மூடித்தனமாய் பின்பற்றுவது கிடையாது. கண்ணனை உச்சி முகர்ந்து போற்றி புகழ்ந்து காதலித்து கண்ணீர் மல்கிய மக்கள் தமிழ் மக்கள். சிலப்பதிகாரம், மணிமேகலை, போன்ற பிற சமய இலக்கியங்களிலும் கண்ணனை புகழ்ந்து பாடியுள்ள பாங்கு இங்கே காண கிடைக்கிறது. திருப்பாணாழ்வார், பெரியாழ்வார் போன்றோர் கண்ணனை போற்றிய விதத்தில் கண்ணனே வெண்ணை என உருகி நின்றிருக்கிறான். தமிழ் மக்களில் கண்ணன் என்ற பெயருடைய எண்ணற்றோர் இருக்கிறார்கள். ஆண்டாள் கண்ணனை காதலித்து மனம் முடித்தாள். இங்கே ஒவ்வொரு வீட்டிலும் கண்ணன் தான். மக்கள் தங்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைத்தாலும், 'கண்ணா' என்று அழைத்துதான் பழக்க பட்டிருக்கிறார்கள். அப்படி ஒவ்வொரு தமிழ் வீட்டிலும் சொல்லோடும் செயலோடும் கட்டுண்டிருக் கிறான் கண்ணன். அதை விளக்கவே இந்த திருவடி மாக்கோலம் இடப்படுகிறது.
கண்ணன் பிறந்த நாளில் மட்டும் திருவடி மாக்கோலம் இடுவது அவன் வெண்ணை திருடி கை கால், வாய் என்று மேனி எங்கணும் வெண்ணையை அப்பிக்கொண்டு வருவதை காட்டுவதே மாக்கோல திருவடி தோற்றம். வெண்ணை காலுடன் வரும் பொழுது அது வீதேன்கனும் முத்திரை பதிப்பது இயல்புதான். ஆகவே அவன் நடந்து வரும் பொழுது அது வீடெங்கும் தோன்றும் விதமாக மாக்கோலம் இடுகிறார்கள். அது சரி. அவன் வெண்ணை தின்றுவிட்டு வெளியே செல்வது போலதானே கால்கள் வெளி நோக்கி இட வேண்டும். நாமோ உள் நோக்கி இடுகிறோமே அது ஏன்? கண்ணன் நம் வீட்டுப்பிள்ளை. அவன் அயலார் வீட்டில் நுழைந்து வெண்ணையை களவாடி விட்டு தின்ற மேனியுடன் காலெல்லாம் வெண்ணை ஒழுக வருகிறான். அதுவே வாயிலிலிருந்து நம் இல்லம் வரை பதிகிறது. அண்டை அயலார் வந்து அவன் மீது புகார் அளித்தாலும் நாம் ஒன்றும் நடவடிக்கை எடுக்க போவதில்லை. அவனை செல்லமாக கடிந்து கொள்ளலாம்.
கண்ணன் கழலடியிணை போற்றி பணிவாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக