வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

எள்ளி நகையாடாதே!

பொதுவாக நம்மில் பலருக்கு அடுத்தவர் செய்யும் காரியங்களை கவனிப்பதில் பெரும் ஆர்வம் உண்டு. அவர்கள் சிறப்பாக செய்யும் காரியங்களை பாராட்ட மாட்டோம். வேண்டுமானால் குறை சொல்லுவோம். ஆனால் அவர்கள் செய்யும் சிறப்பற்ற அல்லது சாதாரண காரியங்களை மிகப்பெரிதாக ஊதி அவரை எள்ளி நகையாடுவோம். அடுத்தவர் செய்யும் சிறுபிள்ளைத்தனமான அல்லது உயர்வற்ற செயலை நாம் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட வேண்டும் அவ்வாறு அன்றி நாம் அதை பெரிதாக படம் பிடித்து அடுத்தவருக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதிலேயே நம் வாழ்நாளை பெரும்பாலும் வீணடிக்கிறோம். இதில் நாம் ஆன்மீக மற்றும் அறிவியல் உண்மைகளை கவனிப்பதில்லை.

ஆன்மீக உண்மை:

ஒருவர் செய்யும் தீச்செயலை நாம் தடுத்திட வேண்டும். அல்லது அத்தகைய தீமையிலிருந்து நம்மை அண்டினோரை காக்க வேண்டும். இரண்டும் இயல வில்லை என்றால் ஒதுங்கி நிற்க வேண்டும். அதுவும் அவர்கள் செய்யும் குழந்தைத்தனமான சிரிப்பு வரவழைக்கும் செயலை நாம் கவனித்து அத்தகையோரை மேம்படுத்த முயல வேண்டும். மாறாக நாம் அதை எல்லோரிடமும் கூறி எள்ளி நகையாடி கிண்டலும் கேலியும் செய்வதால் அவர் மனம் மிகவும் வேதனைப்படும். சக மனிதர்கள் ஒருவரை ஒருவர் கேலி செய்வது ஆன்மீகத்திற்கு விரோத மான செயல். ஒவ்வொரு படைப்பிலும் சமமான ஆன்ம ஒளிதான் உள்ளது என்பதை அறியாத நிலைதான் இத்தகைய பரிதாபகரமான நிகழ்விற்கு காரணம். நாம் அத்தகைய ஆன்ம ஒளியை பெற முயல வேண்டும். மாறாக நாம் எள்ளி நகையாடுகிறோம். இது மிகவும் தவறு என்பது நமக்கு புரியவில்லை. 

அறிவியல் உண்மை:

அறிவியல் அடிப்படையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் தலைமை கட்டுப்பாட்டு கருவி நம் மூளைதான். அந்த மூளை தன்னிடம் வரும் செய்திகளை ஆராய்ந்து அதற்கேற்ற முடிவுகளை தெரிவிக்கிறது. உரிய உடல் உறுப்புக்களுக்கு கட்டளை இடுகிறது. ஆகவேதான் நாம் செயல்களை செய்கிறோம். மூளைக்கு கிடைக்கும் தகவல்கள் அரைகுறையாகவோ, தவறாகவோ இருப்பின் அது தவறான முடிவுகளையே எடுக்கும். இப்படி இருக்க ஒரு மனிதன் சிறுபிள்ளைத் தனமாக செயல் படுகிறான் என்றால் அவன் மூளைக்கு எட்டிய செய்திகள் தவறானவை என்று தான் பொருள். அந்த மனிதன் சரியான தகவல்களை திரட்ட வேண்டும் என்று நாம் அவனுக்கு உதவ வேண்டுமே அன்றி அவன் செயலை பரிகசிக்க கூடாது. இந்த உண்மை நம் மூளைக்கு எட்டாததினால்தான் நாம் அவனை பார்த்து பரிகசிக்கிறோம்.  

இத்தகைய நிலை மாற நாம் அறிவியல் மற்றும் ஆன்மீக உண்மைகளை அறிய முற்பட வேண்டும்.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக