புதன், 30 அக்டோபர், 2013

காமன்வெல்த் மாநாட்டில் கலந்துக்கணுமா?

இப்போ தமிழ்நாட்டுல அனல் பறக்க விவாதம் நடக்கிறது. எதை பற்றி? காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துக்கலாமா? வேணாமா? இதுத்தான் படிச்சவன், பாமரன் என்கிற பாகுபாடின்றி அனைவரும் நீந்தும் ஒரே சங்கமம். நாம மட்டும் சும்மா இருந்துட்டா நல்லாவா இருக்கும்? அப்படி இருந்துட்டா ஒன்னுமே தெரியாதவன்னு முத்திரை குத்திடுவாங்க. இன்னும் சொல்லப்போனா தமிழின துரோகின்னு கூட பட்டம் கொடுத்திடுவாங்க. அதுல இருந்து தப்பிக்கணும்னா இப்படி ஏதோ எழுதி நாமளும் அறிவு ஜீவித்தான்னு காட்டிக்கணும் இல்லையா? அதான்! மற்றபடி நம்ம சொல்லை கேட்டு உலகம் எந்த பாதிப்புக்கும் ஆளாக போகறதில்ல! நாங்களும் படிச்சிருக்கம்லா!!

வருகிற 11/10/2013 அன்று இலங்கையில் நடக்க இருக்கிறது இந்த மாநாடு. ஒரு காலத்துல இங்கிலாந்து அரசிடம் அடிமை பட்டுக்கிடந்த நாடுகள் எல்லாம், சுயாட்சி பெற்றபின்பும், தங்களுடைய அடிமைகால நினைவுகளை அசைபோட, தாங்களும் அடிமையா இருந்து குறித்து பெருமை பட, என்று பலதுக்குமாக இந்த ஒரு கூட்டமைப்பு உருவானது. உலகில் இன்று ஐ.நா. சபையே முக்கியத்துவம் இழந்து அமெரிக்க நாட்டாமையிடம் சிறை பட்டிருக்க, இந்த காமன்வெல்த் கூட்டமைப்பு மட்டும் என்ன தைரியத்தில் இயங்குகிறதோ தெரியவில்லை. நாலு பெற பார்க்கலாம், பேசலாம், பழகலாம், டி, காபி, குடிச்சி டூர் போகலாம். ஒரு குரூப் போட்டோ எடுத்துக்கலாம். இதை தவிர இந்த மாநாடோ அல்லது இந்த கூட்டமைப்போ ஒன்றும் செய்யப்போவதில்லை. இந்த மாநாட்டிலிருந்து பலமுறை வெளியே போய் உள்ளே வந்த பாகிஸ்தான் ஒன்றையும் இழந்து விட வில்லை. தொடக்கம் முதலே இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இந்தியா ஒன்றும் பிரமாதமாக எதையும் சாதிக்கவும் இல்லை. எல்லாம் வேற்று கூட்டங்கள். தெரு முனையில் நின்று வெட்டிப்பேச்சு பேசும் விடலைகளை போன்றதுதான் இந்த அமைப்பும். அணி சேரா நாடு கூட்டமைப்பு என்று ஒன்று இருக்கிறது. அதனால் உலகிற்கோ அல்லது அதன் உறுப்பினர்களுக்கோ என்ன நன்மை ஏற்பட்டதோ அதே போன்ற ஒரு நன்மைதான் இந்த கூட்டமைப்புக்கும் ஏற்படுகிறது. 

அமெரிக்காவும் ஒரு காலத்தில் இங்கிலாந்திடம் அடிமைப்பட்டு கிடந்த நாடுதான். ஆனாலும் அது இந்த கூட்டமைப்பில் இடம் பெற வில்லை. உலகின் பல வல்லரசுகளோ, அல்லது பொருளாதார ஜாம்பவான்களோ இந்த அமைப்பில் இடம் பெற்றிருக்க வில்லை. வடிவேலுவின் தலைமையிலான வாலிபர் சங்க உறுப்பினர்களுக்கு இருக்கும் அக்கறை கூட துளியும் இல்லாத நாடுகள் தான் இந்த கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ளன. இவர்கள் ஒன்று கூடி தின்று கழித்து பொழுது போக்கவே வரும் வாரம் ஒரு மாநாட்டை இலங்கையில் நடத்த இருக்கிறார்கள். இதில் இந்தியா கலந்து கொள்ள வேண்டும் என்று ஒரு அணியும், கூடவே கூடாது என்று ஒரு அணியும் கூப்பாடு போடுகின்றன. 

தமிழனுக்கு இலங்கை அநியாயம் செய்து விட்டது.ஆகவே அங்கே போய் அந்த நாட்டை கவுரவிக்க கூடாது. அந்த நாட்டை தனிமை படுத்த வேண்டும். உலக அரங்கில் தாங்கள் செய்த தவறை அந்த நாடு ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழர்களுக்கு சரி சம உரிமை அளித்திட வேண்டும் - இதுதான் பங்கு பெற கூடாது என்பவர்களது கோரிக்கை. தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடம் இல்லை. ஆனால் இந்த மாநாட்டை புறக்கணித்தால் இலங்கை அப்படி வழிக்கு வருமா? ஆயுதம் கொடுத்த பாவத்தை சுமந்து நிற்கும் இந்தியாவும் அல்லவா தனிமை படுத்த வேண்டிய நாடு? அப்படி தனிமை படுத்தப்பட்டால், இலங்கை சீனா,  பாகிஸ்தானுடன் நட்புறவு கொண்டு நம்மை சீண்டி பார்க்காது என்பதற்கு எந்த ஒரு உத்தர வாதமும் இல்லை. 

இலங்கை நம்முடைய நட்பு நாடு, காமண் வெல்த் மாநாட்டில் நாம் பங்கு பெறத்தான் வேண்டும். அப்படி பங்கேற்று தமிழர்களின் னியாலி குறித்து நாம் பேச வேண்டும். அப்போதுதான் உலக நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் - இது பங்கு பெற வேண்டும் என்போருடைய வாதம். அப்படி பங்கேற்று இந்திய அரசு முன்வைக்கும் வாதங்களை இலங்கை ஏற்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இந்த மாநாட்டில் இலங்கையை கண்டித்து ஒரு தீர்மானமோ அல்லது, தமிழர்களுக்கு சம உரிமை வழங்க கோரும் தீர்மானமோ போட்டால் கூட அதை ஏற்க வேண்டும் என்கிற கட்டாயம் இலங்கைக்கு இல்லை. இலங்கை அந்த தீர்மானங்களை புறந்தள்ளும் நிலையில் அந்த நாட்டை கண்டிக்கிற உரிமையோ அல்லது தீர்மானங்களை நடை முறை படுத்தும் வல்லமையோ காமன் வெல்த் அமைப்புக்கு இல்லை என்பதே நிதர்சன உண்மை. 

இந்த லட்சணத்தில் அங்கே மாநாடு நடந்தால் என்ன, தொலைந்தால் என்ன? இந்தியா கலந்து கொண்டால் என்ன கடிந்து கொண்டால் என்ன? தமிழர் வாழ்வில் எந்த ஒரு மாற்றத்தையும் இந்த மாநாடு ஏற்படுத்தப் போவதில்லை. இதை போய் ஒரு பொருட்டாக எண்ணி நம்மையெல்லாம் மடையார் ஆக்கும் இந்த அரசியல் கட்சிகளைத்தான் நொந்து கொள்ளவேண்டும். அவர்களை சொல்லி குற்றமில்லை. தமிழ், தமிழன் என்று உணர்ச்சியை தூண்டி நம்மை முட்டாளாக்கும் முயற்சி கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாகவே நடந்து வருகிறது. இவர்கள் மட்டும் சும்மாவா இருப்பார்கள்!!     

வெள்ளி, 18 அக்டோபர், 2013

வெளிச்சத்துல விளக்கேத்துறாங்கலாம்!!

இன்றைய மக்களை பெரிதும் படுத்துவது, வியாதியோ வறுமையோ அல்ல! ஆன்மிகம் என்கிற போர்வையில் போலிகள் செய்யும் சேட்டைகள்தான் அவர்களை நிம்மதியின்றி அலைகழிக்கின்றது. படித்தவர், படிக்காதவர், பாமரர், உள்ளோர், அற்றோர், பெண்கள், ஆண்கள், பெரியவர், சிறியவர், என்ற உலகியில் பாகுபாடு எதுவும் இல்லாமல் அனைவரும் இந்த திண்டாட்டத்தில் மூழ்கி திளைக்கினர். தாங்கள் அவ்வாறு அறியாமை வயப்பட்டிருப்பதே அறியாமல் அல்லலுருவோர் எண்ணற்றோர்.  அவர்களில் பல செயல்கள் என்னை உறுத்தினாலும் சமீப காலங்களில் மிகவும் நொந்துக்கொண்ட செயல் கோயில்களில் விளக்கேற்றும் வைபவம். ஏதோ ஒரு அரைகுறை ஜோசியன் சொல்லிவிட்டான் என்பதற்காக இந்த மூடர் கூட்டம் கையில் அகல் விளக்கும் எண்ணையுமாக அணிவகுத்து கோயிலையே அல்லோலகல்லோல படுத்தி விடுகிறது.

இந்திய சமூகம் என்றில்லாமல் உலகில் உள்ள அனைத்து நாகரீகங்களிலும் விளக்கேற்றுவது என்பது மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. அவர்களுக்கு இருள் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியதாலும், விளக்கொளியில் பாதுகாப்புணர்வு ஏற்படுவதாலும் இவ்வாறு நிகழ்கிறது. ஆதி மனிதன் கூட எப்போது கதிரொளி வரும் என்று ஏங்கியிருக்கிறான். அத்தகைய விளக்கு மற்றைய மொழிகளில் தீபம், லைட், ஜோதி என்று பல பெயர்களில் வழங்கப்பட்டாலும் விளக்கு என்ற காரணப்பெயருடன் உலா வருவது நம் தமிழ் மொழியில் மட்டுமே. அறியாத ஒரு பொருளை விளக்குகிறது என்பதாலும் தெரியாதனவற்றை விளக்கி தெரிவிப்பதாலும் அது விளக்கு என்று அழைக்கப் படுகிறது. பெரியோர் கூட "இல்லற விளக்கது இருள் களைவது" என்று விளக்கை போற்றியுள்ளனர். வெறுமனே விளக்கேற்றுவதால் மட்டுமே நன்மை வராது.. அறியாமை இருளில் இருப்போருக்கு அதை போக்கி தெளிவை ஏற்படுத்துவது அறிவு விளக்கு. இந்த பணி மிகவும் புனிதம் வாய்ந்தது. 

ஆனால் இன்றைய தினம் என்ன நடைபெறுகிறது. இருள் பகுதிகள் இருளாகவே இருக்கின்றன. ஆனால் அரைகுறை மனிதர்கள் சொன்னார்கள் என்பதற்காக வெளிச்சமாக உள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கில் விளக்கேற்றுகிரார்கள் மூடர்கள். நன்கு வெளிச்சமாக உள்ள பகுதிகளில் அகல் விளக்கு எதற்கு. ஒரு வேலை நிவேதனமும், விளக்கொளியும் இல்லாத எண்ணற்ற கோயில்கள் தமிழகத்தில் உள்ளன. அங்கே பொய் இவர்கள் விளக்கேற்றலாம். ஆனால் நன்கு தழைத்து செல்வ சிறப்பில் உள்ள கோயில்களில் நடைபாதை எங்கணும் விளக்கேற்றுகிறார்கள். இவர்கள்  கோயிலில் இருள்கள வேண்டும் என்ற நோக்கில் விளக்கேற்றுவதில்லை. தங்களுக்கு ஏதோ துன்பம் வந்திருக்கிறது அதை போக்க தங்கள் ஆஸ்தான சோதிட ஞானசூனியம் சொல்லிவிட்டது என்பதற்காக மட்டுமே இப்படி செய்கிறார்கள். கோயில் சுற்றுப்பாதை, பரிவார தேவதைகள், முக்கிய தெய்வத்தின் சந்நிதி என்று எதையும் விட்டு வைப்பதில்லை. அங்கே எண்ணையை கொட்டி வருவோர் போவோர் வழுக்கி விழ ஒரு விழாவே நடத்துகிறார்கள். சுவற்றில் எண்ணையை பூசி அங்கேயும் தங்கள் கோரிக்கையை பெரிதாக போரிக்கிரார்கள். எங்கே இறைவன் மறந்து விடுவானோ என்கிற 'நம்பிக்கை'த்தான். தெய்வத்திற்கு அணிவித்துள்ள புடவை, வெட்டி கூட தீப்பிடிக்கும் அளவிற்கு விளக்கு வைத்து யாரை திருப்தி படுத்துகிறார்களோ தெரியவில்லை. இன்னும் சிலர் பிறர் ஏற்றிய விளைக்கை அகற்றி விட்டு தங்கள் விளக்கை ஏற்றுவார்கள். தாங்கள் நன்றாக இருக்க வேண்டுமாம். என்ன ஒரு  பொதுநலம்? சனியன்று சனீஸ்வரனுக்கு, வியாழன் அன்று குருவிற்கு, செவ்வாய் அன்று துர்கைக்கு என்று ஒரு டைம் டேபிள் போட்டு விளக்கேற்றுவார்கள். மாற்றி ஏற்றிவிட்டால் அந்த தேவதை கோபித்துக்கொள்ளும்பாருங்கள்!

கோயில்கள் அமைதியாக பிரார்த்தனை மற்றும் வழிபாடு செய்யும் இடம் என்பதை மறந்து தாங்கள் வந்ததே 'இருளில் தவிக்கும் இறைவனுக்கு வெளிச்சம் தரவே' என்பதாக நினைத்து விளக்கேற்றும் வெறியோடு அலைகிறார்கள். இறைவனை மனமுருகி வேண்டுவதோ, உளம் மகிழ அவனை ரசிப்பதோ, பைந்தமிழ் பாயிரங்கள் இசைப்பதோ என்றில்லாமல் தங்கள் கோரிக்கை நிறைவேறவேண்டும். அவ்வளவே என்பதாக இவர்கள் விளக்கேற்றுகிரார்கள். மின்னொளி பளிச்சென்றிருக்கும் இடங்களில் விளக்கேற்றுவதால் யாருக்கு என்ன பயன் என்பதை சற்றும் யோசிக்காத மூடர்கள் இவர்கள். முதலாழ்வார்கள் மூவர் உலகையை அகலாக வைத்து கதிரொளியையே விளக்காக ஏற்றி இறைவனை கண்டார்கள். அத்தகைய ஞானிகள் பிறந்த நாட்டில் ஞான சூனியங்கள் தாங்களும் விளக்கேற்ற துடியாய் துடிக்கிறார்கள். பெண்கள் - குடும்ப விளக்கு, கல்வி-சமூக விளக்கு, வாய்மை-அகவிளக்கு, தூய்மை-புறவிளக்கு என்பதை அறியாத மாந்தர்கள் வாழும் நாட்டில் இதுபோன்று பல புரட்சிகள் நிகழத்தானே செய்யும்.