இப்போ தமிழ்நாட்டுல அனல் பறக்க விவாதம் நடக்கிறது. எதை பற்றி? காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துக்கலாமா? வேணாமா? இதுத்தான் படிச்சவன், பாமரன் என்கிற பாகுபாடின்றி அனைவரும் நீந்தும் ஒரே சங்கமம். நாம மட்டும் சும்மா இருந்துட்டா நல்லாவா இருக்கும்? அப்படி இருந்துட்டா ஒன்னுமே தெரியாதவன்னு முத்திரை குத்திடுவாங்க. இன்னும் சொல்லப்போனா தமிழின துரோகின்னு கூட பட்டம் கொடுத்திடுவாங்க. அதுல இருந்து தப்பிக்கணும்னா இப்படி ஏதோ எழுதி நாமளும் அறிவு ஜீவித்தான்னு காட்டிக்கணும் இல்லையா? அதான்! மற்றபடி நம்ம சொல்லை கேட்டு உலகம் எந்த பாதிப்புக்கும் ஆளாக போகறதில்ல! நாங்களும் படிச்சிருக்கம்லா!!
வருகிற 11/10/2013 அன்று இலங்கையில் நடக்க இருக்கிறது இந்த மாநாடு. ஒரு காலத்துல இங்கிலாந்து அரசிடம் அடிமை பட்டுக்கிடந்த நாடுகள் எல்லாம், சுயாட்சி பெற்றபின்பும், தங்களுடைய அடிமைகால நினைவுகளை அசைபோட, தாங்களும் அடிமையா இருந்து குறித்து பெருமை பட, என்று பலதுக்குமாக இந்த ஒரு கூட்டமைப்பு உருவானது. உலகில் இன்று ஐ.நா. சபையே முக்கியத்துவம் இழந்து அமெரிக்க நாட்டாமையிடம் சிறை பட்டிருக்க, இந்த காமன்வெல்த் கூட்டமைப்பு மட்டும் என்ன தைரியத்தில் இயங்குகிறதோ தெரியவில்லை. நாலு பெற பார்க்கலாம், பேசலாம், பழகலாம், டி, காபி, குடிச்சி டூர் போகலாம். ஒரு குரூப் போட்டோ எடுத்துக்கலாம். இதை தவிர இந்த மாநாடோ அல்லது இந்த கூட்டமைப்போ ஒன்றும் செய்யப்போவதில்லை. இந்த மாநாட்டிலிருந்து பலமுறை வெளியே போய் உள்ளே வந்த பாகிஸ்தான் ஒன்றையும் இழந்து விட வில்லை. தொடக்கம் முதலே இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இந்தியா ஒன்றும் பிரமாதமாக எதையும் சாதிக்கவும் இல்லை. எல்லாம் வேற்று கூட்டங்கள். தெரு முனையில் நின்று வெட்டிப்பேச்சு பேசும் விடலைகளை போன்றதுதான் இந்த அமைப்பும். அணி சேரா நாடு கூட்டமைப்பு என்று ஒன்று இருக்கிறது. அதனால் உலகிற்கோ அல்லது அதன் உறுப்பினர்களுக்கோ என்ன நன்மை ஏற்பட்டதோ அதே போன்ற ஒரு நன்மைதான் இந்த கூட்டமைப்புக்கும் ஏற்படுகிறது.
அமெரிக்காவும் ஒரு காலத்தில் இங்கிலாந்திடம் அடிமைப்பட்டு கிடந்த நாடுதான். ஆனாலும் அது இந்த கூட்டமைப்பில் இடம் பெற வில்லை. உலகின் பல வல்லரசுகளோ, அல்லது பொருளாதார ஜாம்பவான்களோ இந்த அமைப்பில் இடம் பெற்றிருக்க வில்லை. வடிவேலுவின் தலைமையிலான வாலிபர் சங்க உறுப்பினர்களுக்கு இருக்கும் அக்கறை கூட துளியும் இல்லாத நாடுகள் தான் இந்த கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ளன. இவர்கள் ஒன்று கூடி தின்று கழித்து பொழுது போக்கவே வரும் வாரம் ஒரு மாநாட்டை இலங்கையில் நடத்த இருக்கிறார்கள். இதில் இந்தியா கலந்து கொள்ள வேண்டும் என்று ஒரு அணியும், கூடவே கூடாது என்று ஒரு அணியும் கூப்பாடு போடுகின்றன.
தமிழனுக்கு இலங்கை அநியாயம் செய்து விட்டது.ஆகவே அங்கே போய் அந்த நாட்டை கவுரவிக்க கூடாது. அந்த நாட்டை தனிமை படுத்த வேண்டும். உலக அரங்கில் தாங்கள் செய்த தவறை அந்த நாடு ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழர்களுக்கு சரி சம உரிமை அளித்திட வேண்டும் - இதுதான் பங்கு பெற கூடாது என்பவர்களது கோரிக்கை. தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடம் இல்லை. ஆனால் இந்த மாநாட்டை புறக்கணித்தால் இலங்கை அப்படி வழிக்கு வருமா? ஆயுதம் கொடுத்த பாவத்தை சுமந்து நிற்கும் இந்தியாவும் அல்லவா தனிமை படுத்த வேண்டிய நாடு? அப்படி தனிமை படுத்தப்பட்டால், இலங்கை சீனா, பாகிஸ்தானுடன் நட்புறவு கொண்டு நம்மை சீண்டி பார்க்காது என்பதற்கு எந்த ஒரு உத்தர வாதமும் இல்லை.
இலங்கை நம்முடைய நட்பு நாடு, காமண் வெல்த் மாநாட்டில் நாம் பங்கு பெறத்தான் வேண்டும். அப்படி பங்கேற்று தமிழர்களின் னியாலி குறித்து நாம் பேச வேண்டும். அப்போதுதான் உலக நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் - இது பங்கு பெற வேண்டும் என்போருடைய வாதம். அப்படி பங்கேற்று இந்திய அரசு முன்வைக்கும் வாதங்களை இலங்கை ஏற்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இந்த மாநாட்டில் இலங்கையை கண்டித்து ஒரு தீர்மானமோ அல்லது, தமிழர்களுக்கு சம உரிமை வழங்க கோரும் தீர்மானமோ போட்டால் கூட அதை ஏற்க வேண்டும் என்கிற கட்டாயம் இலங்கைக்கு இல்லை. இலங்கை அந்த தீர்மானங்களை புறந்தள்ளும் நிலையில் அந்த நாட்டை கண்டிக்கிற உரிமையோ அல்லது தீர்மானங்களை நடை முறை படுத்தும் வல்லமையோ காமன் வெல்த் அமைப்புக்கு இல்லை என்பதே நிதர்சன உண்மை.
இந்த லட்சணத்தில் அங்கே மாநாடு நடந்தால் என்ன, தொலைந்தால் என்ன? இந்தியா கலந்து கொண்டால் என்ன கடிந்து கொண்டால் என்ன? தமிழர் வாழ்வில் எந்த ஒரு மாற்றத்தையும் இந்த மாநாடு ஏற்படுத்தப் போவதில்லை. இதை போய் ஒரு பொருட்டாக எண்ணி நம்மையெல்லாம் மடையார் ஆக்கும் இந்த அரசியல் கட்சிகளைத்தான் நொந்து கொள்ளவேண்டும். அவர்களை சொல்லி குற்றமில்லை. தமிழ், தமிழன் என்று உணர்ச்சியை தூண்டி நம்மை முட்டாளாக்கும் முயற்சி கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாகவே நடந்து வருகிறது. இவர்கள் மட்டும் சும்மாவா இருப்பார்கள்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக