திங்கள், 17 பிப்ரவரி, 2014

வயதானவரையா வாட்டி எடுப்பது...?

தி.மு.க.வின் பத்தாவது மாநில மாநாடு (15,16/02/2014) திருச்சி நகரமே நெருக்கும் வண்ணம் நடைபெற்றது! இதில் பலர் பங்கேற்று தங்களது வீர உரையாற்றினார்கள். கழக கண்மணிகளும் தங்கள் பங்கிற்கு முழு SPIRIT ட்டோடு கலந்து கொண்டு பகுத்தறிவு பணியாற்றினார்கள். அரசியல் ஒரு புறம் இருக்க, இதில் நான் கண்டு வேதனை பட்ட விஷயம் ஒன்று உண்டு. அதில் கழக தலைவர் திரு. மு. கருணாநிதி அவர்கள் நடத்தப்பட்ட விதம்தான்.
அவருக்கோ மிகவும் தள்ளாத வயது (எதையும் தள்ளாத வயதும் கூட...!). சக்கர நாற்காலியில்தான் வாழ்கை என்று ஆகிவிட்டது! மனதுக்கும் உடலுக்கும் ஓய்வு தேவைப்படும் நேரம்! அப்படிப்பட்ட முதியவரை சுமார் எட்டு மணிநேரம், ஒன்பது மணிநேரம் என்று இரண்டு தினங்களும் இருக்கையில் அமர வைத்தே கூட்டத்தை நடத்தினார்கள். அவருடைய இயலாமையை பார்க்க சகிக்க வில்லை! கண்களில் நீர் வந்து விடும் போன்று இருந்தது! கொடி ஏற்றும்போது கொடி கயிற்றை பிடிக்க கூட பலம் இல்லை. தி.மு.க வலைதளத்தை தொடங்கி வைக்க TAB ஐ பிடித்துக்கொள்ள கூட இயலவில்லை! மிகவும் சிரம பட்டார். அறிவு கூர்மையும், நினைவாற்றலும் அவருக்கு இன்னமும் திடமாக இருந்தாலும் உடலால் அவர் படும் துன்பம் மிகவும் பரிதாபத்திற்குரியது.

பிள்ளைகளும் சரி கட்சிக்காரர்களும் சரி இதனை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். பிள்ளையாரை போல இருக்கையிலேயே கிடத்தி வசூலிக்க மட்டுமே அவர்கள் குறியாக இருக்கிறார்கள். தள்ளாத மனிதனின் உடல் நிலை குறித்து அவர்கள் சிறிதும் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை. நான் திமுக அனுதாபியோ, அல்லது ஆதரவாளனோ அல்ல. இருப்பினும் ஒரு வயதான முதியவரை பலர் முன்னிலையில் பொதுவில் அவர்கள் நடத்திய பாங்கு என்னை வேதனை கொள்ள செய்தது. அரசியல் வேண்டியதுதான்! அதற்காக வயதானவரையா வாட்டி எடுப்பது...? பிள்ளைகள் ஒற்றுமையாக இருக்கலாம். கட்சிக்காரர்கள் தங்கள் பிணக்குகளை இணக்கமாக தீர்த்துக்கொள்ளலாம். இது போன்ற மாநாடுகளில் ஒரு மணி அல்லது அரை மணி நேரம் மட்டுமே அவரை இருக்க செய்யலாம். அவருக்கு பிடித்தமான இலக்கிய, காவிய, கவியரங்குகள் நடத்தலாம், மானாட மயிலாட போன்ற நிகழ்வுகளில் அவரை பங்கு கொள்ள செய்யலாம். இதையெல்லாம் விட்டு விட்டு, ஏதோ பொருட்காட்சி போல இரண்டு நாட்களும் இருக்கையிலேயே அவரை இருத்தி மிகவும் வதைத்து சித்திரவதை செய்திருக்கிறார்கள். பேருந்துகளில் தள்ளாதவர் வந்தால் எழுந்து இருக்கையை விட்டுத்தரும் தரும சிந்தனை கொண்ட தமிழகத்தில், ஓட்டுக்காக முதியவர் ஒருவர் வருத்தப்பட்டு கொண்டிருந்ததை கண்டு பொறாமல் எழுதிய எழுத்துதான் இது. மனித பண்பாளர் யாவரும் ஏற்பார்கள். மற்றபடி இதில் அரசியல் எதுவும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக