வெள்ளி, 18 அக்டோபர், 2013

வெளிச்சத்துல விளக்கேத்துறாங்கலாம்!!

இன்றைய மக்களை பெரிதும் படுத்துவது, வியாதியோ வறுமையோ அல்ல! ஆன்மிகம் என்கிற போர்வையில் போலிகள் செய்யும் சேட்டைகள்தான் அவர்களை நிம்மதியின்றி அலைகழிக்கின்றது. படித்தவர், படிக்காதவர், பாமரர், உள்ளோர், அற்றோர், பெண்கள், ஆண்கள், பெரியவர், சிறியவர், என்ற உலகியில் பாகுபாடு எதுவும் இல்லாமல் அனைவரும் இந்த திண்டாட்டத்தில் மூழ்கி திளைக்கினர். தாங்கள் அவ்வாறு அறியாமை வயப்பட்டிருப்பதே அறியாமல் அல்லலுருவோர் எண்ணற்றோர்.  அவர்களில் பல செயல்கள் என்னை உறுத்தினாலும் சமீப காலங்களில் மிகவும் நொந்துக்கொண்ட செயல் கோயில்களில் விளக்கேற்றும் வைபவம். ஏதோ ஒரு அரைகுறை ஜோசியன் சொல்லிவிட்டான் என்பதற்காக இந்த மூடர் கூட்டம் கையில் அகல் விளக்கும் எண்ணையுமாக அணிவகுத்து கோயிலையே அல்லோலகல்லோல படுத்தி விடுகிறது.

இந்திய சமூகம் என்றில்லாமல் உலகில் உள்ள அனைத்து நாகரீகங்களிலும் விளக்கேற்றுவது என்பது மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. அவர்களுக்கு இருள் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியதாலும், விளக்கொளியில் பாதுகாப்புணர்வு ஏற்படுவதாலும் இவ்வாறு நிகழ்கிறது. ஆதி மனிதன் கூட எப்போது கதிரொளி வரும் என்று ஏங்கியிருக்கிறான். அத்தகைய விளக்கு மற்றைய மொழிகளில் தீபம், லைட், ஜோதி என்று பல பெயர்களில் வழங்கப்பட்டாலும் விளக்கு என்ற காரணப்பெயருடன் உலா வருவது நம் தமிழ் மொழியில் மட்டுமே. அறியாத ஒரு பொருளை விளக்குகிறது என்பதாலும் தெரியாதனவற்றை விளக்கி தெரிவிப்பதாலும் அது விளக்கு என்று அழைக்கப் படுகிறது. பெரியோர் கூட "இல்லற விளக்கது இருள் களைவது" என்று விளக்கை போற்றியுள்ளனர். வெறுமனே விளக்கேற்றுவதால் மட்டுமே நன்மை வராது.. அறியாமை இருளில் இருப்போருக்கு அதை போக்கி தெளிவை ஏற்படுத்துவது அறிவு விளக்கு. இந்த பணி மிகவும் புனிதம் வாய்ந்தது. 

ஆனால் இன்றைய தினம் என்ன நடைபெறுகிறது. இருள் பகுதிகள் இருளாகவே இருக்கின்றன. ஆனால் அரைகுறை மனிதர்கள் சொன்னார்கள் என்பதற்காக வெளிச்சமாக உள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கில் விளக்கேற்றுகிரார்கள் மூடர்கள். நன்கு வெளிச்சமாக உள்ள பகுதிகளில் அகல் விளக்கு எதற்கு. ஒரு வேலை நிவேதனமும், விளக்கொளியும் இல்லாத எண்ணற்ற கோயில்கள் தமிழகத்தில் உள்ளன. அங்கே பொய் இவர்கள் விளக்கேற்றலாம். ஆனால் நன்கு தழைத்து செல்வ சிறப்பில் உள்ள கோயில்களில் நடைபாதை எங்கணும் விளக்கேற்றுகிறார்கள். இவர்கள்  கோயிலில் இருள்கள வேண்டும் என்ற நோக்கில் விளக்கேற்றுவதில்லை. தங்களுக்கு ஏதோ துன்பம் வந்திருக்கிறது அதை போக்க தங்கள் ஆஸ்தான சோதிட ஞானசூனியம் சொல்லிவிட்டது என்பதற்காக மட்டுமே இப்படி செய்கிறார்கள். கோயில் சுற்றுப்பாதை, பரிவார தேவதைகள், முக்கிய தெய்வத்தின் சந்நிதி என்று எதையும் விட்டு வைப்பதில்லை. அங்கே எண்ணையை கொட்டி வருவோர் போவோர் வழுக்கி விழ ஒரு விழாவே நடத்துகிறார்கள். சுவற்றில் எண்ணையை பூசி அங்கேயும் தங்கள் கோரிக்கையை பெரிதாக போரிக்கிரார்கள். எங்கே இறைவன் மறந்து விடுவானோ என்கிற 'நம்பிக்கை'த்தான். தெய்வத்திற்கு அணிவித்துள்ள புடவை, வெட்டி கூட தீப்பிடிக்கும் அளவிற்கு விளக்கு வைத்து யாரை திருப்தி படுத்துகிறார்களோ தெரியவில்லை. இன்னும் சிலர் பிறர் ஏற்றிய விளைக்கை அகற்றி விட்டு தங்கள் விளக்கை ஏற்றுவார்கள். தாங்கள் நன்றாக இருக்க வேண்டுமாம். என்ன ஒரு  பொதுநலம்? சனியன்று சனீஸ்வரனுக்கு, வியாழன் அன்று குருவிற்கு, செவ்வாய் அன்று துர்கைக்கு என்று ஒரு டைம் டேபிள் போட்டு விளக்கேற்றுவார்கள். மாற்றி ஏற்றிவிட்டால் அந்த தேவதை கோபித்துக்கொள்ளும்பாருங்கள்!

கோயில்கள் அமைதியாக பிரார்த்தனை மற்றும் வழிபாடு செய்யும் இடம் என்பதை மறந்து தாங்கள் வந்ததே 'இருளில் தவிக்கும் இறைவனுக்கு வெளிச்சம் தரவே' என்பதாக நினைத்து விளக்கேற்றும் வெறியோடு அலைகிறார்கள். இறைவனை மனமுருகி வேண்டுவதோ, உளம் மகிழ அவனை ரசிப்பதோ, பைந்தமிழ் பாயிரங்கள் இசைப்பதோ என்றில்லாமல் தங்கள் கோரிக்கை நிறைவேறவேண்டும். அவ்வளவே என்பதாக இவர்கள் விளக்கேற்றுகிரார்கள். மின்னொளி பளிச்சென்றிருக்கும் இடங்களில் விளக்கேற்றுவதால் யாருக்கு என்ன பயன் என்பதை சற்றும் யோசிக்காத மூடர்கள் இவர்கள். முதலாழ்வார்கள் மூவர் உலகையை அகலாக வைத்து கதிரொளியையே விளக்காக ஏற்றி இறைவனை கண்டார்கள். அத்தகைய ஞானிகள் பிறந்த நாட்டில் ஞான சூனியங்கள் தாங்களும் விளக்கேற்ற துடியாய் துடிக்கிறார்கள். பெண்கள் - குடும்ப விளக்கு, கல்வி-சமூக விளக்கு, வாய்மை-அகவிளக்கு, தூய்மை-புறவிளக்கு என்பதை அறியாத மாந்தர்கள் வாழும் நாட்டில் இதுபோன்று பல புரட்சிகள் நிகழத்தானே செய்யும்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக