தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 ஜனவரி, 2012

"ஏன் இந்த கொலவெறி?"

கொலவெறி! இப்பொழுது தமிழகத்தின் பட்டிதொட்டி மட்டுமில்லாமல், மொழி இனம் அறியாத உலகின் பலமூலைகளையும் தொட்ட தமிழ் வார்த்தை இது. இசை, பாட்டு நடை, பாடகர் குரல்வளம், சொல்-பொருட்செறிவு, நடன அமைப்பு, காட்சி அமைப்பு என்று ஒரு பாடலுக்கு இயற்கையாகவே சொல்லப்படும் சிறப்புக்கள் எதுவும் இல்லாமல் 'கொலவெறி, கொலவெறி டி' என்று தொடங்கும் இந்த பாடல் உலகின் மூலை முடுக்குகளையெல்லாம் தொட்டிருப்பது மிகவும் அதிசயம். கொலவெறி என்ற வார்த்தையை பலருக்கு அறிமுகம் செய்த பெருமை நகைச்சுவை நடிகர் வடிவேலுவையே சாரும். ஒரு நகைச்சுவை காட்சியில் அவரை வன்மையாக நெருங்கும் ஒருவரை பார்த்து அவர் 'ஏன் இந்த கொலவெறி' என்று கேட்பார். அப்போது பிரபலம் அடையாத வார்த்தை இன்று ஒரு பாடல் மூலம் புகழின் உச்சத்துக்கே சென்றிருக்கிறது. இதை என்னவென்பது? சிலர் கூறுவது போல நேரம்தானோ?

இந்த பாடலை எல்லோருடைய செவிகளுக்கும் கொண்டு சென்றிருப்பது 'வலைத்தளம்' என்றாலும் தமிழகத்திலிருந்து ஏற்றுமதியாகி யிருப்பது நமக்கு பெருமைதரும் விஷயம். இந்த பாடலை அடிப்படையாக வைத்து அவரவர் மொழிகளில் ஆங்காங்கே இருக்கும் செய்திகளை இட்டு கட்டி பாடல்கள் புனைந்திருக்கிறார்கள். அவை அனைத்தும் 'கொலவெறி' என்றே தொடங்குவது மிகவும் ஆச்சரியம். அப்படி என்னதான் அந்த வார்த்தையின் மீது அவர்களுக்கு கவர்ச்சி ஏற்பட்டதோ தெரியவில்லை. 

தமிழில் மங்கலமான வார்த்தைகளை கொண்டு கவிதை புனைவது பாரம்பரியம் ஆகும். 'உலகு' என்ற வார்த்தையை கொண்டே பெரிய புராணம், கம்பராமாயணம் போன்ற காவியங்கள் பிறந்தன. சுமார் இருபத்தெட்டு வார்த்தைகளை மங்கல வார்த்தைகள் என்று தமிழர்கள் தொகுத்திருக் கிறார்கள். நல்ல கவிஞன் அந்த வார்த்தைகளை கொண்டுதான் கவி பாடுவான். நிச்சயமாக 'கொலவெறி' என்பது மங்கல வார்த்தை இல்லை. ஆனால் அதை கொண்டு ஒரு பாடலை தொடங்குவது மங்கல எண்ணம் கொண்ட தமிழர்கள் விரும்பமாட்டார்கள். ஆயினும் ஒரு பொழுது போக்குக்காக உருவாக்கப்பட்ட பாடல்தான் இது என்றாலும் நமக்கு என்னவோ போல் தோன்றுகிறது. தனுஷ்-ஐஸ்வர்யா சொல்வது போல இது வேடிக்கைக்காக எழுந்த பாடல் என்று கொள்ள முடியாது. இந்த வார்த்தை பலரின் மனதில் எதிர் எண்ணங்களை தோற்றுவித்திருக்கிறது.  

தமிழ் மீது பற்று கொண்ட யாழ்ப்பாணத்தை சார்ந்த தமிழ் அன்பர்கள் மிகச்சிறந்த கொலவெறி சாயல் கொண்ட பாடல் ஒன்றை இயற்றியுள்ளனர். அதுவும் கொலவெறி இசையின் மீதுதான் எழுந்திருக்கிறது. மிக குறுகிய காலத்தில் வலைதளத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழர்கள் தமிழ் பற்று அற்று கிடப்பதை கண்டித்து எழுதப்பட்ட அந்த பாடல் தனுஷின் பாடலுக்கு பதிலடி என்று தமிழார்வலர்களால் விமரிசிக்கப்படுகிறது. திரு. தமிழருவி மணியன் ஒரு படி மேலே சென்று இனப்பற்று கொண்ட தமிழர்கள் தனுஷ் நடிக்கும் அந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார். எந்த அளவிற்கு ஆதரவை பெற்றதோ ஏறத்தாழ அதே அளவிற்கு கண்டனங்களையும் சுமந்து வருகிறது இந்த பாடல். ஆயினும் தமிழ் விரோத முத்திரை குத்தும் அளவிற்கு அந்த பாடல் வரவில்லை என்பது நம் கருத்து.

பாமரத்தனமான ஒரு இளைஞன், காதலியினால் வஞ்சிக்கப்பட்டதாக எண்ணி தனக்கு தெரியாவிட்டாலும் அரை குறை ஆங்கிலத்தில் குடித்து விட்டு உளறுவதாக உள்ளது இந்த பாடல். இதில் தமிழின் பெருமையோ பாரம்பரியமோ சீர் குலைந்து போனதாக நாம் எண்ணவில்லை. அத்தகைய எண்ணம் நிச்சயமாக தனுஷிற்கோ அல்லது ஐஸ்வரியாவிற்கோ இருந்திருக்காது. அவர்கள் அப்படி செய்து பிழைப்பு நடத்தும் கட்டாயத்திலும் இல்லை என்பது நிதர்சனம். அந்த பாட்டு என்னவோ போல் குமட்டிக்கொண்டு வந்தாலும், அதை நாம் எளிமையாக எடுத்துக்கொள்ளவேண்டும். நகைச்சுவை உணர்வோடு மட்டுமே பார்க்க வேண்டும். மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்களில் ஒன்றாக எண்ணி விடக்கூடாது. காலப்போக்கில் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் பாடலாகத்தான் அதை நாம் கொள்ள வேண்டும். இதில் தமிழ் பெருமை, பாரம்பரியம் என்று பேசுவது வெறும் விளம்பரமாகத்தான் இருக்கும்.

இதற்கு முன்னர் தமிழின் பெருமையை குழிதோண்டி புதைத்தோர் எண்ணற்றோர். அவர்களையெல்லாம் கண்டிக்க வேண்டும், ஒதுக்க வேண்டும். ஆனால் நாம் அவர்களை பெருமை படுத்தி ஆராதிக்கிறோம். தமிழன் ஒரு காட்டு மிராண்டி என்று சொன்ன பெரியாரை பெருமை படுத்துகிறோம். மத்தியில் தன்னுடைய குடும்பத்தார் அமைச்சர்களாக இருக்க வேண்டும், மாநிலத்தில் தன்னுடைய அரசு நீடிக்க வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையில் இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதற்கு துணை நின்ற கருணாநிதியை கொண்டாடுகிறோம். தமிழகமெங்கும் இளைய தலைமுறையினர் குடித்து சீரழிந்து வள்ளுவம் பொய்யாகி தலைகுனியும் வண்ணம் செயல் பட்டு வீதிதோறும் சாராயக்கடைகளை திறந்து வைத்திருக்கும் தமிழக அரசை வாழ்த்துகிறோம். இத்தகைய செயல்களால் தமிழ் என்ன பெருமை பட்டதா? அப்போதெல்லாம் சிறுமை பட்ட தமிழை தூக்கி பிடிக்க நாம் தவறி விட்டோம். ஆனால் பொழுது போக்கிற்காக கூத்து கலைஞர்கள் உருவாக்கும் பாடல் மற்றும் இசையை விமரிசிக்க தயாராகிறோம். இது நம்முடைய கையாலாகத்தனத்தை தான் காட்டுகிறது. தவிர விமரிசனத்தில் உள்ள துளியும் சத்து இல்லை என்பதையும் பறை சாற்றுகிறது. 

இந்த நேரத்தில் இத்தகைய வேடிக்கை மனிதர்களை பார்த்து நமக்கும் கேட்க தோன்றுகிறது, "ஏன் இந்த கொலவெறி?"

செவ்வாய், 10 மே, 2011

திருமலையில் தமிழ்காத்த உச்சநீதிமன்றம்

இன்றைய தினம் (10/05/2011) இந்திய நாட்டின் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள ஒரு தீர்ப்பை தமிழர்களாகிய நாம் அனைவரும் தலைமீது வைத்து கொண்டாடவேண்டும். வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்ப்பை உண்மையில் தமிழக அரசு முன்னின்று நடத்தியிருக்க வேண்டும். அவ்வாறெல்லாம் செய்ய அவர்களுக்கு ஏது நேரம்?

திருப்பதி-திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் கருவறையை ஒட்டிய சுவர்களில் ஏராளமான தமிழ் பாசுரங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அவை ஆழ்வார் பாடல்களா, இல்லை மற்ற பிற செய்யுட்களா என்பது இன்னமும் அறியவில்லை. இவற்றை மூடி மறைத்து கோயிலின் சுவர்கள் அனைத்தும் தங்கத்தகடுகள் பதிக்க தேவஸ்தான குழு முடிவு செய்தது. இதற்காக தங்கத்தை தானமாக பெற பகதர்களிடம் வேண்டுகோளும் விட்டது. தமிழ் எழுத்துக்களை மூடிவிட அவர்களுக்கு ஒரு தணியாத ஆர்வம். தமிழார்வம் கொண்ட அனைவருக்கும் இது மிகவும் கவலைதரும் விஷயம். அந்த வெங்கடேசனுக்கும் கூட மிகுந்த கவலையை தந்திருக்கும். ஆதலினால்தான் நாம் அனைவரும் செய்யத்தவறிய செயலை டாக்டர். சுப்பிரமணியம் சுவாமியை கொண்டு செய்திருக்கிறான் அவன். தேவஸ்தானத்தின் இந்த முடிவை எதிர்த்து ஆந்திர உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்குத்தொடர்ந்தார். அந்த வழக்கில் தங்கத்தகடுகளை பதிக்க தடை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து தேவஸ்தானம் செய்த மேல் முறையீட்டின் பேரில் உச்ச நீதிமன்றமும் உயர் நீதி மன்ற தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்திருக்கிறது. இனித் தமிழ் எழுத்துக்களை எந்த கொம்பனாலும் மூடி மறைத்துவிட முடியாது. தமிழின தலைவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் யாரும் இந்த வழக்கை எடுக்கவில்லை. தமிழனே அல்ல. ஆரியன் என்று வர்ணிக்கப்படும் சுப்ரமணியம் சுவாமிதான் இதில் உச்ச நீதிமன்றம் வரை சென்று தமிழின் முகவரியை காத்திருக்கிறார். 

வேதம் தமிழ் செய்ய நம்மாழ்வாரை படைத்தவன், திருமழிசை ஆழ்வார் தமிழ் கேட்டு சொன்னவண்ணம் செய்த பெருமான், ஆண்டாள் தமிழினில் மயங்கி அவள் சூடிக்கொடுத்த பூ(பா)மாலையை அணிந்து மகிழும் பெருமான், கம்பன் தமிழ் கேட்டு தலை அசைத்த பெருமான், தேவஸ்தான குழுவில் உள்ள ஒரு சில சுயநலக்கிருமிகளின் செயலை சகித்து தமிழை மறைத்துவிட விட்டுவிடுவானோ? திருமலையப்பன்  தினமும் ஆழ்வார் பிரபந்தங்களை கேட்டபடிதான் பின் செல்கிறான் என்பதை அந்த மூடர்கள் ஏனோ அறிந்திருக்கவில்லை. உண்மையில் அங்கே நடப்பது அனைத்துமே வியாபாரம்தானே. தலைமை பூசாரிமுதல் கடைநிலை ஊழியன் வரை அங்கே பணத்தை பிரதானமாக கொண்டு தானே செயல் படுகிறார்கள். அவர்களுக்கு உண்மையான பக்தியின் வெளிப்பாடு எங்கே தெரியப்போகிறது. 

திருப்பதியை ஆந்திரத்துக்கு கவர்ந்து சென்றார்கள். இராஜாஜி இல்லை என்றால் சென்னையையும் விழுங்கியிருப்பார்கள். இந்த பொறாமை மனத்தோடுதான் அவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள். பொன்தகடு பதிக்கிறேன் என்று தமிழை மூடும் பணியில் இறங்கினார்கள். திருமலையப்பன் அருள் அவ்வாறு நிகழ்வது தடுக்கப்பட்டுள்ளது.