சனி, 29 மார்ச், 2014

ஜெயலலிதாவிற்கு ஏன் ஓட்டுப் போட வேண்டும்...?

வருகின்ற பாராளுமன்ற தேர்தல் 2014, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள வித்தியாசமான தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் மட்டுமே எந்த ஒரு (அனுதாபம், இறப்பு, போர், போன்ற) வெளி காரணிகளின் பாதிப்பும் இல்லாமல், கொள்கைகளை மட்டுமே விளக்கி வாக்கு சேகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய அளவில் காங்கிரசு அணி, பா.ஜ.க. அணி, மற்றும் எந்த ஒரு அணியும் ஏற்படாமல் சிதறுண்டு கிடக்கும் மாநிலக் கட்சிகளும் பிற கட்சிகளும் தேர்தலை சந்திக்கின்றன. இந்த மூன்றாவது தரப்பில் ஒற்றுமையை விட வேற்றுமையும், வெறுப்பும் ஒருங்கே கொண்ட மாநிலக் கட்சிகளே அதிகம். அவை தேர்தலுக்கு பிறகு எந்த ஒரு பிரதான அணிக்கும் சென்று விடும் என்று நம்பக்கூடிய சூழல்தான் நிலவுகிறது. அதற்காக காங்கிரசு மற்றும் பா.ஜ.க. அணியில் உள்ள கட்சிகள் அங்கேயே ஒட்டிக்கொண்டிருக்கும் என்று கூற முடியாது. அவையும் பசுமை நிறைந்த அக்கரையை தேடி ஓடிவிடும் நிலையிலேயே உள்ளன. ஆகவே வரும் தேர்தல் தங்களுக்கு எவ்விதத்தில் ஆதாயம் தரும் என்று எதிர்பார்த்து அனைத்து கட்சிகளும் போட்டி போடுகின்றன. பிற கட்சிகளை அவை வெகுவாக குறை கூறி பேசினாலும் அக்குறைகள் தங்களிடம் மிகுந்தே காணப்படுகின்றன் என்பது ஊரறிந்த ரகசியம். ஊழல், திறமையின்மை, மத மற்றும் சாதி சார்பு என்று பல விஷயங்கள் இவை அனைத்திலும் ஊடுருவி செல்கின்றது. யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர். இத்தகைய இழிகுணங்கள் சதவிகிதத்தில் வேண்டுமானால் மாறு பட்டிருக்குமே தவிர அனைத்துக் கட்சிகளும் அக்குணங்களில் ஒன்றுக்கொன்று போட்டி போடும் சூழலே நிலவுகிறது. ஆகவே இங்கு இவர்களை விட்டால் நமக்கு விதி இல்லை என்ற நடுநிலை மனப்பான்மையோடு இக்கட்டுரை எழுதப்படுகிறது. இதில் யாரையும் புண்படுத்தும் என்னமோ அல்லது யாரையும் புகழும் என்னமோ எமக்கில்லை. இந்த தேர்தலில் நமக்கு இருப்பவற்றில் சுமாரானதை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு மட்டுமே இதை எழுதுகிறேன். மாற்றுக்கருத்துக்களுக்கு இங்கு இடம் உண்டு. ஆயினும் "மிகை நாடி மிக்கக் கொளல்" என்கிற அடிப்படையில் என்னுடைய கருத்துக்களை வலியுறுத்துகிறேன். இவற்றின் மூலமாக யாரேனும் மன வருத்தமுற்றால் அல்லது பாதிப்படைந்தால் அதற்கு என்னுடைய பகிரங்க மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்.


வருகின்ற பாராளுமன்ற தேர்தல் 2014 ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பொது வானது என்றாலும் நம்மைப்பொருத்தவரையில் தமிழக அரசியல் நிலையை மட்டுமே கருத்தில் கொண்டு தமிழக வாக்காளர்களை மையமாக வைத்தே இக்கட்டுரையை இயற்றுகிறோம். இக்கட்டுரை தமிழில் இயற்றப்படுவதாலும் பெரும்பாலான வாசகர்கள் தமிழர்கள் என்பதாலும் இந்த நிலையை மேற்கொண்டு இயற்றுகிறோம். ஆகவே தமிழக அரசியல், தமிழ், தமிழக, தமிழர் எதிர்காலம் ஆகியவை மட்டுமே கருத்தில் கொண்டு மற்ற எவற்றையும் பெரிதாக கொள்ளாமல் இந்த படைப்பை உங்கள் முன் நிறுத்துகிறோம்.


தமிழக அரசியல் நிலவரம்:

தமிழக அரசியலில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. மட்டுமே இரு பெரும் பிரதான கட்சிகள். மற்றைய கட்சிகளுக்கு தமிழகத்தில் குறிப்பிடும் படியான வாக்குகள் இல்லை என்றே சொல்லலாம். அவை ஒன்றை மாற்றி ஒன்று என்று இந்த இரு பெரும் கட்சிகளிடம் கூட்டு வைத்துக்கொள்ள மட்டுமே விரும்புகின்றன. வேறு வழி இல்லாவிட்டால் தனித்து நிற்கிறோம் என்று அறிவித்து விடுவார்கள். ஆகவே இந்த சிறிய கட்சிகள் அரசியல் போக்கை மாற்ற இயலாத கட்சிகளுக்கு வாக்களிப்பது என்பது வாக்குரிமையை வீணடிப்பதற்கு சமம். அடுத்த தேர்தலில் அக்கட்சிகளுக்கு வேண்டுமென்றால் இந்த வாக்குகள் பிரதான கட்சிகளுடன் பேரம் பேச உதவுமே தவிர வாக்களர்களுக்கு எந்த ஒரு நன்மையையும் பயக்காது. தாங்கள் விரும்பும் அரசை எதிர்பார்த்தோ அல்லது விரும்பாத கட்சி ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவோ இத்தகைய சிறிய கட்சிகளுக்கு வாக்களிப்பவர்கள் இருப்பார்கள். அவ்விதம் வாக்களிப்பதன் மூலம் அவர்கள் அத்தகைய நன்மையை அடைய முடியாததோடு மட்டுமல்லாமல் தாங்கள் விரும்பாத நிலையையே அவர்கள் அளிக்கும் வாக்குகள் தோற்றுவிக்கும். 

பாராளுமன்ற தேர்தல் 2014 ஐ பொருத்தவரையில் தமிழகத்தில் தனித்து போட்டியிடும் அ .இ.அ .தி.மு.க.வும், தி.மு.க. தலைமையில் ஐந்து கட்சிகள் கொண்ட ஒரு அணியும், தனித்து போட்டியிடும் காங்கிரசும், தே.மு.தி.க. தலைமையில் ஆறு கட்சிகள் கொண்ட ஒரு அணியும் மற்றும் இரண்டு கம்யுனிஸ்டு கட்சிகளை கொண்ட அணியும் போட்டியிடுகின்றன. இவற்றில் அ .தி.மு.க.வைத்தவிர மற்றைய கட்சிகள் கூட்டு சேர பல முயற்சிகளை மேற்கொண்டு கடைசியில் இந்த நிலைக்கு தங்களை தயார் படுத்திக் கொண்டுவிட்டன. இந்த தேர்தலில் தமிழகத்தில் மேற்கண்ட கட்சிகள்/அணிகளுக்கு வாக்களிப்பவர்கள் நடப்பது பாராளுமன்ற தேர்தல் ஆயினும் தமிழக நலனை உத்தேசித்தே வாக்களிப்பார்கள். அவர்கள் மன ஓட்டங்களுக்கு தெளிவினை வழங்கும் பொருட்டு கீழ்கண்ட அலசல் கை கொடுக்கும் என்று நம்புகிறோம். 

யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதில்தான் நாம் மன உறுதியோடு இருக்க வேண்டும். நாம் யாரை வர கூடாது என்று எண்ணுகிறோமோ அவர்கள் வராத படிக்கு நம்முடைய வாக்கை சிதறாமல் அத்தகைய கட்சியை தோற்கடிக்கும் நிலையில் உள்ள பிரதான கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமே தவிர கண்ட கண்ட கட்சிகளுக்கெல்லாம் வாக்களித்து நாம் விரும்பாதவர் மீண்டும் வெற்றி பெற வழி வகை செய்து விட கூடாது! அந்த வரிசையில் நாம் இந்த தேர்தலில் ஒதுக்கித் தள்ள வேண்டியவர் யார் என்று பார்க்கலாம்.


யாரை ஒதுக்க வேண்டும்?

இது பாராளுமன்ற தேர்தல் என்பதால் கடந்த பாராளுமன்றங்களில் சரிவர செயல் படாத கட்சியை மட்டுமே நாம் பிரித்துப் பார்த்து ஒதுக்க வேண்டும். கடந்த பாராளுமன்றங்களில் தமிழகத்திலிருந்து காங்கிரசு மற்றும் தி.மு.க. மட்டுமே அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றதோடு மத்தியில் ஆட்சியையும் அமைத்தார்கள். அவர்களின் ஆட்சியினால் தமிழ், தமிழர் மற்றும் தமிழகம் நன்மைகலை கண்டதா என்பதை நாம் சீர் தூக்கிப் பாக்க வேண்டும். இவர்கள் ஆட்சி கடந்த பத்தாண்டுகளாக நடை பெற்ற பொது தமிழகம் சந்தித்த இன்னல்கள் என்னென்ன என்று பார்த்தால் கண்ணில் கண்ணீருக்கு பதில் ரத்தம் வடியும்.
1. காவிரி பிரச்சனையில் காங்கிரசு அரசு கர்நாடகாவிற்கு மட்டுமே சாதகமாக நடந்து கொண்டது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கித்தான் அவ்வப்போது நீரை பெற்று வந்தோம். கூட்டணி கட்சியான தி.மு.க.இதை தட்டிக்கேட்க கூட திராணியில்லாமல் பயந்து கிடந்தது. காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் காலம் தாழ்த்தியே வந்தது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையிலேயே அதுவும் வெளியிடப்பட்டது. 
2. கச்சத்தீவு பிரச்சனை இன்று வரை ஓயாத தொல்லையாக இருக்க காங்கிரசு மற்றும் அதன் கூட்டணி கட்சியான தி.மு.க. மட்டுமே காரணம். மீனவருக்கு வலைகளை உலர்த்த பயன் படும் இடமாக ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டாலும் அதை தமது சொத்தாக உரிமை கொண்டாடும் இலங்கையை கேட்க நாதியற்று போனது தமிழகம். 
3. அவ்வப்போது மீனவர் கொல்லப்படுவதும், கடத்தப்படுவதும், தொடர்கதையாகிவிட்டதற்கு மத்திய அரசு மட்டுமே காரணம். 
4. முல்லைப்பெரியாறு மற்றும் பாலாறு பிரச்சனைகளில் தமிழக நலன்களுக்கு எதிராகவே நடந்து கொண்டது காங்கிரசு திமுக அரசு.
5. இலங்கை தமிழன் கொன்று நசுக்கப்பட்டு பல மனித உரிமை மீறல்கள் நடைபெறவும் காரணமாக இருந்ததோடு மட்டுமல்லாமல் அவற்றை கண்டுக்கொள்ளாமல் தமிழர்களை அனாதை ஆகியவை இந்த காங்கிரசு திமுக அரசு. 
6. தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் உணவு பொருள் வழங்கல் போன்ற மததிய உதவிகள் பல வற்றிலும் மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடந்துக் கொண்டது மத்திய காங்கிரசு திமுக அரசு.
கடந்த பத்தாண்டுகளில் இது போன்று பல இன்னல்களை விளைவித்தவை இந்த அரசுகள்.
7. செம்மொழி அந்தஸ்தை தமிழுக்கு வழங்கியதாக கூறி மோசடி செய்தவை இந்த மத்திய அரசு. கல் தோன்றா காலத்து முன்தோன்றிய  தொன்மையான தமிழ் மொழியை நேற்று மற்றும் அதற்கு முன் தினம் தோன்றிய மொழிகளுக்கெல்லாம் செம்மொழி அந்தஸ்தை அளித்து அந்த மொழிகளின் வரிசையில் தமிழையும் சமமாக அமர்த்தி கேவலப்படுத்திவிட்டது இந்த அரசு. தமிழின் பெருமையையும் தொன்மைய்ம் உதாசீனப்படுத்தப்பட்ட காங்கிரசு திமுக அரசுகள். 

8. தமிழ்நாட்டு அடிப்படை சேவைகளான ரயில்சேவை மின்தேவை மற்றும் விவசாய வளர்ச்சி போன்றவற்றில் சரிவை ஏற்படுத்தி அத்துறைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன இந்த கட்சிகள்.
9. இன்னும் எண்ணிலடங்கா மோசடிகளையும், குற்றங்களையும் தமிழ், தமிழர் மற்றும் தமிழகத்தின் மீது நடத்தி விட்டு இன்று உத்தமர்களை போல வேடமிட்டு வாக்கு கேட்க இக்கட்சிகள் தயாராகிவிட்டன.
மேற் கூறிய காரணங்களுக்காக நாம் காங்கிரசு மற்றும் தி,மு.க.வை எக்காரணம் கொண்டும் தேர்ந்தெடுத்துவிட கூடாது. அக்கட்சிகள் ஆட்சி அமைப்பதும் ஒன்று தான் தமிழ், தமிழர் மற்றும் தமிழகத்தை குழி தோண்டி புதைப்பதும் ஒன்றுதான். தன்மானம் மிக்க, சுய அறிவுள்ள, எதிர்கால சந்ததியினரின் நலனில் அக்கறை உள்ள எந்த ஒரு தமிழனும் காங்கிரசு மற்றும் தி.மு.க. கட்சிகளுக்கு வாக்களிக்க கூடாது. ஆதிலும் தி.மு.க மத்தியில் யார் ஆண்டாலும் அந்த ஆட்சியில் அங்கம் வகிப்பது ஒன்றே கொள்கையாக கொண்டு இயங்கும் குடும்ப நலக் கட்சி. 1996 தொடங்கி அக்கட்சி தேவகௌட, குஜரால், வாஜ்பாய், மன்மோகன் சிங் என்று அனைத்து பிரதமர்கள் தலைமையின் கீழும் கொழுத்த இலாகாக்களை பெற்று தம் குடும்பத்தை செழுமைப் படுத்திக்கொண்டுவிட்டது. தமிழனை அடகு வைத்து தம் வாழ்க்கையை ஒளிர செய்யும் ஒரே கட்சி தி.மு.க மட்டுமே அதை நாம் எக்காரணம் கொண்டும் வளர விடக்கூடாது. இவர்கள் வெற்றிபெற்றால் மத்தியில் அமையும் எத்தகைய அரசிலும் இடம் பிடித்து விடுவார்கள். சுயமரியாதை எள்ளளவும் இல்லாதவர்கள். 

தி.மு.க., காங்கிரசு, மற்றும் சிறிய கட்சிகளை தள்ளிவிட்டு பார்த்தால் மீதம் இருப்பவை அ.தி.மு.க. வும் தே .மு.தி.க. அணியும் தான். 

தே.மு.தி.க. அணி:

தே.மு.தி.க. அணியில் பா.ஜ.க., ம.தி.மு.க., பா.ம.க., ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகள் எந்த ஒரு செயல் திட்டமும் இல்லாமல் வட மாநிலங்களில் நிலவும் பா.ஜ.க. ஆதரவு நிலையை கண்டு அந்த வெற்றியில் தாமும் பயன் அடைந்து விட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மட்டுமே கூட்டணி அமைத்துள்ளன. மோடி அலை என்று கூறி அந்த அலை தங்களை கரை சேர்த்து விடும் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். வேறு எந்த ஒரு இலக்கும் இன்றி இவர்கள் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த கட்சிகளை வெறுப்பவர்கள் கூட பா.ஜ.க. அணி என்று நம்பி இந்த அணிக்கு வாக்களித்து விடக் கூடும். அதன் பயனை இவர்கள் அடைந்து விடக் கூடாது. பா.ஜ.க வெறும் எட்டு இடங்களில் மட்டுமே போட்டிஇடுகிறது. அதிலும் அவர்கள் கேட்காத, விரும்பாத தொகுதில் மூன்றில் நிற்பதற்கு வேட்பாளர்கள் எவருமே முன் வரவில்லை. இந்த பரிதாப நிலையில் இருக்கும் பா,ஜ.க.விற்கு வாக்களிப்பதாக நம்பி மக்கள் தே.மு.தி.க., ம.தி.மு.க. மற்றும் பா.ம.க விற்கு வாக்களித்து விடக்கூடாது. அவர்கள் தேர்தலுக்கு பிறகு பா.ஜ.கவிற்கு தான் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று சொல்ல முடியாது. வேறு அணிக்கு வாய்ப்பு ஏற்பட்டால் அங்கேயும் சென்று விடுவார்கள். இந்த தேர்தலில் பெரிய கட்சிகள் இவர்களை உதாசீனப் படுத்தி விட்டதால் மட்டுமே தமிழகத்தில் இல்லாத பா,ஜ.க. வை இவர்கள் உயரத் தாங்கி பிடிக்கிறார்கள். 

அ.இ.அ.தி.மு.க. கட்சி:

மேற்கூறிய கட்சிகளுக்கு இல்லாத ஒரு பலம் அ.இ.அ.தி.மு.க. இந்த தேர்தலில் உள்ளது. அது அந்த கட்சி ஒரு பெண்மணியால் வழி நடத்தப்படுவதும், அவர் தேர்தலுக்குப் பின் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளதும் அந்த கட்சிக்கு மிகப்பெரிய பலங்கள். அவ்வாறு தேர்ந்தேடுக்கப்படுவாரேயானால் அப்பதவியை அலங்கரிக்கும் முதல் தமிழர் என்ற பெயரும் பெருமையும் தமிழகத்திற்கு கிடைக்கும். உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக ஒரு தமிழர் அமைவார் என்ற சிறப்பு உலக தமிழர்கள் அனைவருக்கும் இனிமையான செய்தி அல்லவா?

அ.இ.அ.தி.மு.க. கடந்த பாராளுமன்றங்களில் ஆட்சியில் அங்கம் வகிக்க வில்லை. அது கடைசியாக 1998 இல் வாஜ்பாய் தலைமையில் அங்கம் வகித்தது. அப்போது அக்கட்சி மத்திய அரசை சென்னையை நோக்கியே தன பார்வை இருக்கும்படி வைத்துக் கொண்டது. இதற்கு நேர் எதிராக மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடந்த தி,மு.க. வின்  நிலையை எண்ணிப் பார்த்தால் தமிழனின் மானமும் மரியாதையும் காங்கிரசிடம் அடகு வைக்கப்பட்டிருந்தது புலப்படும். தமது வேண்டுகோளை ஏற்காத வாஜ்பாய் அரசை கவிழ்த்த அ.இ.அ.தி.மு.க. எங்கே, தமிழோ, தமிழனோ, தமிழகமோ காங்கிரசு அரசால் கேவலப்பட்டு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று அதை தட்டிக்கேட்க கூட நாதியற்று கிடந்த தி.மு.க. எங்கே? ஆகவே அ.இ.அ.தி.மு.க. அரசு தமிழர் நலன்களில் அக்கரசி செலுத்தும் முதல் கட்சியாக இருக்கும்.

மேலும் மின்தட்டுப்பாடு போன்ற காரணங்களுக்காக நாம் அ.இ.அ.தி.மு.க. விற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து விடக்கூடாது. அவற்றிற்கு நிரந்தர தீர்வு காண இவ்வரசு முயன்று  வருகிறது என்பது நாம் நேரிடையாகவே காண்கிறோம். மேலும் ஜெயலலிதாவிற்கு எதிராக மத்திய அரசு செயல் பட்டதாலேயே தமிழகம் எதிர் பார்த்த வளர்ச்சி அடைய முடியவில்லை. ஆகவே மாநில அரசுக்கு அனுசரணையான அரசு அமைய வேண்டும். அதற்கு நாம் தி.மு.க. அல்லது தே.மு.தி.க.வை தவிர்த்து அ.இ.அ.தி.மு.க. விற்கு வாக்களிப்பதே நன்மைதரக் கூடியதாக இருக்கும். 

ஜெயலலிதாவின் தலைமையில் அமைந்த அ.இ.அ.தி.மு.க. விற்கு வாக்களிப்பதால் மட்டுமே தமிழ், தமிழர், தமிழக நலன் பாதுகாக்கப்படும். இதற்கு நிரூபணமாக கடந்த மூன்றாண்டுகளில் அவர் தமிழ், தமிழர், தமிழக நலன்களுக்கு ஆதரவாக பல நிலைகளில், பாராளுமன்றம், சட்ட மன்றம் உச்ச நீதி மன்றம் என்று தமது போராட்டங்களை தொடர்ந்து வருவதை கூறலாம். மற்றையோருக்கு வாக்களிப்பதன் மூலம் நாம் நமது எதிர் காலத்தை சூனியம் ஆக்கி கொள்கிறோம் என்பதே உண்மை. மாறாக அ.இ.அ.தி.மு.க. விற்கு வாக்களிப்பதால் நமது குரல் பாராளுமன்றத்தில் மட்டுமல்லாமல் உலக அரங்கிலும் ஓங்கி ஒலித்து தமிழ், தமிழர் மற்றும் தமிழக நலன்களுக்கு அரணாக அமையும் என்பது உறுதி.  
        

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

அடடா! வியக்க வைக்கும் காங்கிரஸ் அரசு!!

இந்த மத்திய காங்கிரஸ் அரசின் செயல்பாட்டு வேகம் மிகவும் வியக்க வைக்கிறது! என்னே ஒரு வேகம், என்னே ஒரு கொள்கை பிடிப்பு! புல்லரிக்கிறது. என்னவென்று யோசியுங்கள் பார்ப்போம்! இலங்கை ராணுவத்தால் இன்னலுக்கு ஆளாகும் மீனவர்களை மீட்பதா?, அவ்வப்போது எல்லையில் தொல்லை தரும் சீன, பாகிஸ்தான் ராணுவத்திற்கு பதிலடி கொடுப்பதா?, மக்களின் பிரதான பிரச்சனைகளான குடிநீர், சுகாதாரம் சாலை வசதி மேம்பாடு என்று எதாவதா? என்னெவென்று சொல்வது! ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை! ராஜீவ்  கொலையாளிகளை விடுதலை செய்ய கூடாது. அப்படி செய்தால் அது மிகப்பெரிய இழப்பு, இப்படி கொந்தளித்து உச்ச நீதி மன்றத்தில் தடையாணை பெற்றிருக்கிறது மத்திய அரசு! அதுவும் தமிழக அரசு அவர்களை விடுவிக்கிறேன் என்று அறிவித்த 24 மணி நேரத்திற்குள் இந்த தடையாணை பெறப்பட்டுள்ளது. இவ்வளவு விரைந்து செயல்பட வேண்டிய அளவிற்கு தலைபோகிற காரியமா இது? அவர்களை விடுதலை செய்தால் நாட்டின் இறையாண்மை கெட்டுப்பொகுமா? என்னவென்றே புரியவில்லையே! இந்த அரசு இவ்வளவு வேகத்துடனும் சுறுசுறுப்புடனும் செயல்படும் நிலையை பார்த்தால் இனி எதிர்காலத்தில் இந்தியாவிற்கு எந்த ஒரு ஆபத்தும் வரவே வராது.

அடப்பாவிகளா! இவ்வளவு வேகத்தில் பத்தில் ஒரு பங்கையாவது காவிரி விஷயத்தில் காட்டி இருந்தால் எப்போதோ கெசட்டில் வெளிவந்து மேலாண்மை குழுவை அமைத்து இன்று பிரச்சனை இல்லாமல் தண்ணீர் வந்திருக்குமே! முல்லைபெரியாறு பிரச்சனை நீர்த்து போய் இருக்குமே! பல தமிழக மீனவர்கள் வாழ்வாதாரமும், வாழ்வும் காக்க பட்டிருக்குமே. இலங்கை போன்ற சுண்டைக்காய் நாடுகள் கூட நம்மை பார்த்து கேலி செய்யும் நிலை வந்திருக்காதே. இந்திய ரூபாயின் மதிப்பு அதல பாதாளத்தில் வீழ்ந்திருக்காதே. சுவிஸ் நாட்டிலிருக்கும் பல்லாயிரம் கோடி ரூபாய் நோட்டுக்கள் இந்த நாட்டிற்குள் எப்போதோ வந்திருக்குமே. எலிகளும், நாய் நரிகளும் தின்னும் உணவு தானியங்கள் பாதுகாக்கப்பட்டிருக்குமே! கங்கையும் காவிரியும் இனைந்து வறட்சி நீங்கி இருக்குமே. நாட்டில் மின்தட்டுப்பாடு நீங்கி, தொழில் வளம் பெருகி இருக்குமே! ஆந்திர மக்கள் பங்காளி சண்டையில் இறங்கி இருக்க மாட்டார்களே! இதில் எல்லாம் காட்டாத வேகம் மேற்படி நிகழ்வில் மட்டும் காட்ட வேண்டிய அவசியம் என்ன? விடை மிகவும் எளிது! விடுதலை ஆக போகிறவர்கள் சோனியா குடும்பத்திற்கு ஆகாதவர்கள் அவ்வளவே! 

எப்போதெல்லாம் சோனியா குடும்பத்திற்கு ஒரு நன்மை நிகழுமோ அப்போதெல்லாம் இந்த அரசு விரைந்து செயல் பட்டிருக்கிறது. அவர்கள் குடும்பத்திற்கு காலணா பயன் இல்லாத செயல்களை கிடப்பிலேயே போட்டிருக்கிறது. குவாத்ரோச்சியை விடுதலை செய்வதாக இருக்கட்டும், அவர் வங்கி கணக்கிலிருந்து உடனே பணம் எடுத்துக்கொள்வதாக இருக்கட்டும், கேரளா மீனவர்களை கொன்ற இத்தாலிய கடற்படை வீரர்களை அந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக இருக்கட்டும், வாத்ரா நில மோசடியை கண்டுகொள்ளாமல், அதை விசாரணை செய்த அதிகாரியை மாற்றுவதாக இருக்கட்டும், 2ஜி வழக்கை இழுப்பதாக இருக்கட்டும், அதை விசாரிக்கும் அதிகாரிகளை தொல்லை படுத்துவதாக இருக்கட்டும், இப்படி அந்த குடும்பத்தையே மையமாக வைத்து செயல்படும் ஒரு அரசு இந்திய நலன், குறிப்பாக தமிழக நலன் என்று வந்தால் அதை குழி தோண்டி புதைக்க தயாராக இருக்கும். முதல்வர் பிரதமருக்கு எத்தனை கடிதங்கள் எழுதுகிறார்! மீனவர் பிரச்சனை, காவிரி முல்லை பெரியாறு, பொதுவிநியோக பொருட்கள், நிதியுதவி, என்று பல கோரிக்கைகளை வைத்து வாராவாரம் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்! ஒன்றிற்காவது "ஒப்புகை" யாவது வந்திருக்குமா! இதில் எல்லாம் என்ன அக்கறை காட்டினார்கள். ஒன்றும் இல்லை. ஆனால் ராஜீவை கொன்றவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை அலை கழித்திருக்கிறார்கள்.

ராஜீவ் கொலையாளிகளை பொருத்தவரையில் அவர்களுக்கு தண்டனை வழங்கப் பட வேண்டும் என்று தமிழகம் என்றுமே நினைத்து வந்திருக்கிறது. ஆயினும் அவர்கள் போதுமான காலம் சிறையில் இருந்து விட்டதால் மேலும் மரணமோ, சிறையோ வேண்டாம் என்று எல்லா மக்களும் நினைக்கிறார்கள். அந்த பொதுக் கருத்தை ஆமோதித்தே அரசு விடுதலை செய்ய முன் வந்தது. அதுவும் தானாக செய்ய வில்லை. அவர்களை விடுவிப்பது அரசின் உரிமை என்று உச்சநீதிமன்றம் சொன்ன பிறகே செய்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகளை ஒரு காலத்தில் ஆதரித்த தமிழ்மக்கள் ராஜீவ் கொலைக்கு பிறகு அவர்களை கண்டிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். அடுத்தடுத்த தேர்தல் களில் விடுதலைப் புலிகளை ஆதரிப்போருக்கு ஆதரவு இல்லை என்று தெள்ளத் தெளிவாக சொன்னவர்கள் தமிழ் மக்கள். ஆயினும் இன்று அவர்கள் ராஜீவ் கொலையாளிகளுக்கு இறக்கம் காட்ட தயாராக இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்வதில் எந்த ஒரு இழப்பும் அநீதியும் ஏற்பதாது என்று எண்ணுகிறார்கள். உச்ச நீதிமன்றம் சொன்னப்பிறகு அனைவரின் குரலும் ஒன்று சேர்ந்துதான் ஒலிக்கிறது. ஆனால் சோனியா குடும்பத்திற்கு ஆகாத செயலை எப்படி தடுப்பது என்று யோசித்த மத்திய அரசு இதை தடுக்க முன் வந்துள்ளது. பெரும்பான்மை தமிழ் மக்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தி விட்டது. 

மத்திய அரசு சொல்லும் காரணம் குழந்தைத்தனமாக உள்ளது. நடைமுறைகள் பின்பற்றப் படவில்லை. தடா வழக்கின்படி அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்கிறது. இத்தாலிய மாலுமிகளை பாதுகாப்பாக அனுப்பினார்களே அதில் எந்த நடை முறை பின்பற்றப் பட்டது? மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலேயே தெலங்கானா சட்டம் இயற்றப்பட்டதே அது என்ன நடைமுறை? இரவோடு இரவாக கூடங்குளம் இயங்கிவிட்டது என்று அறிவித்தார்களே அதில் என்ன நடைமுறை உள்ளது? குவாத்ரோச்சியை CBI கைது செய்யாமல் இருக்க பத்திரமாக இத்தாலி வரை சென்று விட்டுவிட்டு வந்தாரே அன்றைய சட்ட அமைச்சர் அது என்ன நடை முறை? சிறுநீர் கழிக்க கழிவறை சென்றிருந்த சீதாராம் கேசரியை அந்த அறையிலேயே பூட்டிவிட்டு, அவர் அமர்ந்திருந்த நாற்காலியில் சோனியாவை அமரவைத்து  கட்சி தலைவராக அறிவித்தார்களே அதில் என்ன நடைமுறை உள்ளது? இப்படி எந்த ஒரு செயலிலும் நடைமுறையை உதாசீனப் படுத்திய இவர்கள் இன்று நடைமுறையை குறித்து பெரிதும் கவலை படுகிறார்கள். அப்படியே நடைமுறை மீறப்பட்டிருந்தாலும் பொது நலன் கருதி அதை கண்டுக் கொள்ளாமல் இருப்பதே பெருந்தன்மை! இவர்கள் பெரிய மனிதர்கள் அல்லவே!

தடா போன்ற மத்திய சட்டத்தின்படி கைதானவர்களை விடுதலை செய்வது மாநில அரசின் உரிமை இல்லை என்றால் "மாநில அரசே அவர்களின் விடுதலை குறித்து பரிசீலித்து அவர்களை விடுதலை செய்யலாம்" என்று உச்சநீதி மன்றம் எப்படி கூறும்? உச்ச நீதிமன்றத்தைக் காட்டிலும் சட்டம் தெரிந்த மேதாவிகளா இவர்கள்! ஆக எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் சோனியாவிற்கு வேண்டப்படாதவர்கள் என்ற ஒரே பாவத்திற்காக அவர்களை மீண்டும் சிறையில் வைத்திருக்க வழக்கு மேல் வழக்கு என்று நீட்டிக்க முற்பட்டிருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தி கொலைக்கு நீதி வேண்டும் என்று முழங்கும் காங்கிரஸ் கண்றாவிகள் அந்த மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்கிறார்களா? என் அப்பா தியாகி ஆகி விட்டார் என்று கூவும் இளவரசர் ஒட்டுமொத்த தியாகிகளையும் கொச்சைப்படுத்தியுள்ளார். வலிய சென்று வலியை ஏற்படுத்திக் கொண்டு மாண்ட அந்த சுதந்திரப் போராட்ட வீரர்களைத் தான்  தியாகிகள் என்று கூற முடியும். உயிர் துறக்க விரும்பாமல் உயிர் போனவர்கள் எல்லாம் தியாகிகள் என்றால் இன்று நாட்டில் உள்ள அனைவரின் மூதாதைகளும் தியாகிகள்தான். 

இந்த கூத்தில் ஜெயலலிதா எது செய்தாலும் அதை கண்டிக்க, கொச்சைப் படுத்த தயாராக இருக்கும் கருணாநிதியும் அவரது கூடாரமும் இன்று இரட்டை நாக்கு வசனங்கள் பேசி வருகிறது. முதல் நாள் ஜெயலலிதாவை பாராட்டிய கருணாநிதி அடுத்த நாள் அவர் காட்டிய அவசரம் விடுதலையை தாமதப் படுத்தி உள்ளது என்கிறார். முதல் நாள் பாராட்டும்போது அது அவசரம் என்று தெரியவில்லையா? தீர்ப்பு வந்த நாளில் இன்றே கூட மாநில அரசு விடுதலை செய்திருக்கலாம் என்று ஆலோசனை சொன்னாரே அது அவசரம் இல்லையா? கையாலாகத புருஷன் அடுத்தவன் குழந்தைக்கும் தனது இனிஷியலை போடுவானாம்! தடையாணை வாங்கியுள்ள மத்திய அரசை சாட தைரியம் இல்லாத முதுகெலும்பில்லாத இந்த மண் புழுக்கள், தடாலடி நடவடிக்கை எடுத்த முதல்வரை குறை சொல்லுகிறார்கள். எங்கே மத்திய அரசை குறை சொன்னால் தனது குடும்பத்திற்கு ஆபத்து வருமோ என்று நடுங்கிக்கொண்டிருக்கும் இந்த பயந்தாங்கொள்ளிகள் முதல்வரை குறை சொல்வதில் எந்த ஞாயமும் இல்லை. இவர்கள் அதற்கான தகுதியை என்றோ இழந்து விட்டார்கள். 

இன்று வெட்கம் இல்லாமல் நீட்டி முழக்கும் கருணாநிதி அன்றே கருணை மனுவை ஏற்று மூவருக்கும் மரண தண்டனையிலிருந்து பொது மன்னிப்பு வழங்கி இருந்தால் இன்று இவ்வளவு தூரம் இந்த பிரச்சனை வந்திருக்காது. 2000 லேயே அவர்கள் விடுதலை ஆகி இருப்பார்கள். இவர் தயவில் மத்திய ஆட்சி நடக்கும் நிலையில் பிரதீபா பாட்டீலாவது மன்னிப்பு வழங்கி இருந்தாலும் கூட சிக்கல் இருந்திருக்காது. அதையெல்லாம் கேட்க அவருக்கு எது நேரம். எந்த வழமையான துறையை பெறலாம், எதில் காசு சம்பாதிக்கலாம், குடும்பத்தை எப்படி வளப்படுத்தலாம் என்றே தனது ஆட்சியையும் அதிகாரத்தையும் பயன் படுத்தியவருக்கு இவர்களின் உயிரைப் பற்றி என்ன ஒரு கரிசனம் இருந்திருக்கப் போகிறது? இன்று அகில உலகிலும் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசியல்வாதி, தமிழர் நலனுக்காக எந்த ஒரு முடிவும் விரைவாகவும், தைரியமாகவும் எடுக்க தயங்காதவர், அடுத்து வரும் ஆட்சியில் இலங்கை அரசுக்கு நெருக்குதல் கொடுக்கும் வல்லமை கொண்டவர் எனறு இன்று உலக தமிழ் மக்களால் பெரிதும் எதிர் பார்க்கப்படுபவர் ஜெயலலிதா! இதுகாறும் கருணாநிதி வசம் இருந்த உலக தமிழினத் தலைவர் என்ற பட்டம் பறிபோன நிலையில், அவரின் சாயம் வெளுத்து போன விரக்தியில் ஜெயலலிதா மீது காழ்புணர்வு காட்டுகிறார். இதை தமிழின மக்கள் மட்டுமில்லாமல் உலக மக்களே கூட உணர்ந்து விட்டார்கள். 

இன்றைய நிலையில் மத்திய அரசு இந்த பிரச்சனையை பெரிது படுத்தாமல் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக செயல் படுவதுதான் விவேகம். ஏற்கெனவே தமிழகத்தில் காங்கிரஸ் இருக்கும் நிலையில் இப்படி எல்லாம் தமிழின விரோத செயல்களில் ஈடுபட்டால், தமிழகத்தில் பேருக்கு கூட காங்கிரஸ் இருக்கும் என்று சொல்ல முடியாது. அவர்களோடு கூட்டணி வைக்கும் தைரியமும் மற்ற கட்சிகளுக்கு இல்லாமல் போய்விடும்! சோனியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு இன்று காங்கிரசை காப்பாற்ற போராடும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். கொன்ற பாவமும் தின்ற பாவமும் விடுமா என்ன? 

திங்கள், 17 பிப்ரவரி, 2014

வயதானவரையா வாட்டி எடுப்பது...?

தி.மு.க.வின் பத்தாவது மாநில மாநாடு (15,16/02/2014) திருச்சி நகரமே நெருக்கும் வண்ணம் நடைபெற்றது! இதில் பலர் பங்கேற்று தங்களது வீர உரையாற்றினார்கள். கழக கண்மணிகளும் தங்கள் பங்கிற்கு முழு SPIRIT ட்டோடு கலந்து கொண்டு பகுத்தறிவு பணியாற்றினார்கள். அரசியல் ஒரு புறம் இருக்க, இதில் நான் கண்டு வேதனை பட்ட விஷயம் ஒன்று உண்டு. அதில் கழக தலைவர் திரு. மு. கருணாநிதி அவர்கள் நடத்தப்பட்ட விதம்தான்.
அவருக்கோ மிகவும் தள்ளாத வயது (எதையும் தள்ளாத வயதும் கூட...!). சக்கர நாற்காலியில்தான் வாழ்கை என்று ஆகிவிட்டது! மனதுக்கும் உடலுக்கும் ஓய்வு தேவைப்படும் நேரம்! அப்படிப்பட்ட முதியவரை சுமார் எட்டு மணிநேரம், ஒன்பது மணிநேரம் என்று இரண்டு தினங்களும் இருக்கையில் அமர வைத்தே கூட்டத்தை நடத்தினார்கள். அவருடைய இயலாமையை பார்க்க சகிக்க வில்லை! கண்களில் நீர் வந்து விடும் போன்று இருந்தது! கொடி ஏற்றும்போது கொடி கயிற்றை பிடிக்க கூட பலம் இல்லை. தி.மு.க வலைதளத்தை தொடங்கி வைக்க TAB ஐ பிடித்துக்கொள்ள கூட இயலவில்லை! மிகவும் சிரம பட்டார். அறிவு கூர்மையும், நினைவாற்றலும் அவருக்கு இன்னமும் திடமாக இருந்தாலும் உடலால் அவர் படும் துன்பம் மிகவும் பரிதாபத்திற்குரியது.

பிள்ளைகளும் சரி கட்சிக்காரர்களும் சரி இதனை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். பிள்ளையாரை போல இருக்கையிலேயே கிடத்தி வசூலிக்க மட்டுமே அவர்கள் குறியாக இருக்கிறார்கள். தள்ளாத மனிதனின் உடல் நிலை குறித்து அவர்கள் சிறிதும் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை. நான் திமுக அனுதாபியோ, அல்லது ஆதரவாளனோ அல்ல. இருப்பினும் ஒரு வயதான முதியவரை பலர் முன்னிலையில் பொதுவில் அவர்கள் நடத்திய பாங்கு என்னை வேதனை கொள்ள செய்தது. அரசியல் வேண்டியதுதான்! அதற்காக வயதானவரையா வாட்டி எடுப்பது...? பிள்ளைகள் ஒற்றுமையாக இருக்கலாம். கட்சிக்காரர்கள் தங்கள் பிணக்குகளை இணக்கமாக தீர்த்துக்கொள்ளலாம். இது போன்ற மாநாடுகளில் ஒரு மணி அல்லது அரை மணி நேரம் மட்டுமே அவரை இருக்க செய்யலாம். அவருக்கு பிடித்தமான இலக்கிய, காவிய, கவியரங்குகள் நடத்தலாம், மானாட மயிலாட போன்ற நிகழ்வுகளில் அவரை பங்கு கொள்ள செய்யலாம். இதையெல்லாம் விட்டு விட்டு, ஏதோ பொருட்காட்சி போல இரண்டு நாட்களும் இருக்கையிலேயே அவரை இருத்தி மிகவும் வதைத்து சித்திரவதை செய்திருக்கிறார்கள். பேருந்துகளில் தள்ளாதவர் வந்தால் எழுந்து இருக்கையை விட்டுத்தரும் தரும சிந்தனை கொண்ட தமிழகத்தில், ஓட்டுக்காக முதியவர் ஒருவர் வருத்தப்பட்டு கொண்டிருந்ததை கண்டு பொறாமல் எழுதிய எழுத்துதான் இது. மனித பண்பாளர் யாவரும் ஏற்பார்கள். மற்றபடி இதில் அரசியல் எதுவும் இல்லை.

புதன், 30 அக்டோபர், 2013

காமன்வெல்த் மாநாட்டில் கலந்துக்கணுமா?

இப்போ தமிழ்நாட்டுல அனல் பறக்க விவாதம் நடக்கிறது. எதை பற்றி? காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துக்கலாமா? வேணாமா? இதுத்தான் படிச்சவன், பாமரன் என்கிற பாகுபாடின்றி அனைவரும் நீந்தும் ஒரே சங்கமம். நாம மட்டும் சும்மா இருந்துட்டா நல்லாவா இருக்கும்? அப்படி இருந்துட்டா ஒன்னுமே தெரியாதவன்னு முத்திரை குத்திடுவாங்க. இன்னும் சொல்லப்போனா தமிழின துரோகின்னு கூட பட்டம் கொடுத்திடுவாங்க. அதுல இருந்து தப்பிக்கணும்னா இப்படி ஏதோ எழுதி நாமளும் அறிவு ஜீவித்தான்னு காட்டிக்கணும் இல்லையா? அதான்! மற்றபடி நம்ம சொல்லை கேட்டு உலகம் எந்த பாதிப்புக்கும் ஆளாக போகறதில்ல! நாங்களும் படிச்சிருக்கம்லா!!

வருகிற 11/10/2013 அன்று இலங்கையில் நடக்க இருக்கிறது இந்த மாநாடு. ஒரு காலத்துல இங்கிலாந்து அரசிடம் அடிமை பட்டுக்கிடந்த நாடுகள் எல்லாம், சுயாட்சி பெற்றபின்பும், தங்களுடைய அடிமைகால நினைவுகளை அசைபோட, தாங்களும் அடிமையா இருந்து குறித்து பெருமை பட, என்று பலதுக்குமாக இந்த ஒரு கூட்டமைப்பு உருவானது. உலகில் இன்று ஐ.நா. சபையே முக்கியத்துவம் இழந்து அமெரிக்க நாட்டாமையிடம் சிறை பட்டிருக்க, இந்த காமன்வெல்த் கூட்டமைப்பு மட்டும் என்ன தைரியத்தில் இயங்குகிறதோ தெரியவில்லை. நாலு பெற பார்க்கலாம், பேசலாம், பழகலாம், டி, காபி, குடிச்சி டூர் போகலாம். ஒரு குரூப் போட்டோ எடுத்துக்கலாம். இதை தவிர இந்த மாநாடோ அல்லது இந்த கூட்டமைப்போ ஒன்றும் செய்யப்போவதில்லை. இந்த மாநாட்டிலிருந்து பலமுறை வெளியே போய் உள்ளே வந்த பாகிஸ்தான் ஒன்றையும் இழந்து விட வில்லை. தொடக்கம் முதலே இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இந்தியா ஒன்றும் பிரமாதமாக எதையும் சாதிக்கவும் இல்லை. எல்லாம் வேற்று கூட்டங்கள். தெரு முனையில் நின்று வெட்டிப்பேச்சு பேசும் விடலைகளை போன்றதுதான் இந்த அமைப்பும். அணி சேரா நாடு கூட்டமைப்பு என்று ஒன்று இருக்கிறது. அதனால் உலகிற்கோ அல்லது அதன் உறுப்பினர்களுக்கோ என்ன நன்மை ஏற்பட்டதோ அதே போன்ற ஒரு நன்மைதான் இந்த கூட்டமைப்புக்கும் ஏற்படுகிறது. 

அமெரிக்காவும் ஒரு காலத்தில் இங்கிலாந்திடம் அடிமைப்பட்டு கிடந்த நாடுதான். ஆனாலும் அது இந்த கூட்டமைப்பில் இடம் பெற வில்லை. உலகின் பல வல்லரசுகளோ, அல்லது பொருளாதார ஜாம்பவான்களோ இந்த அமைப்பில் இடம் பெற்றிருக்க வில்லை. வடிவேலுவின் தலைமையிலான வாலிபர் சங்க உறுப்பினர்களுக்கு இருக்கும் அக்கறை கூட துளியும் இல்லாத நாடுகள் தான் இந்த கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ளன. இவர்கள் ஒன்று கூடி தின்று கழித்து பொழுது போக்கவே வரும் வாரம் ஒரு மாநாட்டை இலங்கையில் நடத்த இருக்கிறார்கள். இதில் இந்தியா கலந்து கொள்ள வேண்டும் என்று ஒரு அணியும், கூடவே கூடாது என்று ஒரு அணியும் கூப்பாடு போடுகின்றன. 

தமிழனுக்கு இலங்கை அநியாயம் செய்து விட்டது.ஆகவே அங்கே போய் அந்த நாட்டை கவுரவிக்க கூடாது. அந்த நாட்டை தனிமை படுத்த வேண்டும். உலக அரங்கில் தாங்கள் செய்த தவறை அந்த நாடு ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழர்களுக்கு சரி சம உரிமை அளித்திட வேண்டும் - இதுதான் பங்கு பெற கூடாது என்பவர்களது கோரிக்கை. தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடம் இல்லை. ஆனால் இந்த மாநாட்டை புறக்கணித்தால் இலங்கை அப்படி வழிக்கு வருமா? ஆயுதம் கொடுத்த பாவத்தை சுமந்து நிற்கும் இந்தியாவும் அல்லவா தனிமை படுத்த வேண்டிய நாடு? அப்படி தனிமை படுத்தப்பட்டால், இலங்கை சீனா,  பாகிஸ்தானுடன் நட்புறவு கொண்டு நம்மை சீண்டி பார்க்காது என்பதற்கு எந்த ஒரு உத்தர வாதமும் இல்லை. 

இலங்கை நம்முடைய நட்பு நாடு, காமண் வெல்த் மாநாட்டில் நாம் பங்கு பெறத்தான் வேண்டும். அப்படி பங்கேற்று தமிழர்களின் னியாலி குறித்து நாம் பேச வேண்டும். அப்போதுதான் உலக நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் - இது பங்கு பெற வேண்டும் என்போருடைய வாதம். அப்படி பங்கேற்று இந்திய அரசு முன்வைக்கும் வாதங்களை இலங்கை ஏற்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இந்த மாநாட்டில் இலங்கையை கண்டித்து ஒரு தீர்மானமோ அல்லது, தமிழர்களுக்கு சம உரிமை வழங்க கோரும் தீர்மானமோ போட்டால் கூட அதை ஏற்க வேண்டும் என்கிற கட்டாயம் இலங்கைக்கு இல்லை. இலங்கை அந்த தீர்மானங்களை புறந்தள்ளும் நிலையில் அந்த நாட்டை கண்டிக்கிற உரிமையோ அல்லது தீர்மானங்களை நடை முறை படுத்தும் வல்லமையோ காமன் வெல்த் அமைப்புக்கு இல்லை என்பதே நிதர்சன உண்மை. 

இந்த லட்சணத்தில் அங்கே மாநாடு நடந்தால் என்ன, தொலைந்தால் என்ன? இந்தியா கலந்து கொண்டால் என்ன கடிந்து கொண்டால் என்ன? தமிழர் வாழ்வில் எந்த ஒரு மாற்றத்தையும் இந்த மாநாடு ஏற்படுத்தப் போவதில்லை. இதை போய் ஒரு பொருட்டாக எண்ணி நம்மையெல்லாம் மடையார் ஆக்கும் இந்த அரசியல் கட்சிகளைத்தான் நொந்து கொள்ளவேண்டும். அவர்களை சொல்லி குற்றமில்லை. தமிழ், தமிழன் என்று உணர்ச்சியை தூண்டி நம்மை முட்டாளாக்கும் முயற்சி கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாகவே நடந்து வருகிறது. இவர்கள் மட்டும் சும்மாவா இருப்பார்கள்!!