ஒவ்வொரு ஆண்டும் வருகின்ற ஆண்டுகள் அனைத்தும் புத்தாண்டுகள்தான். நாள்தோறும் நாட்காட்டியிலிருந்து ஒவ்வொரு தாளாக கிழித்து விடுவது போல், மொத்த நாட்காட்டியையே மாற்றுவதை தவிர புத்தாண்டிற்கு எந்த ஒரு புதுமையும் இருக்க போவதில்லை. ஆயினும் கொண்டாடுவதற்கு மனிதனுக்கு ஏதோ ஒரு விஷயம் வேண்டும் ஆகவே புத்தாண்டையும் கொண்டாடுகிறான். காலத்தை கணக்கிட ஏற்பட்ட ஒரு அலகுதானே ஒழிய புத்தாண்டிற்கு எந்த ஒரு சிறப்பும் இல்லை.
ஒவ்வொரு கலாசாரத்திலும், நாகரீகத்திலும் இந்த கால கணக்கீடு வெவ்வேறு அளவை கொண்டு மேற்கொள்ள படுகிறது. சூரிய சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்டு சிலரும், சந்திர சஞ்சாரத்தை அடிப்படையாக சிலரும் மேற்கொள்கின்றனர். வேறு சிலர் அவ்வப்போது தோன்றும் புனிதர்களின் வயதை அடிப்படையாகவும், இன்னும் சிலர் புகழ்பெற்ற மன்னர்களின் பிறப்பை அடிப்படையாகவும் கொண்டு இந்த ஆண்டு கணக்கீட்டு முறையை கையாள்கின்றனர். இந்திய கணக்கீட்டு முறை சக ஆண்டு, யுகாதி பிறப்பு, தமிழ் ஆண்டு, கொல்லம் ஆண்டு, சாலிவாகன ஆண்டு என்றும் பலவற்றை கொண்டு வழங்கபட்டாலும், அவை பெரும்பாலும் சூரிய மற்றும் சந்திர சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்டவை. இவற்றில் தமிழ் ஆண்டு பஞ்சாப், ஹரியானா, அசாம், வங்காளம், ஒடிஸ்ஸா, தமிழகம், கேரளம், சிங்களம், மற்றும் ஹிந்தி பேசும் பகுதிகள் என்று இந்தியாவின் பெரும்பான்மை பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் பின்பற்றபெறுகின்றன. இது சூரிய சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்டது. சூரியன் ஒவ்வொரு ராசியிலும் (நட்சத்திர கூட்டம்) சஞ்சரிக்கும் கால அளவை கொண்டது. இது பெரும்பாலும் முப்பது நாட்கள் கொண்டது. இவற்றிற்கு அடுத்த படியாக தெலுங்கு, கன்னடம், மராட்டி மக்களால் யுகாதி பிறப்பு பின்பற்ற படுகின்றன. இது சந்திர சஞ்சாரத்தை பின்பற்றும் அமைப்பு. ஒவ்வொரு அமாவசை அன்றும் மாதப்பிறப்பு நடைபெறும். இது ஏறத்தாழ இருபத்தேழு நாட்கள் கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் சராசரி நாட்காட்டியிலிருந்து கணக்கீட்டில் பின்தங்கி விடும். அதை சரி செய்ய இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை பதின் மூன்றாவதாக ஒரு மாதத்தை பிரதியிட்டு நிரப்புகிறார்கள். இவை தவிர இந்திய அரசிதழாக சக ஆண்டு பின்பற்றப் படுகின்றது. இது சூரிய அடிப்படையாக கொண்டிருந்தாலும், சூரிய சஞ்சாரத்தை பின்பற்றும் பிற வழக்கங்களிலிருந்து சுமார் பன்னிரண்டு நாட்கள் முன்னதாக கொண்டு கணக்கிடபடுகின்றது. இது ஹிந்தி பேசும் பகுதிகளில் வழக்கத்தில் உள்ளது. இதன் அடிப்படையில்தான் ஐப்பசியில் வரும் தீபாவளி பண்டிகை சில சமயம் புரட்டாசியிலும், புரட்டாசியில் வரும் நவராத்திரி, சில சமயம் ஆவணியிலும், ஆவணியில் வரும் ஆவணி அவிட்டம், விநாயக சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி போன்றவை சில சமயம் ஆடியிலும் கடைபிடிக்கப்படுகின்றது. ஆயினும் காலண்டர்கள் சூரிய, சந்திர சுழற்சியை கொண்டு பின்பற்றுவதை தவறுவதில்லை.
மேற்கத்திய காலண்டர்களில் இசுலாமிய மற்றும் ரோமானிய காலண்டர்கள்தான் பெரும் புகழ் பெற்றவை. இவற்றில் இசுலாமிய வகை சந்திர சுழற்சியை அடிப்படையாக கொண்டது. அது மூன்றாம் பிறை தோன்றிய நாளுக்கு அடுத்த நாளிலிருந்து கொண்டாடப்படுகிறது. இந்த முறை இறை தூதர் முகமது நபிகள் (ஸல்) அவர்கள் மெக்க மாநகரிலிருந்து மதீனாவுக்கு சென்ற நாளிலிருந்து பின்பற்றபடுகிறது. இது ஹிஜ்ரி காலண்டர் எனப்படுகிறது. சந்திர இயக்கத்தை பின்பற்றுவதால் சராசரி வருடத்தில் சுமார் முப்பது நாட்கள் பின்தங்கி விடுகிறது. இந்திய சந்திர மானச காலண்டர்கள் போல் அல்லாமல் இவை அந்த இழப்பை சரி செய்வதில்லை. ஆதலினால்தான் ரம்ஜான், மொகரம், பக்ரீத் போன்ற குறிப்பிட்ட பண்டிகைகள் குறிப்பிட்ட பருவங்களில் என்றில்லாமல் கோடை, குளிர், கார்காலம் என்று அனைத்து கட்டங்களிலும் வருவதை காணலாம். சூரிய மானச காலண்டர்களில் பொங்கல் பண்டிகை குளிர் காலத்தில் மட்டுமே வருகின்றது, தீபாவளி மாரிகாலத்தில் மட்டுமே கொண்டாடப்படுகின்றது.
சூரிய சுழற்சியை பின்பற்றும் ரோமானிய காலண்டர்கள் ஒரு காலத்தில் ஆண்டிற்கு சுமார் பத்து மாதங்களை மட்டுமே கொண்டிருந்தன. ஆண்டின் கடைசி மாதமாக டிசம்பர் மாதம் இருந்தது. Sapta, Octa, Nova, Deca போன்றவை முறையே ஏழு, எட்டு, ஒன்பது மற்றும் பத்தை குறிப்பிடுவதன் அடிப்படையில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் என்று அழைக்கப்பட்டன. பிறகு ஜூலியஸ் சீசர், அகஸ்டஸ் சீசர் போன்ற ரோமானிய மன்னர்களின் ஆட்சி காலங்களில் ஜூலை ஆகஸ்டு மாதங்களும் நுழைக்கப்பட்டு பன்னிரெண்டாக்கப்பட்டன. இறை தூதர் ஏசுநாதர் பிறப்பிற்கு பிறகு, கிறித்தவ மதத்தின் தாக்கம் ரோமானிய நாடுகளில் ஏற்பட்ட பிறகு அவை எண்ணப்பட்டு வருகின்றன. அதன் படி இன்றைக்கு 2012 ஆண்டுகளுக்கு முன்னர் ஏசுநாதர் அவதரித்தார் என்று கூறலாம். இந்த எண்ணிக்கைதான் இன்று உலகெங்கிலும் சர்வதேச பரிவர்த்தனை காலண்டராக அனைத்து நாடுகளாலும் பின்பற்று வருகின்றது. பழைய ரோமானிய காலண்டர் படி இன்றைய காலண்டரின் டிசம்பர் 25 அன்றுதான் ஏசுநாதர் அவதரித்ததாக கணித்திருக்கிறார்கள்.
இனி ஆண்டு கொண்டாட்டத்தை பற்றி பார்ப்போம். ஒவ்வொரு ஆண்டும் உலகமே நள்ளிரவில் விழித்திருந்து இந்த புத்தாண்டுகளை வரவேற்கிறது. நாம் வேண்டாம் என்றாலும் இந்த ஆண்டுகள் வரத்தான் போகின்றன. இதை நாம் கண் விழித்திருந்து வரவேற்காவிட்டால் அவை ஒன்றும் கோபித்துக்கொண்டு விடாது. ஆயினும் மனிதன் மயக்க வயப்பட்டவன். அவனுக்கு அறிவு பூர்வமாக சிந்தித்து செயல்பட விருப்பம் இருந்தாலும் அவ்வாறு செயல் படாவண்ணம் இத்தகைய மயக்கங்கள் தடுத்து விடுகின்றன. உலகமே கொண்டாடுகிறது. நாம் கொண்டாடாவிட்டால் தவறாகிவிடும். நமக்கு வருடம் முதல் நாளே தீங்கு ஏற்பட்டால் ஆண்டு முழுவதும் தொல்லைகளை சந்திக்க நேரிடும் என்று பல வித கற்பனைகளில் சிக்கி அவன் நிம்மதி இழந்து, நமக்கேன் வம்பு என்று கொண்டாட்டங்களில் ஈடுபட்டுவிடுகின்றான். கொண்டாட்டங்கள் பலதரப்பட்டன. சிலர் கேளிக்கைகளில் ஈடுபடுவர், சிலர் கோயில் குளம் என்று பிரார்த்தனையில் ஈடுபடுவர். எது எப்படி இருந்தாலும் இவை மயக்கங்களே. ஆங்கிலத்தில் Hype என்று சொல்லுவார்கள். தமிழில் இணையாக சொல்வதென்றால் வெறும் காக்காய் வலிப்புதான்.
இந்த ஆண்டு (2012) கொண்டாட்டங்களும் அவ்விதமே அமைந்திருந்தன. முதல் நாள்தான் 'தானே' புயல் கடலூர், விழுப்புரம், மாவட்டங் களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் தனது கோர ரூபத்தை காட்டி கொடூர தாண்டவம் ஆடி முடித்தது. பெருத்த உயிர் மற்றும் பொருள் சேதத்திற்கு ஆளான மக்கள் அல்லல் பட்டு வருகின்றார்கள். புத்தாண்டு கடந்தும் அங்கே பால், மின் விநியோகம், போக்குவரத்து போன்றவை இயல்பு நிலைக்கு வரவில்லை. இந்த நிலையில் அந்த மக்களின் துயரத்தில் பங்கு கொள்ளாமல் எப்படித்தான் இவர்களுக்கு புத்தாண்டு கொண்டாட மனம் வருகின்றதோ. அடுக்கு மாடி குடியிருப்பில் பக்கத்து வீட்டில் இறப்பு நிகழ்ந்திருந்தாலும் அடுத்த வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் கொண்டாடும் அளவிற்கு மனிதன் கல்லாகி போன கால கட்டங்களில் இத்தகைய கொண்டாட்டங்கள் இயல்பாக பார்க்க முடிகிறது.
நள்ளிரவில் ஆலய வழிபாடு கிறித்தவர்களுக்கு இயல்பான ஒன்று. அவர்கள் ஒன்று கூடி பிரார்த்தனை செய்யும் இடமே தேவாலயம் என்ற அந்தஸ்தை பெற்று விடுகின்றது. ஆகம விதிகளின் அடிப்படையில் அவை அமைவதில்லை. சரி மேற்கத்தைய நாட்டினர்தான் தங்கள் இறை தூதர் தோன்றிய நாளை கொண்டாடுகிறார்கள் என்றால் இங்கே இருப்போருக்கு என்ன வந்தது. அது அரசு முறையில் வேண்டுமென்றால் சரவதேச பரிவர்த்தனைக்கு பயன்படும் காலண்டர் தானே ஒழிய சராசரி மக்களுக்கு ஒன்றும் கொண்டாடும் அளவிற்கு பிரசித்தி பெற்றதல்ல. இங்கே இருக்கும் இந்துக்களும் நள்ளிரவில் வரிசையில் நின்று ஆலயங்களில் தரிசனம் செய்வதை வழக்க மாக கொண்டிருக்கின்றனர். இந்து வழக்கப்படி சூரிய உதயத்தில்தான் நாள் உதயமாகிறது. சர்வதேச பயன்பாட்டில்தான் அது நள்ளிரவில் உதயமாகிறது. மேலும் இந்து வழக்கத்தின் படி நள்ளிரவில் கோவிலை திறப்பது கூடாது. இங்கேதான் நாம் அடிமை பட்டிருக்கிரோமே, அதனால்தான் நள்ளிரவில் கோவிலை திறந்து தரிசனம் செய்கிறோம். அவ்வாறு தரிசனம் செய்வது தவறு. அங்கே ஆண்டவனை தரிசிக்க முடியாது, வெறும் சிலைகளை மட்டுமே காண முடியும். பாரம்பரியத்தை தவறாமல் பின்பற்றும் கேரளா மாநில மக்கள் திருவனந்தபுரம், குருவாயூர், சபரிமலை என்று பிரசித்தி பெற்ற கோவில்களில் இரவு எட்டு-ஒன்பது மணிக்குள் நடை சாற்றி விடுகின்றார்கள். எக்காரணம் கொண்டு நள்ளிரவு தரிசனம் கிடையாது. மறுநாள் காலையில்தான் தகுந்த பூசைகளுக்கு பிறகு திறக்கிறார்கள். ஆனால் பழனி, திருப்பதி, தொடங்கி பிரசித்தி பெற்ற தமிழக கோவில்கள் பலவற்றை நள்ளிரவில் திறந்து வைத்திருக்கிறார்கள். சுமாராக மக்கள் கூடும் சிறிய கோவில்களிலும் இத்தகைய நிலையை காணலாம். இவர்கள் கோவில்களை இறைவன் குடி கொண்டிருக்கும் இடமாக மரியாதை கொடுத்து காண்பதில்லை. அவற்றை ஒரு வணிக வளாகமாகத்தன் காண்கிறார்கள். கோவில்களின் அந்தஸ்தும் அவற்றின் வருமானத்தை அடிப்படையாக கொண்டே தீர்மானிக்கிறார்கள். அங்கே வரும் பக்தர்களுக்கு ஏற்படும் மன அமைதி, அவர்கள் நம்பிக்கை, தொன்மை, பிரார்த்தனை முறை இவற்றை கொண்டு அவற்றை அவர்கள் பெருமை படுத்துவதில்லை.
இத்தகைய ஒரு நிலையை இசுலாமிய நாடுகளில் காண முடியாது. ஒரு நாளைக்கு ஐந்துவேளை தொழுகை என்றால் அந்த குறிப்பிட்ட நேரத்துடன் பிரார்த்தனை முடிந்து விடும். நள்ளிரவில் தொழுகை என்பது இசுலாமிய வழக்கம் அல்ல. ஆதலினால்தான் இந்த நாடுகளில் நள்ளிரவு கொண்டாட்டங்களை காண முடிவதில்லை. நம் நாட்டில் கூட எந்த ஒரு இசுலாமிய அன்பரும் மசூதிகளிலோ, தர்காவிலோ நள்ளிரவில் தொழுகை நடத்துவதில்லை. மேலும் அந்த நாடுகள் சர்வதேச காலண்டரை தங்கள் நாட்டில் நம்மைப்போல் பின்பற்றுவதில்லை. அவர்களுக்கு ஹிஜ்ரி காலண்டர்தான் முக்கியம். நம் மக்களுக்கு ஆங்கில காலண்டரின் மாதம் நாள் தெரிந்த அளவிற்கு தமிழ் மாத நாட்கள் தெரிந்திருக்க வில்லை. மேலும் கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை (அது என்ன சிறப்போ தெரியவில்லை. சாதா பிரார்த்தனை என்று ஒன்று இருப்பது போன்றும் அந்த வேளைகளில் இறைவனின் அசிஸ்டெண்டுகள் பிரார்த்தனையை ஏற்பது போன்றும், சிறப்பு பிரார்தனை சமயத்தில் மட்டும் இறைவனே இருக்கின்ற வேலையெல்லாம் விட்டு விட்டு நேரடியாக வருவது போன்றும் ஒரு பெரும் மாயத்தோற்றத்தை உருவாக்குகிறார்கள் பக்தி வியாபாரிகள்) நடைபெற்றது என்று செய்திகள் வருகின்றனவே அன்றி மசூதியில் நடை பெற்றது என்று செய்திகளை காண முடிவதில்லை. பாரம்பரியத்தை அவர்கள் இன்றும் தொடர்ந்து கடை பிடிக்கிறார்கள்.
இறை நம்பிக்கை கொண்டோர் இப்படி என்றால், இறை நம்பிக்கை அற்றோர் என்றும் பகுத்தறிவுவாதிகள் என்றும் பறை சாற்றி கொள்வோரின் நிலை இன்னும் பரிதாபகரமானது. இவர்களோ பகுத்தறிவுவாதிகள். பகுத்தறிவின் படி கடந்த ஆண்டின் கடைசி நாளுக்கும் பிறக்கும் ஆண்டின் முதல் நாளுக்கும் எண்ணிக்கையை தவிர எந்த ஒரு வித்தியாசமும் கிடையாது. ஆனால் இந்த பகுத்தறியாத மூடர்களும் வாழ்த்து செய்திகளை வெளியிடுகிறார்கள். இந்த ஆண்டில் இதெல்லாம் நிகழ வேண்டும் என்று விருப்பங்களை வெளியிடுகிறார்கள். இது பக்தி மார்க்க பிரார்த்தனையிலிருந்து எவ்விதம் வேறுபட்டது என்பது நமக்கு விளங்க வில்லை. இவர்கள் வேண்டுமென்றால் கோவிலுக்கு செல்லாமல் இருக்கலாம். அனால் கோவிலில் சென்று சொல்லப்படும் அதே விருப்பங்களைதான் இவர்களும் வெளியிடுகிறார்கள். இவர்கள் எப்படி பகுத்தறிவு வாதிகள் என்று தங்களை பறை சாற்றி கொள்கிறார்களோ நமக்கு விளங்க வில்லை.
சராசரி மனிதரிலிருந்து மிக உயர்ந்த நிலையில் உள்ளவர் வரை அனைவரும் அன்று ஒருவருக்கொருவர் 'Happy New Year' என்று கூவி மகிழ்கிறார்கள். ஒருவர் நல்ல நிலையில் இருந்தாலும் பொறுக்காத சிலரும் இவ்வாறே கூவுகிறார்கள். அடுத்த மனிதன் சாலையில் அடிபட்டு கிடக்க அவனை கடந்து செல்வோரும் இப்படி கத்துகிறார்கள். வெறும் உதட்டளவில் கூவி ஒரு மாயத்தை உண்டாக்க இவர்களால் எப்படி முடிகிறதோ தெரியவில்லை. பணியிடங்களில் தனக்கு கீழே பணி செய்யும் ஊழியர்களை வதைப்போரும் சரி, ஊழலில் பங்குகொள்ளாத மேல் அதிகாரிகளை ஒரு பொருட்டாக மதியாதோரும் சரி இப்படிதான் கூவுகிறார்கள். இது ஆண்டுதோறும் நடக்கும் வெறும் சடங்காகவே இருக்கிறது. இதில் தங்கள் பகுத்தறிவை புகுத்தி யோசிப்போர் அரிதாகவே இருக்கின்றனர்.
மனிதர்களை விழிப்படைய செய்வதே சிறந்த சேவை. அத்தகைய சேவையை இன்று அறிவுலகை சார்ந்த பெரும்பான்மையோர் செய்வதில்லை. அவ்விதம் முயற்சி செய்யும் சிலரின் அறிவுரைகளையும் மயக்க நிலையில் உள்ள மனிதர்கள் ஏற்பதில்லை. அத்தகைய பரிதாப நிலையின் ஒரு அடையாளமே இந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள். சக மனிதர்கள் அல்லலுறும் நிலையிலும் புத்தாண்டுகளை கொண்டாடி களித்த்ருக்கும் இவர்களை கண்டு நாம் பரிதாப படுவதை தவிர வேறென்ன செய்ய முடியும்.
ஆயினும் பலப்பல இன்னல்களுக்கிடையிலும் உலக மக்கள் அனைவரும் ஒரு சேர கொண்டாட்டங்களில் ஈடு பட முடியும் என்றால் அது இந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் தவிர வேறொன்றை காண்பது அரிது. நியுசீலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரம், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் தொடங்கி, மெல்ல மெல்ல உலகமெல்லாம் பரவி அமெரிக்க நாடுகளில் அலாஸ்கா வரை ஒரு நாள் முழுவதும் கொண்டாட்டங்கள் நடை பெறுகின்றன என்பது வியப்புக்குரியது மட்டுமல்ல, பெருமைக்குரியதும் ஆகும். உலக மக்கள் யாவரும் ஒரு இனம் என்ற அடையாளத்தை அளிக்கும் வரையில் இந்த புத்தாண்டு கொண்டாட்டங்களை வரவேற்கலாம். மற்றபடி இவை வெறும் காக்காய் வலிப்புகள்தான்.
புத்தாண்டுகளின் வரலாற்றை மேலும் அறிந்து கொள்ள விக்கிபீடியாவை காணவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக