ஒவ்வொரு பெற்றோருக்கும் அவர்களின் குழந்தைகள்தான் உலகம். அவர்களின் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் அந்த குழந்தைகளின் நலனுக்காகவே செலவிடுகிறார்கள். அவர்கள் வாழ்வதே இந்த குழந்தைகளுக்காகத்தான் என்று எண்ணுகிறார்கள்.இறைவனின் படைப்பிற் குட்பட்ட எந்த ஒரு ஜீவனும் தனது சந்ததியை பேணிப்பாதுகாப்பதே தனது லட்சியமாக கொண்டிருக்கிறது. ஆனால் மற்றைய உயிரினங்களை விட மனிதன் ஒரு படி மேலே சென்று "பாதுகாக்கிறோம்" என்ற போர்வையில் அந்த சந்ததிகளை முடமாக்கி கொண்டிருக்கிறான். சொல்லப்போனால் எதிர் காலத்தில் மனிதர்கள் சுயமாக செயல் படும் தன்மையை இழக்கும் நிலையை ஏற்படுத்தி கொண்டிருக்கிறான். இத்தகைய நிலை இன்று தோன்ற காரணம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பால் செலுத்தும் கண்மூடித்தனமான அன்புதான் என்றால் ஆச்சரியமாக உள்ளது! ஆம். அன்புதான் நம்முடைய ஒட்டு மொத்த சமுதாயத்தை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் காரணம் என்றால் அதே அன்புதான் நம் எதிர்கால சந்ததிகளை முடமாக்கும் ஆயுதமாகவும் இருக்கிறது!
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? என்று வள்ளுவப்பெருந்தகையால் மிகவும் பெருமைபடுத்தப்பட்ட அன்பு தவறாக திணிக்கப்படும்பொழுது மிகப்பெரும் சரிவை ஏற்படுத்தத்தான் செய்கிறது. பெற்றோர் மற்றும் குழந்தைகள் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் அன்பு கொள்வது இயற்கைதான் என்றாலும், அது தவறாக செலுத்தப்பட்டு நஞ்சாக மாறுகின்றது என்பதை இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். உயிரினங்கள் அன்பு செலுத்துதலில்தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. உயிரினங்கள் தழைக்க முடியும். சந்ததிகள் பாது காப்பாக இருக்க முடியும், கூட்டாக இனைந்து உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும், ஒருவருக்கொருவர் இயலாத நிலையிலிருந்து மீட்க முடியும் மற்றும் எதிரிகளும் இயற்கையும் தரும் இடர்களையும் சவால்களையும் சந்திக்க முடியும். இத்தகைய வன்மைக்காக அளிக்க பட்ட அன்பு இன்று மனித சமுதாயத்தில் தவறாக பயன்படுத்தப்பட்டு எதிர்கால சந்ததிகள் எதற்கும் உதவாமல் போய்விடுவாரோ என்கின்ற நிலைமையை தோற்றுவித்து கொண்டிருக்கிறது.
இன்றைய பெற்றோர் தங்கள் குழந்தைகளின் மீது அளவற்ற பாசத்தை பொழிகிறார்கள். சொல்லப்போனால் அந்த பாசக்கயிற்றால் இவர்கள் தங்களை தாங்களே பாசக்கயிற்றால் கட்டிக்கொண்டு அவதிப்படுகிறார்கள். தங்கள் ஆறாம் அறிவை இழந்து, தொலைநோக்கு பார்வையும் இழந்து தவிக்கிறார்கள். பாசத்தை காட்டுவது தவறென்று கூறவில்லை, ஆனால் அது நம்முடைய குழந்தைகளின் எதிர்காலத்தையும், அடுத்துவரும் சந்ததிகளின் நலத்தையும் பாழடித்து விடுவதாக இருக்க கூடாது என்றுதான் கூறுகிறோம். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் காரணிகளை படித்து பாருங்கள். நாம் எப்படியெல்லாம் நம் மனித சமுதாயத்திற்கு தீங்கிழைக்கிறோம் என்பது புரியும்.
- உடல் நலம்:
ஒவ்வொரு மனிதனின் விருப்பமும் நோய்வாய் படாமல் இருக்க வேண்டும் என்பதே. அது சாதாரண தலைவலியாக இருந்தாலும், காலில் முள் தைத்து காயம் பட்டிருந்தாலும் மனிதனுக்கு சொல்லொணா துயரம் ஏற்படுகின்றது. இதுவே தீராத நோய், தொற்று வியாதி, உடல் அழகை சீரழிக்கும் நோய் என்று வரும் பொழுது அந்த தனிப்பட்ட மனிதரோடு சேர்த்து குடும்பத்தில் உள்ள அனைவரின் நிம்மதியையும் பறித்து விடுகிறது. இப்படி மனிதன் நோயை கண்டு பயப்பட காரணம் அது அவனுக்கும் அவன் சார்ந்த சமுதாயத்திற்கும் தீராத வழியை தருகின்றது. இத்தகைய நோய்கள் வருவதற்கு அடிப்படை காரணம், சரியான உடல் உழைப்பு மற்றும் பயிற்சி இல்லாததே காரணம். இன்று நீரிழிவு நோய், இதய நோய், சிறுநீரக கோளாறு என்று சுமார் இரண்டு மூன்று பத்தாண்டுகளுக்கு முன் கேள்வி படாத நோய்கள் எல்லாம் பரவலாக அனைவரிடமும் குடி கொண்டுள்ளன. உடல் பருமன் கூடுதல், தொந்தி, மூச்சு வாங்குதல், அகோர பசி அல்லது பசியின்மை போன்ற பல தொல்லைகள் நம்மை வாட்டி எடுக்கின்றன. இதற்கெல்லாம் நம்ம்மிடம் சரியான உடல் உழைப்பு இருந்தாலே தீர்வு ஏற்பட்டிருக்கும். அடுத்த தெருவில் உள்ள நண்பனை காணவேண்டும் என்றாலும், பெட்டி கடைக்கு சென்று பொருள் வாங்கி வர வேண்டும் என்றாலும் நம் குழந்தைகள் வண்டியையோ சைக்கிளையோ எடுத்து செல்கிறார்கள். நடை என்பது அறவே இல்லை. சதா சர்வ காலமும் கணினி அல்லது கைப்பேசியுடன் இருக்கிறார்கள். அறைந்து வைத்தது போல கிடக்கிறார்கள். உடல் அசைவு என்பது துளியும் இல்லை. இவர்கள் தங்கள் கைப்பைகளை சுமக்கவும் கடினப்படுகிறார்கள். பேருந்து அல்லது ரயிலில் பயணிக்கும் பொழுது நிற்கவே நோகிறார்கள். 'துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்'களாக இருக்கிறார்கள்' சிறிது தூரம் கூட வெயிலில் நடப்பதை தவிர்க்கிறார்கள். இத்தகு நிலையை இவர்கள் எட்ட முழு முதல் காரணம் பெற்றோரே! வசதி படைத்த பெற்றோர் என்றில்லாமல் சாதாரண தொழில் செய்வோர் கூட தங்கள் பிள்ளைகள் வெயிலில் போக கூடாது என்று கருதுகிறார்கள்.'நாம் தான் வெயிலில் இருந்து கஷ்டப்படுகிறோம்,குழந்தைகளாவது நிழலில் அமர்ந்து பணி செய்யும் அளவிற்கு உயர வேண்டும்' என்று வெளிப்படையாகவே கூறுகிறார்கள். சிறு சிறு வேலைகளுக்கு கூட வேலையாட்களை நியமிக்கிறார்கள். குனிந்து எழுந்து தங்கள் குழந்தைகள் வேலை செய்ய வேண்டாம், அவன் படிக்க வேண்டும் என்று மட்டும் விரும்புகிறார்கள். அந்த பிள்ளை தன் பணியை தானே செய்ய கூட வேண்டாம் என்று ஒதுக்குகிறார்கள். கடைசியில் அவன் ஒரு தக்காளி அல்லது கத்தரிக்காய் போன்று இருந்து விடுகிறான். இதனால் அவன் ஒரு வலிமை மிகுந்த ஆண்மகனாவகோ அல்லது பெண்மை மிக்க பெண்மணியாகவோ வளர தடை போட்டு விடுகிறார்கள். இதன் விளைவு அந்த தனி மனிதன் வீணாவதோடு அவனால் உருவாக்கப்படும் சந்ததிகளும் வீணே போகிறார்கள். குறை பாடுகளுடன் பிறக்கிறார்கள். சிலருக்கு பிறக்காமலேயே போகிறார்கள்.
2. மனநலம்:
குழந்தைகள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்க வேண்டும் என்று சிலரும், அவனுக்கு ஒன்றும் தெரியாது நாம்தான் தீர்மானிக்க வேண்டும் என்று சிலரும் பட்டி மண்டபம் நடத்தி குழந்தைகளின் எதிர்காலத்தை பாழடிக்கிறார்கள். உண்மையில் இருவரும் தவறு செய்கிறார்கள். குழந்தைகள் என்னவாக வேண்டும் என்று தீர்மானிக்கும் சக்தி இருவரிடமும் இல்லை. கலையில் ஆர்வம் உள்ள ஒருவனை மருத்துவனாகவும், வரலாற்றில் ஆர்வம் உள்ளவனை பொறியாளராகவும் ஆக்க நேரத்தையும் பணத்தையும் செலவழிக்கிறார்கள். குழந்தைகள் மனத்தில் தேவையற்ற பல எண்ணங்களையும் ஆசைகளையும் விதைத்து கோட்டை கட்டுகிறார்கள். அவற்றை எவ்வாறேனும் அடைய வேண்டும் என்று நஞ்சை புகுத்துகிறார்கள். அவை நிறைவேறாத நேரத்தில் அவர்களை நிந்திக்கிறார்கள். வெறுக்கிறார்கள். இதுகாறும் ஆசை வார்த்தைகளையே சந்தித்த குழந்தை முதன் முறையாக வெறுப்பை சந்திக்கும் பொழுது அதை ஏற்க முடியாமல் திணறுகிறது. வாழ்வில் என்ன செய்வது என்று அறியாமல் தற்கொலை, வீட்டை விட்டு வெளியேறுதல், தீய பழக்கங்கள், கூடா நட்பு ஆகியவற்றிகு பலியாகின்றன. இதை பற்றியெல்லாம் பெற்றோர் சிறிது யோசிப்பதில்லை. சில குழந்தைகள் பெற்றோரின் மூடத்தனமான அன்பை ஆயுதமாக பயன் படுத்தி அவர்களை மிரட்டி தங்களின் காரியத்தை சாதித்து கொள்கிறார்கள். எனக்கு இது வாங்கி தராவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன், வீட்டை விட்டு ஓடி விடுவேன் என்றெல்லாம் மிரட்டி பணிய வைக்கிறார்கள். இப்படி தங்களை தாங்களே பொன் சங்கிலியால் பிணைத்து கொள்ளும் அறிவற்ற நிலைக்கு பெற்றோர் தள்ளப்படுகிறார்கள். எதிர்காலத்தில் தங்கள் குழந்தை சிறந்த குடும்ப தலைவனாக/தலைவியாக செயல் பட வேண்டிய ஆளுமை பண்புகளை சிதைக்கிறார்கள். அவர்களை எப்போதுமே பந்தய குதிரை பாணியில் நடத்துகிறார்கள்.
அடுத்த வீட்டு பிள்ளைகள், பிறருடைய வருமானம், வசதிகள் இவற்றை கோடிட்டு கட்டியே பிள்ளைகளை வளர்க்கிறார்கள். 'நீ இவனை போல் படிக்க வேண்டும், நீ இவனை போல் சம்பாதிக்க வேண்டும், நீ அவனை போல் பெரிய வீடு கட்ட வேண்டும்' என்றெல்லாம் அவன் மூளைக்குள் குப்பைகளை ஏற்று கிறார்கள். வளர்ந்த பிள்ளை இவற்றை சாதிக்கும் அளவிற்கு வருமானம் ஈட்ட முடியாத நிலையில் உள்ள பதவிகளில் அமர்ந்தாலும் தவறான வழியில் அவற்றை பெற துணிகிறான். நீதி, நேர்மை, நியாயம், நம் நாட்டின் உயர்ந்த நெறி, பாரம்பரியம், சமூக நன்மை ஆகியவற்றை போதிக்க தவறிவிடும் பெற்றோர் அவற்றை இரண்டாம் பட்சமாக கூட எடுத்து கொள்வதில்லை. 'என் மகன் அமெரிக்காவில் பணி புரிகிறான், ஆங்கிலத்தில் சரளாமாக பேசுகிறான்' என்றெல்லாம் புளகாங்கிதம் அடையும் பெற்றோர் தங்கள் மகன் அடுத்தவரின் கஷ்டங்களை துடிக்கிறான், தமிழ் நெறியையும், திருக்குறள் போன்ற உயர்ந்த நூல்களையும் கற்றிருக்கிறான் என்று கூறி பெருமிதம் கொள்வதில்லை.
3. சமூக நலன்:
நாம் என்னதான் ஆங்கிலம் கற்றாலும், என்னதான் சொகுசு வாழ்வு வாழ்ந்தாலும், நமக்கென்று ஒரு தனித்தன்மை இருக்கின்றது. அதை நாம் மெல்ல மெல்ல இழந்து வருகின்றோம். அதை பாது காப்பது நம்முடைய தலையாய கடமை என்று நாம் என்ன வேண்டும். நம்முடைய குழந்தைகள் பலசாலிகளாகவும், அந்நிய இனத்தவர் நம் இனத்தின் மீது ஆக்கிரமிப்பு செய்யாமல் நம்மை நாம் காக்கும் வண்ணம் தயார் படுத்திக்கொள்ளும் நிலையில் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். அன்னியருக்கு பணிந்து நம் இனத்தையே காட்டிக்கொடுக்கும் திராணியற்றவர்களாக அவர்கள் ஆகி விட கூடாது. நம் குழந்தைகள் உடல் மற்றும் மன வலிமை யுள்ளவர்களாக திகழ வேண்டும். அத்தகைய ஒரு சரியான வளர்ப்பே இன்றைய பெற்றோருக்கு தேவை. இலங்கையில் தமிழன் இறந்த போதும் இங்கே இருந்த தமிழன் கண்ணீர் சிந்தவில்லை. மாறாக அத்தகைய கொடும் செயலுக்கு மத்திய அரசு துணை போன வேளையில் இதே தமிழன் அந்த ஆட்சிக்கு பிராண வாயு கொடுத்து கொண்டிருந்தான். மலையாள நாட்டில் தமிழனை அடித்து அனுப்பிய நிலையிலும் இங்கே இருக்கும் தமிழன் அரிசி மற்றும் மணலை கேரளாவிற்கு கடத்துவதை நிறுத்த வில்லை. இப்படி இன உணர்வே அற்று தமிழர்கள் தேய்ந்து போகும் நிலைக்கு வந்ததற்கு பெற்றோரின் வளர்ப்பே காரணமாகிறது. வீரப்போர் ஒன்றில் பிணமான தன் மகன் முதுகில் காயத்தை கண்ட தமிழ் மகள் இவன் புறமுதுகிட்டுதான் ஓடி வந்திருக்கிறான், என்றெண்ணி அவனுக்கு பால் கொடுத்த தனது தனங்களை அறுத்தெறிந்திருக்கிறாள். பின்னர் அவன் மார்பை பார்த்த அவள் அங்கும் காயங்கள் இருப்பதை கண்டு மார்பில் எறிந்த வேல் முதுகை துளைத்து சென்றிருப்பதை உணர்கிறாள். இத்தகைய வீர மகனை பெற்றேனே என்று பெருமை படுகிறாள். இது பண்டை தமிழ் நூலாம் புறநானூறு காட்டும் வீர செய்தி. அந்த அன்னையும் அன்பு செலுத்தியவள்தான். ஆனால் அது சமூகத்திற்கு பயன்படும் வண்ணம் இருந்தது. ஆனால், இன்றைய பெற்றோர் தம் குழந்தைகளை சமூகத்தை பற்றி சிறிது கூட அக்கறை இல்லாமல் வளர்க்கிறார்கள். நான் படித்து பெரிய ஆளாக வேண்டும். இந்த சமூகம் எனக்கு என்ன செய்தது, போன்ற சிந்தனைகள் இன்றைய இளம் தலை முறையினரிடம் மலிந்து கிடக்கிறது. இவற்றை போக்க பெற்றோர் முனைவதில்லை.
மேற்கூறிய காரணிகள் நம் குழந்தைகளை வேண்டுமானால் நம் கண் முன்னேயே பொம்மைகளை போல இருக்க செய்யலாம். ஆனால் அது அவர்களுடைய மற்றும் ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தின் எதிர் காலத்தை சூனியமாக்கும் முயற்சி என்பதை பெற்றோர் உணர வேண்டும். இவற்றை தவிர்க்க ஒவ்வொரு இல்லத்திலும் கீழ் கண்டவற்றை நடை முறை படுத்த வேண்டும்.
குழந்தைகள் தங்கள் பணிகளை தாங்களே செய்து கொள்ள கட்டாய படுத்த வேண்டும்.
நாள் தோறும் வெயிலில் நடக்க செய்ய வேண்டும்.
சுமார் ஒன்று அல்லது இரண்டு கிலோ மீட்டர் தூரமுள்ள பள்ளி கூடங்களுக்கு நடத்தி செல்ல வேண்டும்.
குழந்தைகள் செய்யும் தவறுகளுக்கு அவர்களை அடிக்காமல், ஆனால் அவர்கள் தங்களிடம் மரியாதை மற்றும் அன்பு காட்டும் வகையில் கண்டிக்க வேண்டும்.
குழந்தைகளிடம் நம்முடைய மரியாதை சீர்குலையும் எந்த ஒரு காரியத்தையும் செய்ய கூடாது.
தினந்தோறும் அவர்கள் நம்மிடம் அளவளாவி பேச நேரம் ஒதுக்க வேண்டும். அதன் மூலம் நமக்கு பெரும் பொருள் மற்றும் நிதி இழப்பு ஏற்பட்டாலும் கூட பரவாயில்லை.
குழந்தைகள் செய்யும் சேட்டைகள் நமக்கு பொருள் இழப்பை ஏற்படுத்து வதாக இருந்தாலும் அவர்களின் அறிவு வளர்ச்சிக்கு அவை பயன் படுமாயின் அவற்றை பெரிது படுத்த கூடாது.
சக குழந்தைகளுடனும் மற்றும் மனிதர்களுடனும் அவர்கள் கலந்து கலகலப்பாக பேசி சிரித்து மகிழ அனுமதிக்க வேண்டும்.
தவறான புத்தகங்கள், படங்கள், மற்றும் குழந்தைகளின் கவனத்தை எளிதில் ஈர்க்கும் மூன்றாம் தர பொருட்களை எக்காரணம் கொண்டும் வீடுகளில் அனுமதிக்க கூடாது.
குழந்தைகளின் பாடங்களில் நாம் கவனம் செலுத்தி அவர்கள் அவற்றை வெறுமனே தங்கள் மூலைகளில் புகுத்துவதை தடை செய்ய வேண்டும். அவை அந்த குழந்தைகளின் சிந்தனையையும், ஆராய்ச்சி திறனையும் கூட்ட வகை செய்ய வேண்டும். இன்று கூட பல குழந்தைகள் பூமி உருண்டை என்று தெரிந்திருந்தும் அது எப்படி என்பதை விளக்கும் திறன் அற்றவர்களாகவும் உள்ளார்கள்.
கட்டாய உடல் பயிற்சியையும், ஓடும் திறனையும் அவர்களிடம் புகுத்த வேண்டும். அவ்வாறு செய்ய போதிய நேரமும் இடமும் இல்லை என்றாலும் வீட்டில் துணி துவைப்பது, மாடி படி ஏறுவது, பாரம் தூக்குவது, நடப்பது, ஓடுவது போன்றவற்றை வாழ்வின் அங்கமாக மாற்றி திணிக்க வேண்டும். 'கார் ஓட்டும் அளவிற்கு வசதி இருந்தும் அவர் நடந்து தான் செல்கிறார்' என்று அடுத்தவர் கூறுவது ஏளனம் என்று எடுத்து கொள்ளாமல், என்னுடைய உடல் நலத்திற்கு நான் இதை செய்கிறேன் என்று பழக்கி கொள்ள வேண்டும். மிக நீண்ட தூர பயணத்திற்கும், விரைந்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்கும் மட்டுமே நாம் ஸ்கூட்டர் மற்றும் காரை பயன் படுத்த வேண்டும் என்று நமக்கு நாமே கட்டுப்பாடு விதித்தது கொள்ள வேண்டும்.
குழந்தைகளை சாமானிய மனிதர்கள் உபயோகிக்கும் ரயில், பேருந்து, திருவிழா கூட்டங்கள் போன்ற இடங்களில் புழங்க விட வேண்டும். அப்போதுதான் அவர்கள் அடுத்தவர் படும் இன்னல்களையும், சுதந்திரங்களையும் கண்டு ரசிப்பார்கள். வாழ்வில் இன்னல் நேரும்போது அதை தாங்கும் மனோதிடத்தையும் பெற்றிருப்பார்கள்.
ஜோசியம், ஜாதகம், சிபாரிசு போன்றவற்றில் குழந்தைகளை ஈடுபடுத்த கூடாது. அவை அவர்களின் தன்னம்பிக்கையை சிதைப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் முன்னேற்றத்திற்கு தடைகல்லாகவும் அமைந்து விடும்.
கூட்டமாக சேர்ந்து விளையாடும் கண்ணாமூச்சி, கபாடி, ஓடிபிடித்து விளையாடுவது போன்ற விளையாட்டுக்களில் அவர்களை பழக்க வேண்டும்.
சிறு வயதில் அவர்களுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனைகளை விதைக்க கூடாது. அவர்களுக்கு சுயமாக யோசிக்கும் திறன் ஏற்பட்ட பின்பு இவற்றை பற்றி விவாதிக்கலாம். அதற்கு முன்னர் அவர்களுக்கு எந்த செயலில் ஆர்வம் என்பதை மட்டும் நாம் கவனித்து அதில் அவர்களின் முனைப்பை செம்மை படுத்தலாம்.
குழந்தைகளுக்கு சரியான மற்றும் சமவிகித உணவுகளை தொடர்ந்து வழங்க வேண்டும். ஆண்மை/பெண்மையை குறைக்கும் உணவுகள், சதை போடும் உணவுகள், நோய் உண்டாக்கும் திண்டிகள் போன்றவற்றை ஒதுக்க வேண்டும்.
ஆண்டிற்கு ஒருமுறை அல்லது இரண்டாண்டிற்கொருமுறை என்று கட்டாய மருத்துவ சோதனைக்கு குழந்தைகளை உட்படுத்த வேண்டும்.
நீதி நூல்கள், நன்னெறி கதைகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக