செவ்வாய், 10 மே, 2011

திருமலையில் தமிழ்காத்த உச்சநீதிமன்றம்

இன்றைய தினம் (10/05/2011) இந்திய நாட்டின் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள ஒரு தீர்ப்பை தமிழர்களாகிய நாம் அனைவரும் தலைமீது வைத்து கொண்டாடவேண்டும். வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்ப்பை உண்மையில் தமிழக அரசு முன்னின்று நடத்தியிருக்க வேண்டும். அவ்வாறெல்லாம் செய்ய அவர்களுக்கு ஏது நேரம்?

திருப்பதி-திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் கருவறையை ஒட்டிய சுவர்களில் ஏராளமான தமிழ் பாசுரங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அவை ஆழ்வார் பாடல்களா, இல்லை மற்ற பிற செய்யுட்களா என்பது இன்னமும் அறியவில்லை. இவற்றை மூடி மறைத்து கோயிலின் சுவர்கள் அனைத்தும் தங்கத்தகடுகள் பதிக்க தேவஸ்தான குழு முடிவு செய்தது. இதற்காக தங்கத்தை தானமாக பெற பகதர்களிடம் வேண்டுகோளும் விட்டது. தமிழ் எழுத்துக்களை மூடிவிட அவர்களுக்கு ஒரு தணியாத ஆர்வம். தமிழார்வம் கொண்ட அனைவருக்கும் இது மிகவும் கவலைதரும் விஷயம். அந்த வெங்கடேசனுக்கும் கூட மிகுந்த கவலையை தந்திருக்கும். ஆதலினால்தான் நாம் அனைவரும் செய்யத்தவறிய செயலை டாக்டர். சுப்பிரமணியம் சுவாமியை கொண்டு செய்திருக்கிறான் அவன். தேவஸ்தானத்தின் இந்த முடிவை எதிர்த்து ஆந்திர உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்குத்தொடர்ந்தார். அந்த வழக்கில் தங்கத்தகடுகளை பதிக்க தடை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து தேவஸ்தானம் செய்த மேல் முறையீட்டின் பேரில் உச்ச நீதிமன்றமும் உயர் நீதி மன்ற தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்திருக்கிறது. இனித் தமிழ் எழுத்துக்களை எந்த கொம்பனாலும் மூடி மறைத்துவிட முடியாது. தமிழின தலைவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் யாரும் இந்த வழக்கை எடுக்கவில்லை. தமிழனே அல்ல. ஆரியன் என்று வர்ணிக்கப்படும் சுப்ரமணியம் சுவாமிதான் இதில் உச்ச நீதிமன்றம் வரை சென்று தமிழின் முகவரியை காத்திருக்கிறார். 

வேதம் தமிழ் செய்ய நம்மாழ்வாரை படைத்தவன், திருமழிசை ஆழ்வார் தமிழ் கேட்டு சொன்னவண்ணம் செய்த பெருமான், ஆண்டாள் தமிழினில் மயங்கி அவள் சூடிக்கொடுத்த பூ(பா)மாலையை அணிந்து மகிழும் பெருமான், கம்பன் தமிழ் கேட்டு தலை அசைத்த பெருமான், தேவஸ்தான குழுவில் உள்ள ஒரு சில சுயநலக்கிருமிகளின் செயலை சகித்து தமிழை மறைத்துவிட விட்டுவிடுவானோ? திருமலையப்பன்  தினமும் ஆழ்வார் பிரபந்தங்களை கேட்டபடிதான் பின் செல்கிறான் என்பதை அந்த மூடர்கள் ஏனோ அறிந்திருக்கவில்லை. உண்மையில் அங்கே நடப்பது அனைத்துமே வியாபாரம்தானே. தலைமை பூசாரிமுதல் கடைநிலை ஊழியன் வரை அங்கே பணத்தை பிரதானமாக கொண்டு தானே செயல் படுகிறார்கள். அவர்களுக்கு உண்மையான பக்தியின் வெளிப்பாடு எங்கே தெரியப்போகிறது. 

திருப்பதியை ஆந்திரத்துக்கு கவர்ந்து சென்றார்கள். இராஜாஜி இல்லை என்றால் சென்னையையும் விழுங்கியிருப்பார்கள். இந்த பொறாமை மனத்தோடுதான் அவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள். பொன்தகடு பதிக்கிறேன் என்று தமிழை மூடும் பணியில் இறங்கினார்கள். திருமலையப்பன் அருள் அவ்வாறு நிகழ்வது தடுக்கப்பட்டுள்ளது.