வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

அடடா! வியக்க வைக்கும் காங்கிரஸ் அரசு!!

இந்த மத்திய காங்கிரஸ் அரசின் செயல்பாட்டு வேகம் மிகவும் வியக்க வைக்கிறது! என்னே ஒரு வேகம், என்னே ஒரு கொள்கை பிடிப்பு! புல்லரிக்கிறது. என்னவென்று யோசியுங்கள் பார்ப்போம்! இலங்கை ராணுவத்தால் இன்னலுக்கு ஆளாகும் மீனவர்களை மீட்பதா?, அவ்வப்போது எல்லையில் தொல்லை தரும் சீன, பாகிஸ்தான் ராணுவத்திற்கு பதிலடி கொடுப்பதா?, மக்களின் பிரதான பிரச்சனைகளான குடிநீர், சுகாதாரம் சாலை வசதி மேம்பாடு என்று எதாவதா? என்னெவென்று சொல்வது! ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை! ராஜீவ்  கொலையாளிகளை விடுதலை செய்ய கூடாது. அப்படி செய்தால் அது மிகப்பெரிய இழப்பு, இப்படி கொந்தளித்து உச்ச நீதி மன்றத்தில் தடையாணை பெற்றிருக்கிறது மத்திய அரசு! அதுவும் தமிழக அரசு அவர்களை விடுவிக்கிறேன் என்று அறிவித்த 24 மணி நேரத்திற்குள் இந்த தடையாணை பெறப்பட்டுள்ளது. இவ்வளவு விரைந்து செயல்பட வேண்டிய அளவிற்கு தலைபோகிற காரியமா இது? அவர்களை விடுதலை செய்தால் நாட்டின் இறையாண்மை கெட்டுப்பொகுமா? என்னவென்றே புரியவில்லையே! இந்த அரசு இவ்வளவு வேகத்துடனும் சுறுசுறுப்புடனும் செயல்படும் நிலையை பார்த்தால் இனி எதிர்காலத்தில் இந்தியாவிற்கு எந்த ஒரு ஆபத்தும் வரவே வராது.

அடப்பாவிகளா! இவ்வளவு வேகத்தில் பத்தில் ஒரு பங்கையாவது காவிரி விஷயத்தில் காட்டி இருந்தால் எப்போதோ கெசட்டில் வெளிவந்து மேலாண்மை குழுவை அமைத்து இன்று பிரச்சனை இல்லாமல் தண்ணீர் வந்திருக்குமே! முல்லைபெரியாறு பிரச்சனை நீர்த்து போய் இருக்குமே! பல தமிழக மீனவர்கள் வாழ்வாதாரமும், வாழ்வும் காக்க பட்டிருக்குமே. இலங்கை போன்ற சுண்டைக்காய் நாடுகள் கூட நம்மை பார்த்து கேலி செய்யும் நிலை வந்திருக்காதே. இந்திய ரூபாயின் மதிப்பு அதல பாதாளத்தில் வீழ்ந்திருக்காதே. சுவிஸ் நாட்டிலிருக்கும் பல்லாயிரம் கோடி ரூபாய் நோட்டுக்கள் இந்த நாட்டிற்குள் எப்போதோ வந்திருக்குமே. எலிகளும், நாய் நரிகளும் தின்னும் உணவு தானியங்கள் பாதுகாக்கப்பட்டிருக்குமே! கங்கையும் காவிரியும் இனைந்து வறட்சி நீங்கி இருக்குமே. நாட்டில் மின்தட்டுப்பாடு நீங்கி, தொழில் வளம் பெருகி இருக்குமே! ஆந்திர மக்கள் பங்காளி சண்டையில் இறங்கி இருக்க மாட்டார்களே! இதில் எல்லாம் காட்டாத வேகம் மேற்படி நிகழ்வில் மட்டும் காட்ட வேண்டிய அவசியம் என்ன? விடை மிகவும் எளிது! விடுதலை ஆக போகிறவர்கள் சோனியா குடும்பத்திற்கு ஆகாதவர்கள் அவ்வளவே! 

எப்போதெல்லாம் சோனியா குடும்பத்திற்கு ஒரு நன்மை நிகழுமோ அப்போதெல்லாம் இந்த அரசு விரைந்து செயல் பட்டிருக்கிறது. அவர்கள் குடும்பத்திற்கு காலணா பயன் இல்லாத செயல்களை கிடப்பிலேயே போட்டிருக்கிறது. குவாத்ரோச்சியை விடுதலை செய்வதாக இருக்கட்டும், அவர் வங்கி கணக்கிலிருந்து உடனே பணம் எடுத்துக்கொள்வதாக இருக்கட்டும், கேரளா மீனவர்களை கொன்ற இத்தாலிய கடற்படை வீரர்களை அந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக இருக்கட்டும், வாத்ரா நில மோசடியை கண்டுகொள்ளாமல், அதை விசாரணை செய்த அதிகாரியை மாற்றுவதாக இருக்கட்டும், 2ஜி வழக்கை இழுப்பதாக இருக்கட்டும், அதை விசாரிக்கும் அதிகாரிகளை தொல்லை படுத்துவதாக இருக்கட்டும், இப்படி அந்த குடும்பத்தையே மையமாக வைத்து செயல்படும் ஒரு அரசு இந்திய நலன், குறிப்பாக தமிழக நலன் என்று வந்தால் அதை குழி தோண்டி புதைக்க தயாராக இருக்கும். முதல்வர் பிரதமருக்கு எத்தனை கடிதங்கள் எழுதுகிறார்! மீனவர் பிரச்சனை, காவிரி முல்லை பெரியாறு, பொதுவிநியோக பொருட்கள், நிதியுதவி, என்று பல கோரிக்கைகளை வைத்து வாராவாரம் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்! ஒன்றிற்காவது "ஒப்புகை" யாவது வந்திருக்குமா! இதில் எல்லாம் என்ன அக்கறை காட்டினார்கள். ஒன்றும் இல்லை. ஆனால் ராஜீவை கொன்றவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை அலை கழித்திருக்கிறார்கள்.

ராஜீவ் கொலையாளிகளை பொருத்தவரையில் அவர்களுக்கு தண்டனை வழங்கப் பட வேண்டும் என்று தமிழகம் என்றுமே நினைத்து வந்திருக்கிறது. ஆயினும் அவர்கள் போதுமான காலம் சிறையில் இருந்து விட்டதால் மேலும் மரணமோ, சிறையோ வேண்டாம் என்று எல்லா மக்களும் நினைக்கிறார்கள். அந்த பொதுக் கருத்தை ஆமோதித்தே அரசு விடுதலை செய்ய முன் வந்தது. அதுவும் தானாக செய்ய வில்லை. அவர்களை விடுவிப்பது அரசின் உரிமை என்று உச்சநீதிமன்றம் சொன்ன பிறகே செய்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகளை ஒரு காலத்தில் ஆதரித்த தமிழ்மக்கள் ராஜீவ் கொலைக்கு பிறகு அவர்களை கண்டிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். அடுத்தடுத்த தேர்தல் களில் விடுதலைப் புலிகளை ஆதரிப்போருக்கு ஆதரவு இல்லை என்று தெள்ளத் தெளிவாக சொன்னவர்கள் தமிழ் மக்கள். ஆயினும் இன்று அவர்கள் ராஜீவ் கொலையாளிகளுக்கு இறக்கம் காட்ட தயாராக இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்வதில் எந்த ஒரு இழப்பும் அநீதியும் ஏற்பதாது என்று எண்ணுகிறார்கள். உச்ச நீதிமன்றம் சொன்னப்பிறகு அனைவரின் குரலும் ஒன்று சேர்ந்துதான் ஒலிக்கிறது. ஆனால் சோனியா குடும்பத்திற்கு ஆகாத செயலை எப்படி தடுப்பது என்று யோசித்த மத்திய அரசு இதை தடுக்க முன் வந்துள்ளது. பெரும்பான்மை தமிழ் மக்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தி விட்டது. 

மத்திய அரசு சொல்லும் காரணம் குழந்தைத்தனமாக உள்ளது. நடைமுறைகள் பின்பற்றப் படவில்லை. தடா வழக்கின்படி அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்கிறது. இத்தாலிய மாலுமிகளை பாதுகாப்பாக அனுப்பினார்களே அதில் எந்த நடை முறை பின்பற்றப் பட்டது? மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலேயே தெலங்கானா சட்டம் இயற்றப்பட்டதே அது என்ன நடைமுறை? இரவோடு இரவாக கூடங்குளம் இயங்கிவிட்டது என்று அறிவித்தார்களே அதில் என்ன நடைமுறை உள்ளது? குவாத்ரோச்சியை CBI கைது செய்யாமல் இருக்க பத்திரமாக இத்தாலி வரை சென்று விட்டுவிட்டு வந்தாரே அன்றைய சட்ட அமைச்சர் அது என்ன நடை முறை? சிறுநீர் கழிக்க கழிவறை சென்றிருந்த சீதாராம் கேசரியை அந்த அறையிலேயே பூட்டிவிட்டு, அவர் அமர்ந்திருந்த நாற்காலியில் சோனியாவை அமரவைத்து  கட்சி தலைவராக அறிவித்தார்களே அதில் என்ன நடைமுறை உள்ளது? இப்படி எந்த ஒரு செயலிலும் நடைமுறையை உதாசீனப் படுத்திய இவர்கள் இன்று நடைமுறையை குறித்து பெரிதும் கவலை படுகிறார்கள். அப்படியே நடைமுறை மீறப்பட்டிருந்தாலும் பொது நலன் கருதி அதை கண்டுக் கொள்ளாமல் இருப்பதே பெருந்தன்மை! இவர்கள் பெரிய மனிதர்கள் அல்லவே!

தடா போன்ற மத்திய சட்டத்தின்படி கைதானவர்களை விடுதலை செய்வது மாநில அரசின் உரிமை இல்லை என்றால் "மாநில அரசே அவர்களின் விடுதலை குறித்து பரிசீலித்து அவர்களை விடுதலை செய்யலாம்" என்று உச்சநீதி மன்றம் எப்படி கூறும்? உச்ச நீதிமன்றத்தைக் காட்டிலும் சட்டம் தெரிந்த மேதாவிகளா இவர்கள்! ஆக எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் சோனியாவிற்கு வேண்டப்படாதவர்கள் என்ற ஒரே பாவத்திற்காக அவர்களை மீண்டும் சிறையில் வைத்திருக்க வழக்கு மேல் வழக்கு என்று நீட்டிக்க முற்பட்டிருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தி கொலைக்கு நீதி வேண்டும் என்று முழங்கும் காங்கிரஸ் கண்றாவிகள் அந்த மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்கிறார்களா? என் அப்பா தியாகி ஆகி விட்டார் என்று கூவும் இளவரசர் ஒட்டுமொத்த தியாகிகளையும் கொச்சைப்படுத்தியுள்ளார். வலிய சென்று வலியை ஏற்படுத்திக் கொண்டு மாண்ட அந்த சுதந்திரப் போராட்ட வீரர்களைத் தான்  தியாகிகள் என்று கூற முடியும். உயிர் துறக்க விரும்பாமல் உயிர் போனவர்கள் எல்லாம் தியாகிகள் என்றால் இன்று நாட்டில் உள்ள அனைவரின் மூதாதைகளும் தியாகிகள்தான். 

இந்த கூத்தில் ஜெயலலிதா எது செய்தாலும் அதை கண்டிக்க, கொச்சைப் படுத்த தயாராக இருக்கும் கருணாநிதியும் அவரது கூடாரமும் இன்று இரட்டை நாக்கு வசனங்கள் பேசி வருகிறது. முதல் நாள் ஜெயலலிதாவை பாராட்டிய கருணாநிதி அடுத்த நாள் அவர் காட்டிய அவசரம் விடுதலையை தாமதப் படுத்தி உள்ளது என்கிறார். முதல் நாள் பாராட்டும்போது அது அவசரம் என்று தெரியவில்லையா? தீர்ப்பு வந்த நாளில் இன்றே கூட மாநில அரசு விடுதலை செய்திருக்கலாம் என்று ஆலோசனை சொன்னாரே அது அவசரம் இல்லையா? கையாலாகத புருஷன் அடுத்தவன் குழந்தைக்கும் தனது இனிஷியலை போடுவானாம்! தடையாணை வாங்கியுள்ள மத்திய அரசை சாட தைரியம் இல்லாத முதுகெலும்பில்லாத இந்த மண் புழுக்கள், தடாலடி நடவடிக்கை எடுத்த முதல்வரை குறை சொல்லுகிறார்கள். எங்கே மத்திய அரசை குறை சொன்னால் தனது குடும்பத்திற்கு ஆபத்து வருமோ என்று நடுங்கிக்கொண்டிருக்கும் இந்த பயந்தாங்கொள்ளிகள் முதல்வரை குறை சொல்வதில் எந்த ஞாயமும் இல்லை. இவர்கள் அதற்கான தகுதியை என்றோ இழந்து விட்டார்கள். 

இன்று வெட்கம் இல்லாமல் நீட்டி முழக்கும் கருணாநிதி அன்றே கருணை மனுவை ஏற்று மூவருக்கும் மரண தண்டனையிலிருந்து பொது மன்னிப்பு வழங்கி இருந்தால் இன்று இவ்வளவு தூரம் இந்த பிரச்சனை வந்திருக்காது. 2000 லேயே அவர்கள் விடுதலை ஆகி இருப்பார்கள். இவர் தயவில் மத்திய ஆட்சி நடக்கும் நிலையில் பிரதீபா பாட்டீலாவது மன்னிப்பு வழங்கி இருந்தாலும் கூட சிக்கல் இருந்திருக்காது. அதையெல்லாம் கேட்க அவருக்கு எது நேரம். எந்த வழமையான துறையை பெறலாம், எதில் காசு சம்பாதிக்கலாம், குடும்பத்தை எப்படி வளப்படுத்தலாம் என்றே தனது ஆட்சியையும் அதிகாரத்தையும் பயன் படுத்தியவருக்கு இவர்களின் உயிரைப் பற்றி என்ன ஒரு கரிசனம் இருந்திருக்கப் போகிறது? இன்று அகில உலகிலும் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசியல்வாதி, தமிழர் நலனுக்காக எந்த ஒரு முடிவும் விரைவாகவும், தைரியமாகவும் எடுக்க தயங்காதவர், அடுத்து வரும் ஆட்சியில் இலங்கை அரசுக்கு நெருக்குதல் கொடுக்கும் வல்லமை கொண்டவர் எனறு இன்று உலக தமிழ் மக்களால் பெரிதும் எதிர் பார்க்கப்படுபவர் ஜெயலலிதா! இதுகாறும் கருணாநிதி வசம் இருந்த உலக தமிழினத் தலைவர் என்ற பட்டம் பறிபோன நிலையில், அவரின் சாயம் வெளுத்து போன விரக்தியில் ஜெயலலிதா மீது காழ்புணர்வு காட்டுகிறார். இதை தமிழின மக்கள் மட்டுமில்லாமல் உலக மக்களே கூட உணர்ந்து விட்டார்கள். 

இன்றைய நிலையில் மத்திய அரசு இந்த பிரச்சனையை பெரிது படுத்தாமல் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக செயல் படுவதுதான் விவேகம். ஏற்கெனவே தமிழகத்தில் காங்கிரஸ் இருக்கும் நிலையில் இப்படி எல்லாம் தமிழின விரோத செயல்களில் ஈடுபட்டால், தமிழகத்தில் பேருக்கு கூட காங்கிரஸ் இருக்கும் என்று சொல்ல முடியாது. அவர்களோடு கூட்டணி வைக்கும் தைரியமும் மற்ற கட்சிகளுக்கு இல்லாமல் போய்விடும்! சோனியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு இன்று காங்கிரசை காப்பாற்ற போராடும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். கொன்ற பாவமும் தின்ற பாவமும் விடுமா என்ன? 

திங்கள், 17 பிப்ரவரி, 2014

வயதானவரையா வாட்டி எடுப்பது...?

தி.மு.க.வின் பத்தாவது மாநில மாநாடு (15,16/02/2014) திருச்சி நகரமே நெருக்கும் வண்ணம் நடைபெற்றது! இதில் பலர் பங்கேற்று தங்களது வீர உரையாற்றினார்கள். கழக கண்மணிகளும் தங்கள் பங்கிற்கு முழு SPIRIT ட்டோடு கலந்து கொண்டு பகுத்தறிவு பணியாற்றினார்கள். அரசியல் ஒரு புறம் இருக்க, இதில் நான் கண்டு வேதனை பட்ட விஷயம் ஒன்று உண்டு. அதில் கழக தலைவர் திரு. மு. கருணாநிதி அவர்கள் நடத்தப்பட்ட விதம்தான்.
அவருக்கோ மிகவும் தள்ளாத வயது (எதையும் தள்ளாத வயதும் கூட...!). சக்கர நாற்காலியில்தான் வாழ்கை என்று ஆகிவிட்டது! மனதுக்கும் உடலுக்கும் ஓய்வு தேவைப்படும் நேரம்! அப்படிப்பட்ட முதியவரை சுமார் எட்டு மணிநேரம், ஒன்பது மணிநேரம் என்று இரண்டு தினங்களும் இருக்கையில் அமர வைத்தே கூட்டத்தை நடத்தினார்கள். அவருடைய இயலாமையை பார்க்க சகிக்க வில்லை! கண்களில் நீர் வந்து விடும் போன்று இருந்தது! கொடி ஏற்றும்போது கொடி கயிற்றை பிடிக்க கூட பலம் இல்லை. தி.மு.க வலைதளத்தை தொடங்கி வைக்க TAB ஐ பிடித்துக்கொள்ள கூட இயலவில்லை! மிகவும் சிரம பட்டார். அறிவு கூர்மையும், நினைவாற்றலும் அவருக்கு இன்னமும் திடமாக இருந்தாலும் உடலால் அவர் படும் துன்பம் மிகவும் பரிதாபத்திற்குரியது.

பிள்ளைகளும் சரி கட்சிக்காரர்களும் சரி இதனை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். பிள்ளையாரை போல இருக்கையிலேயே கிடத்தி வசூலிக்க மட்டுமே அவர்கள் குறியாக இருக்கிறார்கள். தள்ளாத மனிதனின் உடல் நிலை குறித்து அவர்கள் சிறிதும் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை. நான் திமுக அனுதாபியோ, அல்லது ஆதரவாளனோ அல்ல. இருப்பினும் ஒரு வயதான முதியவரை பலர் முன்னிலையில் பொதுவில் அவர்கள் நடத்திய பாங்கு என்னை வேதனை கொள்ள செய்தது. அரசியல் வேண்டியதுதான்! அதற்காக வயதானவரையா வாட்டி எடுப்பது...? பிள்ளைகள் ஒற்றுமையாக இருக்கலாம். கட்சிக்காரர்கள் தங்கள் பிணக்குகளை இணக்கமாக தீர்த்துக்கொள்ளலாம். இது போன்ற மாநாடுகளில் ஒரு மணி அல்லது அரை மணி நேரம் மட்டுமே அவரை இருக்க செய்யலாம். அவருக்கு பிடித்தமான இலக்கிய, காவிய, கவியரங்குகள் நடத்தலாம், மானாட மயிலாட போன்ற நிகழ்வுகளில் அவரை பங்கு கொள்ள செய்யலாம். இதையெல்லாம் விட்டு விட்டு, ஏதோ பொருட்காட்சி போல இரண்டு நாட்களும் இருக்கையிலேயே அவரை இருத்தி மிகவும் வதைத்து சித்திரவதை செய்திருக்கிறார்கள். பேருந்துகளில் தள்ளாதவர் வந்தால் எழுந்து இருக்கையை விட்டுத்தரும் தரும சிந்தனை கொண்ட தமிழகத்தில், ஓட்டுக்காக முதியவர் ஒருவர் வருத்தப்பட்டு கொண்டிருந்ததை கண்டு பொறாமல் எழுதிய எழுத்துதான் இது. மனித பண்பாளர் யாவரும் ஏற்பார்கள். மற்றபடி இதில் அரசியல் எதுவும் இல்லை.