வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

எள்ளி நகையாடாதே!

பொதுவாக நம்மில் பலருக்கு அடுத்தவர் செய்யும் காரியங்களை கவனிப்பதில் பெரும் ஆர்வம் உண்டு. அவர்கள் சிறப்பாக செய்யும் காரியங்களை பாராட்ட மாட்டோம். வேண்டுமானால் குறை சொல்லுவோம். ஆனால் அவர்கள் செய்யும் சிறப்பற்ற அல்லது சாதாரண காரியங்களை மிகப்பெரிதாக ஊதி அவரை எள்ளி நகையாடுவோம். அடுத்தவர் செய்யும் சிறுபிள்ளைத்தனமான அல்லது உயர்வற்ற செயலை நாம் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட வேண்டும் அவ்வாறு அன்றி நாம் அதை பெரிதாக படம் பிடித்து அடுத்தவருக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதிலேயே நம் வாழ்நாளை பெரும்பாலும் வீணடிக்கிறோம். இதில் நாம் ஆன்மீக மற்றும் அறிவியல் உண்மைகளை கவனிப்பதில்லை.

ஆன்மீக உண்மை:

ஒருவர் செய்யும் தீச்செயலை நாம் தடுத்திட வேண்டும். அல்லது அத்தகைய தீமையிலிருந்து நம்மை அண்டினோரை காக்க வேண்டும். இரண்டும் இயல வில்லை என்றால் ஒதுங்கி நிற்க வேண்டும். அதுவும் அவர்கள் செய்யும் குழந்தைத்தனமான சிரிப்பு வரவழைக்கும் செயலை நாம் கவனித்து அத்தகையோரை மேம்படுத்த முயல வேண்டும். மாறாக நாம் அதை எல்லோரிடமும் கூறி எள்ளி நகையாடி கிண்டலும் கேலியும் செய்வதால் அவர் மனம் மிகவும் வேதனைப்படும். சக மனிதர்கள் ஒருவரை ஒருவர் கேலி செய்வது ஆன்மீகத்திற்கு விரோத மான செயல். ஒவ்வொரு படைப்பிலும் சமமான ஆன்ம ஒளிதான் உள்ளது என்பதை அறியாத நிலைதான் இத்தகைய பரிதாபகரமான நிகழ்விற்கு காரணம். நாம் அத்தகைய ஆன்ம ஒளியை பெற முயல வேண்டும். மாறாக நாம் எள்ளி நகையாடுகிறோம். இது மிகவும் தவறு என்பது நமக்கு புரியவில்லை. 

அறிவியல் உண்மை:

அறிவியல் அடிப்படையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் தலைமை கட்டுப்பாட்டு கருவி நம் மூளைதான். அந்த மூளை தன்னிடம் வரும் செய்திகளை ஆராய்ந்து அதற்கேற்ற முடிவுகளை தெரிவிக்கிறது. உரிய உடல் உறுப்புக்களுக்கு கட்டளை இடுகிறது. ஆகவேதான் நாம் செயல்களை செய்கிறோம். மூளைக்கு கிடைக்கும் தகவல்கள் அரைகுறையாகவோ, தவறாகவோ இருப்பின் அது தவறான முடிவுகளையே எடுக்கும். இப்படி இருக்க ஒரு மனிதன் சிறுபிள்ளைத் தனமாக செயல் படுகிறான் என்றால் அவன் மூளைக்கு எட்டிய செய்திகள் தவறானவை என்று தான் பொருள். அந்த மனிதன் சரியான தகவல்களை திரட்ட வேண்டும் என்று நாம் அவனுக்கு உதவ வேண்டுமே அன்றி அவன் செயலை பரிகசிக்க கூடாது. இந்த உண்மை நம் மூளைக்கு எட்டாததினால்தான் நாம் அவனை பார்த்து பரிகசிக்கிறோம்.  

இத்தகைய நிலை மாற நாம் அறிவியல் மற்றும் ஆன்மீக உண்மைகளை அறிய முற்பட வேண்டும்.      

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

கோவலனாய் வெண்ணை உண்ட வாயன்!

கோகுலாஷ்டமி, ஸ்ரீக்ருஷ்ண ஜெயந்தி, ஜன்மாஷ்டமி என்றெல்லாம் வெகு சிறப்பாக கொண்டாடப்பெறும் கண்ணனின் பிறந்த நாள் அன்று நம் இல்லங்களில் அரிசி மாவினால் கண்ணன் திருவடியினை பதித்து கோலமிடுவதை காணலாம். இது தமிழகத்தில் மட்டுமே காணப்படும் சிறப்பு. கோலம் என்பதே தமிழகத்திற்கே உரியது என்றாலும் காக்கொலத்தில் கண்ணன் அடிச்சுவற்றை பின் பற்றுவது இங்கே மட்டும் காணக் கிடைக்கும் அறிய காட்சி. கண்ணன் பிறந்த மதுரா, வளர்ந்த கோகுலம், அரசு வீற்றிருந்து துவாரகை மற்றும் பாரத போர் நிகழ்த்திய குருக்ஷேத்ரம் என்று அனைத்து இடங்களிலும் திருவிழா கோலாகலம் என்றாலும் மாக்கோல காட்சி காண முடியாது. அத்தகைய சிறப்பு இங்கு மட்டும் ஏன்?

காரணம் இல்லாமல் நம் மக்கள் எந்த ஒரு செயலையும் செய்வது கிடையாது. அதுவும் பகுத்தறிவில் பல காத தூரம் வளர்ந்து விட்ட நம் நாகரீகம் எதையும் கண் மூடித்தனமாய் பின்பற்றுவது கிடையாது. கண்ணனை உச்சி முகர்ந்து போற்றி புகழ்ந்து காதலித்து கண்ணீர் மல்கிய மக்கள் தமிழ் மக்கள். சிலப்பதிகாரம், மணிமேகலை, போன்ற பிற சமய இலக்கியங்களிலும் கண்ணனை புகழ்ந்து பாடியுள்ள பாங்கு இங்கே காண கிடைக்கிறது. திருப்பாணாழ்வார், பெரியாழ்வார் போன்றோர் கண்ணனை போற்றிய விதத்தில் கண்ணனே வெண்ணை என உருகி நின்றிருக்கிறான். தமிழ் மக்களில் கண்ணன் என்ற பெயருடைய எண்ணற்றோர் இருக்கிறார்கள். ஆண்டாள் கண்ணனை காதலித்து மனம் முடித்தாள். இங்கே ஒவ்வொரு வீட்டிலும் கண்ணன் தான். மக்கள் தங்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைத்தாலும், 'கண்ணா' என்று அழைத்துதான் பழக்க பட்டிருக்கிறார்கள். அப்படி ஒவ்வொரு தமிழ் வீட்டிலும் சொல்லோடும் செயலோடும் கட்டுண்டிருக் கிறான் கண்ணன். அதை விளக்கவே இந்த திருவடி மாக்கோலம் இடப்படுகிறது.  

கண்ணன் பிறந்த நாளில் மட்டும் திருவடி மாக்கோலம் இடுவது அவன் வெண்ணை திருடி கை கால், வாய் என்று மேனி எங்கணும் வெண்ணையை அப்பிக்கொண்டு வருவதை காட்டுவதே மாக்கோல திருவடி தோற்றம். வெண்ணை காலுடன் வரும் பொழுது அது வீதேன்கனும் முத்திரை பதிப்பது இயல்புதான். ஆகவே அவன் நடந்து வரும் பொழுது அது வீடெங்கும் தோன்றும் விதமாக மாக்கோலம் இடுகிறார்கள். அது சரி. அவன் வெண்ணை தின்றுவிட்டு வெளியே செல்வது போலதானே கால்கள் வெளி நோக்கி இட வேண்டும். நாமோ உள்  நோக்கி இடுகிறோமே அது ஏன்? கண்ணன் நம் வீட்டுப்பிள்ளை. அவன் அயலார் வீட்டில் நுழைந்து வெண்ணையை களவாடி விட்டு தின்ற மேனியுடன் காலெல்லாம் வெண்ணை ஒழுக வருகிறான். அதுவே வாயிலிலிருந்து நம் இல்லம் வரை பதிகிறது. அண்டை அயலார் வந்து அவன் மீது புகார் அளித்தாலும் நாம் ஒன்றும் நடவடிக்கை எடுக்க போவதில்லை. அவனை செல்லமாக கடிந்து கொள்ளலாம்.  

கண்ணன் கழலடியிணை  போற்றி பணிவாம்!