வியாழன், 22 செப்டம்பர், 2011

பெண்களுக்கு மட்டும் எதற்கு புகுந்த வீடு?

ஒரு பெண்ணிற்கு திருமணமாகி விட்டால் அவள் கணவன் வீட்டிற்கு சென்று வாழ வேண்டும் என்பது பொதுவாக இந்தியாவில் நிலவும் மரபு. ஆணுக்கு பெண் சமம். இருவரும் இணைந்து நடத்தும் இல்லறத்தில், இன்ப துன்பங்களில் சம அளவில் பங்கெடுக்க வேண்டி வாழ்வின் ஆரம்ப காலத்தில் காலெடுத்து வைக்கும் பொழுது பொதுவான இடத்தில் குடும்பம் நடத்துவதுதானே நியாயமாக இருக்கும்? அதை விடுத்து கணவன் வீட்டிற்கு பெண் சென்று வாழ்வை தொடங்க வேண்டும் என்ன வகையில் சரி? அதுவும் தன் வீட்டின் அனைத்து பற்றுக்களையும் துறந்து கணவனே கதி என்று செல்ல சொல்லுகிறது இந்த சமூகம். அதையே ஆண்கள் பெண் வீட்டிற்கு சென்று வாழ பணிக்கவில்லை. (அப்படி ஒரு சமூகம் கேரள மாநிலத்தில் உள்ளது. அதற்கு மருமக்கத்தாயம் என்று பெயர். இது விதிவிலக்கு). புகுந்த வீடு என்ற ஒன்றை பெண்களுக்கென்றே உருவாக்கி வைத்திருக்கிறது இந்த சமுதாயம்.

கணவன் வீட்டிற்கு செல்லும் அந்த பெண்ணிற்கு கணவனும் அவன் வீட்டருமே உறவு. அவர்களே உலகம். இனி அந்த குடும்பத்தின் அனைத்து காரியங்களிலும் அவளே பிரதான அங்கம் வகிக்க வேண்டும். சொல்லப்போனால் அந்த குடும்பத்தலைவி என்ற பட்டத்தை சுவீகரிக்க தயாராக வேண்டும். தமது பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் இடையில் ஏற்படும் மனத்தாபங்களை (இப்படி ஏற்படாத குடும்பமே இருக்க முடியாது-பரமசிவன் குடும்பம் முதல் பாமரன் குடும்பம் வரை பிறந்த வீட்டிற்கும்-புகுந்த வீட்டிற்கும் இடையில் அகப்பட்டு பந்தாடப்படுவது பெண்கள்தான்) சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது அந்த பெண் தனது பிறந்த வீட்டை எதிர்த்து புகுந்த வீட்டிற்கு அணுசரணையாக நடந்துக்கொள்ளவும் வேண்டும். தனது கணவன் மட்டும் அவன் குடும்பத்தினருக்காக இத்தனைநாள் தனக்காக பல சந்தோஷங்களை விட்டுக்கொடுத்த அப்பா, அண்ணன் போன்ற உறுவுகளை உதற தயாராகவும் வேண்டும். இன்னும் சொல்லப்போனால் அவர்களை எதிர்த்து நீதிமன்ற படிகளேறி வழக்காடவும் தயாராக வேண்டும். இப்படி பல 'வேண்டும்'களை அவள் மேற்கொள்ள இந்த சமுதாயம் பணித்திருக்கிறது. 

இது பெண் சுதந்திரத்திற்கு எதிரானதல்லவா?சமவுரிமை சமூக நீதிக்கெதிரானதல்லவா? நவநாகரீக உலகில் 'ஆணுக்கு பெண் சரிநிகர் சமானம்', 'நான் இன்றைய மங்கை' போன்ற எழுச்சிக்குரல்கள் ஒலிக்கும் வேளையில் இப்படி புகுந்த வீட்டு முறையை பின்பற்றுவது பிற்போக்குத்தனம் என்றுதான் நமக்கு தோன்றும். ஆனால் இதில் நம் முன்னோர்கள் கண்ணை மூடிக்கொண்டு, பித்துக்குளித்தனமாக எதையோ ஒன்றை திணித்து விட்டு போகவில்லை. தீர யோசித்து, அறிவியல், இயற்கை உண்மை, பகுத்தறிவு ஆகியவற்றிற்கு போதிய இடமளித்தே இத்தகைய சமூக கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். 

ஆணும் பெண்ணும் சமம் என்று சட்டம் சொன்னாலும் ஆண்கள் எந்த நாளும் பெண்களுக்கு சமமாக இருந்ததில்லை. தனக்கு இணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை இயற்கை பெண்களுக்கே வழங்கியிருக்கிறது. (எப்படி ஆண்கள் அதை முடக்கினார்கள் என்பதுதான் வியப்பு) உணவு தேடுதல்/தயாரித்தல், பாதுகாப்பு, வேட்டையாடுதல் போன்ற பல குணங்களை ஆண்களை விட பெண்களிடமே இயற்கை அளித்திருக்கிறது. இப்படி பல குணங்களை பெற்ற பெண்கள் ஒரு இடத்திலிருந்து வேறோரிடத்திற்கு புலம் பெயரவும், புதிய இடம் மற்றும் சூழ்நிலைகளுக்கேற்ப தங்களை விரைவில் மாற்றி அமைத்துக் கொள்ளவும் ஏற்ற சிறப்பு பண்புகளை பெற்றிருக்கின்றனர். புதிய இடத்திற்கு செல்லும் ஆண்கள் பல காலங்கள் ஆனாலும் தங்கள் பிறந்த, சிறுவயதில் வளர்ந்த ஊரை பற்றிய பெருமையையே பேசிக்கொண்டிருப்பதை நாம் சரவ சாதாரணமாக பார்க்க முடியும். ஆனால் அப்படி பேசும் பெண்களை காண்பதரிது. பெண்கள் தங்கள் சிறுவயது இடங்களை, உறவு, நட்புகளை எளிதில் உதறிவிடும் தன்மை கொண்டவர்கள். புதிய சூழலை தமதாக்கி கொண்டு அங்கே தங்கள் மேலாண்மையை நிலை நாட்டும் வண்ணம் செயல் படக்கூடியவர்கள். அவர்களை அந்நியர்கள் என்று அந்த இடத்தில் தங்களை அவர்கள் கருத மாட்டார்கள், மற்றவர்கள் கருதும்படியும் நடக்க மாட்டார்கள். 

புதிய ஊருக்கு சென்ற ஆண்,பல்லாண்டுகள் கடந்த பின்பும்  'அயலூரான்' என்று பிறர் அடைமொழி இட்டு அடியாளம் காட்டும் வண்ணம்தான் நடந்து கொள்வான். ஆனால் பெண்கள் அவ்வாறில்லாமல், தங்கள் இயற்பெயரிலோ அல்லது தாம் சார்ந்த குடும்ப பெயரிலோதான் அழைக்கப்படுவார்கள். தங்களுள் ஒருவராகவே அந்த புகுந்த ஊராரும் அவளை ஏற்றுக்கொள்வார்கள். 

ஆண்கள் அப்படிப்பட்ட குணநலனை பெற்றிருக்கவில்லை. அவர்களுக்கு தங்கள் வீடு அல்லது ஊரை விட்டு வெளியே செல்லவே மனம் வராது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் தங்கள் ஊர் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருப்பார்கள். அப்படி செல்ல வேண்டிய கட்டாயம் வரும்போது கூட தங்கள் பிறந்த வீடு/ஊரை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசுவார்கள். அல்லது சென்று வருவார்கள். புதிய ஊரில் தங்களை எந்த காரியங்களிலும் இணைத்து கொள்ள மாட்டார்கள். சமீபத்தில் திருமணமான இளம் தம்பதியினரை பார்த்து குழந்தை பிறந்திருக்கிறதா என்று கேட்க விருபுபவர்கள் 'புழு-பூச்சி' ஏதாவது உண்டா என்று மறைமுகமாக கேட்பார்கள். இதற்கு திருமுருக. கிருபானந்த வாரியார் சுவாமிகள் விளக்கம் சொல்லும் பொழுது புழு என்பது ஆணையும், பூச்சி என்பது பெண்ணையும் குறிக்கும் என்று விளக்கம் கொடுப்பார். அதற்கு காரணம் புழு கூட்டிலேயே அடை பட்டு கிடக்கும். கூட்டை விட்டு வெளியே செல்லாது. ஆனால் இறக்கை முளைத்தவுடன் பூச்சி கூட்டை விட்டு வெளியேறிவிடும். அந்த கூட்டை திரும்பி பார்க்காது. அது போல ஆண்மகன் தன் பிறந்த வீட்டை விட்டு வெளியேற மாட்டான். ஆனால் பெண்கள் பூச்சியை போல அவற்றை உதறிவிட்டு புதிய இடங்களுக்கு குடியேறி விடுவார்கள். 

மேலும் பெண்கள் பயிருக்கு நாற்று போன்றவர்கள். பயிரை அப்படியே நாற்றங்காலில் விட்டு வளர்த்தால் போதிய பலனை தராது. சொல்லப்போனால் மாய்ந்து போகும். மாற்றாக பெரிய பத்திகள் அமைத்து வேறு இடங்களில் பறித்து நட்டால் செழித்து வளர்வதோடு மிகுந்த பலனை கொடுக்கும். ஒரு படி நெல்லிலிருந்து உற்பத்தியாகும் நாற்றுகள் ஒரு ஊருக்கே சோறிடும் அளவிற்கு பலனை தரும். இத்தகைய குணம் கொண்டவர்கள் பெண்கள். அவர்களின் சிறப்பை கருதியே நமது முன்னோர்கள் தீர்க்க தரிசனமாக அவர்கள் கணவன் வீட்டில் வாழ வேண்டும் என்று கட்டாய ஏற்பாட்டை செய்திருக்கிறார்கள். இத்தகைய அமைப்பு இன்று சிதறி வருவது நமது பண்பாட்டிற்கு மட்டுமல்ல வருங்கால சந்ததிகளுக்கும் பெரும் கேட்டை விளைவிக்கும்.   

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

இடது புறமாக செல்க!

இடது புறமாக செல்க! அதாவது 'Keep Left' என்ற சைகை பலகைகளை சாலைகளில் நாம் பார்க்க முடியும். நம் நாட்டில் மட்டும் நாம் இடது புறமாக செல்கிறோம். பெரும்பாலான அந்நிய நாடுகளில் குறிப்பாக மேலை நாடுகளில் அவர்கள் வலப்புறமாகத்தான் செல்கிறார்கள். இது ஏன் இப்படி என்பதை நாம் என்றாவது சிந்தித்திருக்கிறோமா? இந்த பழக்கங்கள் எப்படி ஏற்பட்டன. ஒரு சுவாரசியமான தகவலை இங்கே பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி. 

அந்நிய நாடுகளில் கார்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பு மக்கள் குதிரை வண்டிகளில் பயணித்தார்கள். குதிரைகளை பூட்டிவிட்டு வண்டி ஓட்டுபவர் வண்டியின் இடது புறத்திலிருந்து எம்பி வண்டியில் அமருவார். அவர் இறங்க ஏற வசதியாக வண்டியின் இடது புறத்தில் அமர்ந்திருப்பார். கார்கள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் இதே கருத்தை மனதில் வைத்தே ஓட்டுனர் இருக்கை காரின் இடது பக்கத்தில் அமைக்கப்பட்டது. இடது புறமாக அமர்ந்து காரை ஓட்டும் ஓட்டுனர் முன்புறத்தில் சென்று கொண்டிருக்கும் வண்டியை முந்த வேண்டுமென்றால் அந்த வண்டியின் இடது புறமாகத்தான் செல்ல வேண்டியிருக்கும். ஏனென்றால் அப்போதுதான் முந்தும் முன்பு, எதிரில் வண்டி ஏதேனும் வருகிறதா என்று பார்க்க ஓட்டுனருக்கு எளிதாக இருக்கும். ஆகவேதான் அவர்கள் வலது புறமாக செல்லும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் மாறாக இங்கே நம் நாட்டில் வண்டியின் ஓட்டுனரின் இருக்கை இடது பக்கத்திற்கு பதிலாக வலது புறம் அமைந்திருக்கிறது. அதற்கு காரணம் நம் நாட்டில் சாலைகளில் இடது புறமாகத்தான் செல்ல வேண்டும் என்பதால். சரி! நம் நாட்டில் மட்டும் இடது புறமாக செல்வது ஏன்? அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. பொதுவாக நம் நாடு ஆன்மீக, சமய பற்றுள்ள நாடு. இங்கே எதிரில் வருவோரை வலம் வருவது என்பது ரத்தத்தில் ஊறி போன ஒன்று. அவர்களை இடம் வருவது என்பது அமங்கல காரியம் என்று நம் மக்கள் அவ்வாறு செய்வதில்லை. (வலம் வருவது-பிரதட்சிணம் செய்வது-அதாவது எதிரில் வருவோர் நமது வலப்பக்கம் இருக்கும்படி நாம் செல்வது) கோயில், குளங்கள், பசுமாடு, பெரியவர்கள், படித்த மற்றும் அறிவில் சான்றோர், சுமங்கலி பெண்கள், ஆசிரியர், பெற்றோர், தெய்வ திருவுருவங்கள், நன்மைதரும் மரங்கள், என்று எண்ணற்றவை புனிதமாக கருதி அவற்றை வலம் வருவது என்பது நம் நாட்டு மக்கள் பல்லாண்டு காலமாக கடை பிடித்து வரும் பழக்கம். (இப்படித்தான் அயோத்தியின் மன்னன் ஸ்ரீராமனின் பாட்டனார் திலீபன் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது காமதேனு என்ற பசுவை வலம் வராமல் இடமாக சென்று அந்த பசுவின் சாபத்திற்கு ஆளானான்) அப்படி எதிரில் வருவோர் புனிதர்களா, அல்லவர்களா என்ற சர்ச்சைக்குள் இறங்காமல் யாரையும் வலம் வருவது என்ற பொதுவான செயலை நம் முன்னோர் ஆண்டாண்டுகாலமாக கடை பிடித்து வந்தார்கள். இன்று கூட அது சாலையோ அல்லது வேறு இடமோ நாம் எதிரில் வருவோருக்கு ஒதுங்கி நின்று வழி விட வேண்டி வந்தால் நமது இடப்புறமாக ஒதுங்குவோம், அவர்களும் யாரும் கூறாமலேயே அவர்களுடைய இடப்புறமாக ஒதுங்குவார்கள். இப்படி நம் மக்களிடையே இயற்கையாகவே கலந்து விட்ட இந்த பழக்கத்தை மாற்ற வேண்டாம் என்று எண்ணியே நாம் சாலைகளில் இடப்புறமாக செல்லும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறோம். வெள்ளையர்கள் தங்கள் நாடுகளில் வலப்புறமாக சென்றாலும், இருநூறு ஆண்டுகள் நம்மை ஆண்டாலும் இங்கே அந்த வலப்புற பழக்கத்தை திணிக்க முற்படவில்லை. அவர்களுக்கு அத்தகைய எண்ணத்தை உருவாக்காமல் நம்முடைய பழக்கங்கள் அமைந்திருந்ததற்கு இந்த இடதுபுற சாலை விதி ஒரு உதாரணம்! சாலைகளில் நீங்கள் சரிவர வண்டியை ஓட்டி விபத்தில்லா சவாரிக்கு நம் சென்னை போக்குவரத்து காவல் துறை சில விதிகளை நினைவு படுத்தி இங்கே கொடுத்திருக்கிறார்கள் - Chennai Traffic Rules

வியாழன், 15 செப்டம்பர், 2011

பாரத சமுதாயம் பெருமையுடைத்து!

உதவிக்கரம் நீட்டுவதிலும், விருந்தினரை உபசரிப்பதிலும் நம் பாரத சமுதாயத்திற்கு ஈடு இணை இவ்வுலகில் இல்லை. 13/09/2011 அன்று அரக்கோணத்திற்கு அருகில் மிகவும் கொடிய ரெயில் விபத்து நிகழ்ந்து பலரின் உயிரையும் பறித்தது. இன்னும் சிலரின் அங்கங்களை சிதைத்து பல குடும்பங்களில் இருளை பரவ செய்தது. அக்குடும்பங்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கலும் மீண்டும் அவர்கள் நல்ல நிலைமையை அடைய இறைவனிடம் நம் பிரார்த்தனையும் உரித்தாக்குகிறோம். இக்கொடிய நிகழ்விலும் நம் நெஞ்சை தொட்ட சில செயல்பாடுகளை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

பொதுவாக உலகில் மற்றைய நாடுகளில் விபத்துக்கள் நிகழும்போதோ அல்லது பிறருக்கு இன்னல் ஏற்படும்போதோ அவர்களை கவனிப்பது அரசின் பொறுப்பு நமக்கு அதில் ஒன்றும் பங்கில்லை என்று சக குடிமக்கள் நடந்து கொள்வார்கள். அவ்விதம் இல்லாமல் அரசாங்கத்தை எதிர்பார்த்து எந்த செயலுக்கும் காத்திராமல் செயல்படும் ஒரு சமூகம் உலகில் உண்டென்றால் அது நம் பாரத சமுதாயம் மட்டுமே. அத்தகைய பண்பை நிலை நிறுத்தும் விதமாக இந்த கொடிய ரெயில் விபத்திலும் நம் சமூக மக்கள் செயல் பட்டிருக்கின்றார்கள்.பெரும் சப்தம் கேட்ட உடனே அருகிலுள்ள கிராமத்து மக்கள் விபத்து நிகழ்ந்த இடத்தில் கூடி விட்டனர். பொதுவாக கிராமங்கள் ஏழு-எட்டு மணிக்குள் உறங்கிவிடுபவை. அந்த ஒன்பது மணிக்கு பின்னரும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வெளிச்சமில்லாத, புதர்கள் மண்டிக்கிடந்த பகுதிக்கருகே அவர்கள் ரயிலின் சிதைவுகளில் சிக்கி கிடந்த மனிதர்களை மீட்டிருக்கின்றார்கள். ஆண்கள்-பெண்கள் என்று ஒன்று திரண்டு, ஆட்டோ, டிராக்டர்கள் என்று தங்களிடமிருந்த அத்தனை போக்கு வரத்து வண்டிகளையும் பயன் படுத்தி அரக்கோணம் அரசு மருத்துவ மனை வரை கொண்டு சேர்த்திருக்கின்றார்கள். அதன் பின்னர் அருகிலிருந்த L&T சிமிட்டி நிறுவனத்திலிருந்தும், INS ராஜாளி கடற்படை விமான தளத்திலிருந்தும் உதவிக்காக ஆட்களும், மருத்துவர்களும், 108 ஆம்புலன்சு சேவையும் வந்து சேர்ந்திருக்கின்றன. பெரும்பாலானவர்கள் காப்பற்றப்பட்ட பிறகே ரெயில்வே மற்றும் அரசு அதிகாரிகள் விபத்து பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள்.

இதே போன்றதொரு விபத்து பஞ்சாப் மாநிலம் கர்னால் ரயில் நிலையத் தருகில் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தபோதும் இதே போல அருகிலிருந்த குருத்வாராவில் நள்ளிரவில் மணி ஓசை எழுப்பி கிராம மக்களை கூட்டி மீட்பு பணியில் ஈடு பட்டு பெரும்பாலான உயிர்களை மீட்டார்கள். அதுவும் பனி கொட்டும் நள்ளிரவு இருட்டு நேரத்தில் அம்மக்கள் ஆற்றிய பணியை எந்த ஒரு அரசு இயந்திரத்தினாலும் உடனடியாக செய்திருக்க முடியாது. 

இத்தகைய செய்திகளையெல்லாம் படிக்கும்போது நம் நினைவிற்கு வருவது சாதி, மதம், இனம், மொழி என்று பல தடைகளை தாண்டியும் நம் மண்ணில் பொதுவான ஒரு பண்பு நிலவுகிறது. அது இம்மண்ணுக்கே உரித்தான பண்பு. இவர்களுக்கு யார் தலைமை தாங்குகிறார்கள்? இவர்களை ஒன்று சேர்ப்பது யார்? இவர்களிடம் கட்டளை பிறப்பித்து வேலை வாங்குவது யார்? இவர்கள் பிரதி பலனாக எதை எதிர்பார்க்கிறார்கள்? (இதெல்லாம் இன்றைய கார்பரேட் வணிக உலகின் (Management Skills) தாரக மந்திரங்கள்) இந்த எதுவுமே இல்லாமல் விபத்து நிகழ்ந்த பகுதியில் அடிபட்ட மக்களை மீட்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் மக்கள் மத்தியில் நாம் பிறந்ததற்கு பெருமை கொள்ள வேண்டும். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சில திருட்டுகள் நிகழ்ந்திருக்கலாம். அது எங்கேயும் நடை பெற கூடியதுதான். சுமார் ஆயிரம் பேர் கூடியிருக்கும் கூட்டத்தில் ஓரிருவர்  களவையே கொள்கையாக கொண்டிருப்பர். ஆனால் அதைமட்டும் பெரிது படுத்தி நம் ஒட்டு மொத்த சமுதாயத்தையே கொச்சை படுத்த ஒரு கூட்டம் தொடர்ந்து செயல் பட்டு கொண்டிருக்கிறது. அவர்கள் கண்ணுக்கு பிரதி பலனில்லாமல் செயல்படும் எண்ணற்ற பாரத மக்களின் பண்பாடு புலப்படுவதில்லை. 

மும்பையில் பெருவெள்ளம் (2005) ஏற்பட்டு பலர் வீடுகளுக்கு செல்ல முடியாமல்  ஆங்காங்கே தத்தளித்துக்கொண்டிருந்த பொழுது அந்தந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் தங்க வைத்து உணவு உடை கொடுத்து இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு அவரவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைத்தார்கள். அவ்வளவு பெரிய அலங்கோலத்திலும் எந்த ஒரு கொலையோ, களைவோ, கற்பழிப்போ இன்ன பிற குற்றங்களோ நிகழவே இல்லை. இதற்கு மாறாக அமெரிக்காவில் அதே காலகட்டத்தில் நிகழ்ந்த புயல் சீற்றத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று எண்ணற்ற குற்றங்கள் நடை பெற்றன. இதையெல்லாம் எந்த ஒரு பத்திரிக்கையும் கண்டு கொள்வதில்லை. 

இத்தகைய சீரும் சிறப்பும் மிக்க நம் பாரத பண்பாடு இன்று மெல்ல தன்னுடைய பெருமையை இழந்து வருகின்றதோ என்று கவலை கொள்ளும் வேலையில் அவாறேல்லாம் இல்லை, இன்னும் எத்தனை அந்நிய படையெடுப்புகள் பண்பாட்டு தாக்குதல்கள் நடை பெற்றாலும் எங்கள் ரத்தத்தோடு கலந்துவிட்ட உணர்வை மட்டும் அழிக்க முடியாது என்று அவ்வப்போது உலகிற்கு தெரிவிக்கும் இத்தகைய துயர சம்பவங்கள், கொடியவை என்றாலும் மறக்க முடியாதவை. இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் வந்திருக்கும் கட்டுரையை படித்து பாருங்கள் - The New Indian Express - Chennai Edition