வெள்ளி, 10 அக்டோபர், 2014

இப்படித்தானோ!!

ஒரு சிலவற்றை நாம் சரியாக புரிந்துகொள்வதில்லை. வழக்கமாக பொதுவில் வழங்கப்படும் நிகழ்வுகளையே நாம் பெரிதாக கொள்கிறோம். ஆழ் பொருளை காணத் தவறிவிடுகிறோம். இதற்கு அறியாமை காரணமோ அல்லது அகங்காரம் (திமிர் அல்ல) காரணமோ தெரியவில்லை. எதுவாக இருப்பினும் தவறை தவறாக சரியாக புரிந்து வைத்துக்கொள்கிறோம். அத்தகைய சில சரியான தவறுகள் இங்கே:

ஆன்மிகம்:

நம்மில் பெரும்பாலோருக்கு ஆன்மிகம் என்றால் என்னவென்றே தெரியாது. அதை பேசுபவரும் சரி, கேட்பவரும் சரி ஆன்மீகத்தின் உட்பொருளை அறியாமலேயே இருக்கிறார்கள். பொதுவாக ஒருவர் ஆன்மீக வாதி என்றால் நாம் உருவகப் படுத்தும் அடையாளம் அவர் கடவுள் பக்தி உள்ளவராக இருக்கவேண்டும், தவறாமல் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லவேண்டும், மத சின்னங்களை அணிந்திருக்க வேண்டும், மத மற்றும் அது சம்பந்தமான வாத, விவாதங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்று இப்படியாக பல செயல்களில் ஈடுபட வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஒருவர் நம் கண்ணெதிரே தோன்றினால் நாம் அவரை ஆன்மீகவாதி என்று ஏற்றுக்கொள்ள மாட்டோம். சொல்லப்போனால் நாம் அவரை நாத்திகவாதி என்றே முத்திரை குத்தி விடுவோம். 
இப்படி இருப்பவர்களை  மட்டும் நாம் ஆன்மீகவாதி என்று சொல்வோமானால், இவர்கள் இலக்கணப் படி ஆன்மீகவாதி என்ற சொல்லுக்கு கோவில் பெருச்சாளி மட்டுமே முற்றிலும் பொருத்தமான நபராக இருக்க முடியும். அது கோவிலிலேயே வாசம் செய்கிறது. திருநீறு, எண்ணெய் போன்ற பொருட்களில் குதித்து விளையாடி உடல் முழுவதும் தரித்துக் கொள்கிறது. அங்கே வருவோர் பேசும் பேச்சுகளை (வாத-விவாதம்) செவிமடுத்து கேட்கிறது. இத்தகைய முழு தகுதியும் அதற்கிருப்பதால் அதுவே சிறந்த ஆன்மீகவாதியாக இவர்கள் ஏற்றுக் கொள்ளலாம்.

அரசியல்வாதி:

நாம் இன்று அரசியல்வாதி என்ற சொல்லுக்கு இலக்கணமாக போட்டு வைத்திருக்கும் சில நிபந்தனைகளாவன:
இன்றைய அரசியல்வாதி ஏதோ ஒரு கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும், அந்த கட்சியின் கொடியை குறிக்கும் கரை கொண்ட துண்டு அல்லது வேட்டியை அணிந்திருக்க வேண்டும். தேர்தல் சமயங்களில் அக்கட்சியின் கொள்கைகளை விளக்கி முழங்க வேண்டும், உண்ணாவிரதம், கடையடைப்பு போனவற்றை செய்ய வேண்டும், கழுத்திலும் கைகளிலும் நகைக்கடை அலங்கரிப்பை செய்து கொண்டு உயர் ரக கார்களில் பவனி வர வேண்டும், கட்டை பஞ்சாயத்து செய்வது, கந்து வட்டி விடுவது, குத்தகை எடுப்பது, தண்டல் வசூலிப்பது, என்று தங்களால் இயன்ற சமூக சேவை செய்வது போன்றவற்றை மட்டுமே நாம் அரசியல் வாதி என்று சொல்ல தயாராக இருக்கிறோம். 

இப்படி அரசியல்வாதிகளை நாம் உருவகப் படுத்தி பழகிவிட்டமையால் கட்சி சாராமல், மேற்படி செயல்களில் ஈடுபடாமல், சமூக சேவை செய்த எத்தனையோ பெருமக்களை மறந்து போய்விட்டோம். மேற்படி காரியங்களை செய்வதுதான் அரசியல்வாதியின் இலக்கணம் எனில் நம் வீட்டு வாசலில் நாம் எரியும் எச்சிலுக்காக காத்திருக்கும் தெரு நாய் கூட மிகச் சிறந்த அரசியல்வாதி என்று கூறிவிடலாம். அது கட்ட பஞ்சாயத்து செய்கிறது, மெலிந்த நாயை மிரட்டி உணவை அபகரிக்கிறது (தண்டல் வசூல்). கரி சட்டியில் வாயை நுழைத்து தன் முகமெல்லாம் கரி பூசி கொள்கிறது (கட்சிக் கொடி), சதா தெருமுனையில் நின்று கத்திக் கொண்டிருக்கிறது (கொள்கை விளக்க முழக்கம்), அந்த தெருவையே ஆக்கிரமித்துக்  கொள்கிறது (குத்தகை எடுப்பது). நம்முடைய அரசியல்வாதி குறித்த பார்வைக்கு இந்த தெருநாயும் பொருத்தமாகத் தானே இருக்கிறது?

படிப்பாளி:

இன்று நம்மிடம் உள்ள பொருள் விளங்கா பிரச்சனைகளில் இந்த படிப்பாளியும் இடம் பெற்றுவிடுகிறான். நாம் ஒருவரை படிப்பாளி என்று கொள்ள வேண்டுமானால் அவர் மிகப் பெரிய படிப்பெல்லாம் படித்திருக்க வேண்டும். பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, முனைவர், என்றெல்லாம் படித்திருக்க வேண்டும். கட்டுரைகள், ஆய்வுரைகள், விளக்க நூல்கள் போன்றவற்றை படிக்கவோ அல்லது  எழுதாவோ செய்ய வேண்டும். முக்கியமாக தம்மை போன்றே ஒரு படிப்பாளியுடன் நட்போ, உறவோ கொள்ள வேண்டும். அவ்வாறு கொள்ள இயலவில்லை என்றாலும் படிக்காத கீழ்மக்கள் சகவாசம் தவறியும் கொள்ளக் கூடாது. இதுவே நாம் படிப்பாளி என்று சொல்லும் மனிதருக்கான இலக்கணமாக கொண்டிருக்கிறோம். உண்மையான படிப்பாளியை நாம் அறியும் வண்ணம் படித்திருக்க வில்லை. 

மேற்படி நபர்கள்தான் படிப்பாளிகள் என்றால் இன்றைய நிலையில் மிகச்சிறந்த படிப்பாளியாக நூலகங்களும் அங்கே வசிக்கும் புத்தகப் புழுக்களும் உள்ளன. அவையே மொத்த புத்தகங்களையும் தம்முள் கொண்டிருக்கின்றன. அவற்றின் மொத்த பக்கங்களும் அவற்றிற்கு அத்துபடி. மற்றபடி மேற்படி படிப்பாளிகளுக்கும் இவற்றிக்கும் வித்தியாசம் பெரிதாக இருப்பதாக தெரியவில்லை. "கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவனற்றாள் தொழாரெனின்". இருவரும் இதை படித்து மட்டும் இருப்பார்.

அரசு ஊழியர்: 

அலுவலகங்களுக்கு எப்போதுமே நேரம் தவறி செல்வது, செல்ல நேர்ந்ததற்கான காரணமாக ஒரு சராசரி பொய்யை சொல்வது, அரசு அலுவலகங்களில் ஒரு இருக்கையை ஆக்கிரமித்து அமர்ந்திருப்பது, அங்கே மேசைகளில் கட்டுக்கட்டாக தேங்கி நிற்கும் கோப்புகளை அவ்வப்போது புரட்டிப் பார்த்து தூசு தட்டி வைப்பது, தம்மை அணுகுவோருக்கு ஏதோ ஒரு பதிலை சொல்லி அனுப்புவது, பஞ்சப்படி, போனஸ், ஊதிய உயர்வு எப்போது வரும் என்று எதிர்பார்ப்பது, விடுப்பு எடுக்க, வைப்புநிதி கடன் பெற, வருமானவரி விலக்கு பெற என்று அனைத்திற்கும் ஏதோ ஒரு பொய்யை சொல்லி வைத்து சலுகை பெறுவது, வேலை நிறுத்தம், தர்ணா, என்று சதா ஒரு போராட்டம் செய்து அரசையும், மக்களையும் மிரட்டுவது, மக்கள் எதிர் பார்த்து வந்த காரியங்களை "கண்ணியமாக" செய்து முடிக்க பெற வேண்டியதை பெறுவது. கட்டி வந்த சோற்றை சரியாக ஒரு மணிக்கு சாப்பிட்டு முடித்து மதியம் தேநீர் அருந்துவது, வீட்டிற்கு செல்வது என்று இயந்திரத் தனமாக செயல்படுவது. இவையே நாம் உருவகப் படுத்தாவிட்டாலும் நம் கண் முன்னே நிற்கும் சராசரி அரசு ஊழியரின் தோற்றம். 

ஆனால், மக்கள் நலனே தன்னலம் என்று செயல்படும் சில நூறு அரசு ஊழியர்கள் நம் கண்களுக்கு புலப்படுவதில்லை. எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி நம் தெருமுனையில் குப்பையையும் கூளங்களையும் அள்ளுபவனும், அடைபட்டிருக்கும் பாதாள சாக்கடையில் பாதுகாப்பு கவசம் ஏதும் இன்று இறங்கியவனும், மழை இரவு நேரங்களிலும் மின் இணைப்பை சரி செய்ய வீதி தோறும், வயல் வெளி தோறும் நடந்து செல்பவனும், பல்லாயிரக் கணக்கானோர் சொகுசாக பயணம் செய்ய ரயில் பாதைகளில் இரவு நேரங்களிலும் ரோந்து செல்பவனும், தூக்கம், நிம்மதி, உறவுகள் என்று அனைத்தையும் தொலைத்து விட்டு, எங்கோ ஒரு எல்லை நிலையில் உயிரை பணயம் வைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபவனும், இன்னும் இது போன்ற லட்சிய மனிதர்களும் அரசு ஊழியராகத்த்தான் பணி செய்துக் கொண்டிருக்கிறார்கள். 

இன்னும் இது போன்ற எண்ணற்ற தவறான புரிதல்கள் நம்மிடையே உள்ளன. அவற்றைப் பற்றிய எமது பதிவுகள் மேலும் தொடரும்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக