புதன், 5 அக்டோபர், 2022

இந்து மன்னன் இராஜராஜ சோழன்

 இராஜராஜ சோழன் காலத்திய கல்வெட்டு எதிலாவது 'இந்து' என்ற சொல் இருக்கிறதா? - இப்படி கேட்பவர்களுக்கு தங்களைப் பற்றியும், தங்களது மேதாவித்தனத்தைப் பற்றியும் மிகவும் பெருமையாக இருக்கும்! ஆனால், உண்மையில் அவர்கள் தங்களது அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை அறியமாட்டார்கள்!

இந்து என்பது ஆபிரகாமிய மதங்களைப்போல ஒரு சராசரி மதமல்ல. அது இம்மண்ணில் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் வாழ்வியல் முறையாகும்! ஆங்காங்கே எண்ணற்ற புண்ணியாத்மாக்கள், சித்தர்கள் தோன்றி மக்களை நல்வழி நடத்தினாலும், தங்கள் பெயரில் ஒரு மதத்தையோ, இயக்கத்தையோ அவர்கள் தோற்றுவிக்கவில்லை. அதனால் மக்கள் பெயரெதுவும் தேவையின்றியே ஒரு சிறப்பான அடையாளத்துடன்தான் வாழ்ந்து வந்தார்கள். அதனால், இந்து என்று நம்மை நாம் அழைத்துக்கொள்ள வேண்டிய அவசியமே எழவில்லை. அப்படி இருக்கும்போது, இந்து என்ற பெயர் இல்லாமல்தான் இருந்திருக்கும். அதனால் நாம் இல்லாமல் இருந்தோம் என்றோ, நமக்கென ஒரு வாழ்வியல் முறை இல்லாமல் இருந்தது என்றோ எண்ணுவது வடிகட்டிய முட்டாள்தனம்! வெளியிலிருந்து கடைவிரிக்க வந்தவர்களுக்கு, இங்கே ஏற்கெனவே இருக்கும் ஒழுக்கவியலை தனியாக அடையாளப்படுத்த ஒரு பெயர் தேவைப்பட்டது. தங்கள் வசதிக்காக, 

சிந்து (இந்து) நதிக்கு அப்பால் இருக்கும் தேசத்தை இந்தியா என்றும், அம்மக்களை இந்துக்கள் என்றும் அவர்கள் அழைத்தார்கள். 


இம்மண்ணுக்கு பாரததேசம் என்றேதான் பெயர் இருந்திருக்கிறது! இந்தியா என்ற பெயர் அந்நியர்களால் சூட்டப்பட்டது! 15-ஆம் நூற்றாண்டில், இந்தியாவுக்கு கடல்வழிபாதை கண்டுபிடிக்கிறேன் என்று கிளம்பிய கொலம்பஸ், இந்தியாவைக் கண்டறியாமல் வேறு ஒரு தீவுக்கூட்டத்தை அடைந்து அதைத்தான் இந்தியா என்று அழைத்தான். அது இந்தியா அல்ல என்று தெரிந்ததும், பின்னர் அது மேற்கிந்தியத்தீவுகள் என்று அழைக்கப்படலாயிற்று! ஆக, 15-ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே இந்தியா என்ற பெயர் மேலை நாடுகளில் பிரபலமாகி இருந்தது!


இன்னும் பின்னாடிச் சென்றால் பைபிளில் இந்த நாடு இந்தியா என்று அழைக்கப்பட்டதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன (எஸ்தர் 1:1 & எஸ்தர் 8:9) பைபிள் பல்வேறு காலகட்டத்தில், பல்வேறு மனிதர்களால் தொகுக்கப்பட்டது என்றாலும், கி.மு.165 & கி.பி.1200 வருடங்களுக்கு இடையேதான் அது எழுதப்பட்டிருக்கிறது. அப்படியெனில் கி.மு. 165 முன்னரே இந்நாட்டை அந்நியர்கள் இந்தியா என்றுதான் அறிந்திருந்தனர் என்பது தெளிவாக விளங்கும். 


இந்நாடு பாரதம் (இந்தியா), இதன் குடிமக்கள் பாரதியர்கள் (இந்தியர்கள்), இதன் பண்பாடு பாரதம் (இந்து) என்றுதான் காலங்காலமாக அறியப்பட்டு வருகிறது! ஆகவே, இந்து, இந்தியா ஆகியவற்கு எதிரான மனநிலை முற்றிலும் கண்டிக்கத்தக்கது!!


இராஜராஜன் கல்வெட்டுகள் மட்டுமின்றி வேறெந்த கல்வெட்டுகளிலும்கூட இந்து என்ற பெயர் இருக்காதுதான்! நமக்கென ஒரு அடையாளம் இயல்பான வாழ்வியல்முறையாக இருக்கும்போது, அதற்கு பெயரே தேவையில்லாதபோது, அந்த பெயர் பின்னாளில் யாரோ, கதவு எண் பொறித்தது போல, பெயர் வைத்தால், அது நம் கல்வெட்டுகளில் இடம்பெறாமல்தான் போயிருக்கும். அதை ஒரு பெரிய சாட்சியாகக் கொண்டு வாதிடுவது எத்தகைய பேதைமை!


திருக்குறளில் எந்த இடத்திலுமே தமிழ் என்ற வார்த்தையோ, தமிழ்நாடு என்ற வார்த்தையோ சொல்லப்படவே இல்லை. அதனால் அவையெதுவுமே திருக்குறள் எழுதப்பட்ட காலத்தில் இல்லை என்று சொன்னால் எப்படி நகைப்புக்குரியதாக இருக்குமோ, அப்படி இருக்கிறது இந்து என்ற சொல்பற்றி மூடர்கூட்டம் எழுப்பும் கேள்வியும்!


1969-இல் அதிகாரப்பூர்வமாக "தமிழ்நாடு" பெயர்வைப்பதற்கு முன்பு தமிழ்நாடு என்ற பெயர் பாரதியார் பாடல்களில் காணப்பட்டது! அதற்கும் முன்பாக என்று பார்த்தால், எந்தவொரு அதிகார குறிப்பிலும் தமிழ்நாடு என்ற பெயர் இருப்பதாகத் தெரியவில்லை! ஆந்திரர்கள் நம் பகுதியை 'அரவநாடு' என்றும், நமது மொழியை 'அரவபாஷை' என்றும், நம்மை 'அரவாள்ளு' என்றும் அழைத்திருக்கிறார்கள்! இந்த அரவநாடு போன்று, பாரதநாட்டுக்கு அந்நியர்கள் குறிப்பிட்ட பெயதான் இந்தியா!!


இலக்கியங்கள் என்று கொண்டால் சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பரிபாடல், பெரியபுராணம் மற்றும் இராஜராஜ சோழனுலா ஆகியவற்றில் தமிழ்நாடு என்ற பெயர் இடம்பெற்றிருந்தாலும், அது இன்றைய தமிழ்நாட்டைக் குறிக்கும் என்று சொல்லிவிடமுடியாது. ஏனெனில், இலக்கியத் தமிழ்நாட்டின் பல பகுதிகளை நாம் இன்று இழந்திருக்கிறோம். உதாரணத்திற்கு,  கேரளமும் தமிழ்நாட்டின் பகுதிதான் என்று சொன்னால் சேட்டன்களுக்கு கோபம் வரும்! இலக்கியங்களில் கூறப்பட்ட தமிழ்நாடு போல பல்வேறு புராண, இதிகாசங்களில் நம்நாடு பாரதம் என்றே கூறப்பட்டு வந்தது! என்ன பெயரில் அழைத்தாலும் புராதனமாக இங்கே ஒரு நிலபரப்பும், வாழ்வியல் முறையும் இருந்ததை யாரும் மறுப்பதற்கில்லை!!


ஒரு ஊரில் ஒரேயொரு மளிகைக்கடை மட்டுமே இருந்தது! தாத்தா-அப்பா-பிள்ளை என்று வழிவழியாக அந்தக் கடையை நடத்தியவர்கள் அதற்கு பெயர் எதுவும் வைக்கவில்லை. மக்களும் எந்த பெயரிட்டும் அழைக்காமல், அதை வெறுமனே 'கடை' என்றே அழைத்து வந்தனர்! கடைக்குச் சென்று பொருள் வாங்கி வா என்றாலே எல்லாரும் அந்தக்கடைக்குச் சென்றே வாங்கி வந்தனர்!


சில காலங்களுக்குப் பிறகு, அதே ஊரில் வெளியூரிலிருந்து வந்த ஒருவரும் ஒரு புதியகடையைத் திறந்தார்! அதற்கு 'குப்புசாமி மளிகைக்கடை' என்று பெயரும் வைத்தார்! அதிலும் மக்கள் சென்று பொருள் வாங்கத் தொடங்கினர்! இப்போது, கடைக்குப்போய் பொருள் வாங்கி வா என்று பொதுவாக சொல்ல முடியவில்லை! அப்படி சொன்னால் எந்த கடை என்ற கேள்வியும் எழுந்தது! அதனால், குப்புசாமி கடை, பழையகடை என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டியதாயிற்று! பழைய கடைக்காரர் பெயர் எதையும் தனது கடைக்குச் சூட்டிக்கொள்ளவில்லை என்றாலும், மக்கள் அவரது பெயராலேயே, இராமசாமிக்கடை' என்று அந்த கடையை அடையாளம் கண்டனர். 


இராமசாமியின் கடை, இராமசாமி பிறப்பதற்கு பல ஆண்டுகள் முன்னிலிருந்தே அந்த ஊரில் இருக்கிறது என்றாலும், போட்டிக்கடையிலிருந்து அதை பிரித்துக்காட்ட மக்களே, தங்கள் வசதிக்காக இராமசாமி என்ற பெயரை சூட்டியுள்ளனர்! புதிய கடையான குப்புசாமி கடைக்கு தோற்றம், பதிவு போன்ற பல குறிப்புகள் இருப்பது போல இராமசாமி கடைக்கு எதுவும் இல்லாமல் இருந்தது. அதனால் பதிவு அதிகாரி யூகமாக ஒரு 100-150 ஆண்டுகள் பின்னால் சென்று ஒரு தேதியை பதிவிட்டுக் கொண்டார்! அந்த கடைக்காரரும் 150 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட கடை என்றே விளம்பரங்களிலும் போட்டுக்கொண்டார்!


அந்த விளம்பரத்தைப் பார்த்த குப்புசாமி கடை ஆதரவாளரான 'நொண்டி'மாறன் வகையறாக்கள் அதை கிண்டல் செய்யலாயினர்! இராமசாமியின் வயதோ அறுபதுகூட ஆகவில்லை! அவரது கடைக்கு மட்டும் 150 ஆண்டு பாரம்பரியம் எப்படி வந்திருக்கும்? 60 ஆண்டுகளுக்கு முன்பு இராமசாமி என்ற பெயரே இல்லாதபோது 150 ஆண்டு பாரம்பரியம் என்று கூறுவது ஏமாற்று வேலை! குப்புசாமியின் வியாபாரத்தை முடக்கும் செயல்! என்று கண்டபடி பேசித் திரியலானார்கள்!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக