பக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 31 டிசம்பர், 2011

சொர்க்க வாசல்!


இங்கேயே இருக்குது சொர்க்க வாசல்! 

வைகுண்ட ஏகாதசி!
"வைகுண்ட ஏகாதசியன்று, ஒருவர் இறந்து விட்டால், எவ்வளவு பாவியானாலும் சொர்க்கத்துக்குள் நுழைந்து விடுவார்; பச்சைத் தண்ணீர் கூட பல்லில் படாமல், விழித்திருந்து, ஏகாதசி விரதமிருந்தால், பகவான் சொர்க்கத்தின் கதவுகளைத் திறந்து விடுவார்...' என்றெல்லாம் பேசுகிறோம். இதெப்படி சாத்தியமாகும் என்கிறான் ஒரு வேடன். நாமெல்லாம் சொர்க்கத்துக்கு போனால் தான், பகவானைப் பார்க்க முடியுமென நினைக்கிறோம். ஆனால், இந்த வேடன் பகவானின் தரிசனத்தைப் பூமியிலேயே பெற்று, சொர்க்கத்தை அடைந்து விட்டான். 

ஆதிசங்கரரின் சீடர் பத்மபாதர். இவருக்கு ஒரு பெரியவர், நரசிம்ம மந்திர உபதேசம் செய்தார். அதை ஜெபித்து, நரசிம்மரை நேரில் தரிசித்து விட வேண்டுமென்பது அவரது ஆசை. அதற்காக, தவமிருக்க காட்டுக்குப் போனார். ஒரு வேடன் அவரைப் பார்த்தான்...

"சுவாமி... தங்களுக்கு இந்தக் காட்டில் என்ன வேலை?' என்றான்.

அவனிடம் நரசிம்ம மந்திரம், நரசிம்மரைத் தரிசிக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னால் புரியுமா? எனவே, அங்கிருந்து அவனை அனுப்புவதற்காக அவனது பாணியில், "வேறொன்றுமில்லையப்பா... இங்கே சிங்க முகமும், மனித உடலும் கொண்ட ஒரு மிருகம் இருக்கிறது; அதை பிடித்து போக வந்தேன்...' என்றார்.

வேடனுக்கு ஆச்சரியம்...

"சுவாமி... நான் இந்தக் காட்டிலேயே பிறந்து, வளர்ந்தவன். நீங்கள் சொல்வது போன்ற மிருகம், இங்கே கிடையவே கிடையாது; இது சத்தியம்...' என்றான்.

"நான் அந்தணன், பொய் சொல்வேனா...' என்றார்.

அந்தணர்கள் பொய் சொல்வதில்லை என்பது அவனுக்கும் தெரியும்.

"அடடா... அப்படி ஒரு மிருகம் இருக்கிறது போலும். பெரியவர் <உண்மையைத் தான் சொல்கிறார்...' என நினைத்தவன், "சுவாமி... அப்படி ஒரு மிருகம் மட்டும் இருக்குமானால், நாளை மாலைக்குள் அதைப்பிடித்து உங்களிடம் தருவேன். அப்படி தராவிட்டால், என் உயிரை விட்டு விடுவேன்...' என்று சபதம் செய்து, அதை பிடித்தே தீருவதென கிளம்பி விட்டான்.

மனசு நிறைய சிங்க முகமும், மனித உடலும் கொண்ட அந்த உருவம் தான் நின்றது. அதை, அவன் தேடாத இடமே இல்லை. சாப்பாடு இல்லை, தூக்கமில்லை, வீட்டைப் பற்றிய எண்ணமில்லை, நரசிம்மத்தின் வடிவத்தைத் தவிர, அவன் எதையும் சிந்திக்கவில்லை.

மறுநாள் மாலையும் நெருங்கி விட்டது; அது, அகப்படவில்லை.

"பெரியவர், நிச்சயம் பொய் சொல்லியிருக்க மாட்டார். நான் தான் கையாலாகாத வேடனாகி விட்டேன். சொன்ன வாக்கை காப்பாற்றாத நான், இனியும் உயிரோடு இருக்கக் கூடாது...' என்று காட்டுக்கொடி ஒன்றைப் பறித்து, அதைக் கழுத்தில் இறுக்கி, தற்கொலைக்கு முயன்றான். அப்போது, அவன் நினைத்த மிருகம் அங்கே வந்து, அவன் கையைப் பிடித்தது. ஆம்... நரசிம்மர் வந்து விட்டார்.

"அடடா... வசமாக சிக்கினாயா?' என்றவன், தன் கழுத்தில் இருந்த கொடியால், பகவானைக் கட்டினான். அவனது பக்திக்கு, பகவான் கட்டுப்பட்டு நின்றார். அவரை இழுத்துக் கொண்டு, பத்மபாதரிடம் சென்றான்.

"பிடியும்... நீர் கேட்ட மிருகத்தை! ஓட்டிக் கொண்டு ஊர் போய் சேரும்!' பத்மபாதரின் காதில், கர்ஜனை சப்தம் கேட்டது; ஆனால், உருவம் கண்ணில் படவில்லை. அப்போது, அசரீரி ஒலித்தது...

"பத்மபாதரே... கோடி வருடம் செய்யும் தவத்தை விட, இவன் என்னை யாரென்றே தெரியாமல் நினைத்த ஒவ்வொரு விநாடியும் புனிதமானது. அது மட்டுமல்ல, என்னைப் பார்க்க முடியாமல் போனதற்காக, உயிரையும் விடத் துணிந்தானே... அது தான் நிஜமான பக்தி. இவனது தொடர்பு ஏற்பட்டதால் தான், உனக்கு என் கர்ஜனையாவது கேட்டது. நீயும் இவனைப் போல் விடாமல் பக்தி செலுத்து. நேரம் வரும் போது, காட்சியளிப்பேன்...' என்றார்.

பார்த்தீர்களா... ஏகாதசி விரதம் என்ற பெயரில் விழித்திருந்து சினிமா பார்ப்பதும், பசித்திருப்பதும் மட்டும் பக்தியல்ல! இறைவனோடு மனம் ஒன்ற வேண்டும். அவரைப் பார்த்தே தீர வேண்டும் எனும் அளவுக்கு, 
நம் மனம், அவரோடு இணைய வேண்டும். அப்படியானால், இந்த பூலோகமே நமக்கு சொர்க்கவாசல் தான்!

மாத நரஸிம்ஹ!      பிதா நரஸிம்ஹ!!
ப்ராதா நரஸிம்ஹ!   சகா நரஸிம்ஹ!!
வித்யா நரஸிம்ஹ!  த்ரவிணம் நரஸிம்ஹ!!  
சுவாமி நரஸிம்ஹ!  சகலம் நரஸிம்ஹ!!
இதோ நரஸிம்ஹ!    ததோ நரஸிம்ஹ!!
யதோ யதோ யாஹி ததோ நரஸிம்ஹ!!
நரஸிம்ஹ தேவாத் பரதோ ந கச்சித்!!
தஸ்மின் நரஸிம்ஹ சரணம் ப்ரபத்யே!! 

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

இறை நம்பிக்கை!

இறை நம்பிக்கை என்பது ஏதோ கோவிலுக்கோ, மசூதிக்கோ அல்லது தேவாலயத்துக்கோ சென்று நமது நீண்ட விருப்பங்களை பிரார்த்தனை என்ற பெயரில் பட்டியலிடுவது என்றாகிவிட்டது. சொல்லப்போனால் இறை மறுப்பு கொள்கையாளர்களுக்கும் இறை வழிபாடு செய்பவர்களுக்கும் பெருத்த வேறுபாடு இல்லை. அவர்கள் சாலையில் சிலையாக நிற்கும் தங்கள் அபிமானத்திற்குரிய தலைவனுக்கு மாலையிடுகிறார்கள் என்றால் இவர்கள் ஆலயத்திற்குள் சிலையாக இவர்கள் விரும்பும் வண்ணம் இருக்கும் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்கள். மற்றபடி நம்பிக்கை பக்தி என்பதெல்லாம் சிறிதும் இருப்பதாக தோன்றவில்லை. தங்கள் கோரிக்கைகள் நிறைவேறினால் மொட்டை அடிப்பது, அபிஷேகம் செய்வது போன்றவற்றை செய்கிறார்கள் உடனே அடுத்த கோரிக்கையையும் அங்கே வைக்கிறார்கள். நிறைவேறாத நிலையில் அந்த தெய்வத்தையே பழிக்கிறார்கள். இதுவா பக்தி. இதுவா இறை நம்பிக்கை. உச்சகட்டமாக வர்த்தக வியாபாரம் செய்கிறார்கள். நான் இது தருகிறேன் நீ அதை தா என்கிறார்கள். நம்முள்பட, ஆண்ட சராசரத்தையே தனதுடமையாக கொண்டுள்ள இறைவன், நாம் கொடுக்கும் பூவுக்கும், தலை முடிக்குமா என்கி நிற்கப்போகிறான். அவன் ஆழ்ந்த நம்பிக்கையையும், தீவிர தூய பக்தியையுமே எதிர்பார்க்கிறான். அது இன்றைய நிலையில் தேடித்தான் பார்க்கவேண்டும். 

பிள்ளையே இல்லாத ஒருவருக்கு தமது தொண்ணூற்றேழாவது வயதில் ஆண் மகவு வைத்தால் அதை எப்படி கொண்டாடுவார்கள். அப்படித்தான் ஆபிரகாமுக்கும் இறைவன் ஆண்மகவை அளித்தான். ஆனால் அதையே தமக்கு பலியிட வேண்டுமென்றும் கட்டளையிட்டான். இறை வேண்டுகோளை அப்படியே ஏற்று சிறிதும் மனம் கோணாமல் அந்த மகனை பலியிட முற்பட்ட வேளையில் இறைவனே தடுத்தாட்கொண்டார். இது போன்றே சிறுதொண்ட நாயனாரும் தமது மகனை சமைத்து வந்திருக்கும் இறை அன்பருக்கு அமுது படைத்தார். இறைவன் அவரை வாழ்த்தி மகனையும் உயிர்ப்பித்து தந்தார். இது போன்றதொரு ஆழ்ந்த நம்பிக்கை வைப்பது அரிதாகும். 

இறை அருளாளர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இசுலாமிய மதத்தை போதித்து குரான் நெறியை பரப்பி வரும் காலத்தில் அவர்களை கொன்றுவிட சிலர் முயன்றனர். அவர்கள் தங்களது தற்குறி வியாபாரம் படுத்துவிடும் என்று பயந்தே அவ்வாறு செய்தார்கள். இவர்களிடமிருந்து மதீனா நகர் எல்லையை ஒட்டிய சிறு குன்றிளிருக்கும் ஒரு குகையில் நபிகளாரும் அவரது நெருங்கிய உறவினர் ஒருவரும் ஒளிந்திருந்தார்கள். அந்த குகை இரண்டு மலைகளுக்கு இடையில் இருந்தது. மலையடிவாரத்தில் ஆடு மேய்க்கும் சிறுவர்கள் இருந்தார்கள். இவர்கள் இருந்த குகை அமைதியாக இருந்தது. எதிராளிகள் சிறிது சிறிதாக மலையேறி குகையை நெருங்கி கொண்டிருந்தார்கள். அப்பொழுது நபிகளாரை நோக்கி அவரது உறவினர், "இங்கே நம் இருவரை தவிர யாருமில்லையே" என்று கூறினார். அதற்கு நபிகளார், "இங்கே நாம் மூவர் இருக்கிறோம். இறைவனும் நம்முடன்தான் உள்ளார்" என்று பகர்ந்தார். அவரது நம்பிக்கை எப்போதும் இறைவன் நம்முடனேயே இருக்கிறார், நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் கண்காணித்துக்கொண்டு இருக்கிறார். அவற்றிற்கு சாட்சியாக இருந்து நீதிநாளில் தீர்ப்பு வழங்குகிறார் என்கிற தீவிர பற்றான்மை கொண்டிருந்தார். இவரது தீர்க்கமான பற்று எதிரிகளை வேறு பாதையில் செல்ல விட்டது. அவர்கள் குகையை அடையவே இல்லை. இது இறையருளாளர்களுக்கே சாத்தியம், சாமானிய மனிதர்களாகிய நம்மால் முடியாது என்று எண்ணக்கூடாது. அப்படி இராமல், புனிதர்கள் காட்டிய வழி ஒழுக வேண்டும் என்றே அவர்கள் அவ்வாறு வாழ்ந்து காட்டினார்கள். 

தமக்கென்று எதையும் கேளாமல், இறைவனுக்கு தொண்டு செய்வதே, அவனுக்கு அருகில் இருப்பதே, அவன் தேவைகளை பூர்த்தி செய்வதே தமது பணி என்று செயல்பட்ட திண்ணனார் மூன்றே நாட்களில் இறையருள் பெற்று "கண்ணப்ப நாயனாராக" திருவவதாரம் எடுத்தார். இறைவன் பொற்கழல்களில் நீங்கா இடம் பெற்றார். இதுதான் இறை பக்தி, இதுதான் நம்பிக்கை என்று வரையறுக்க முடியாத வண்ணம், இறை நம்பிக்கை அதீதமானது. ஒரு தாயிடம் அன்பு செலுத்தும் குழந்தையின் செய்கையை விட நுட்பமானது. ஒரு குழந்தை அம்மாவை கட்டிபிடித்து தன் அன்பை வெளிப்படுத்தும். ஒன்று தலை மீது ஏறும், ஒன்று மூக்கை கடிக்கும், ஒன்று சடையை பிடித்து இழுக்கும், ஒன்று முந்தானையை பிடித்துக்கொண்டே இருக்கும், ஒன்று அம்மாவின் விரலை வாயில் வைத்தபடி இருக்கும், ஒன்று தன் மூக்கை அம்மாவின் புடவையில் துடைக்கும். ஆனால் இந்த அனைத்துமே அம்மாவிடம் தாங்கள் வைத்துள்ள அன்பைத்தான் இப்படி வெளிப்படுத்துகின்றனவே தவிர வேறொன்றுமில்லை. 

கற்களால் அருச்சித்து இறைவனை வழிபட்டார் ஒருவர், தனது வாய் உமிழ் நீரால் இறைவனை குளிப்பாட்டினார் மற்றொருவர்.தமது காதலுக்கு இறைவனை தூது விடுத்தார் ஒருவர் என்றால் அவ்விதம் தூது சென்றவனை கொல்ல ஆயுதத்தோடு தயாராக இருந்தார் மற்றொருவர். இப்படி இறை நம்பிக்கையும் பக்தியும் நம்மால் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு மிகவும் மேம்பட்டவை. சாதாரண வியாபாரிகளாகிய நமக்கு அவற்றை புரிந்து கொள்ள ஏழாம் அறிவு மிகவும் அவசியம்.